இனங்களுக்கிடையிலான இனவாதத்தை முறியடிக்காமல், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஐக்கியத்தை உருவாக்க முடியாது. இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை நடத்த முடியாது. இதற்கான இன்றைய தடைகள் என்ன? வர்க்க சக்திகள் முன்னுள்ள கடமைகள் என்ன?

காலனி காலம் முதல் ஆளும் வர்க்கங்கள்; இனமுரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தான் மக்களை சுரண்டுகின்றது. இது இனவொடுக்குமுறையாக, இனவழிப்பாக வளர்ச்சி பெற்ற போது, இலங்கையின் பிரதான முரண்பாடு இனமுரண்பாடாகியது. இது ஒடுக்கப்பட்ட மக்களை இரண்டாகப் பிளக்கின்றது. இலங்கையின் அடிப்படை முரண்பாடு வர்க்க முரண்பாடாக இருக்கின்றது. இது ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்துக்கு வழிகாட்டுகின்றது. பிரதான முரண்பாடு இனங்களைப் பிளக்க, அடிப்படை முரண்பாடு ஐக்கியத்தைக் கோருகின்றது. இங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்துக்கு தடையாக, பிரதான முரண்பாடான இனமுரண்பாடு இருக்கின்றது.

அடிப்படை முரண்பாடு சார்ந்த இந்தத் தடையை எப்படிக் கடப்பது. இதுதான் எம்முன்னுள்ள அடிப்படையான கேள்வி. இதைப் புறந்தள்ளிவிட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஆளும் வர்க்கங்களோ இனங்களைப் பிளந்து மோதவைக்கின்றது. இதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்கு எதிராக ஐக்கியப்பட்டு போராடுவதைத் தடுக்கின்றது.

இது தான் எதிர்மறையில் எம்மிடம் ஒன்றைக் கோருகின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் இனப்பிரச்சனை தொடர்பாக, தமக்கு இடையில் முரணற்ற தீர்வை வந்தடைய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. இதை நிராகரிப்பதன் மூலம், அல்லது கண்டுகொள்ளாமல் விடுவதன் மூலம் அல்லது எமது வர்க்க ஆட்சியில் இதற்குத் தீர்வைக் காணமுடியும் என்பதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்கு இடையில் ஒரு ஐக்கியத்துக்கு வந்தடைய முடியாது. இது ஆளும் வர்க்கத்தின் அதே நோக்கத்துக்கு உதவுவதாகும்;. இந்த அரசியல் பின்னணியில் இன முரண்பாட்டுக்கான தீர்வை, ஆளும் வர்க்கங்களிடம் நாம் கோருவது அர்த்தமற்றதாகிவிடும்.

ஆளும் சுரண்டும் வர்க்கங்கள் இனரீதியாகப் பிரிந்து, ஒடுக்கப்பட்ட வர்க்க ஐக்கியத்துக்கு குழிபறிக்கின்றது. ஒருபுறம் இனவொடுக்குமுறைக்கு எதிரான பிரிவினையாகவும், மறுபக்கம் இனப் பிரிவினைக்கு எதிரான ஒடுக்குமுறையாகவும் தன்னை முன்னிலைப்படுத்திக் காட்டுகின்றது. இன முரண்பாட்டை கொண்டு, ஆளும் வர்க்கங்கள் இப்படி மக்களை பிரித்து வைத்திருக்கின்றது. இதை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களை ஐக்கியப்படுத்த வேண்டும்;. ஆகவே ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்கு இடையில் ஒரு முரணற்ற தீர்வு காணவேண்டும். இதை நாம் வெற்றிகரமாக வந்தடைந்தால், பிரிவினைக் கோரிக்கை மூலமான இனப்பிளவையும், ஒடுக்குவதன் மூலம் ஐக்கியப்படுத்தும் இனப் பிளவையும் முறியடித்துவிட முடியும். இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்க ஆட்சியே, எமது அரசியல் இலக்காகும். இதை நாம் மறந்துவிட முடியாது. இதற்கான தடையை அரசியல் ரீதியாக கடப்பதன் மூலம் தான், இலங்கையில் வர்க்கப் போராட்டத்துக்கு மக்களை அணிதிரட்ட முடியும். இனவாதக் கண்ணோட்டத்தில் இருந்து மக்களை வர்க்க கண்ணோட்டத்தில் சிந்திக்கவும் செயலாற்றவும் வழிகாட்டுவது தான் வர்க்கக் கட்சியின் உடனடிக் கடமையாகும்.

ஆளும் வர்க்கங்கள் முன்தள்ளும் இனப்பிளவையும், அது சார்ந்து மக்கள் கொண்டுள்ள தப்பபிப்பிராயங்கள் பின்னால் நாம் வால் பிடித்துச் செல்லமுடியாது. மக்கள் இனங்கள் பால் கொண்டு இருக்கக் கூடிய அனைத்து தப்பபிப்பிராயங்களையும் களைவதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களை ஐக்கியப்படுத்தும் வர்க்க அரசியல் உணர்வை ஏற்படுத்தவேண்டும். குறுகிய இனவாத உணர்வை எதிர்த்துப் போராட வேண்டும்;.

இந்த வகையில் தேசிய இனப்பிரச்சனையை ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்கு இடையில் முரணற்ற வகையில் அணுகுவதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஐக்கியத்தை உருவாக்க வேண்டும். எப்படி என்பதே எம்முன்னுள்ள மையமான விடையம்.

இந்த வகையில் லெனினின் சுயநிர்ணயக் கோட்பாட்டு மட்டும் தான் இதை வழி காட்டுகின்றது. இது முரணற்றதாக உள்ளது. இது ஒடுக்கி ஐக்கியப்படுத்தும் ஆளும் வர்க்க ஒடுக்குமுறையையும், ஒடுக்குவதைக் காட்டி ஆளும் வர்க்கம் முன்தள்ளும் பிரிவினை வாதத்தையும் எதிர்க்கின்றது. லெனினின் சுயநிர்ணயக் கோட்பாடு ஆளும் வர்க்கப் பிரிவினையை எதிர்க்கின்றது, ஆளும் வர்க்கம் ஒடுக்குவதன் மூலம் ஐக்கியமாக்கி வைத்திருக்கும் இனவொடுக்குமுறையையும் எதிர்க்கின்றது.

வர்க்கப் போராட்டத்தை நடத்துவது தான் லெனினின் சுயநிர்ணயக் கோட்பாடு. இதுதான் எமது நோக்கமும். இந்த வகையில் லெனின் எமக்கு இந்த விடையத்திலும் வழிகாட்டி உதவுகின்றார். எந்த வகையில்

1.பெரும்பான்மை இனம் சார்ந்து ஆளும் வர்க்கம் ஒடுக்கி ஐக்கியப்படுத்துவதை எதிர்த்து, பிரிந்து செல்லும் உரிமையை முன்வைக்கக் கோருகின்றது. ஒடுக்கும் இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் ஒடுக்கி ஐக்கியப்படுத்துவதை எதிர்த்து பிரிந்துசெல்லும் உரிமையை வலியுறுத்தி மக்களை அணிதிரட்டுவதன் மூலம் ஐக்கியத்துக்கு வழிகாட்ட வேண்டும்.

2. ஒடுக்கப்பட்ட இனம் சார்ந்து இனவொடுக்குமுறைக்கு எதிராக ஆளும் வர்க்கம் முன்தள்ளும் பிரிவினைவாதத்தை எதிர்த்து, ஐக்கியத்தை முன்வைக்கக் கோருகின்றது. ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் பிரிந்து செல்வதை எதிர்த்து, ஐக்கியத்தை முன்வைத்து வழிகாட்ட வேண்டும்.

இங்கு ஒடுக்கும் இன மற்றும் ஒடுக்கப்பட்ட இனம், இரண்டும் ஒரு புள்ளியில் முரணற்று சந்திக்கும் போது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடையிலான ஐக்கியத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இன்று இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்துக்கும், வர்க்கப் போராட்டத்துக்கும் தடையாக இருப்பது

1.லெனினின் சுயநிர்ணய அடிப்படையில் இனமுரண்பாட்டைப் புரிந்து கொள்ளாமை. அதை தவறாக விளக்குவதும், குறுகிய நோக்கில் திரிப்பதுமாகும். லெனினின் வர்க்கக் கோட்பாட்டை சரியாக முன்னெடுக்காமை தான், இலங்கையில் இனமுரண்பாடு முதன்மை முரண்பாடாக தொடர்ந்து நீடிக்கக் காரணமாகும்.

2.ஒடுக்கப்பட்ட மக்கள் வர்க்க ரீதியான அரசியல் உணர்வைப் பெறாமை. வர்க்க ரீதியான அரசியல் கல்வியை கற்காமை, கற்றுக்கொடுக்காமை, கற்றுக்கொள்ள ஆர்வமின்மை, வர்க்க ரீதியான அரசியல் முன்னெடுப்புக்கு தடையாக உள்ளது. போராட்டங்கள் குறுகிய எல்லைக்குள் முடங்கிவிடுகின்றது.

3.மக்களை வர்க்க ரீதியான அரசியல் உணர்வுடன், செயல்பூர்வமாக வழிகாட்டாமை. இந்த அடிப்படையில் அணிதிரட்டாமை.

4.இனரீதியாக பிரிந்து நின்று, அரசியலை புரிந்துகொள்ளும் போக்கு. அதற்குள் அரசியலை முன்னெடுக்கும் போக்கு.

இப்படி இருக்க, இனமுரண்பாட்டுக்கான தீர்வை ஆளும் வர்க்கங்களிடம் கோருவதன் மூலம், மட்டும் இன ஐக்கியம் வந்துவிடாது. மாறாக ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்குள் முரணற்ற வர்க்க ரீதியான தீர்வை வந்தடையவேண்டும். இதை நடைமுறைப்படுத்துவதன் மூலம், கற்றலும், கற்றுக்கொள்ளுதலும், மீளக் கற்பித்தலும் முதன்மையானது. இதன் மூலம் வர்க்க ரீதியான அரசியல் உணர்வு பெற்று சமூகத்தை வழிகாட்டுவதன் மூலம், சமூகத்தைப் புரட்டிப் போடும் வரலாற்றுப் பணியை எம்மிடம் வர்க்க வரலாறு கோருகின்றது.

 

பி.இரயாகரன்

18.04.2012