Language Selection

பொய்க்குற்றம் சாட்டி மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையிடப்பட்டிருந்த புரட்சிகரக் கலைஞரான தோழர் ஜிதேன் மராண்டி, மரணத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்றுள்ளார்.

 

 

தோழர் ஜிதேன் மராண்டி ஜார்கந்த் மாநிலத்தின் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும் மக்கள் கலைஞராவார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த அவர், அரசியல் கைதிகள் விடுதலைக்கான கமிட்டியின் செயலர்களில் ஒருவர். அவரது பாடல்கள் கார்ப்பரேட் கொள்ளையையும் ஜார்கந்த் அரசின் கட்டாய நிலப் பறிப்பையும் எதிர்த்து முழங்குகின்றன் இதனாலேயே, அவரது குரல்வளையைத் தூக்குக் கயிறால் இறுக்கி அழிக்கத் துடித்தது, ஜார்கந்த் மாநில அரசு.

கடந்த 2007ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் நாள் ஜார்கந்தின் கிரிதி மாவட்டத்திலுள்ள சில்காரி கிராமத்தில், அம்மாநில முன்னாள் முதல்வரான பாபுலால் மராண்டியின் மகனாகிய அனுப் மராண்டி உள்ளிட்டு 19 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையை மாவோயிஸ்டுகள் நடத்தியதாக ஆட்சியாளர்கள் கூறிவருகின்றனர். ஜிதேன் மராண்டி என்பவர் தலையிலான 10 பேர் கொண்ட குழு இப்படுகொலையை நடத்தியதாகக் குற்றம் சாட்டி, இந்த 10 பேரின் முகவரியோ, பெற்றோர் பெயரோ இல்லாமல் முதல் தகவல் அறிக்கையை போலீசு  பதிவு செய்தது.

மறுநாள் அக்.29 அன்று ராஞ்சியைச் சேர்ந்த "பிரபாத்கபர்' என்ற நாளேடு, நாட்டுப்புறக் கலைஞரும் அரசியல் கைதிகள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவருமான ஜிதேன் மராண்டி ஒரு மாவோயிஸ்டு தீவிரவாதியாவார் என்று கதை கட்டி, அவரது புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டது. மனித உரிமையாளர்களும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் இப்பொய்ச்செய்திக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்ததும், மறுநாள் அக்.30 அன்று  தவறுக்கு வருத்தம் தெரிவித்து, புகைப்படத்திலுள்ள ஜிதேன் மராண்டி வேறு என்றும், தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டு ஜிதேன் மராண்டி வேறு என்றும் இந்த நாளேடு மறுப்புச் செய்தியை வெளியிட்டது.

இந்நிலையில், கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகப் போராடிவரும் தோழர் ஜிதேன் மராண்டியையும் புரட்சிகர ஜனநாயக சக்திகளையும் ஒடுக்கும் நோக்கத்துடன் இந்த விவகாரத்தை போலீசு பயன்படுத்திக் கொண்டது.

ஜார்கந்த் மாநிலத்தில் கார்ப்பரேட் முதலாளிகளின் கட்டாய நிலப்பறிப்புக்கு எதிராக கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி நடந்த விவசாயிகள் போராட்டப் பேரணி  பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜிதேன் மராண்டி மீது கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாகப் பொய்க்குற்றம் சாட்டிய போலீசு, அவரைக் கைது செய்து சிறையிலடைத்தது.

2008 ஏப்ரல் 12ஆம் தேதியன்று அவர் பிணையில் வெளிவரும்போது,  2007ஆம் ஆண்டில் சில்காரியில் நடந்த படுகொலையைத் தலைமையேற்று நடத்திய மாவோயிஸ்டு பயங்கரவாதி இவர்தான்  என்று மீண்டும் பொய்க்குற்றம் சாட்டிக் கைது செய்தது, போலீசு. அவரோடு பழங்குடியின ஏழை விவசாயிகளான மனோஜ் ராஜ்வார், சத்திரபதி மண்டல், அனில்ராம் ஆகியோரும் இக்கொலையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டனர். கடந்த ஜூன் 2009 இல் ஜார்கந்த் மாநிலக் கீழமை நீதிமன்றம் தோழர் ஜிதேன் மராண்டி உள்ளிட்ட நால்வருக்கும் மரண தண்டனை விதித்தது.

ஜிதேன் மராண்டி என்ற பெயரில் ஒரு மாவோயிஸ்டு புரட்சியாளர் தலைமறைவாக இயங்கி வருகிறாராம். அதே பெயரில் உள்ள நாட்டுப்புறப் பாடகரான ஜிதேன் மராண்டியைக் கைது செய்து, இவர்தான் அந்த மாவோயிஸ்டு தீவிரவாதி என்று கணக்கு காட்டியது ஜார்கந்த் போலீசு.

தோழர் ஜிதேன் மராண்டி மீது பொய்க்குற்றம் சாட்டி மரணதண்டனை விதிக்கப்பட்டதைப் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்தின. ஜார்கந்த் விகாஸ் மோர்ச்சா என்ற அமைப்பின் துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சவா அகமது, போலீசார் குற்றவாளியைக் கைது செய்து விட்டதாகக் கணக்குக்காட்டுவதற்காக நாட்டுப்புறக் கலைஞரான ஜிதேன் மராண்டியைக் கைது செய்துள்ளனர் என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.

தோழர் ஜிதேன் மராண்டி மீது பொய்க்குற்றம் சாட்டி ஆட்சியாளர்கள் மரண தண்டனை விதிக்கக் காரணம் என்ன? எங்கெல்லாம் கார்ப்பரேட் கொள்ளையும் நிலப்பறிப்பும் தொடர்கிறதோ, அங்கெல்லாம் தோழர் ஜிதேன் மராண்டி தனது  குழுவினருடன் கலைநிகழ்ச்சிகள் நடத்தி மக்களுக்குப் போராட்ட உணர்வூட்டினார்.  மக்களின் போராட்டத்தை எதிரொலிக்கும் அவரது பாடல் ஒலிப்பேழைகள் ஜார்கந்த் மட்டுமின்றி,  அண்டை மாநிலங்களிலும் உழைக்கும் மக்களிடம் பிரபலமடைந்துள்ளன. அவர் ஜார்கந்த் மக்களின் போராட்ட அடையாளமாகத் திகழ்ந்தார். இதுதான் அரசின் வன்மத்துக்குக் காரணம்.

தோழர் ஜிதேன் மராண்டி மீதான கொலைக்குற்ற வழக்கு கடந்த ஈராண்டுகளாக நடந்துவந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அவர்கள் குற்றம் செய்தார்கள் என்று நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, ஜிதேன் மராண்டி உள்ளிட்ட நால்வரும்  நிரபராதிகள் என்று அறிவித்து, கடந்த 2011 டிசம்பர் 15ஆம் தேதியன்று ஜார்கந்த் உயர் நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்துள்ளது. புரட்சிகர இயக்கத்தின் மீது அடக்குமுறையை ஏவி முடமாக்கும் நோக்கத்துடனும், பழிவாங்கும் வன்மத்துடனும் போலீசார்  அவசர கோலத்தில் அடிமுட்டாள்தனமாக சோடித்த பொய் வழக்கு புஸ்வாணமாகிப் போனது. அதேசமயம், ஜிதேன் மராண்டி மற்றும் பழங்குடியின விவசாயிகள் மீது பொய்க்குற்றம் சாட்டப்பட்டு இன்னும் பல்வேறு வழக்குகள் போலீசாரால் சோடிக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து இப்போராளிகளை விடுவிக்கவோ, பொய் வழக்கு சோடித்த போலீசு அதிகாரிகளைக் கைது செய்து தண்டிக்கவோ நீதிமன்றம் முன்வரவில்லை.

இது,  ஜார்கந்தில் நடந்த ஏதோ  விதிவிலக்கான விவகாரம் என்று ஒதுக்கிவிட முடியுமா? காஷ்மீர் மனிதஉரிமை குறித்த மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பின் கூட்டத்தில் பேசவந்த அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சர்டு ஷாப்ரியோ, காணாமல் போனவர்கள் பற்றிய ஆசியக் கூட்டமைப்பின் சார்பில் காஷ்மீருக்கு வந்த மே அகினோ, காஷ்மீருக்குச் சென்ற மனித உரிமை செயல் வீரரான கௌதம் நாவ்லகா  என அனைவருமே டெல்லி, சிறீநகர் விமான நிலையங்களிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியாவுக்கு அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிபர்களும் இயக்குனர்களும் தாராளமாக வந்து போகலாம். ஆனால், காஷ்மீரின் மனித உரிமை பற்றிப் பேசுவதற்கு உள்நாட்டினரோ, வெளிநாட்டினரோ எவரும் வரக்கூடாது என்பதுதான் இந்திய அரசின் எழுதப்படாத விதியாகிவிட்டது.

சட்டிஸ்கரின் தண்டேவாடாவைச் சேர்ந்த பழங்குடியின இளைஞரான லிங்கராம் கோடோபி, மாவோயிஸ்டுகளுக்கு எஸ்ஸார் நிறுவனத்தினமிருந்து பணம் வாங்கிக் கொடுத்தார் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்து வதைக்கப்பட்டார். ஆட்கொணர்வு மனு மூலம் அவர் விடுவிக்கப்பட்ட போதிலும், அவரது வயதான தந்தை உள்ளிட்டு அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவரது வீடு  எரிக்கப்பட்டு அவரது கிராமத்தினர் வதைக்கப்பட்டனர். அவரது உறவினரும் பள்ளி ஆசிரியையுமான சோனி சோரி என்பவர் மாவோயிஸ்டுகளுக்குப் பணப்பட்டுவாடா செய்யும் தொடர்பாளராக இருந்தார் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

மனித உரிமைஜனநாயக உரிமை பற்றியோ, காஷ்மீர் பற்றியோ, கார்ப்பரேட் கொள்ளையைப் பற்றியோ, மாவோயிஸ்டுகள் கார்பாகவோ யாரும் எதுவும் பேசக்கூடாது என்பதுதான் இப்போது இந்திய அரசின் அறிவிக்கப்படாத கொள்கை. மறுகாலனியாதிக்கத்தின் கீழ் மனித உரிமைஜனநாயக உரிமைகள் எத்தகையதாக இருக்கும் என்பதற்கு, தொடரும் கைதுகளும் பொய்வழக்குகளும் மோதல்கொலைகளும் அடக்குமுறைகளுமே இரத்த சாட்சியமாக உள்ளன.

. குமார்