புலியை ஒரு பாசிச இயக்கமாக சிங்கள மக்கள் புரிந்துகொள்ளாது, பயங்கரவாத இயக்கமாகவே புரிந்துகொண்டுள்ளனர். இந்த அரசியல் மகிந்த பாசிசத்தை புரிந்து கொள்வதற்கு தடையாக உள்ளது. சிங்கள மக்கள் புலியைப் புரிந்து கொண்ட விதம், அரசு கூறிய உள்ளடக்கதில் இருந்து தான். இதனால் புலி பற்றி மட்டுமல்ல இனப்பிரச்சனையை புரிந்து கொண்ட விதமும் கூட, அரசு சொன்னதை தாண்டியல்ல. இதற்கு மாறாக புலியை சார்ந்து நின்று சொன்ன, சிறியளவு புரிதலும் காணப்படுகின்றது.
இன்று மகிந்த தலைமையில் அரச பாசிசம் கோர முகமெடுத்து கொடுமையாகவே தன்னை வெளிப்படுத்தி வருகின்றது. புலிப் பாசிசத்தை புரிந்துகொள்ளாத சிங்கள மக்கள், இந்தச் சூழலைக் கண்டு அதிர்ந்து போகின்றனர். ஆனால் அரச பாசிசமோ, புலிகளின் பாசிசத்தின் மற்றொரு வெட்டுமுகம். இது ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதல்ல. ஒன்றுக்குள் ஒன்று இயங்கிய பின்னணியில், ஒன்றின் தொடர்ச்சியாக மற்றொன்று இல்லாது தனித்து வெளிப்படுகின்றது. இன்று பாசிசம் குறித்து அறிந்து கொள்ளல், புரிந்து கொள்ளல் மீதான சிங்கள மக்களின் அக்கறை, நாட்டின் மற்றொரு பகுதியில் நிலவிய பாசிசத்தை தெரிந்து கொள்ளவும், தெரிய வைக்கவும் கோருகின்றது.
தமிழ் மக்கள் அரச பாசிசத்தை மட்டுமல்ல, புலிப் பாசிசத்தையும் ஒருங்கே அனுபவித்தவர்கள். இதைப் பற்றி சிங்கள மக்கள் உணர முடியாதவர்களாக, அவற்றைப் பற்றிய சுயதெளிவைப் பெறுவதற்குரிய அடிப்படைகளற்று காணப்படுகின்றனர். இந்த பாசிசத்தை எதிர்த்து தொடர்ச்சியாக நடந்த போராட்டத்தை அவர்கள் தெரிந்துகொள்ளவில்லை. மாறாக புலி அல்லது அரசைச் சார்ந்த புலி எதிர்ப்பு அரசியல் ஊடாகத்தான், தமிழரின் எதிர்ப்பும் ஆதரவு அரசியலும் இருந்ததாக பொதுவாகக் கருதுகின்றனர். அரசு மற்றும் புலி, அதாவது இவ்விரண்டையும் எதிர்த்த போராட்டம் தொடர்ச்சியாக இருந்தது பற்றியும், குறிப்பாக புலிப் பாசிசத்துக்கு எதிரான போராட்டம் பற்றி சிங்கள மக்கள் தெரிந்து கொள்வது, தமிழ் சிங்கள மக்களின் ஐக்கியத்துக்கு புரிந்துணர்வுக்கும் ஒன்றிணைவுக்கும் அடிப்படையானது.
அரச பாசிசம் நிலவும் இன்றைய சூழலில் கூட, எதிர்க்கட்சிகள் செயல்படக் கூடியதாக உள்ளது. அரசு அல்லாத ஊடகங்கள் தொடர்ந்து இருக்கவும் இயங்கவும் முடிகின்றது. ஆனால் புலிகளின் பாசிசக் கட்டமைப்பில் இவை எதற்கும் இடமில்லை. அனைத்தும் ஒடுக்கப்பட்டு, அவை மரணதண்டனைக்குரிய குற்றமாகியது. ஜனநாயக உரிமை என்பது, துரோகத்தின் அடையாளமாகியது.
குறிப்பாக 1986 – 1991 வரையான காலகட்டத்தில், புலிப் பாசிசமயமாக்கல் உச்சத்தை எட்டியது. நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒன்று முதல் மூன்று வீதம், இனம் தெரியாத வீதிப் படுகொலைகளாக இவை தொடர்ந்து அரங்கேறியது. அன்றைய அன்றாட செய்திப் பத்திரிகைகளில், இனம் தெரியாத இந்த மரணதண்டனை பற்றிய தகவல்களைப் பொதுவாகக் காணமுடியும். தொடர்ச்சியான இந்தப் படுகொலையை மூடிமறைக்க முனைந்த போது, கைதும் காணாமல் போதலும் படிப்படியாக அதிகரித்து வந்தது. புலிகளால் கைது செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள் உயிருடன் மீண்டு வருவதில்லை. இதை தமிழ் மக்கள் சாதாரணமாக உணர்ந்து கொள்ளும் அளவுக்கு இது பொது நடைமுறையானது. அக் காலட்டத்தில் குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேர் வீதிப் படுகொலைக்கு உள்ளானார்கள். இதைவிட 10 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு, உயிர் மீளமுடியாது போனது. இந்த அரசியல் பின்னணியில் தான், புலிப் பாசிசத்தின் குரல் மட்டும் அங்கு எஞ்சியது. அனைத்தும் புலியானது.
இந்தப் புலிப் பாசிசப் பின்னணியில் தான், அரசு ஆதரவு புலியெதிர்ப்பு குழுக்களாக முன்னாள் இனவொடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய குழுக்கள், அரசு ஆதரவு - புலி எதிர்ப்பு அமைப்புக்களாக சீரழிந்தன. இதற்கு வெளியில், அரசு மற்றும் புலிக்கு எதிரான தமிழ்மக்களின் போராட்டம் சுருங்கி வந்தது. ஆனால் போராட்டம் ஓய்ந்துவிடவில்லை. சோரம் போய்விடவில்லை.
இந்த வகையில் புலிப் பாசிசத்துக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, அரசுக்கு எதிரான போராட்டமும் ஒருங்கே நீடித்து இயங்கி வந்தது. புலிகளை மட்டுமல்ல, அரசு ஒடுக்குமுறையையும் எதிர்த்து தமிழர்கள் மத்தியில் இடைவிடாது போராடிய ஒரு நீடித்த வரலாறு எம்முன் இருக்கின்றது. இதை இன்று புரிந்துகொள்வதன் மூலம் தான், இலங்கை தளுவிய பாசிச அரசியலை எதிர்கொள்ளும் அரசியல் அடிப்படையை வந்தடைய உதவும். இது தமிழ் - சிங்கள ஐக்கியத்தை மட்டுமல்ல, அரசியல் ஒருங்கிணைவையும் உருவாக்கும்.
இந்த வகையில் புலிப் பாசிசம் உருவாக்கிய காலகட்டத்தில் உண்மையில் என்ன நடந்தது? இந்த பாசிச மயமாக்கலை மக்கள் எப்படி எதிர்கொண்டனர்? புலி - அரச பாசிசத்துக்கு எதிராக, எந்த அரசியல் முனைப்புடன் தலைமை தாங்க முனைந்தது. இதைத் தெரிந்து கொள்வோம்.
அரசு இனவொடுக்குமுறையை எதிர்த்து போராடிய பல்வேறு குழுக்களின் அரசியல் என்பது, ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் சார்ந்த போராட்டமாக உருவானதல்ல. புலிகள் மட்டுமல்ல, பெரும்பாலான அனைத்துக் குழுக்களும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் சார்ந்து உருவானவையல்ல. மாறாக ஒடுக்கும் வர்க்க அரசியலை அடிப்படையாகக் கொண்ட, வலதுசாரிய இனவாதக் குழுக்களாகத்தான் தோன்றின. இது ஆயுதம் ஏந்தியபோது அது இயல்பாகவே பாசிசத் தன்மை பெற்றது.
பெரும்பான்மை சார்ந்த இனவொடுக்குமுறையை எதிர்த்து, சிங்கள ஒடுக்கப்பட்ட வர்க்கம் போராடாத அரசியல் சூழலைப் பயன்படுத்தி, தமிழ் வலதுசாரியம் பிரிவினைவாதமுடனான பாசிச மயமாக்கலை வேகப்படுத்தியது.
அதேநேரம் பாசிச அரசியல் பலம்பெறும் வண்ணம், தன்னை நண்பனாகக் காட்டிக்கொண்ட அன்னிய தலையீடுகள் இந்த வலதுசாரிய பாசிசமயமாக்கலை ஊக்குவித்தது. இதில் இந்தியா நேரடியாகவும், அமெரிக்கா மறைமுகமாகவும் இவற்றை வளர்த்தெடுத்தது. இந்த அரசியல் பின்னணியில் அமெரிக்க - ருசியா ஏகாதிபத்தியம் சார்ந்த சர்வதேச முரண்பாடுகளும், பிராந்திய நலன்களும் இதற்குள் மறைமுகமாகவும் நேரடியாகவும் இயங்கியது. இந்த அரசியல் பின்னணியில் பாசிசமயமாக்கல் என்பது, வீங்கி வெம்பியது. அரச இனவொடுக்குமுறைக்கு எதிரான குழுக்கள், அன்னிய நாடுகளின் கூலிக் குழுக்களாக மாறியது. அது மக்களை ஒடுக்கும் ஆயுதமேந்திய கூலிக் கும்பலாக மாறியது. இனவொடுக்குமுறையை எதிர்க்கின்ற அரசியல் பின்னணியில், மக்களை ஒடுக்கும் அரசியலை முன்னெடுத்தது.
பி.இரயாகரன்
23.04.2012