தாங்கள் ஒடுக்குபவர்களுடன் இல்லை, ஒடுக்கப்படும் மக்களுடனும் இல்லை என்கின்றது "சாம்பல்" கோட்பாடு. ஏனெனின் இப்படி இருத்தல் "ஒற்றைப்பரிமாண அரசியல்", "ஒன்றுக்கொன்று முரணான எதிரெதிரான நோக்குநிலைகள்" என்கின்றனர். இதுவே இவர்களின் "சாம்பல்" கோட்பாட்டுத் தத்துவம். பிரமுகரான தங்கள் சுயஇருப்பை மையப்படுத்தி "ஒரு வாழும் யதார்த்தம்" என்று அவர்கள் கருதுவது இதைத்தான். இதன் பின்னணியில் தான் அரசியல் இலக்கிய புலமைசார் மோசடிகள்.

ஒடுக்கியவனுக்கும் ஒடுக்கப்பட்டவனுக்கும் இடையில் தாங்கள் என்று கூறுகின்ற "சாம்பல்" கோட்பாடு, ஒடுக்குபவனுக்கு உதவுவதுதான். புலியுடன் சேர்ந்து வலது பாசிட்டாக மக்களை ஒடுக்குபவர்களாக இருந்தவர்கள் தான் இவர்கள். அதை சுயவிமர்சனம் செய்தும், விமர்சித்தும் மக்களைச் சார்ந்து இடது பக்கத்துக்கு வரவில்லை. மாறாக இடதுக்கும் வலதுக்கும் (கறுப்புக்கும் வெள்ளைக்கும்) இடையில் நிற்பதாக கூற "சாம்பல்" கோட்பாடு. தொடர்ந்து அதே மக்கள்விரோத அரசியல். இங்கு போடும் வேஷம் மட்டும் மாறுகின்றது. தாங்கள் ஒடுக்கியவர்களுடன் இல்லை, ஒடுக்கப்பட்ட மக்களுடனும் இல்லை என்கின்றனர்.

இதை மூடிமறைக்கும் முயற்சியில் "அரசியல் அர்த்தத்தில் கறுப்பு வெள்ளை இருமை எனப்படுவது - ‘பைனறி ஒப்பசிஷன்’ எனப்படுவது - துருவ நிலைகளைக் குறிக்கிறது. கறுப்பு, வெள்ளை அரசியல் எனப்படுவது அதன் பிரயோக நிலையில் இருமையைக் குறிக்கவில்லை. அதன் இறுதி விளைவைப் பொறுத்தவரை அது ஓர் ஒற்றைப்பரிமாண அரசியலே. அதாவது ஏகத்துவ அரசியலே." என்கின்றார். ஒற்றைப்பரிமாணம் அல்லாத அரசியல் இரண்டையும் உள்ளடக்கியதுதான் என்கின்றனர். இரண்டையும் அங்கீகரிப்பதுதான். இருக்கின்ற இந்த அமைப்பை அங்கீகரிப்பதுதான். இதை மாற்ற முனையக் கூடாது. சாதி, பால், சுரண்டல், தேசியம், நிறம்… சார்ந்த ஒடுக்குமுறையை எதிர்ப்பது, இதை மாற்ற முனைவது "ஒற்றைப் பரிமாணம்" கொண்டது. இது இதற்குள் நிலவும் "பன்மைத்துவத்தை" மறுக்கின்றது என்கின்றனர்.

இந்த உலகமயமாதல் வரை முன்னிறுத்தி முன்வைக்கும் கோட்பாடு தான் "சாம்பல்" கோட்பாடு. "இன்ரர்நெற் உலகங்களை திறக்கிறது. நிதி மூலதனம் எல்லைகளைக் கரைக்கிறது. பூகோளக் கிராமம் எனப்படுவது ஒரு சாம்பல் நிறக் கிராமம் தான். எதுவும் அதன் ஓரத்தில் மற்றதோடு கரைந்தே காணப்படும். ஒன்று அதன் ஓரத்தில் மற்றதோடு கரையாத ஓர் உலகம் இனிக் கிடையாது. அதுதான் சாம்பல்." என்கின்றார். "மற்றதோடு கரையாத ஓர் உலகம் இனிக் கிடையாது" என்பது, சாராம்சத்தில் "நிதி மூலத"னத்தின் சேர்ந்து வாழ்தல் தான், எதிர்த்து வாழ்தல் அல்ல உலகம் என்கின்றனர். உலகை மாற்றுவதை மறுத்தல் தான், "பன்மைத்"துவம். இதுதான் "ஜனநாயகம்" இதுதான் "சுதந்திரம்" என்கின்றனர். யாரையும் யாரும் எதிர்த்துப் போராடக் கூடாது. ஏனெனின் இது "கறுப்பு வெள்ளை"யாகும். எதிர்க்காமல் இருத்தல், இரண்டையும் கலத்தல் தான் சாம்பல் என்கின்றனர்.

"அதாவது தன் மையத்தை விட்டுக் கொடுக்காமல் ஓரங்களில் மற்றவர்களோடு கரைந்து இணைந்து இருப்பது. இது ஒரு தொழிநுட்ப யதார்த்தம். இது ஒரு பொருளாதார யதார்த்தம். இது ஒரு சமூகவியல் யதார்த்தம். இது ஓர் உளவியல் யதார்த்தம். இது ஓர் இலக்கிய யதார்த்தம். இது ஓர் அரசியல் யதார்த்தம். இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களை போதனை செய்யக்கூறி அனுப்பிய போது, கூறியதைப்போன்று “இதயத்தில் புறாக்களைப்போல் கபடமில்லாமலும் செயல்களில் பாம்புகளைப்போல் நெளிவுசுழிவுகளோடும்” ஈழத்தமிழர்கள் செயற்படவேண்டிய காலகட்டம் இது." என்கின்றனர். அசல் போக்கிரிகள், மக்களை வைத்து பிழைக்கும் பிழைப்புத்தனம் பிரமுகர்தனம் இதுதான். புலிகள் இருந்த வரை புலியைச் சார்ந்து பிழைத்த அயோக்கியர்கள். புலிக்கு பின் "மையத்தை விட்டுக் கொடுக்காமல்" இந்தியப் பிராந்திய நலன் வரை அதாவது "ஓரங்களில் மற்றவர்களோடு கரைந்து" தான் "ஈழத்தமிழர்கள் செயற்படவேண்டிய"து என்கின்றனர்.

இந்த சமூக பொருளாதார அமைப்பிலான ஒடுக்குமுறையின் "விளிம்புகளை" அங்கீகரித்து அதில் "கரைந்து இணைந்து" நின்று பிழைப்பது தான் "அரசியல் யதார்த்தம்" என்று கூறும் புலிக்கு பிந்தைய மக்களை ஏய்த்துவாழும் புலமைசார்ந்த பிழைப்புவாத பிரமுகர்கள் தான் இவர்கள்.

சமூகத்தை தலைகீழாக மாற்றுவதற்கும், அதைக் கோருவதை மறுக்கின்ற, அதற்கு எதிரான அரசியலை முன்வைக்கின்றனர். இந்த வகையில் மக்களுக்காக அரசியல் இலக்கியம் பேசாத, மக்களை அணிதிரட்டாத அரசியல் இலக்கிய பிரமுகர்கள், அதை கோருபவர்களுக்கு எதிரான தம் சொந்த இருப்பை நியாயப்படுத்த முன்வைக்கும் அரசியல்தான் "சாம்பல்" கோட்பாடு. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவது உண்மைக்கு எதிரானது என்கின்றனர். "உண்மையிடம் இருந்து விலகிச் செல்லும்போது அது அதிகமதிகம் கறுப்பு வெள்ளையாக மாறுகின்றது." என்கின்றனர். சாம்பல் தான் உண்மை என்கின்றனர். இதன் சாரம் என்ன? அரசு மக்களை ஒடுக்குகின்றது என்று கூறிப் போராடுவது ஒன்றில் கறுப்பாக அல்லது வெள்ளையாக இருக்கின்றது என்கின்றனர். இதன் வெளிப்படையான அரசியல் அர்த்தம் வலது அல்லது இடதுமாக இருக்கும் என்கின்றனர். உண்மை வலதுமற்ற இடதுமற்ற கலவையில் இருக்கின்றது என்கின்றனர். இதன் அரசியல்ரீதியான கோட்பாட்டு விளக்கம், தமக்கு யாரும் எதிரியல்ல என்பதுதான். இதன் நடைமுறை ரீதியான, பண்பு ரீதியான விளைவு, பிரமுகராக தாம் இருத்தல்தான்.

18.02.2012 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற "ஆறாவடு" நாவல் மீதான உரையில் (பார்க்க உரையை ) முன்னாள் புலிப்பிரமுகர் நிலாந்தன், இன்றைய தன் பிழைப்பை "ஒரு வாழும் யதார்த்த" மாக காட்டி "சாம்பல்" கோட்பாட்டை முன்வைத்தார். இந்த வகையில் யதீந்திரா, திருநாவுக்கரசு, நிலாந்தன், கருணாகரன் … போன்றவர்கள், தங்கள் கலந்த "சாம்பல்" கோட்பாடு கலவையின் அளவுக்கு ஏற்ப, இந்தியப் பிராந்திய நலனை முன்னிறுத்தும் அரசியல் எல்லை வரை பிரமுகர் அரசியலை முன்வைக்கின்றனர். புலத்தில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் பிழைப்புவாத பிரமுகர் கூட்டம், இதற்கு ஏற்ப காவடி எடுக்கின்றனர்.

இப்படி மக்களை அணிதிரட்டாத அரசியல் இலக்கிய பிரமுகர்கள் கூடிக் கூழ் குடித்து கூத்தாட "சாம்பல்" கோட்பாடு முன்தள்ளப்படுகின்றது. நாங்கள் அதையும் இதையும் பற்றி பேசுவோம். அதை மாற்றுவதற்கு எதிராக நாம் இருப்போம். மாற்றம் என்பது கறுப்பாக அல்லது வெள்ளையாக இருக்கும். மாற்றத்தை மறுப்பதற்கும், மாற்றுவதை அரசியல் ரீதியாக செய்யாது இருப்பதற்கும் "சாம்பல்" கோட்பாடு. இதை வைத்து தாம் பிழைக்கும் பிழைப்பைத்தான் அவர்கள் தாம் "வாழும் யதார்த்தம்" என்கின்றனர்.

இதுவொன்றும் புதிய தத்துவமல்ல. நாங்கள் இடதுமல்ல வலதுமல்ல என்று கூறுகின்ற அதே சாக்கடை அரசியலும், அதே இலக்கிய வண்ணக் கோட்பாடும்தான். முதலாளித்துவ ஜனநாயகம், சுதந்திரம் பற்றிய கோட்பாடுகளின் கீழ் இந்த உலக ஒழுங்கை முன்னிறுத்திய முன்தள்ளும் மையவாத கோட்பாட்டை மூடிமறைக்க, "சாம்பல்" இலக்கியம் அரசியல் என்று யுத்தத்தை மையப்படுத்தி முன்தள்ளுகின்றனர்.

பிரமுகர்தன புலமை சார்ந்த மேலாண்மை மூலம் கூறும் அரசியல், இந்த உலக ஒழுங்கிலான அமைப்பை ஏற்றுக் கொண்டு சீர்திருத்தம் மூலம் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்பதுதான். இந்த அடிப்படையில் புலிக்குள் இருந்த பாசிட் பிரமுகர்கள், தங்களை "சாம்பல்" கோட்பாட்டாளராகக் காட்டிக்கொண்டு இந்தியா முதல் இலங்கை அரசு வரை கொஞ்சியும் கெஞ்சியும் விளையாடுகின்றனர்.

புலிப்பாசிசத்தை நியாயப்படுத்தி அதன் ஒடுக்குமுறைகளை வழிகாட்டிய தத்துவவாதிகளான இந்த முக்கிய நபர்களை இலங்கை அரசு கைது செய்யவில்லை. புனர்வாழ்வு முகாம்களில் அடைத்து "சாம்பல்" கல்வியை புகட்டவில்லை. மாறாக இலங்கை அரசு இவர்களின் சுதந்திரத்தையும், கருத்துக்களையும் எந்த நெருக்கடியுமின்றி அனுமதிக்கின்றது. இந்த வகையில் இன்று இவர்களின் "சாம்பல்" கோட்பாடு அரசுக்கு சார்பாக இருப்பதும், மே 16 முதல் சுதந்திரமாக எந்த நெருக்கடியுமின்றி இலங்கை இந்தியாவில் இயங்குவது புலியை உள்ளிருந்து காட்டிக்கொடுத்து வழிகாட்டிய இவர்களின் "சாம்பல்" கோட்பாடுதான்.

இன்று நாம் விமர்சனங்கள் மூலம் இவர்களைக் காட்டிக் கொடுப்பதான பிரச்சாரத்தை, பிரமுகர்கள் வட்டத்தில் முன்தள்ளுகின்றனர். உங்களை நாம் யாரிடம், எப்படி, எந்த அரசியல் அடிப்படையில் காட்டிக்கொடுக்கின்றோம்!? சொல்லுங்கள். இலங்கை அரசு சரி, இந்திய அரசு சரி உங்களை நன்கு தெரிந்தும் அறிந்தும் வைத்து, இயங்க அனுமதிக்கின்றது. யாரிடம் எதை நாம் காட்டிக் கொடுக்கின்றோம்!? காட்டிக்கொடுக்கும் எல்லைக்குள், உங்கள் "சாம்பல் கோட்பாடு" யாரையும் எதிரியாக காண்பதில்லை, காட்டுவதுமில்லை.

நீங்களோ மக்களுக்கு எதிராக "கறுப்பையும் வெள்ளையையும்" கலந்து மோசடி செய்து பிழைக்க முனையும் "சாம்பல்" பிரமுகராக உங்களை நீங்கள் முன்னிறுத்தும் அரசியல் அடித்தளத்தை, நாம் விமர்சிப்பதையே காட்டிக்கொடுப்பாக காட்டி புலம்புகின்றீர்கள். நீங்கள் மக்களுக்கு செய்யும் இந்த மோசடியையும், மக்களை முன்னிறுத்தி அரசியல் இலக்கிய பிரமுகர்தன "சாம்பல்" ஆபாசங்களையும் அயோக்கியத்தனங்களையும் மக்களுக்கு எதிராக தொடர்வதை எதிர்த்துக் போராடுவது எம்முன்னான வரலாற்றுக் கடமையாக உள்ளது.

பி.இரயாகரன்

06.03.2012