மக்களின் அற்ப சொற்ப உழைப்பு முதல் அவர்களின் சிறு சொத்துகளையும் கூட அழித்து கொள்ளையிட்டு செல்வது, உலகமயமாதல் விரிவாக்கத்தின் சுதந்திர ஜனநாயகமாகும். அண்மையில் ஆர்ஜென்ரீனா மக்களின் தன்னியல்பான எழுச்சியும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரமும் தெளிவுபடவே, உலமயமாக்கல் விளைவை மீண்டும் உலக மக்களின் முகத்தில் அறைந்தது.

ஒரு டொலர் ஒரு பேர்சோவுக்கு சமனாக திகழ்ந்த ஆர்ஜென்ரீனா பணம், அண்மையில் வரைமுறையற்ற வகையில் தனது பெறுமதியை இழந்து வருகின்றது. நவீனப்படுத்தலுடன் கூடிய பொருளாதார சுதந்திரம் என்ற அடிப்படையான பொருளாதார கொள்கையை முன்வைத்து, அரசு சொத்துகளை தனியார் மயமாக்கினர். அத்துடன்  தேசிய உற்பத்திகளை அன்னிய உற்பத்தி மூலம் அழித்தும், உலக வங்கிக் கடனில் வரவு செலவுகளை   திட்டமிட்டும், உள்நாட்டு பொருளாதார கட்டமைப்புளை அவர்களின் ஆலோசனைக்கு இணங்க அழித்துவந்தனர்.

தேசிய வருமானத்தில் 35 சதவீதத்தை வட்டியாக செலுத்தும் நிலைக்கு கொண்டு வந்த, மக்களின் உழைப்பை உலக வங்கி சூறையாடியது. அரசின் வெளி நாட்டு கடன் 15 000 கோடி டொலராக தலைவிரிகோல ஆட்டம் போடுகின்றது. மக்கள் தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோர், அதாவது 140 லட்சம் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்ட நிலையில், 50 லட்சம் மக்கள் மிக மோசமான வறுமை நிலைக்குள் சென்றுள்ளனர். அரசு புள்ளி விபரமே வேலை செய்ய தகுதியான மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவர் வேலையற்றவராக மாறிவிட்டதாக அறிவித்ததுடன், அது ஏறிச் செல்வதையே ஒத்துக் கொண்டது. நாள் ஒன்றுக்கு 2000 பேர் புதிதாக வறுமைக்குள் புகும் அளவுக்கு, மக்களின் உழைப்பு அவர்களின் சிறு சொத்துகளும் சூறையாடப்படுகின்றன. உழைக்கும் மக்களில் அரைவாசி பேர், மாதாந்த வருமானம் 400 டொலராக குறைந்து வறுமைக்குள் கையேந்த வைத்துள்ளது. இதனால் நாட்டின் வாங்கும் திறன் 30 முதல் 60 சதவீதமாக குறைந்து, நாட்டின் வர்த்தகமே முடங்கிவிட்டது.

மக்களின் வாழ்வு, வாழ்வதற்கான அடிப்படைத் தேவையும் சூறையாடப்பட்ட நிலையில், ஏகாதிபத்திய கைக்கூலி அரசான ஆர்ஜென்ரீனா அரசு, அந்த மக்களை ஒடுக்க அவசரகால சட்டத்தை பிரகடணம் செய்ததது. இந்த அவசரகாலச் சட்டம் மூலம், மக்களின் வயிற்றுப் பசியை அடக்கி மௌனமாக இருக்க கோரினர். மக்களால் தேர்ந்த எடுக்கப்பட்ட ஜனநாயக அரசு, அந்த  மக்களை அடக்கி; அடிமைப்படுத்தும் சட்டத்தை கொண்டுவந்தது. மக்களை அடங்கி இருக்க கோரும் வகையில், உலக வங்கியினதும் ஏகாதிபத்திய ஆலோசனைக்கும் இணங்க உருவான அடிமை சாசனத்தை எதிர்த்து, மக்கள் தன்னியல்பாக வீதியில் இறங்கினர். எங்கும் உணவுக்கலகமாக மாறியது. மக்கள் கையேந்தி, வயிற்றுக்கு ஏதும் கிடைக்குமா என்று ஏங்கினர். கிடைப்பதை எல்லாம் பெறவும், கிடைக்காவிட்டால் இருப்பவனிடம் சூறையாடவும் தொடங்கிய நிலையில், அது பெரும் கலகமாக மாறியது. வறுமையில் வாழ்ந்தவனும், புதிதாக வறுமையை உணர்பவனுமாக வீதியில் இரத்தம் சிந்தி போராடினர். அரசு அடக்கமுறையை ஏவி பலரை கொன்று போட்டது.

இது மக்கள் கலகத்தை உச்சத்துக் கொண்டு சென்றது. அரசு தப்பியோடுவதை தவிர வேறு வழியிருக்கவில்லை. இந்நிலையில் மக்களை ஏமாற்ற புதிய ஆட்சி அதிகாரத்தில் ஏறியது. அவர்கள் புதிய மோசடியுடன் அனைத்து வெளிநாட்டு கடன்களையும் கொடுப்பதை தற்காலிகமாக இடை நிறத்துவதாக அறிவித்தனர். அத்துடன் பழைய பொருளாதார கொள்கையே தொடரும் என்று அறிவித்து, தற்காலிக அமைதியை நிலை நாட்டினர். பழைய பொருளாதார கொள்கை, தற்காலிகமாக வெளிநாட்டு கடன்களை கொடுப்பதை நிறுத்துவது என்பது, உண்மையில் மக்கள் கிளர்ச்சியை உடனடியாக நீர்த்துப் போகச் செய்யும் ஒரு கூட்டு ஏகாதிபத்திய முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் இந்த மோசடிக்கு எதிராக மீண்டும் போராட்டங்கள் எழுந்தையடுத்து புதிய அரசும், அரசை கைவிட்டு ஒடியது. அதைத் தொடர்ந்து புதிய மோசடிகளுடன் ஆட்சிகள் மாறிக் கொண்டிருக்கின்றன. மக்கள் வீதியில் பாரிய போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துகின்றனர். மீண்டும் மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்துக் எழுவதை, ஏகாதிபத்தியத்தால் தடுத்து நிறுத்த முடியாவில்லை. மக்கள் தமது விடுதலையை தாமே தீர்மானிக்கும் அந்த நாள் தான், அவர்களின் போராட்டங்கள் ஒய்யும். அதுவரை அந்த மக்களின் போராட்டத்தை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது.