10012023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

தேசிய பொருளாதாரத்தை தேசிய அடிப்படையாக கொள்ளாத, ஒடுக்கப்பட்ட உலக மக்களின் ஆதரவை திரட்டாத எமது போராட்டம். புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் உரை மீது

வழமை போல் இம்முறையும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தினச் செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை பலப்படுத்தவும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எமது தேசியத்தை உயர்த்திப் போராடவும், செய்ய வேண்டிய வரலாற்று பணிகளை இந்தச் செய்தி அடிப்படையாக கொண்டிருக்கவில்லை. குறிப்பாக புலிகளின் விடுதலைப் போராட்டம் செய்த தவறுகள் மீதான சுயவிமர்சனம் மற்றும் உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவை திரட்டும் வகையில், ஒரு போராட்டத்தில் செய்ய வேண்டிய ஒரு வரலாற்று தார்மீகப் பணியைப் பற்றி வழக்கம் போல் எதுவுமில்லை. புலிகள் தம்மையும் தமது தவறான அரசியல் வழியில் இருந்து மாற்றிக் கொள்ள தயாராக இல்லை என்பதை, மீண்டும் நெருக்கடியான இன்றைய தருணத்திலும் செய்தியாக தாங்கி வெளிவந்துள்ளது. புதிய நிலைமைகளுக்கு ஏற்ப வால் பிடித்து செல்வதும், கருத்துக் கூறுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது. இம்முறை வழமையான வலது கண்ணோட்டத்துக்கு பதில், இடது தன்மை கொண்ட வலது கண்ணோட்டத்தை பிரதிபலிக்கும் புலிகளின் தலைவரின் செய்தி, புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களிடையே ஒரு அதிர்ப்தியை வலது கண்ணோட்டம் சார்ந்து ஏற்படுத்தியுள்ளது. மறு தளத்தில் சொல்லத் தவறியது, செய்யத் தவறியது என்ற விடயத்தை விட்டு, சொன்னதுக்குள்ளான சிலவற்றின் மீதான விமர்சனத்தைப் பார்ப்போம்.

"தமிழ் மக்கள் தமது இனத்துவ அடையாளத்துடன் தமது சொந்த மண்ணில் வரலாற்று ரீதியாக தாம் வாழ்ந்து வந்த தாயக மண்ணில், நிம்மதியாக, சமாதானமாக, கௌரவத்துடன் வாழவிரும்புகிறார்கள். அவர்களது அரசியற் பொருளாதார வாழ்வை அவர்களே நிர்ணயித்துக் கொள்ள விரும்புகிறார்கள்" என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் குறிப்பிடுகின்றார். பொதுவான தளத்தில் இது சரியான வாதமாக தென்பட்டாலும், புலிகளின் வரலாற்றுடன் ஆழமாக பார்க்கும் போது இது முரண்படுகின்றது. ஒரு தேசியம் என்பது என்ன என்ற கேள்விக்கு புலிகளின் அகராதி தேசிய மறுப்பைக் கொண்டுள்ளது. ஒரு தேசியத்தின் மையமான விடையம் என்ன? அது எப்போதும் எங்கும் தேசிய பொருளாதாரமாகும். தமிழ் மக்களின் பண்;பாடு, கலாச்சாரம், ஒரு நிலத்தொடர் அனைத்தும் தேசிய பொருளாதாரம் மீது கட்டமைக்கப்பட வேண்டும். தேசியம் இதைத் தாண்டி விளக்கம் பெறின், தேசிய பொருளாதாரமல்லாத ஏகாதிபத்திய பொருளாதாரத்துக்கு அடிமையாகவே வாழ்வதை குறிக்கும். சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் எதை அழிக்க விரும்புகின்றனர்? ஏகாதிபத்தியம் எதை அழிக்க பயங்கரவாத முத்திரை குத்துகின்றது? அனைத்து தேசிய பொருளாதாரத்தையும் அழித்து, அதன் மேல் உலகமயமாதல் பொருளாதாரத்தை நிறுவுவதேயாகும். தேசியத்தை கோரும் மக்கள் தமது சொந்த வளங்கள் மேல் தமது சொந்த உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்வதே, தேசியத்தின் அடிப்படையும் ஆதாரமுமாகும். அந்த உழைப்பு சூறையாடப்படுவதையும், தேசிய வளங்களை அன்னியன் எடுத்துச் செல்வதையும் தடுக்கும் வகையில், தேசியம் தன்னைத் தான் அரசியல் மயமாக்கி ஆயுதபாணியாக வேண்டும். அதன் அடிப்படையில் விடுதலைப் போராட்ட காலத்தில் தேசிய உற்பத்தி மையமான அடிப்படையான கோசமாக வைத்து, அதை நடைமுறைப்படுத்தி அதன் அடிப்படையில் கோரிக்கைகள் உள்ளடக்கப்பட வேண்டும்;. யுத்த நிறுத்தம், பேச்சு வார்த்தை என அனைத்திலும் தேசிய பொருளாதாரம் என்ற மையமான கோசமே, முதன்மையானதாக இருக்க வேண்டும்;. ஆனால் இன்று தமிழ் மக்கள் சார்பாக யாரும் தேசிய பொருளாதாரம் சார்ந்து போராட்டத்தை வகுப்பதில்லை, விளக்குவதில்லை. அரசுடன் அல்லது எதோ ஒரு மூன்றாம் தரப்பு பேச்சு வார்த்தையின் போதும் இந்த தேசியமே மையக் கோசம் என்பதை, புலிகள் முதல் தேசபக்தன் ஈறாக கவனத்தில் எடுப்பதில்லை.

தேசிய பொருளாதாரம் என்ற விடையம் சுயநிர்ணயத்தில் மிக ஆழமானதும் மையமானதும் மிகவும் முக்கியத்துவமுடையதுமாகும். சிங்கள இனவாத பெருந்தேசியத்தை தனிமைப்படுத்தவும், இந்த தேசிய பொருளாதாரம் மிக முக்கியத்துவமுடையது. தமிழ் மக்களின் தேசிய பொருளாதாரத்தை மட்டுமல்ல, சிங்கள மக்களின் தேசிய பொருளாதாரத்தையும் முன்வைத்து போராடவும், பேசவும் முனையும் போது மட்டுமே, ஒரே தேசத்தில் வாழ்கின்ற ஐக்கியம் சாத்தியம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் ஜே.வி.பி முதல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஈறாக கட்டமைக்கப்பட்டுள்ள தேசிய இனவாத ஏகாதிபத்திய பொருளாதாரத்தை தனிமைப்படுத்தி, சிங்கள மக்களின் தேசிய பொருளாதாரம் என்ற கோரிக்கையை, தமிழ் மக்கள் முன்வைத்து போராடவேண்டும்;. சமாதானம், ஐக்கியம் என்ற பொது அடிப்படையில் ஒன்றுபட்ட வாழ்வுக்கு, தேசிய பொருளாதாரமே அடிப்படையான மையமான விடையமாகும். தேசியத்தை முன்வைப்பதன் மூலம் இதை மறுக்கும் இலங்கை அரசு, மற்றும் ஏகாதிபத்திய ஜனநாயக விரோதத்தை தோல் உரிக்க வேண்டும்;. இலங்கையில் இனவாத யுத்தம் கட்டமைக்கப்படுவதும், ஏகாதிபத்தியம் தேசியத்தை பயங்கரவாதமாக காட்டி ஆக்கிரமிக்க முனையும் எல்லாப் போக்கிலும், தேசிய பொருளாதாரமே அழிக்கப்படுகின்றது. இந்த தேசிய பொருளாதாரம் என்ற மையமான கோசம், உலகமக்களின் ஆதரவை எமக்கு பெற்றுத்தரும். ஏனெனின் ஏகாதிபத்தியம் உலகளவில் தேசிய பொருளாதாரத்தை அழிக்கின்றது. மக்கள் அதற்கு எதிராக உலகெங்கும் போராடுகின்றனர். அவர்கள் தேசிய பொருளாதாரம் என்ற மையமான கோசத்தில் ஒன்று இணைவது இயற்கையாகும். அதே நேரம் ஏகாதிபத்தியம் குத்தும் பயங்கரவாத முத்திரையும், அதன் ஆக்கிரமிப்பும்; அம்பலப்படும்.  பெரும் தேசியத்தின் பின் கட்டமைக்கப்படும் யுத்த கோசங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிங்கள மக்களையும் சொந்தத் தேசிய பொருளாதாரத்தின் கீழ் தேசிய பொருளாதாரக் கோரிக்கை அணிதிரள வைக்கும். இந்த நிலையில் ஐக்கியமான இலங்கையில், சுயநிர்ணய அடிப்படையில் இரண்டு தேசங்கள் என்ற வெற்றிகரமான தேசியத்தை நிறுவவும், ஏகாதிபத்தியத்தை ஒன்றுபட்ட உலக மக்களின் ஆதரவுடன் எதிர்த்து போராடமுடியும்;.

தமிழ் மக்களின் "அரசியல் பொருளாதார வாழ்வு" என்பது எதைக் குறிக்கின்றது. ஏகாதிபத்திய பொருளாதாரம், அதன் அடிப்படையிலான பண்பாடு கலாச்சாரம் எம் மண்ணில் ஊடுருவுவதை எதிர்த்து, இந்த "அரசியல் பொருளாதார"த்தை புலிகளின் தலைவர் கோருகின்றாரா எனின், நிச்சயமாக இல்லை. போராட்டம் ஏகாதிபத்திய பொருளாதார ஊடுருவலை எதிர்த்து, அதன் பண்பாட்டு கலாச்சார வேர்களை எதிர்த்து, ஏன் தேசியத்தை முன்வைத்து போராடவில்லை? அதன் அடிப்படையில் போராட்டம் தனது கோசங்களை ஏன் முன்வைக்கவில்லை? மக்களின் உழைப்பு, அவர்களின் தேசிய வளம் மீது தேசியத்தை கட்டமைக்கவும், அதை பாதுகாக்கவும் அதன் அடிப்படையில் போராட்டத்தை ஆயுத பாணியாக்க தவறுவது ஏன். புலிகள் வைக்கும் ஏகாதிபத்திய பொருளாதார தேசியம், தேசிய பொருளாதாரத்தையும் அதன் அடிப்படையிலான தேசியத்தையும் அழிக்கின்றது, சீரழிக்கின்றது. எமது போராட்டத்தின் தியாகங்கள் அர்த்தமற்ற வகையில் ஏகாதிபத்திய தேசியத்தை  உலகமயமாக்கின்றது.

"எமது ஆயுதப் போராட்டமானது இன்று தமிழரின் அரசியல் போராட்ட வடிவமாக வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டிருக்கிறது" என்று கூறுவதன் மூலம், அரசியலை ஆயுதத்தின் நீட்சியாக தொடர்வதையே புலிகள் மீண்டும் முன்வைத்து, அதன் அடிப்படையிலேயே அனைத்தையும் கோருகின்றனர். இதிலிருந்தே தேசிய பொருளாதாரத்தை அரசியல் ஆணையில் வைக்க  மறுக்கின்றனர். மாறாக ஆயுதத்தை ஏகாதிபத்திய உலகத்தில் இருந்து கடத்துவது போல், ஏகாதிபத்திய பொருளாதாரத்தையும் அதை ஊக்குவிக்கும் கொள்கையையும், தமது அரசியல் ஆணையில் வைக்கின்றனர். ஒரு தேசிய பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட தேசியத்துக்கு பதில், ஏகாதிபத்திய பொருளாதாரத்தை உலகமயமாக்கும் கொள்கையை பாதுகாக்கும் ஏகாதிபத்திய கைக்கூலியாக செயற்படும், தமிழர் ஆட்சியை முன்வைக்கின்றனர். தேசிய பொருளாதாரத்தை காலால் மிதிக்கின்ற, அந்த மக்களின் அபிலாசைகளை புறக்கணிக்கின்ற கொள்கையே, புலிகளின் அரசியலாக உள்ளது. தேசிய பொருளாதாரத்தை முன்னெடுக்கின்ற எந்த முன்முயற்சியும், மண்ணில் புலிகளால் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில் எமது "தேசிய" போராட்டம் முன்னேறுகின்றது என்ற வாதம் தேசிய அடிப்படையில் அர்த்தமற்ற ஒன்றாகும்.

மேலும் அவர் "ஒடுக்குமுறையாளர் எப்பொழுதுமே ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அரசு அதிகாரம் உடையவர்கள். ஆயுதப் படைகளை வைத்திருப்பவர்கள். ஒடுக்கப்படுவோர் எப்பொழுதுமே ஆளப்படும் வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சிறுபான்மைத் தேசிய இனத்தோராக, சுரண்டப்படும் மக்கள் சமூகமாக, ஏழைகளாக, அடிமைகளாக இருப்பார்கள்." என்று புலிகளின் தலைவர் குறிப்பிடும் இந்த பகுப்பாய்வை, ஏன் புலிகள் தமது இயக்கத்திலும் சர்வதேச அரசியலிலும் நடைமுறையில் கையாள்வதில்லை. இந்த அறிக்கையில் கூட எகாதிபத்தியம் பற்றிய மதிப்பீட்டில் ஒடுக்குமுறையாளர்கள் என்பதற்கு பதில், சந்திரிக்கா அரசால் தவறாக வழிநடத்தப்பட்ட மேற்கு நாடுகள்; என்றல்லவா கூறப்படுகின்றது. எவ்வளவு சிறுபிள்ளைத்தனமான விளக்கம். ஏகாதிபத்தியங்கள் பற்றிய இந்த விளக்கம் தங்களுக்கு தாங்களே வலிய ஆப்பு வைப்பதாகும். ஒடுக்கும் வர்க்கங்களை (இது ஏகாதிபத்தியம் முதல் நிலப்பிரபுத்துவ வர்க்கம் வரை உள்ளடங்கும்) ஒடுக்கப்பட்ட வர்க்கம் எதிர்த்து போராடுவது நியாயமானதாகும். அந்த போரானது மனித இயங்கியலின் உந்து சக்தியும் கூட. ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் ஒடுக்கும் வர்க்கத்தை எதிர்த்து போராடும் போது, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்த அனைத்து பிரிவின் ஐக்கியம் அடிப்படையானதும் நிபந்தனையானதுமாகும். இதை புலிகள் நடைமுறையில் கையாளாமல் முன்வைக்கும், கருத்துகள் ஆச்சரியகரமானது. தமிழ் மக்கள் மத்தியில் ஒடுக்கப்படும் மக்கள் யார்? தேசிய இனம் என்ற ரீதியிலும் பெரும்பான்மையான தமிழ் மக்களும், தமிழ் சிறுபான்மையினாரால் சுரண்டப்படும் மக்களும், பெண்களும், ஒடுக்கப்பட்ட சாதிகளும், சிறுபான்மை இனங்களும் (முஸ்லீம் மக்கள்) என்ற விரிந்த தளத்தில் காணப்படுகின்றது. இவர்களை இவர்களின் நியாயமான கோரிக்கையுடன் புலிகள் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கி போராட வேண்டும் அல்லது இந்த மக்களின் கோரிக்கையுடன் போராடும் வௌ;வேறு பிரிவுகளுடன் ஐக்கியப்பட்டு; போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்;. இதை முன்னெடுக்கும் போது, ஒடுக்கும் வர்க்கம் சார்ந்த பிரிவுகளின் கோட்பாடுகள் முதல் நடைமுறை ஈறாக எதிர்த்து போராட வேண்டும்;. ஆனால் தேசியம் தனது நடைமுறையில் சுரண்டப்படும் வர்க்கங்களின் மேலான ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறையை, ஆணாதிக்கத்தை அடிமைத்தனத்தை வாழ்வாக கொண்ட பெண்களின் கோரிக்கைகளை, அவர்களின் விடுதலைகளை புலிகள் நிராகரிக்கின்றனர். ஒடுக்கப்பட்ட இந்த பிரிவுகளை, அவர்களின் கோரிக்கைகளை கூட ஒடுக்கும் வர்க்கத்தின் நிலைக்கு இட்டுச் சென்று, ஒடுக்குவதையே புலிகளின் போராட்ட வரலாறு செய்து வந்தது, வருகின்றது. இதை நிலையை மாற்றியமைக்காத வரை, நடைமுறையில் அந்த மக்களையும் அது சார்ந்த கருத்துகளையும், போராட்டங்களையும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளாக அங்கீகரித்து, நட்பையும் ஐக்கியத்தையும் கோராத வரை, ஒரு இயக்கத்தின் தலைவரின் உரை கூட நடைமுறைக்கு உதவாத வெற்றுக் கோசமாகிவிடுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற வரையறையை சர்வதேச எல்லைவரை விரித்துப் பார்க்க வேண்டும்;. முஸ்லீம், சிங்கள மக்கள் முதல் சர்வதேச மக்கள் என்ற விரிந்த தளத்தில் உலகு எங்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தமது சொந்த ஒடுக்குமுறை அரசை எதிர்த்தும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நடத்தும் போராட்டத்துடன் நாம் கைகோத்துக் கொள்ள வேண்டிய வரலாற்றுப் பணியை, நடைமுறை ரீதியாக போராடி ஐக்கியத்தை நிறுவவேண்டும். இல்லாத வெற்று உரைகள், புலிகளுக்கும் மக்களுக்கும் எதையும் பெற்றுத் தரப்போவதில்லை.

"... தமிழரின் தேசிய இனச்சிக்கலானது சமாதானம், போர் என்ற இரு முரண்பட்ட துருவங்களில் அரசியல் சக்திகளை ஈர்த்து வருகின்றது" என தேர்தல் பற்றிய  நிலைப்பாட்டையும் புலிகள் வெளிப்படுத்த தவறவில்லை. இந்தத் தேர்தல் சமாதானம் அல்லது யுத்தம் என்ற எல்லைக்குள் நடக்கின்றது என்பதன் மூலம், சமாதானக் கட்சிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மறைமுகமாக தெரிவித்துள்ளனர். இந்தப் பகுப்பாய்வு என்பது நிலைமையை அதன் வரலாற்று வழியில் இனம் காணத் தவறி, தேர்தல் ஊடான சமாதானம் பற்றிய கற்பனைகளை விதைக்கின்றது. தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு எதிரான, தமிழ் மற்றும் சிங்கள எதிர்க் கட்சிகளை மறைமுகமாக புலிகள் ஆதரிக்கின்றனர். அரசியல் ரீதியாக இது மாபெரும் அரசியல் தவறாகும். சந்திரிக்கா முதன் முதலில் ஆட்சி ஏறிய போது, இந்த சமாதானம் என்ற கோசமே எங்கும் எல்லா தரப்பிலும் முன்வைக்கப்பட்டது. ஆனால் ஒரு மோசமான யுத்த வெறியர்களாக மாறியது எப்படி? ஆளும் கட்சியாக இருக்கும் போது யுத்த வெறியர்களாகவும், எதிர்க் கட்சியாக உள்ள போது சமாதான வாதிகளாகவும் இருப்பது உலகளவில் ஜனநாயகம் செய்யும், ஒரு சுதந்திரமான ஒரு மோசடியாகும். மக்களை ஏமாற்றவும், பாராளுமன்ற தேர்தல் ஜனநாயகம் மீது நம்பிக்கை கொள்ள வைக்கும் மோசடியாகும்;. இது போன்றே தமிழ்க் கட்சிகளும் செய்கின்றன. அதிகாரமிழந்து இருக்கும் போது தேசியத்துக்கு ஆதவாகவும், அதிகாரத்தைப் பெறும் போது துரோகிகளாகவும் பவனிவருகின்றனர். இந்தத் தேர்தல் மற்றும் பாராளுமன்றம் என்பதே வாக்குகளை பெறவும், அற்ப சலுகைக்கு குண்டி கழுவி நக்கி வாழவும் உள்ள ஒரு சாக்கடையான ஒரு வழித் துவாரமாகும். இது பச்சை இனவாதத்தை மேலும் ஆழமான விபச்சாரமாக்கி தேசியமயமாக்கின்றது. இந்தச் சாக்கடையில் சமாதானத்துக்கான கூறுகளைக் கொண்டு ஒரு பிரிவு இயங்குகின்றது என்ற புலிகளின் மதிப்பீடு, அந்த சமாதானம் என்ன என்பதை வரையறுப்பதில்லை. தமிழ்க் கூட்டணியின் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்று ஏகாதிபத்திய தலைமையிலான பேச்சு வார்த்தையும், யூ.என்.பியும் அதே உள்ளடக்கத்தில் நடத்தும் கூத்துகளில், தமிழ் சிங்கள தேசியத்தை எகாதிபத்தியத்திடமே விபச்சாரத்துக்கு விடுகின்றனர். இது பற்றி விரிவாக மற்றொரு கட்டுரையில் பார்ப்போம்;.

தேர்தல் என்பது சமாதானத்துக்கும் யுத்தத்துக்குமானது அல்ல. மாறாக ஜனநாயக தேர்தல் ஏகாதிபத்தியத்தின் உலகமயமாதலை விரிவாக்கும் மூலதனக் கொள்கையை, யார் எப்படி எதன் ஊடாக சிறப்பாக கையாள்வது என்ற அடிப்படை முரண்பாட்டை அடிப்படையாக கொண்டது. இங்கு எந்தத் தேர்தல் கட்சியும் இதைத் தாண்டி, இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆட்சிக்கு வராத வரையும், ஆட்சியை முண்டு கொடுக்காத வரையும் உலகமயமாதல் எதிர்ப்பு மற்றும் சமாதானம் என்ற கோசங்கள், உயிர் வாழ்தலுக்கான ஒரு பித்தலாட்ட நெம்பாக உள்ள சொல்லடுக்குகளே. இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மக்களின் தேசிய பொருளாதார கோரிக்கைகளை அடிப்படையாக கொண்ட ஒரு ஐக்கியப்பட்ட நாட்டில் வாழ, பேச்சுவார்த்தை மற்றும் சமாதானம் என்று யாரும் முன்வைக்கவுமில்லை சொல்லவுமில்லை. மாறாக ஏகாதிபத்திய உலகமயமாதல் பொருளாதார எல்லைக்குள் சமாதானம் ஐக்கியம் என்று கூறுவதன் மூலம், தேசியத்தை அழிப்பதையே தேர்தல் தனது அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொள்கின்றது. இதில் ஒரு பகுதியை புலிகள் மறைமுகமாக முண்டு கொடுத்து ஆதரிப்பது என்பது, குரங்கு ஆப்பிழுத்த கதை தான் நிகழும்.

அடுத்து அவர் தனது உரையில் "இன்றைய உலக ஒழுங்கு மாறிவருகிறது. சர்வதேச அரசியல் உறவுகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன." என்று கூறுவது, நிலைமைகளின் பின் வால் பிடித்து முன்வைப்பதாகும்;. தீர்க்கதரிசனமான தலைமை என்பது, இதை முன் கூட்டியே முன்வைப்பதும், அதை அடிப்படையாக கொண்டு போராட்டத்தை வழிநடத்துவமாகும்;;. ஏகாதிபத்திய உலக ஒழுங்கு என்பது எப்போதோ ஆரம்பித்த ஒன்று. அதை அடிப்படையாக கொண்டு தேசியங்களையும், தேசங்களையும் விழுங்கி செரிப்பதே ஏகாதிபத்தியத்தின் அடிப்படை உள்ளடக்கமாகும். உலகமயமாதல் பொருளாதார விரிவாக்க கட்டமைப்பு வேகம் பெற்ற காலத்திலேயே, எமது தேசிய போராட்டமும் சமாந்தரமாக இருந்து வந்துள்ளது. இந்த உலகமயமாதல் எமது நாட்டை விழுங்கிச் செரிக்கின்ற சமகாலத்தில் எல்லாம், புலிகள் இது பற்றி ஒரு வார்த்தை தன்னும் பேசியதில்லை. ஆனால் அண்மையில் தனிமனித பயங்கரவாத வழியில் அமெரிக்கா மீது நடந்த எதிர் தாக்குதலைத் தொடர்ந்து, உலக ஆக்கிரமிப்பு ஒரு பாய்ச்சல் நிலையைக் கண்டுள்ளது. இந்த உலகமயமாதல் ஆக்கிரமிப்பு புலிகளையும் பயங்கரவாதிகளாக அறிவித்ததைத் தொடர்ந்தே, அவசர அவசரமாக உலக ஒழுங்கு மாறி வருவதாகவும் சர்வதேச உறவுகள் மாறி வருவதாகவும் கூறுவது என்பது, அரசியல் ரீதியாக தவறானது. மாறாக அது முன் கூட்டியே இருந்து வந்துள்ளது. அதில் ஒரு பாய்ச்சல் நிகழ்ந்ததே, தற்போதுள்ள புதிய நிலைமையாகும்;. புலிகள் இதை புதிதான ஒன்றாக தவறாக விளக்கும் போது, ஏகாதிபத்தியம் பற்றிய தப்பெண்ணங்களையும் விதைத்து தமது சொந்த அரசியல் தவறுகளை மூடிமறைத்து விடுகின்றனர். இதை இந்த உரையும் கொண்டுள்ளது. "... சந்திரிக்காவும் அவரது வெளிவிவகார அமைச்சரான திரு. கதிர்காமரும் எமது இயக்கத்தையும் தமிழரின் விடுதலைப் போராட்டத்தையும் பயங்கரவாதப் பூச்சாண்டி காட்டிச் சர்வதேச அரங்கில் தீவிர பரப்புரைப் போரைத் தொடுத்தனர். இதன் விளைவாக அமெரிக்காவும் பிரிட்டனும் அதனைத் தொடர்ந்து சமீபத்தில் கனடாவும் எமது விடுதலை அமைப்பை சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்த்துள்ளன." என்று புலிகளின் தலைவரின் விளக்கம் ஏகாதிபத்தியம் பற்றி அப்பாவித்தனமாக முன்வைப்பதாகும்;. சந்திரிக்காவின் சொல் கேட்டு ஏகாதிபத்தியங்கள் தடை செய்தது என்று புலிகள் கூறுவது கண்டனத்துக்குரியது. இந்த வாதம் சிரிப்புக்குரியது. இது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது. மாறாக ஏகாதிபத்திய சொல் கேட்டே சந்திரிக்காவும் சரி ஏன் உலகமே ஆடுகின்ற போது, அதை தவறாக புலிகள் விளக்குவது ஏகாதிபத்தியம் பற்றிய வலதுசாரித்தனக் கண்ணோட்டமே காரணமாகும். தேசிய பொருளாதாரத்துக்கு பதில் ஏகாதிபத்திய பொருளாதாரம் மீது புலிகள் கொண்டுள்ள மோகம் கூட, இதற்கு அடிப்படையாக உள்ளது. ஏகாதிபத்தியம் என்பது என்ன? உலகமயமாதல் என்பது என்ன? தேசம் கடந்த தேசிய வளங்களையும் உழைப்பையும் சூறையாடுவதே அதன் மையமான ஒரே குறிக்கோள். ஏகாதிபத்தியம் தனது பொருளாதார நலனுக்கு எதிரான அனைத்தையும், பயங்கரவாதமாக முத்திரை குத்தி ஈவிரக்கமின்றி ஒடுக்குவது இயல்பானது இயற்கையானது. இதற்கு சந்திரிக்கா அரசு வெளிச்சம் பிடித்துக் காட்ட வேண்டிய அவசியமில்லை. புலிகளை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி அழிக்க முனைப்புப் பெற்று செயற்படும் நிலையில், புலிகள் ஏகாதிபத்தியங்களுக்கு தங்களையும் போராட்டத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர். ஆனால் உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரத்துடன் போராடுவதுடன், எகாதிபத்திய பொருளாதாரங்கள் மேல் கடுமையான தாக்குதலை நடத்துகின்றனர். அண்மையில் நேபாளம் மற்றும் ஆந்திராவில் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக போராடும் அமைப்புகள், அமெரிக்க மூலதனம் சார்ந்த கொக்கோ கோலா தொழிற்சாலையையே குண்டு வைத்து தகர்த்தனர். தடை செய்யப்படாத இனத் தேசியத்தை முன்வைக்காத வர்க்க அமைப்புகள் சொந்தத் தேசிய பொருளாதாரம் சார்ந்து, அமெரிக்காவுக்கு எதிராக போராடும் போது, புலிகள் கெஞ்சுவது விசனத்துக்குரியது. அத்துடன் உலக ஆக்கிரமிப்பை இந்த உரை நியாயப்படுத்துவது வேதனையானதும் கண்டனத்துக்குரியதுமாகும். அதைப் பார்ப்போம்.

"பயங்கரவாத வன்முறைக்கு எதிராகப் போர்தொடுத்து நிற்கும் மேற்குலக நாடுகளின் ஆவேசத்தையும், அச்சங்களையும், நிர்ப்பந்தங்களையும் எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. உண்மையான பயங்கரவாதிகளை இனங்கண்டு தண்டிக்கும் நோக்குடன் சர்வதேச உலகம் மேற்கொள்ளும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நாம் வரவேற்கிறோம்." என்று உலக ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு பயங்கரவாதத்தை அங்கீகரிப்பதும், மறுதளத்தில் புலிகளையும் புலிகளின் போராட்டத்தையும் அங்கீகரிக்க கோருவது சிறுபிள்ளைத் தனமானது. உலக பயங்கரவாதத்தை ஆணையில் வைத்தே, தேசிய பயங்கரவாதங்களை ஏகாதிபத்தியங்கள் உலகளவில் கட்டமைக்கின்றன. இதில் எதிர்த் தாக்குதல் நிகழும் போது பயங்கரவாதமாக சித்தரித்து அடக்கியொடுக்குவது தான் நிகழ்கின்றது. இது தான் அமெரிக்கா மீதான தாக்குதல் மற்றும் ஆப்கான் மேலான பயங்கரவாத ஆக்கிரமிப்பு. இது தொடர்பாக விரிவாக சென்ற சமரில் முன்வைக்கப்பட்டுள்ளது. நாளை ஏகாதிபத்தியம் புலிகளின் கடந்தகால மக்கள் விரோத நடவடிக்கைகளை பட்டியல் இட்டுக், காட்டியும் பயங்கரவாதமாக சித்தரித்து அடக்கியொடுக்கும் போது, புலிகள் போல் கருத்து சொல்லின் அது ஏகாதிபத்திய கைக்கூலித்தனமாகும். எதிரியை ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து உலகளவில் இனம் கண்டு கொள்ளவும், அவர்களை எதிரியாக இனம் கண்டு வெளிப்படையாக முன்வைத்து போராட வேண்டிய சர்வதேசிய வரலாற்று நிலைமைகளை புலிகள் புறக்கணிப்பது, எமது தேசியத்தை அழித்து ஒழிக்க முனைவதாகும்;.

அடுத்து "பயங்கரவாதத்திற்கு  எதிராக மேற்குலகம் தொடுத்துள்ள போரில் ஐ.நாவில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசுகளும் அணிசேர்ந்து நிற்கின்றன. இனவாத ஒடுக்குமுறைக்கும், மனித உரிமைக்கும் புகழ்போன பல அடக்குமுறை அரசுகளும் இந்தச் சர்வதேசக் கூட்டணியில் இணைந்து நிற்கின்றன. அதாவது காவற்துறையினருடன் கொலைக்குற்றவாளிகள் கைகோர்த்து நிற்பது போல. நாம் இங்கு சிறீலங்கா அரசை மட்டும் குறிப்பிட விரும்புகின்றோம்." என்று கூறுவதன் முலம் சர்வதேச எதிரிகளை இட்டு, தெளிவான பதிலுக்கு பதில் ஊசலாட்டமே அதன் அரசியலாகின்றது. அரசுகள் பற்றி (ஒடுக்கும் பிரிவு பற்றி) முன்பு சொன்ன கருத்துக்கு மாறாக, இலங்கை அரசை மட்டும் கூறுவதன் மூலம், ஒடுக்கப்பட்ட உலக மக்கள் மற்றும் உண்மையான நண்பர்களை எட்டி உதைப்பதாகும்;. உலகளவில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் அனைத்து மக்களையும் ஆதரித்து, அவர்களின் ஆதரவை வென்று போராட வேண்டிய எமது தேசியம், அந்த ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரியுடன் கூட்டுச் சேரும் ஒரு மானக்கேடான நிலைக்கு இந்த உரை தாழ்ந்து போகின்றது. மேற்கு நாடுகள் ஒரு ஏகாதிபத்தியம் என்பதையும், அவர்கள மறு காலனித்துவத்தை நோக்கிய உலகமயமாதலை தமது அரசியலாக ஆக்கிரமிப்பாக கொண்டுள்ளனர். இதற்கு மேற்கு நாடுகள் மனித உரிமை மீறலை ஜனநாயகமாகவும், அடக்குமுறையை சுதந்திரமாகவும் கொண்டு இயங்குகின்றன. இதை அங்கீகரிக்கவும் பாதுகாக்கவும் ஐ.நா ஒரு சர்வதேச விபச்சார மையமாக கொண்டு இயங்குகின்றது. இந்த நிலையில் புலிகள் இலங்கை அரசை மட்டும் குறித்துக் காட்டி மற்றையவற்றை பாதுகாப்பது என்பது, மற்றைய மக்களையிட்டு அக்கறையற்று குறுந்தேசிய இனக்கண்ணோட்டமாகும். இது சர்வதேச ஒடுக்கும் பிரிவுகளுக்கு கம்பளம் விரிப்பதாகும். இதுவே புலிகளின் தேசியத்தை ஏகாதிபத்தியம் பயங்கரவாதமாக முத்திரை குத்தி தனிமைப்படுத்தி, அழிக்க போதுமான பலத்தை வழங்கிவிடுகின்றது.

மறு தளத்தில் புலிகளின் "இந்த புதிய போக்குக் காரணமாக சர்வதேச அரங்கில் எமது சுதந்திர இயக்கத்திற்கும் அவப்பெயர் ஏற்பட்டுவருகின்றது" என்று சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்ற, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நிலை சார்ந்து கருத்தை முன்வைக்கின்றனர். இங்கு அவப்பெயர் யாரிடம் இருந்து ஏற்படுகின்றது என்று புலிகள் கவலைப்படுகின்றனர். பயங்கரவாத முத்திரை குத்தப்படும் ஏகாதிபத்திய அரசு நிலையை இட்டுத்தான் புலிகள் கவலைப்படுகின்றனர். ஏகாதிபத்திய மற்றும் சர்வதேச நாடுகளில் உள்ள மக்கள் எமது நண்பர்கள் என்ற உண்மையை அடிப்படையாக கொண்டு, இந்த பயங்கரவாதம் என்ற முத்திரைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதை புலிகள் நிராகரிக்கின்றனர். மாறாக அந்த மக்களுக்கு எதிரான அரசுகள் புலிகளை பயங்கரவாதியாக முத்திரை குத்துவதையிட்டே கவலைப்படும் புலிகள், அந்த நாட்டு ஒடுக்கப்பட்ட மக்களை எப்படி அனுகுகின்றனர். மக்களின் எதிரியான ஒடுக்கும் அரசு பற்றி பூசிமொழுகும் புலிகளின் நாடகம், தம்மைத் தாம் கழுவில் ஏற்ற கடிவாளம் இடுகின்றனர். ஏகாதிபத்தியம் சொந்த மக்களுக்கு பயங்கரவாதம் என்று சொல்லி முத்திரை குத்தி ஆக்கிரமிக்கும் நடத்தைகளுக்கு, புலிகளின் மக்கள் விரோத செயல்களை அக்கம் பக்கமாக எடுத்து அடுக்கிவைக்கின்றனர். புலிகள் மக்களுக்கு எதிராக இழைத்த, இழைக்கின்ற பல மனித உரிமை மீறல்களை இட்டு மௌனத்துடன், சுயவிமர்சமின்றியும் அதையே அரசியல் ஆணையாக கொள்ளும் வரலாற்று தொடர்ச்சியில், ஏகாதிபத்திய முத்திரை குத்தலுக்கும் ஆக்கிரமிப்புக்கும் இவை ஒரு வலுமிக்க ஆயுதமாகின்றன. புலிகள் தம் கடந்த கால நிகழ்வுகளை சுயவிமர்சனம் செய்யவும், நிகழ் காலத்தை மாற்றி அமைக்கவும், எதிர்காலத்தில் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களை அணிதிரட்டி போராட வேண்டிய வரலாற்று தர்மிகப் பொறுப்பை செய்யத் தவறுகின்ற நிலையில், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை முறியடிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது. இலங்கை மீதான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் தமிழ் மக்களின் தேசிய போராட்டத்தை அழிப்பதையும் எதிர்த்து, உலகளாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் அந்த அந்த நாடுகளில் போராடும் போது, ஆக்கிரமிப்பாளின் நோக்கம் சர்வதேச சமூகத்தால் முறியடிக்கப்படும். இதை நோக்கி எமது போராட்டம் தன்னைத் தான் சுயவிமர்சனம் செய்து, மக்களின் உரிமைகளைச் சார்ந்து மாறிச் செல்லுமா?


பி.இரயாகரன் - சமர்