05082021
Last updateஞா, 02 மே 2021 10pm

ஓரு நிமிட அஞ்சலி - சுகந்தன்

செப்டம்பர் 11ம் திகதி மனித இனத்தின் வரலாற்றில்  ஒரு காலக்கோட்டை கிழித்திருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. செப்டம்பர் 11 ம் திகதிக்கு முன்னர் இருந்த உலகம் அதற்குப் பின்னர் சடுதியில் மாற்றமடைந்து தனது இயல்பிலிருந்து முற்றிலும் மாறிப்போய் விட்டது என்றும் கூறப்படுகின்றது. அமெரிக்கா 3000 பேர்களையும் தனது சுரண்டல் பொருளாதாரத்தின் சின்னமாக உயர்ந்தெழுந்து நின்ற இரட்டைக் கோபுரத்தையும், உலக ஆதிக்க ஆக்கிரப்பு இராணுவத்தின் கட்டளை மையமாக அச்சுறுத்தி நின்ற பென்டகனையும் அழிவுக்குள்ளாக்கிய போது மட்டும் தான் உலகம் மாறிப் போய்விட முடியுமா ?

உலகம் மாறவில்லை. அதை உங்களின் பின்னால் கைகட்டி நிற்கும் பொம்மையாக நீங்கள் தான் மாற்றி வைக்க விரும்புகிறீர்கள்.

இந்த செம்டம்பர் 11 ம் திகதியை துக்கதினமாக ஐரோப்பிய ஒன்றியம் பிரகடனப்படுத்தியுள்ளது. நோர்வேயில் செப்டம்பர் 14ம் திகதி பகல் 12 மணிக்கு 3 நிமிட அமைதி காக்கும்படி வேண்டப்பட்டது.

அப்படியாயின் நாளோ கிழமைகளோ வருடங்களோ போதாத அளவுக்கு பட்டியலிட்டு மௌனம் காக்க வேண்டிய சம்பவங்கள்  செப்டம்பர் 11 ம் திகதியை தூசுக்கும் ஈடாகாத வகையில் தள்ளி வைக்கும் கோரமாக சம்பவங்களையும் மனித நாகரீகம் காணாத படுகொலைகளை அழித்தொழிப்புக்களை செய்த அமெரிக்க பேயாட்டங்களையும் எந்த துக்கதினமாக பிரகடனப்படுத்துவது ? இந்த உயிர்ப்பலிகளை யார் நினைவு கூர்வார் ?

கட்டிடங்களை, கால்வாய்களை, உயிர் மூலத்துக்கான ஆதாரங்களை அத்துமீறி படையெடுத்து அழித்த வரலாற்று நினைவுகளுக்கு துக்க நாளேது ?

பிரான்சின் பாசிஸ்ட் Jacques Chiracபசுபிக் தீவுகளை அணு ஆயுத பரிசோதனையில் அழித்தொழித்த போது ஒரு நிமிட மௌனம் ? இல்லை.

பிரான்சில் முன்னாள் பாசிட்டும் பின்னாள்  பிரான்ஸ் பொலிஸ் மா அதிபரும் 1963 இல் 300 மேற்பட்ட அல்ஜீரியரை படுகொலை செய்து, இரகசியமாக செயின் நதியின் அடியில் புதைத்தானே,  அந்த மக்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி இல்லை.

அல்ஜீரிய விடுதலையைக் கோரி நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கே இந்த படுகொலை தண்டனை. அண்மையில் இதை கண்டித்து பாரிஸ் மாநகரசபை தீர்மானம் கொண்டு வந்த போது, பாசிஸ்ட் Jacques Chirac வாரிசுகள் அதை பகிஸ்கரித்து கூக்குரல் இட்டனர். இதை தலைமை தாங்கிய பப்பன், 1940 இல் சில நூறு யூதக் குழந்தைகளை படு கொலை செய்ய தலைமையேற்றவன். அவன் இன்று பதவி இழந்த நிலையில் தான், 1940 ஆண்டுக்குரிய குற்றத்துக்கு பல தடைகளை தாண்டி தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டான். அவனின் வயது காரணமாக விடுவிக்க வேண்டும் என்ற குரல்களும், குறித்த வயதுக்கு மேல் சிறையில் வைக்க முடியாது என்ற சட்டத்தை கொண்டு வந்த விடுவிக்கும் ஒரு முயற்சி, ஜனநாயகத்தின் வக்கற்ற வக்கிரத்தை வெளிப்படுத்துகின்றது. இந் நிலையில் அண்மையில் அவன் சிறையில் இருந்தும் தப்பியோடினான்;. தப்பியோடிய போது லட்சக்கணக்கில் அவன் கையில் பணமும், தப்பியோட கெலிகொப்ரரையும் பயன்படுத்தும் அளவுக்கு சிறையில் சொகுசாக வாழ்கின்றான்;. இந்த பாசிட்டுக்கள் கொன்ற மக்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி? இல்லை

நிறவெறிபிடித்த நாசிகள் தெருக்களில் வெளிநாட்டவரை வெட்டி வேட்டையாடும் போது ஒரு நிமிட மௌனம் ? இல்லை.

பாலஸ்தீனம், கொலம்பியா, கியூபா, ஈராக், கோசவோ நாடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அமெரிக்கா அழித்தொழித்த உயிர்கள் "மனிதாபிமானப் படையெடுப்புக்கள்"  என்று பெயர் கொண்டு பெறுமதி இழந்த போது, ஒரு நிமிட மௌனம் ? இல்லை.

போதைவஸ்து பயிர்கள் அழிப்பு என்ற போர்வையில்,  பொருளாதார ஆதாரமாக விளங்கும் கொலம்பியாவின் காடுகளையும் மந்தைப் புல்வெளிகளையும், விளைச்சல் நிலங்களையும் கண் கொண்டு காணாமல் விமானத்தில் இருந்து நச்சுத் தூவி அழிக்கின்றபோது, அந்நிலத்தின் விளைச்சல் தன்மையை மலடாக்கும் இரசாயனத்தால் அழிந்தொழியும் விளைநிலம் அதையே ஒரேயொரு வாழ்வின் ஆதாரமாக கொண்டு வாழும் அப்பகுதி மக்களை பசியால் வாடித் துடித்து கொல்ல வைக்கின்ற போது,  ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய சமூக அமைப்புக்களும் இதற்கு ஆசி வழங்கி நிற்கும்போது, ஒரு நிமிட மௌனம் ? இல்லை.

துருக்கி- இங்கு அமெரிக்காவின் நீண்ட கரமாக இயங்கும் NATO மிகப் பிரயத்தனத்தில் இரகசியமாக்க முனையும் துருக்கிய பாசிச அரசின் குர்டிஸ் மக்கள் மீதான கொடுங்கோன்மை திட்டமிட்ட படுகொலைகள் அடக்குமுறைகள் எதிர்ப்பார் பேசுவோர் யாரும் இல்லை.

இஸ்ரேலின் அடாவடித்தனத்துக்கு பலியாகும் பலஸ்தீனக் குழந்தைகள் உயிர் அற்பமானது. இஸ்ரேல் ஆக்கிரமித்து நின்று கொண்டே எதை நிபந்தiனாயாக்குகின்றதோ அதையே மீண்டும் வாந்தியெடுக்கும் அமெரிக்க மேற்குலக மேலாண்மைக் குணம். அடிமை உயிரல்லவா இவைகள் அற்ப பெறுமதியாகுமா ?

அமெரிக்கா தலைமையில் , பிரிட்டனின் செருக்குடன் உலகமெங்கும் நடாத்தப்படும் அட்டூழிய படுகொலைகளுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்த விழைந்தால் நாட்கள் வருடங்கள் கூடப் போதாது.

ஆனால் இந்த நியூயோர்க் கோபுரகட்டிட இடுபாடுகளுக்குள் மடிந்தழிந்த இழப்புக்கள் என்றுமே நடந்திராத பேரழிவாக பெறுமதி தரப்பட்டு உலகமெங்கும் ஊடகங்கள் ஒப்பாரி வைக்கின்றன.

ஏதற்கு அநுதாபம் தெரிவிக்க வேண்டும் எதற்கு தெரிவிக்கக் கூடாது என்பதற்கு கூட கிளின்ரனும் புஷ்சும் சொன்னால் தான் சரி. அவர்களது கருத்துக்கு மறுகருத்குள்ள யாரும் பயங்கரவாதிக்கு ஆதரவானவர்கள்.

அமெரிக்க அட்டூழியங்களையிட்டு மூச்சுவிடாமல் இருக்கும் இவ்வூடகங்கள் இது ஜனநாயகத்துக்கு பயங்கரவாதிகளால் விடப்பட்ட சவால் என்றும் ஜனநாயகத்தின் மேல் போர் தொடுக்கப்பட்டிருக்கின்றது என்றும் அமெரிக்க மேற்குலக அரசுகளின் அதிகார வர்க்கங்கள் கக்கும் வார்த்தைகளை மீண்டும் மெருகோடு திருப்பிக் கக்கி வைக்கிறார்கள்.

தாக்கியழிக்கும் இலக்காக தெரிவு செய்யப்பட்ட இடங்களான உலக சந்தை மையம் உயர்தெழுந்து நின்று பறைசாற்றியதென்னவெனில் இது தான் உலகைச் சூறையாடிக் கொழுக்கும் பணக்கார வர்க்கத்தின் இறுமாப்புச் சின்னம் என்பதையே.

இந்த இறுமாப்புச் சின்னம் உலகமெங்கும் வாழும் வறுமைமிக்க மக்களின் சீற்றத்துக்கு, ஆட்படும் என்பது புரிந்து கொள்ளப்படக்கூடியது.

படைகளை ஏவும் இராணுவ அதிகார கட்டளை மையமாக விளங்கும் பென்ரகன் தாக்கப்படுவது என்பது ஐனநாயகம் தாக்கப்படுவதற்:கு ஈடானது என அவர்கள் சொல்வதில் தவறேதுமில்லை. ஏனெனில் ஒரு கொள்ளையிடும் கூட்டத்தின் உலகத்தின் பெரும்பாலான மக்களின் உழைப்பைச் சுரண்டி அவர்களை ஏழைகளாக உழல விடும் ஐனநாயகத்தின் சின்னங்கள் தான் அவை. அவர்களது வளங்களை தனது ஆக்கிரப்புக்குள்ளாக்கி இலாபம் பெருக்குவதற்கு இடைஞசல் தரும் தடைகளை அகற்ற இராணுவ பலத்தை ஏவிவிட்டு சின்னாபின்னமாக்கும் ஜனநாயகத்தின் இருப்பிடம் தான் பென்ரகன்.

அவர்கள் பேசிக் கொள்வது பணக்காரச் சுரண்டலுக்கு உரிமை வழங்கும் ஜனநாயகம். ஜனநாயகம் உலகச் செல்வந்தர்களுக்கே உரித்தானது.

இந்த ஆத்திரம் நியாயமானது. உலகமெங்கணும் நாடுகளுக்குள் நுழைந்து அந்நாட்டுச் சுதேசிகளை அழித்து அடிமைப்படுத்தி சிறுமைப்படுத்தி கேவலப்படுத்தி செல்வங்களை கொள்ளைகொண்டது மட்டுமல்லாமல் காலனி நாடுகளாக அடிமை கொண்டு  ஆண்டு வந்து அவர்களின் கலாச்சார பாரம்பரியங்களை இழிவுபடுத்தி சிறுமைப்படுத்தி காட்டுமிராண்டிகளாக நடந்து கொண்ட வெள்ளை இனத்துக்கு, அதன் முகத்தில் கிடைத்த முஷ்டி இடிதான் இது. விதைத்த பயிரின் அறுவடைதான் இது.

தேர்ந்தெடுக்கப்பட்ட முறை பயங்கரவாதமா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, வேறு வழியின்றிய ஒரு செய்த வினைக்கான பதிலடி தான் இது என்பது அமெரிக்க மக்களால் கூட உணரப்படப் கூடியது.

இந்தப் பின்னணியில் விமானங்கள் மோதி நொருங்கி தீப்பிடித்து சாய்ந்து சிதறிக்கொண்டிருந்த உயர் மாடிக் கட்டிடத்திலிருந்து அவலச்சாவிலிருந்து தப்பிப் பிழைக்க துடிதுடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களை தொலைக்காடசிகள்  உலகமெங்கும் நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்த செப்டம்பர் 11 ம் திகதி எந்தக் காலக் கோட்டையும் புதிதாக கிழித்துவிடவில்லை.

ஒரு நிமிட அஞ்சலியல்ல ஒரு ஆயுள் போராட்டம் தான் இதற்கெல்லாம் பதிலாக முடியும்.


பி.இரயாகரன் - சமர்