இலங்கையின் பயங்கரமான அரசியல் எதார்த்தம் இதுதான். மக்களுக்காக சிந்திப்பவர்கள், செயல்படுபவர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். சட்டபூர்வமான அரசு சட்டவிரோதமாக இவற்றைச் செய்கின்றது. சட்டம், நீதி, நியாயம் எதுவும் இந்த நாட்டில் கிடையாது.

கடந்த சில ஆண்டுகளில் சில ஆயிரம் பேர் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள் அல்லது கொல்லப்பட்டனர். இதைப் பற்றி எந்த நீதிவிசாரணையும் நடத்தப்படவில்லை. இந்த குற்றங்களைச் செய்தவர்கள் நாட்டை ஆளுகின்றனர் என்ற எதார்த்தம் மீண்டும் எமது முகத்தில் அறைகின்றது.

ஆம், முன்னணி சோசலிசச் கட்சியின் தலைவர்கள் அரசால் கடத்தப்பட்டு காணாமல் போயிருக்கின்றனர். இவர்கள் செய்த குற்றம் என்ன? மக்களை நேசித்தது தான்.

இவர்களை கொத்திச் சென்றது ஏன்? இலங்கை இனவாத வரலாற்றை அரசியல் ரீதியாக முடிவுக்கு கொண்டு வரும் வண்ணம், ஒரு புரட்சிகரமான அரசியலை முன்வைக்க இருந்தனர். தங்கள் கொள்கைகளைப் பிரகடனம் செய்ய இருந்த நிலையில், கடத்தப்பட்டு காணாமல் போயிருக்கின்றனர். அவர்கள் கடத்தப்படவில்லை, அவர்கள் காணாமல் போய்விட்டனர் என்று அரசு பாசிச விளக்கம் கொடுக்கின்றது. மகிந்தாவின் குடும்ப அரசின் விளக்கம் இதுதான்.

அரசால் கடத்தப்பட்டு காணாமல் போன தலைவர்கள், முன்னாள் ஜே.வி.பி உறுப்பினர்கள். அதில் இருந்த வரை, அரசுக்கு இவர்கள் பிரச்சனைக்குரியவர்களல்ல. ஏனெனின் ஜே.வி.பி இனவாத அரசுடன் இணைந்தே பயணித்தது. இந்த இனவாதப் பின்னணியில் வீரவன்சாவின் தீவிர இனவாதம், கட்சிக்குள்ளான முரண்பாடாகி அமைப்பை உடைத்தது. ஒரு பகுதி இனவாத அரசுடன் இணைந்து கொண்டது. இப்படி இந்த அரசியல் பின்புலத்தில் மகிந்தாவின் பாசிச அரசை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்கள் ஒருபுறம் ஜே.வி.பியாக இருக்க, மறுபக்கம் புலிகளாக இருந்தனர். தேர்தல் சதுரங்கத்தில் ஜே.வி.பியும் – புலிகளும் தம்மை அழிக்கும் எதிரியை தேர்ந்தெடுத்தனர்.

ஜே.வி.பி. உடைவின் பின், இனவாதம் மீது கொள்கைரீதியான மாற்றமின்றி மென்மையான போக்கை அரசு எதிhப்பின் ஊடாக கடைப்பிடித்தது. இந்த நிலையில் கொள்கைரீதியான மாற்றத்தைக் கோரியும், புரட்சிகரமான செயல்பாட்டைக் கோரியும் ஜே.வி.பி.க்குள்ளான போராட்டம் தான், அந்த அமைப்பை புரட்சிகரமான வழியில் மீண்டும் உடைத்தது. ஜே.வி.பி. அரசுடன் சேர்ந்து வெளிப்படுத்திய இனவாதம் தான், இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தை அரசியல் ரீதியாக வளர்தெடுத்தது.

ஆக அரசு தன் இனவாதக் கோணத்தில் தனக்கு ஏற்ப உடைக்க, அரசுக்கு எதிரான திசையில் மற்றொரு உடைவுமாக ஜே.வி.பி. உடைந்தது. அரசுக்கு எதிராக, இனவாதத்துக்கு எதிராக, முன்னின்று தலைமை தாங்கிப் போராடிய புதிய அமைப்பை உருவாக்கிய தலைவர்கள் தான் அரசால் கடத்தப்பட்டு காணாமல் போயிருக்கின்றனர்.

அரசுக்கு எதிராக மக்களை கீழிருந்து வெகுஜன இயக்கத்துக்கு அணிதிரட்ட வல்லமையுடைய அமைப்புக்கு எதிரான, அரச பயங்கரவாதத்தின் எதிர்தாக்குதல் இதுவாகும். தமிழ் பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் போன, சரணடைந்து காணாமல் போன உறவினர்களை முன்னின்று வழிநடத்திய கட்சியின் தலைவர்கள், இன்று அதே பாணியில் கடத்தப்பட்டு காணாமல் போயிருக்கின்றனர்.

இராணுவமயமாகி பாசிசமாகிவிட்ட அரச பயங்கரவாதம், தாம் அல்லாதவர்களின் உயிரை அழிப்பதன் மூலம் தான், உயிர்வாழ முடியும் என்ற அரசியல் நிலையை அது எட்டி இருக்கின்றது. இந்த பின்னணியில் தான் முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர்களை இரகசியமாக கடத்தியிருக்கின்றது. கட்சி தன்னை அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக வெளிப்படுத்த முன், தன் தலைவர்களின் ஒரு பகுதியை தற்காலிகமாகவோ அல்லது முழுமையாகவோ இழந்து இருக்கின்றது.

மிக நெருக்கடியான சவால்மிக்க காலகட்டத்தில், மிகவும் நிதானத்துடன் புரட்சிகரமான சூழலை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு இன்று சுமத்தப்பட்டு இருக்கின்றது. குறுகிய உணர்ச்சிக்கு இடமில்லாத வகையில்

1. முன்னணி சோசலிச கட்சியின் தலைவர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன தனிநபர் அழிப்புவாத பாதையை, பதிலடியாக தேர்ந்து எடுக்கக் கூடாது. அதைத் தான் அரசு தூண்டுகின்றது. ஆனால் அது புரட்சிகரமான மக்கள் வழிப்பாதையல்ல. மாறாக வெகுஜன மக்கள் திரள் அமைப்பைச் சார்ந்து, அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டும். எமக்கு முன் அனுபவமுள்ள தனிநபர் பயங்கரவாதம் இலகுவானது என்பதால், அது மாற்று வழியுமல்ல, தேர்வுமல்ல.

2. அரசு மக்கள் திரள் அமைப்பைக் கண்டு தான் அஞ்சுகின்றது. மக்கள் போராடுவதைக் கண்டுதான் அஞ்சுகின்றது. அதனால் தான் அதை முன்வைத்துப் போராடும் தலைவர்களை தனிநபராக இனம் கண்டு அழிக்கின்றது. இதை நாம் எதிர்கொள்ள, தலைமறைவாகக் கூடாது. மாறாக மக்கள் திரள் அமைப்பை உருவாக்கி, அதற்குள் அமைப்பு தலைமறைவாக வேண்டும்;. இலங்கையில் இராணுவ பாசிசமயமாக்கலுக்குள், அதன் அழித்தொழிப்பு அனுபவத்துக்கு முன் இந்தப் பணி மிகமிகக் கடிமானது. ஆனால் இதை உருவாக்குவதுதான் புரட்சிகரமாக கட்சியின் உயிர்வாழ்தற்கான அரசியல் அடிப்படையாகும்.

3. இனப்பிரச்சனை இலங்கையின் பிரதான முரண்பாடாக இன்றும் தொடருகின்றது. இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் வண்ணம், ஒடுக்கப்பட்ட தமிழ்-சிங்கள மக்களை அணிதிரட்டும் வண்ணம், முரணற்ற சுயநிர்ணயத்தை முன்வைத்து ஒரு புரட்சிகரமான கட்சியை நிறுவ வேண்டிய வரலாற்றுக் கட்டத்தில் இதை மேலும் உயர்த்திப் பிடிக்குமாறு கோருகின்றோம்.

4. கடந்தகால புரட்சிக்கு பாதகமான சிந்தனைகளையும், கோட்பாடுகளையும் ஈவிரக்கமின்றி கழித்துக் கட்டிவிடுவதில் முன்னோடிகளாக மாறி, முன்மாதிரியாக மக்களை வழிகாட்டக் கோருகின்றோம்.

5. இந்தக் குற்றங்களை முன்னின்று செய்பவர்கள், நாளை இந்தக் குற்றத்தை செய்ய தூண்டியவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பதை இல்லாதாக்க, அவர்களையும் இதே பாணியில் கொன்று விடுவார்கள். இந்த உண்மையை அரசியல் ரீதியாக விளக்கி, குற்றத்தின் அரசியல் பின்புலத்தை வெளிக்கொண்டு வரும் வண்ணம் இதை அரசியல் மயப்படுத்துங்கள்.

இப்படி புரட்சிகரமான மக்கள் திரளுக்கான அரசியல் பாதையில், பற்பல தடைகளையும் கடந்து செய்ய வேண்டிய பணிகளோ நீண்டு கிடக்கின்றது.

பி.இரயாகரன்

08.04.2012