வலதுசாரிய புலியின் நடத்தைக்கு அரசியல் ரீதியாக நியாயம் கற்பிக்கவும், புலிக்கு அரசியல் வெளிச்சம் போட்டுக காட்டவும், ஐயரின் நூல் மூலம் முனைகின்றனர். புலியின் நடத்தைகள் வலதுசாரிய அரசியல் அல்ல, குறித்த சூழலின் விளைவாக காட்ட முனைகின்றனர். இந்த அரசியல் பின்னணியில் இடதுசாரிய விமர்சனங்களை மறுக்கின்ற, வலதுசாரிய அரசியல் பின்புலத்தில் இவை சோடிக்கப்படுகின்றது.
வலதுசாரிய அரசியல் தன்னையும், தனிநபரையும் மையப்படுத்தியது. இதுதான் புலிகளின் அரசியல் வெட்டு முகம். வலதுசாரியம் மக்களையும், மக்களின் தலைமையையும் மையப்படுத்துவது கிடையாது. இதற்கு எதிரானது தான் வலதுசாரியம். புலிகள் இந்த அடிப்படைக்குள் தான் உருவானார்கள். இதற்கு வெளியில் காட்டுவது அரசியல் அபத்தம்.
இப்படி இருக்க தனிநபர் பயங்கரவாதம் மூலம், புலிகள் முதல் பல்வேறு குழுக்கள் தோற்றம் பெற்ற சூழல் பற்றிய திரிபு திட்டமிட்டு புகுத்தப்படுகின்றது. வலதுசாரிய தேசியத்தை முன்னிறுத்தி தனிநபர் பயங்கரவாதம் மூலம், மக்களை அச்சுறுத்திய வண்ணம், படுகொலைகளை செய்ததன் மூலம், தன்னை அதிகாரமிக்க சக்தியாக மாற்றியது. இந்த தனிநபர் பயங்கரவாதம் மக்கள் முன், தன்னை தலைமறைவாக்கி ஓடி ஒளித்த வண்ணம் தன்னை தக்கவைத்துக் கொண்டது. இப்படித்தான் வலதுசாரிய கொலைக்கும்பலின் அரசியல், மக்களை அச்சுறுத்தி அடிபணியும் வண்ணம் தோற்றம் பெற்று, வளர்ச்சி பெற்றது. இதை இன்று திரித்துக் காட்டமுனைகின்றனர்.
சசீவன் கூறுகின்றார் "அச்சூழலில் புலிகளின் தோற்றம் தொடர்பாக அக்கால மனநிலையில் பதிவு செய்யும் அதேநேரம், அதன் அடிக்கட்டுமானம் தொடர்பான விமர்சனத்தையும் சமாந்தரமாகப் பதிவு செய்வதில் கணேசன் ஐயர் வெற்றி பெற்றுள்ளார் என்றே கூற வேண்டும்" என்கின்றார். அடிப்படையில் மிகத் தவறானது. அக்காலத்தில் தனிநபர் பயங்கரவாத மனநிலையில், மக்கள் இருக்கவில்லை. இந்த வழிமுறையை மக்கள் ஏற்று இருக்கவில்லை. மக்களில் இருந்து அன்னியமான உதிரி நபர்கள், குழுக்கள் மக்களுக்கு தலைமறைவாக இருந்தே கொலைகளைச் செய்தனர். இப்படி தனிநபர்களைக் கொல்லாமல், மக்களை இதன் மூலம் அச்சுறுத்தாமல், இந்த வலதுசாரிய பாசிச அரசியல் நடைமுறைக்கு வரவில்லை. இந்த வலதுசாரிய அரசியலை ஐயரின் நூல் அரசியல்ரீதியாக கொண்டு வரவில்லை.
தனிநபர் பயங்கரவாதம் அக்காலகட்டத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்று. அரசியல்ரீதியாகக் கூட, கூட்டணியின் தேசியவாதத்துக்கு எதிராக பெரும்பான்மை மக்கள் வாக்களித்து வந்திருக்கின்றனர். இந்தப் பின்னணியில் மாற்று அரசியற்கட்சி தலைவர்களைச் சுட்டுக் கொல்லுவதில் இருந்துதான், அச்சமூட்டும் வலதுசாரிய அரசியல் பின்னணியில் தான், இந்த குறுகிய தனிநபர் பயங்கரவாத மனநிலை மக்கள் முன் திணிக்கப்பட்டது.
"அடிக்கட்டுமானம் தொடர்பான விமர்சனத்தையும் சமாந்தரமாகப் பதிவு செய்வதில் கணேசன் ஐயர் வெற்று பெற்றுள்ளார்" என்பது இங்கு தவறானது. போராட்டம் இரண்டு வர்க்க அரசியலுக்கு இடையில் நடந்ததையும், எந்த மக்களைச் சார்ந்து எப்படிப் போராட வேண்டும் என்பதை மையப்படுத்திய போராட்டத்தையும், அது சார்ந்த அரசியல் விமர்சனத்தையும் கூட ஜயரின் பதிவு கொண்டு வரவில்லை.
ஐயரின் கருத்தை தொகுத்தவர்கள் வர்க்க அரசியலுக்கு எதிரானவர்கள் என்பதால், அதற்கு எதிராக வலதுசாரிய உள்ளடக்கத்துக்குள் நியாயப்படுத்தும் வண்ணம் இதை மெருகூட்டினர். அத்துடன் தொகுத்தவர், தொகுத்தபோது புலி அரசியலை தன் அரசியலாகக் கொண்டிருந்தவர். இந்தப் பின்னணியில் அக்காலகட்டம் வலதுசாரிய கண்ணோட்டத்தில் மீள சோடிக்கப்படுகின்றது.
இந்த அரசியல் பின்னணியில் "புலிகளின் தலைவர் பிரபாகரனை நூலாசிரியரால் நிராகரிக்கவும் முடியவில்லை. அதேநேரம் போராட்டத்தில் அவரது வரலாற்றுப் பாத்திரத்தின் பின்பான விளைவுகளை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை." என்று சசீவன், தன் வலதுசாரிய அரசியல் நிலையில் நின்று இன்று கூற முடிகின்றது.
2009ம் ஆண்டு புலிகளின் இறுதி அழிவின் போது மாற்று அரசியலை முன்னிறுத்தி செயல்படாதவர்கள், கருத்தியல் ரீதியாக புலிகளுக்கு பலமுனையில் சோரம் போனார்கள். பல தளங்களில் பல வடிவங்களில் இது நடந்தேறியது. இந்தப் பின்னணியில் ஐயரிடம் பெற்ற தகவல்கனைக் கொண்டு, வலதுசாரிய கருத்தை முன்னிறுத்தும் வண்ணம், தமிழக புலி அனுதாபி ஒருவர் தொகுத்தளித்தவை இன்று நூலாகி இருக்கின்றது. இந்தப் பின்புலத்தில் ஐயரை தங்கள் அரசியல் கண்ணோட்டத்துக்கு ஏற்ப காட்ட முனைகின்றனர்.
இந்த பின்னணியில் ஐயரை புரிந்துகொள்வது அவசியம். ஐயரின் நேர்மை தான், அவரின் அரசியல். எங்கும் அவரின் நேர்மை தான் அவரை முன்னின்று வழிநடத்தியது. இந்த நேர்மை மக்களைச் சார்ந்த அரசியல் நேர்மையாக வளர்ச்சிபெற்றது. இதற்கு அப்பால் இதன் மேலான அவரின் அரசியல் தத்துவ ஆளுமை, புரிதல் என்பது ஆழமற்றது, அப்பாவித்தனமானது, சூதுவாதற்றது.
ஐயரையும் அவரின் அப்பாவித்தனத்தையும், தங்கள் நேர்மையற்ற அரசியலுக்கு ஏற்ப அரசியலாக்கிவிடுகின்றனர். இந்த அரசியல் பின்னணியில் "முதலாவது தலைமைப் பதவியின் மீதான பற்றுதலும் தனிநபர் வழிபாடும் என்ற விமர்சனம்." தவறானது என்று சசீவன் கூறுவதை இங்கு நாம் காண்கின்றோம். இதற்கு சசீவன் கூறுகின்றார் "இதை மறுதலிக்கும் விதமான முக்கிய சம்பவமாக உமாமகேஸ்வரனை தலைமைப்பொறுப்பில் உட்கார வைத்ததைக் கூறலாம். சில ஆண்டுகளாக தானும் நண்பர்களும் கட்டி வளர்த்த இயக்கத்திற்கு புதிதாக வெளியில் இருந்து வந்த ஒருவரை தலைவராக்குகின்றார் பிரபாகரன். உமாமகேஸ்வரனே விடுதலைப்புலிகளின் முதலாவது தலைவர் என்ற விடயமும் - அச்சந்தர்ப்பம் ஏற்பட்ட சூழலும் முக்கியமாகக் கவனப்படுத்தப்பட வேண்டிய புள்ளிகள்." என்கின்றார். புலிக்கும், பிரபாகரனுக்கும் "தனிநபர் வழிபாடும்" "தலைமைப் பதவியின் மீதான பற்றுதலும்" இருக்கவில்லை என்று கூறுகின்ற, சசீவனின் வலதுசாரிய அரசியலுக்கு உமாமகேஸ்வரனை தலைவராக்கியதை காட்டுகின்ற வங்குரோத்து அரசியலை இங்கு காண்கின்றோம்.
அன்று உமாமகேஸ்வரனை தலைவராக்கியது, வலதுசாரிய யாழ்மேட்டுக்குடியின் சிந்தனையின் தேவையின் பாலானது. ஆங்கிலம் தெரிந்த, படித்த ஒருவர் தலைவராகின்றார் அவ்வளவுதான். ஏன் புலிகள் இயக்கத்தை விட்டு ஒடிப்போனவன் தானே பிரபாகரன். குட்பூர்சுவா வர்க்க மனநிலை சாந்த, வலதுசாரியம் அரசியல் தெரிவுகள் தான் இவை. இதனால் வலதுசாரிய அரசியல் கொண்டுள்ள, தன்னையும் தனிநபரை மையப்படுத்தும் அரசியலை மறுப்பது புரட்டு அரசியலாகும்.
அன்று தனிநபர் பயங்கரவாதம் தோற்றம் பெற்று, அது அதிகாரத்துக்கு வராத காலம். புலிகளின் தனிநபர் பயங்கரவாத நடத்தை மட்டும் தான், அதன் அரசியலாக நடைமுறையாக இருந்தது. இதனால் கொல்லுவதில் தலைசிறந்தவர்கள் எல்லாம் தலைவர்கள். இதுதான் முரண்பாடுகளின் குறிப்பான அரசியல் பாத்திரத்தை ஆற்றியது. இந்த வழிமுறை தவறு என்ற அரசியல் முன்னுக்கு வருகின்றது. இந்த அரசியல் பின்னணியில் தன்னை தலைவராக பிரகடனம் செய்த பிரபாகரன், ஒவ்வொரு துண்டறிக்கையிலும் தலைவர் பிரபாகரன் என்று போட்டது முதல், இயக்கத்தின் சத்தியப் பிரமாணங்களின் தலைவர் பிரபாகரனுக்கு விசுவாசமாக இருப்போம் என்ற உறுதிமொழியையும் கோரினான். இப்படி தன்னை முன்னிலைப்படுத்தி, தன் மீதான தனிமனித வழிபாட்டை பிரபாகரன் முன்னின்று அமுல்படுத்தினான். இதை ஏற்காதவர்கள் கொல்லப்பட்டனர். தன் தலைமைப் பதவியை தக்கவைக்க, விமர்சனத்தை தடைசெய்ததுடன், தனக்கு நிகரானவர்களைப் போட்டுத்தள்ளிய தன் தலைமை பிரபாகரன் 2009 முள்ளிவாய்க்கால் வரை நிறுவமுடிந்தது.
பிரபாகரன் தன் கருத்துக்காக, தன் சிந்தனைக்காகவே இதை செய்தார் என்று காட்டும் மற்றைய திரிபைப் பார்ப்போம். "மத்தியகுழு - செயற்குழு தொடர்பான விடயங்களின் போது இயக்கத்தில் தனது பிடி தளர்கின்றதே என்பதைவிட - தனது சிந்தனை முறையின் பால் விடயங்கள் நகராதோ என்ற ஆற்றாமையின் வெளிப்பாடு முதன்மைப்படுத்தப்படுவதாகவே பல விடயங்களைப் பார்க்க வேண்டியுள்ளது. உட்கட்சி ஜனநாயகம் என்ற நிலைப்பாடு - தனது தலைமைப்பதவிக்கு தீங்காக அமைந்துவிடும் என்பதிலும் பார்க்க தனது சிந்தனை முறையிலான நகர்வுப் பொறிமுறைக்குத் தீங்காக அமைந்துவிடும் என்ற மனநிலை மேவி நிற்பதாகவே பார்க்கின்றேன். கணேசன் ஐயர் தவிர, தற்போது உயிரோடிருக்கும் பிற போராளிகள் - தமது நோக்குநிலையில் இருந்து இவ்விடயத்தை எழுதும் போது இவ்விடயம் சார்ந்த மேலதிக தெளிவிற்கு வர முடியும்." என்கின்றார் சசீவன். இங்கு தனிமனிதனையும், அவனின் சிந்தனையைப் பிரிப்பதும், பிரித்ததை நேர் எதிராக காட்டுகின்ற அரசியல் புரட்டை காண்கின்றோம்.
1. இது வலதுசாரிய அரசியல் வழிமுறை என்பதை மறுக்கமுனைகின்றது. தன்னையும், தனிமனிதனையும் மையப்படுத்தியதே வலதுசாரிய அரசியலின் உள்ளடக்கம். இந்த அரசியல் விளைவுதான் பிரபாகரனும், புலிகளும். இதை மறுப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது.
2. தனிமனிதனையும், அவனின் சிந்தனையையும் பிரித்துக் காட்டுகின்ற அரசியல் திரிபு.
இப்படி சிந்தனைக்கு வெளியில், தலைமை பற்றிய சிந்தனை முறையை பிரித்து காட்டுகின்ற அரசியல் நோக்கம் கபடம் நிறைந்தது. "தனது சிந்தனை முறையின் பால் விடயங்கள் நகராதோ" என்ற நோக்கில் தான், தன் தலைமையை பிரபாகரன் நிறுவினார் என்பது, தன் சிந்தனைக்குள் தன் தலைமை பற்றிய கண்ணோட்டம் இருக்கவில்லை என்று கூறுகின்ற அரசியல் அபத்தமானவை, கபடம் நிறைந்தவை. வலதுசாரிய அரசியலின் உள்ளார்ந்த கோட்பாடே, தன்னையும் தனி மனிதனையும் மையப்படுத்துவதுதான். இந்தப் பின்னணியில் தன்னை மையப்படுத்துவதற்கு வெளியில், அரசியல் இருப்பதில்லை. புலியையும், பிரபாகரனையும் நியாயப்படுத்தவும், இதன்பாலான இடதுசாரிய விமர்சனங்களை மறுத்துரைக்கவும் பலர் பலவிதத்தில் முனைகின்றனர். இதைத்தான் ஐயருக்கு முன் தலைகீழாக நின்று சசீவன் கூற முனைகின்றார்.
முற்றும்
பி.இரயாகரன்
04.04.2012
1. வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் "சமாந்தரக்" கோட்பாடு பற்றி - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 01
2. வர்க்கக் கண்ணோட்டமற்ற போராட்டம் எதைக் குறிக்கின்றது - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 02
3. "அடையாள அரசியல்" ஆளும் வர்க்கக் கோட்பாடாகும் - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 03
7. வர்க்க விடுதலைக்காக போராடிய ஐயரை திரிக்கும் பின்னணியில் - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 07