பலரும் கண்டு கொள்ளாமல் போன விவகாரம் இது. இலங்கையில் மனிதவுரிமையை அமுல்படுத்தும் பொறுப்பை வகித்த ஆணையாளரின் இராஜினாமா இது. இலங்கையில் மனிதவுரிமை எந்த நிலையில் இருக்கின்றது என்பதைக் எடுத்துக் காட்டிய மற்றொரு சம்பவம் இது. இதுபோல் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், தேர்தல் அதிகாரி சுதந்திரமாக தேர்தலை நடத்த முடியாது போனதும், தன்மீது திணிக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்க வேண்டிய சூழலை அடுத்து, தன் பதவியை இது போன்று துறப்பதாக அன்று அறிவித்தார். மகிந்த குடும்பம் அவரை மிரட்டி, தொடர்ந்து அவரை பதவியில் வைத்து தேர்தலை வெல்லுகின்றது. இதனால் என்னவோ "தனிப்பட்ட காரணங்களுக்காக தான் பதவி விலகுவதாக கருதக்கூடாது," என்று ஆனந்த மெண்டிஸ் கூறித்தான், தனது இராஜினாமாவை உலகறிய அறிவித்தார்.

இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாத்தல், பேணுதல், அதை மேம்படுத்தல் தொடர்பாக பொறுப்பு வகித்தவர் அவர். இதை அவர் செய்ய முடியாது தனது பதவியை இராஜினாமா செய்தார். இந்த இராஜினாமா தனிப்பட்ட காரணத்தால் அல்ல "பக்கச்சார்பற்ற விதத்தில், நியாயமான முறையில், அச்சமின்றி நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய நிலைமை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குள் இல்லை என்ற காரணத்தால் தான்" தான், இதில் இருந்து விலகுவதாக உலகறிய அறிவித்தார். "அச்சமின்றி" எதையும் செய்யும் சூழல் இலங்கையில் இல்லை. மனிதவுரிமை ஆணையாளருக்கே இந்த அவல நிலை என்றால், சாதாரண மக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்.

இப்படி உண்மை இருக்க டக்ளஸ், கருணா தொடங்கி அரசு சார்பு தலித் குஞ்சுகள் வரை போடும் வேஷமும், கூத்தும் இன்று சொல்லி மாளாது. முஸ்லீம் மீள்குடியேற்றத்தை தமிழனிடம் கோரும் "ஜனநாயகக்" கூத்தை இதற்குள்தான், இப்படித்தான் அரங்கேற்றுகின்றனர். இலங்கையில் மனிதவுரிமையை மறுப்பதும், மிதிப்பதே இவர்களின் கொள்கை கோட்பாடு மற்றும் நடைமுறையாகும்.

இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரே "அச்சமின்றி" "நியாயமான முறையில்" "பக்கச்சார்பற்ற விதத்தில்" எதையும் தன்னால் செய்ய முடியவில்லை என்று கூறி இராஜினாமா செய்கின்ற சூழலைக் கண்டுகொள்ளாத "ஜனநாயக" வேஷதாரிகளை ஒப்பிட்டுப் பாருங்கள். இப்படி இருக்க அரசுடன் சேர்ந்து நடத்தும் "ஜனநாயக" கூத்தை எண்ணிப் பாருங்கள்.

இராஜினாமாவை தனிப்பட்ட காரணமாக காட்ட அரசு முற்பட்டது, இதற்கு எதிராக அவர் "தனிப்பட்ட காரணங்களுக்காக தான் பதவி விலகுவதாக கருதக்கூடாது," என்று கூறியதும், இதன் பின்னான மற்றொரு பரிணாமத்தினை நாம் புரிந்து கொள்ளமுடியும். இப்படி தனது நிலையை தக்கவைக்கவும், தன் மனித உரிமைக்காகவும் அவர் போராட வேண்டியிருந்த உண்மையை இது எடுத்துக் காட்டுகின்றது.

இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையர்களில் ஒருவராக இருந்த கலாநிதி ஆனந்த மெண்டிஸ், மனிதவுரிமையை மறுத்து, அவரையே மிரட்டும் அரசுக்கு எதிராக தன் பதவியை இராஜினாமா செய்தார். தன் அறிக்கையில் கடந்த "மூன்றாண்டு காலப் பதவியில் தன்னால் சுதந்திரமாகப் பணிகளை முன்னெடுக்கக்கூடிய சூழல் இல்லை" என்று கூறியதுடன் "அச்சமின்றி" தான் உயிர் வாழமுடியாத அவலத்தையும் கூறிவிடுகின்றார்.

இந்தச் சூழலுக்குரிய காரணம் இந்த அரசு தான்;. இலங்கையில் நிலவும் குடும்ப சர்வாதிகார பாசிச இராணுவ ஆட்சி அமைப்பு மூலமான பேரினவாதம், இலங்கையின் அனைத்து இன மக்களையும் ஒடுக்கியாளுகின்றது. சாதாரண சிவில் சட்டங்களுக்குக் கூட, ஆளும் கும்பல் உட்படுவதில்லை.

கடத்தல், காணாமல் போதல், திட்டமிட்ட கொலைகள் முதல் சொத்து அபகரிப்புகள், சட்ட விரோத பதிவுகள் கண்காணிப்புகள் என்று அரசு ஒரு குற்றக் கும்பலாக ஈடுபடுகின்றது. மகிந்த குடும்ப சர்வாதிகாரம் இதைச் சார்ந்து தான் இயங்குகின்றது.

மனிதவுரிமைக்கு இலங்கையில் இடமில்லை. இனவழிப்பு செய்தும், சட்டவிரோத கைதுகள் கடத்தல்கள், கொலைகளை செய்தும் உலகளாவில் அம்பலமான அரசு, உலகை ஏமாற்ற இலங்கையில் மனித உரிமைகள் அமைப்பை முன்தள்ளி முன்னிறுத்தியது.

ஆனால் அது கண்துடைப்பு நாடகங்களின் மற்றொரு மோசடிதான் என்பதை, தன் இராஜினாமா மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன் யுத்தத்துக்கு பிந்தைய "மூன்றாண்டு காலப் பதவியில் தன்னால் சுதந்திரமாகப் பணிகளை முன்னெடுக்கக்கூடிய சூழல் இல்லை" என்று கூறி யுத்தத்துக்குப் பிந்தைய சூழலையும் அழகாக அம்பலப்படுத்தியுள்ளார். இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதற்கு, இது மற்றொரு சாட்சியும் சான்றுமாகும். அரசு சார்ந்து இயங்கும் அரசியல் மோசடிகளின் வெட்டுமுகத்தையும் இது தோலுரித்துக் காட்டுகின்றது.

 

பி.இரயாகரன்

07.02.2012