ஜனநாயக மறுப்பு வர்க்கம் கடந்ததல்ல. ஜனநாயக மறுப்பு சுரண்டும் வர்க்கத்தின் பண்பு மாற்றம். பாசிசமயமாக்கல் இதனடிப்படையிலானது. இங்கு ஜனநாயகம் சுரண்டும் வர்க்கக் கோட்பாடு தான். இது சுரண்டப்படும் வர்க்கத்துக்கு வழங்கும் உரிமையை அளவீடாகக் கொண்டது தான், ஜனநாயகம் பற்றிய கோட்பாடுகள். பாட்டாளிவர்க்கம் ஜனநாயகத்தைக் கோரும் போது, முரணற்ற ஜனநாயகத்தைத்தான் கோருகின்றது.

இங்கு புலிகள் பிரச்சனையை வெறும் "ஜனநாயக" பிரச்சனையாகத் திரித்துக்காட்ட முனைகின்றனர். அத்துடன் "ஜனநாயகம்" பற்றிய தவறான உள்ளடக்கத்தை முன்வைக்க முனைகின்றனர்.

இதை முதலில் நாம் பார்ப்போம். "ஜனநாயகம் தொடர்பாக நாம் நீண்டகாலம் பேசி வருகின்றோம். ஜனநாயகமின்மையால் நாம் அனுபவித்த கொடுமைகளிலிருந்தும் - எதிர்காலச் சந்ததியாவது ஜனநாயகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தும் எமது உரையாடல்கள் இடம்பெறுவது வரவேற்கத்தக்கதே. அதேநேரம், சில அடிப்படையான விடயங்களை மறந்து விடுகின்றோம். முதலாவது, இந்த 'ஜனநாயகம்' என்ற எண்ணக் கரு எதனைக் குறிக்கின்றது. எம்மை ஆளும் நிறுவனங்களில் - அரசு உட்பட - ஜனநாயகம் எவ்வாறு சாத்தியமாகும் என்பதை யோசிக்க வேண்டியுள்ளது. ஜனநாயகம் என்பது வெறுமனே அரசியல் கோட்பாடோ அல்லது ஒரு குறிப்பிட்ட சாராரால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட விடயமோ அல்ல. அதனை வெறுமனே கோட்பாடாக வரித்துக் கொண்டும் உரையாடல்கள் மூலமாகவும் அமுல்படுத்திவிட முடியாது. ஜனநாயகம் என்பது வாழ்வியல் நடைமுறையுடன் நெருக்கமாகத் தொடர்புபட்டுள்ளது. அரசு அல்லது இயக்கங்கள் போன்றவற்றில் ஜனநாயகத்தைச் சடுதியாக ஏற்படுத்திவிட முடியாது. அதன் நடைமுறைச் சாத்தியப்படுத்தல்களை நாம் எம்மில் இருந்து தொடங்க வேண்டியுள்ளது." என்கின்றார் சசீவன்.

இப்படி ஜனநாயகம் பற்றியும், வலதுசாரிய (புலி) அரசியல் பற்றியும் அபத்தமாகக் காட்டி விளக்க முற்படுகின்றார்.

ஜனநாயகம் என்பதன் அரசியல் சாரம், அது ஒருவருக்கு இல்லாது இருக்கும் வரை தான் அதுவும் நீடிக்கும்;. அனைவருக்கும் ஜனநாயகம் இருக்கிறது என்றால், ஜனநாயகம் அரசியல் அர்த்தத்தை இழந்துவிடும். ஒருவரையொருவர் சுரண்டவும், ஒடுக்கவும் முடியாத போது ஜனநாயகத்துக்கு இடமில்லை. இங்கு மனிதனை மனிதன் சுரண்டவும், ஒடுக்கவுமுள்ள உரிமையை தான் "ஜனநாயக" மாக உள்ளது. இந்த வர்க்கத்தின் சர்வாதிகாரம் தான், எங்கும் நிலவுகின்றது. இந்த வர்க்க சர்வாதிகாரத்தையே "ஜனநாயக"மாக அவர்கள் முன்னிறுத்துகின்றனர். சுரண்டுப்படும் வர்க்கத்தின் எதிர்ப்பை அனுசரிக்கும் எல்லையைத் தான், எதிர்நிலை ஜனநாயமாக முன்னிறுத்தித் தன்னைக் காட்டுகின்றது.

சுரண்டப்படும் வர்க்கத்தின் எதிர்ப்பு, தன் சுரண்டும் வர்க்க ஜனநாயகத்துக்கு தடையாக மாறும் போது அது பாசிசமாக பண்பு மாற்றம் பெறுகின்றது. ஜனநாயகத்தின் பண்பு மாற்றம் தான் பாசிசம். அதாவது சுரண்டும் வர்க்கம் தன் சுரண்டும் ஜனநாயகத்தை தக்கவைக்கும் வடிவம் தான் பாசிசம்.

ஜனநாயகத்தை பேசுகின்றவர்கள், அதைக் கோருகின்றவர்கள் பாசிசத்துக்கு எதிராகப் பேசியாக வேண்டும்;. சுரண்டலுக்கு எதிராகப் பேசியாக வேண்டும். சுரண்டும் ஜனநாயகத்தை எதிர்த்துப் போராடாத ஜனநாயகம் போலியானது, முரணானது.

புலிகள் முதல் மற்றைய இயக்கங்களுக்கு எதிரான போராட்டத்தின் அரசியல் சாரம், ஒடுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்களின் சமூகப் பொருளாதார அடிப்படையிலானது. தேசியம் கூட அப்படித்தான். இப்படித்தான் போராட்டம் தோற்றம் பெற்றது. அதை அங்கு முன்வைக்கும் ஜனநாயகம் இருக்கவில்லை. ஆக இரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான, அதன் நலன் சார்ந்த போராட்டமாகவே எழுந்தது. ஒடுக்கப்பட்ட சுரண்டப்பட்ட வர்க்கத்தையொடுக்கிய சுரண்டும் வர்க்கம் தான், தன்னையே பாசிசமயமாக்கியது. பண்புரீதியான குணாம்ச வெளிப்பாடே ஜனநாயக மறுப்பு. தான் அல்லாத அனைத்துக் குரல்களைக் கூட அனுமதிக்காத நிலையில், ஜனநாயகம் கோசமாக முன்னுக்கு வருகின்றது. அரசு ஜனநாயகத்தை வழங்குவதாக கூறிய எதிர்ப்புரட்சி முதல் வர்க்கமற்ற ஜனநாயகம் பற்றிய திரிபுகள் வரை அரசியலாக முன்வருகின்றது.

"ஜனநாயகமின்மையால் நாம் அனுபவித்த கொடுமைகளிலிருந்தும்" என்பது, இங்கு தவறான அரசியலாகும். "ஜனநாயகமின்மையால்" அல்ல, "நாம் அனுபவித்த கொடுமைக"ள். மாறாக சுரண்டும் வர்க்க நலன்தான், அனைத்துக் கொடுமைகளுக்கும் அடிப்படைக் காரணம். சுரண்டும் வர்க்கத்தின் நலன்களுடன் பின்னிப்பிணைந்தது தான், இந்த சமூகக் கொடுமைகள். இந்த கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் உரிமை மறுப்புதான், ஜனநாயக மறுப்பாக மாறி வெளிப்பட்டது. இதுதான் எங்கும் நிலவுகின்றது. இதற்கு வெளியில் ஜனநாயகம் பற்றிய விளக்கத்துக்கு இடம் கிடையாது.

சுரண்டலற்ற ஜனநாயகத்துக்கு, இந்தச் சமூக அமைப்பிலான ஜனநாயகத்துக்கு இடமில்லை. இந்தச் சமூக அமைப்பில் ஜனநாயகம் என்பதோ சுரண்டுவதையே குறிக்கின்றது. சசீவனின் ஜனநாயகம் பற்றி விளக்கங்கள் குறுகியதும் திரிந்ததுமாகும். அது சுரண்டலை அங்கீகரிக்கக் கோருகின்றது.

புலிகளின் ஜனநாயக மறுப்பை, அதன் வர்க்க அடிப்படையில் இருந்து எழுந்ததாக கருதி இவர்கள் அணுகவில்லை. அப்படியல்ல என்பது இவர்கள் முன்தள்ளும் கோட்பாடு. 1980 களில் போராட்டம் இரண்டு வர்க்கங்களுக்கு இடையிலானதாக எழுந்தது. இதற்கு வெளியில் அல்ல. மார்க்சிய நூல்களை கற்றல் உட்பட, அதை மறுத்தல் வரை இதற்கு உட்பட்டதுதான். இப்படி இருக்க ஜயரின் கருத்தை உள்வாங்கி தொகுத்தவர்கள் உட்பட, இன்று கருத்துரைக்கும் அனைவரும் இதற்கு வெளியில் ஜயரையும், ஜயரின் செயல்பாட்டையும் திரித்துப் புரட்டி உள்ளனர்.

இதை இன்று வெறும் ஜனநாயக மறுப்புப் பல்லவியாக, ஒப்பாரியாகக் மாற்றிக் காட்டிவிட முனைகின்றனர். இந்த வர்க்கமற்ற அரசியல் தான், புலிகளுடன் என்.எல்.எப்.ரி போன்ற அமைப்பினை ஒரே தரவரிவையில் காட்டி, திரித்து திணித்துவிட முனைகின்து.

இந்த அரசியல் தான் "அரசு அல்லது இயக்கங்கள் போன்றவற்றில் ஜனநாயகத்தைச் சடுதியாக ஏற்படுத்திவிட முடியாது" என்று கூறுமளவுக்கு ஜனநாயகத்தை விதந்துரைக்கின்றது. "சடுதியாக" அல்லாது நிதானமாகச் செய்ய முடியும் என்று கூறுகின்றது. இப்படி வர்க்கமற்ற "ஜனநாயக" பற்றிய பிரமைகளை நம்பிக்கைகளை முன்வைக்கின்றது.

"அரசு அல்லது இயக்கங்கள்" வர்க்கம் கடந்த ஜனநாயகத்தை கொண்டிருக்க முடியும் என்ற, சுரண்டும் வர்க்க ஜனநாயகத்தை தூக்கி நிறுத்த முனைகின்றனர்.

தொடரும்

பி.இரயாகரன்

01.04.2012

 

1. வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் "சமாந்தரக்" கோட்பாடு பற்றி - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 01

2. வர்க்கக் கண்ணோட்டமற்ற போராட்டம் எதைக் குறிக்கின்றது - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 02

3. "அடையாள அரசியல்" ஆளும் வர்க்கக் கோட்பாடாகும் - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 03

4. "இன விடுதலை தொடர்பாகப் பாராமுகத்தைக் கடைப்பிடித்தார்கள்" என்று குற்றஞ்சாட்டும் நீங்கள் யார்? - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 04

5. வரலாற்றை சுயமாகக் கற்க மறுக்கும் பிரமுகர்தனம் பாசிச எடுபிடித்தனமாகின்றது - மார்க்சிய விரோதக் கண்ணோட்டங்கள் மீது - 05