பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க ஸ்டாலினின் நடத்திய பேராட்டத்தில் சரியையும் தவறுகளையும் ஆராயும் போது, அவதூறுகளையும் இக்கட்டுரை தரைமட்டமாக்கின்றது. ஸ்டாலின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பாத்திரம், ஸ்டாலினால் இதை விட எதுவும் செய்ய முடியாது என்று கூறி அனுதாபம் அல்லது வரலாற்றை விளக்கும் எல்லா அடிப்படையின் பின்பும், பாட்டாளி வாக்க சர்வாதிகாரத்தை கைவிட்டுச் செல்வதை கோருகின்றது. ஸ்டாலின் காலம் அதிகார வர்க்க ஆட்சி, அது கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் சோசலிசம் அல்ல, என்ற அனைத்து விளக்கமும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மறுக்கின்றது. இவைகளை முன் வைப்போர் ஏன்?, எப்படி? இவை என்பதை முன்வைப்பதில்லை. இதை முன்வைக்க முடியாத போது அவதூற்றை விரும்பியவாறு வைப்பது நிகழ்கின்றது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், அங்கு தொடரும் வர்க்கப் போராட்டம், அதில் வன்முறை, மரணதண்டனை போன்றவற்றை வர்க்க சமுதாயத்தில் மறுப்பதில் இருந்து, முதலாளித்துவ ஜனநாயகம் பற்றிய பிரமைகளை விதைப்பதில் இருந்தே, இடதுசாரி முகமூடிகளின் பின்பு அவதூறு கட்டமைக்கப்படுகின்றது. இதன் பின்பு தமது வர்க்க நலனை மூடிமறைப்பதில் மிகுந்த சந்தர்ப்பவாத அக்கறை எடுத்துக் கொண்டு, மார்க்சியம் மீது பொறுக்கியெடுத்த தாக்குதலை நடத்துகின்றனர். ஒட்டுமொத்த சமுதாயத்தில் இருந்து பிரச்சனைகளை பகுத்தாய்வதற்கு பதில், குறிப்பானதை முழுமையானதாக காட்டி, தமது வர்க்க நலன்களை தக்க வைப்பதில் ஏகாதிபத்தியத்தின் வளர்ப்பு நாய்களாக இருக்கின்றனர்.

 

இந்த சந்தர்ப்பவாத இடதுசாரிகளின் நோக்கங்கள் பற்றி லெனின் "உழைக்கும் மக்களுக்கு உடனடியாக வெறுப்பூட்டும், அப்பட்டமான சந்தர்ப்பவாதம் மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்தைப் போன்று அபாயகரமானதும் ஊறு விளைவிக்கக் கூடியதும் அல்ல. மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் தனது சந்தர்ப்பவாத நடைமுறைக்கு உரிய தருணம் வரவில்லை என்றும் இன்ன பிறவாகும் நிரூபிக்க அடுக்கடுக்காக மார்க்சிய சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறது" என்றார். ஸ்டாலின் பற்றிய அவதூறுகள் பற்பல விதமானவை. எல்லாவிதமான வடிவங்கள் ஊடாகவும், ஸ்ராலினை தாக்குவதன் மூலம், மார்க்சியத்தை குழி தோண்டிப் புதைக்க கனவு காண்கின்றனர். ஸ்டாலின் புதைகுழி அரசியலைக் கொண்டு இருந்ததாக, அரசியல் ரீதியாக ஆண்மை இழந்து மலடாகிப் போனவர்கள் அவதூறு பொழிந்தபடி, உண்மையில் ஸ்ராலினையும், மார்க்சியத்தையும் புதைகுழியில் புதைத்து விட தலைகீழாக சபதம் எடுத்து குதித்தெழும்புகின்றனர்.