Language Selection

புதிய ஜனநாயகம் 2012

சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் இந்தியக் கோடீசுவரர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணம் எவ்வளவு? 25 இலட்சம் கோடி ரூபாசூ முதல் 70 இலட்சம் கோடி ரூபாய்கள் வரை இருக்கலாம் என்று பல மதிப்பீடுகள் கூறப்படுகின்றன.

 

 

இந்தியாவில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை 6,38,365. எழுபது இலட்சம் கோடி ரூபாயை கிராமங்களின் எண்ணிக்கையால் வகுத்தால், ஒவ்வொரு கிராமத்துக்கும் 10 கோடி ரூபாய் கிடைக்குமென்றும், அதை வைத்துப் பள்ளிக்கூடம், மருத்துவமனை உள்ளிட்ட எல்லாத் தேவைகளையும் நிறைவு செய்து விடலாம் என்றும் முழங்கினார், பாபா ராம்தேவ். "இந்த ஐடியா நமக்குத் தோன்றவில்லையே' என்று எண்ணிய அத்வானி, உடனே கறுப்புப் பண எதிர்ப்பு ரத யாத்திரை கிளம்பி, "எழுபதை ஏழால் வகுத்தால் பத்து' என்று திக்கெட்டும் முழங்கினார். வகுத்தல் கணக்கின் விடையென்னவோ சரிதான். 70 இலட்சம் கோடி எப்படி வந்தது, எங்கே இருக்கிறது, அதுயார் யாருக்குச் சொந்தமானது, அதை எப்படிப் பறி முதல்  செய்வது என்பவையல்லவா விடைகாண வேண்டிய உண்மையான கேள்விகள்.

காமன்வெல்த், ஆதர்ஷ், அலைக்கற்றை ஊழல் என்று அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளாலும், அன்னா ஹசாரேயின் தொந்தரவுகளாலும் அவதிப்பட்டு வரும் சூழலிலும்கூட, அத்வானி வகையறா கறுப்புப் பணம் பற்றி நடத்தும் நாடாளுமன்ற அமளிகள் குறித்து காங்கிரசு அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கறுப்புப் பணத்துக்கு எதிராக அத்வானி உரையாற்றி அமர்ந்த பின்னர், "கருப்புப் பணத்துக்கு எதிராக ரதயாத்திரை போனீர்களே, அதனால் ஆன பயன் என்ன?' என்று அத்வானியைக் கேட்டார் பிரணாப் முகர்ஜி. அது மட்டுமின்றி, "சுவிஸ் வங்கிகளில் இருந்து பணத்தைக் கொண்டுவர இராணுவத்தையா அனுப்ப முடியும்?' என்று நக்கலும் செய்தார்.  எல்லை தாண்டிய பயங்கரவாதிகளைத் தாக்குவதற்கு பாகிஸ்தான் மீது படையெடுக்கச் சொல்லும் பா.ஜ.க., கறுப்புப் பண விவகாரத்தில் "எல்லை' மீற முடியாது என்பது காங்கிரசுக்குத் தெரியாதா என்ன?

"கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து 36 ஆயிரம் தகவல்களைப் பெற்றுள்ளோம். ஆனால், அந்தப் பட்டியலை வெளியிடமாட்டோம் என்று சொல்லித்தான் அந்தத் தகவல்களைப் பெற்றுள்ளோம். அந்தத் தகவல்களை இப்போது வெளியிட்டால், இதற்குப் பின் எந்தத் தகவலையும் அந்த நாடுகள் அளிக்காது' என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார் பிரணாப் முகர்ஜி. "கருப்புப் பணம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடு' என்று கேட்டுக் கொண்டிருக்கும் அத்வானி உள்ளிட்ட யாரும் இதனை எதிர்த்து மூச்சு விடவில்லை. கறுப்புப் பணம் குறித்த உண்மையான வெள்ளை அறிக்கை இந்தப் புள்ளியிலிருந்துதான் தொடங்குகிறது.

சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கிகளோ, அல்லது கறுப்புப் பண சொர்க்கங்களான சின்னஞ்சிறிய நாடுகளின் அரசுகளோ" கறுப்பு  இந்தியர்களின்' பட்டியலை இந்திய அரசுக்குத் தரவில்லை. ஜெர்மனி, பின்லாந்து, டென்மார்க், பிரான்சு ஆகிய நாடுகள் இலஞ்சம் கொடுத்து இவ்வங்கிகளின் ஊழியர்கள் மூலம் திரட்டிய விவரங்களில் ஒரு பகுதிதான் இப்போது பிரணாப் முகர்ஜியின்கையில் இருக்கும் பட்டியலாகும்.

"இந்தப் பட்டியல்கள் சம்பந்தப்பட்டவங்கிகளால் அதிகாரபூர்வமாக அளிக்கப்பட்டவை அல்ல என்பதால், இதை வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது' என்று முதலில் கூறியது மத்திய அரசு. "அப்படியானால் பட்டியலையாவது வெளியிடு' என்று கேட்டால், "வெளியிடமாட்டோம். ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் கொடுத்த சத்தியத்தை மீற முடியாது' என்கிறார் பிரணாப். அப்படியானால் இந்தப் பட்டியலை வைத்துக் கொண்டு என்ன செய்வது? கையில் இருக்கும் பட்டியலை வைத்துக் கொண்டு கடந்த 2010-11 ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 2,190 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும், 3,887 கோடி ரூபாய் வரி  ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு கூறுகிறது. 3887 கோடி ரூபாசூ வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகியிருக்கிறது என்றால், 70 இலட்சம் கோடிக்கு எத்தனை வருடம் ஆகும் என்று கணக்குப் போட்டுப் பார்க்கவும். பிரணாப் முகர்ஜியின் கையில் வைத்திருக்கும் 36,000 பேர் பட்டியலில் மற்றவர்கள் எல்லாம், அக்கவுண்ட் நம்பரைச் சொன்ன பிறகும் கூட, அது எங்கள் அக்கவுண்ட் இல்லை என்று மறுக்கிறார்கள். வங்கிகளோ வாடிக்கையாளர் தொடர்பான இரகசியத்தை வெளியிட முடியாது என்று ஏற்கெனவே மறுத்துவிட்டன.  இனி என்ன செய்வது?

வெளிநாட்டு வங்கிக்கணக்குகளில் உள்ள விவரப்படி சம்பந்தப்பட்ட ஆண்டுகளில் அத்தகையோர் தாக்கல் செய்துள்ள வருமான வரிக் கணக்குகளை மறு ஆய்வு செய்து உண்மை நிலை என்னவென்று ஆராயும்படி தொடர்புடைய வருமான வரி அலுவலகங்களுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளதாம். (தினமணி  26 டிச.2011) அதாவது சுவிஸ் வங்கிக் கணக்கு வைத்துள்ள முதலாளியோ, சினிமா நட்சத்திரமோ, அரசியல்வாதியோ ஒவ்வொரு ஆண்டும் செய்த செலவுகள், அவர்களுடைய வருமானத்துக்கு மீறியதாக இருந்தாலோ, அல்லது வரி கட்டாமல் வருமானத்தை மறைத்திருந்தாலோ அவற்றையெல்லாம் வருமானவரித்துறை கண்டு பிடிக்குமாம். கண்டுபிடித்தபின், "இத்தனை கோடி ரூபாய் வருமானத்தை நீங்கள் மறைத்திருக்கிறீர்கள். இந்தப் பணத்தைத்தான் நீங்கள் சுவிஸ் வங்கியில் போட்டிருக்கிறீர்கள்' என்று அவர்களை மடக்கி, அப்படியே கோழி அமுக்குவது போல அமுக்கிவிடுமாம். கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கொக்கின் காதில் "வெண்ணெய்' என்று சொன்னாலே போதும், அது சரணடைந்து விடும் என்கிறது அரசு.

மிகவும் சிக்கலானதாகச் சித்தரிக்கப்படும் இந்தப் பிரச்சினையை ஒரு  எளிமையான எடுத்துக்காட்டின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். ஒரு நகைத்திருட்டு வழக்கை நம்மூர் போலீசு எப்படிக் கண்டுபிடிக்கிறது? தன் கையில் உள்ள திருடர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்களைத் தேடுகிறது. இன்னொருபுறம், திருட்டு நகைகளை வாங்கும் சேட்டுக்கடைகளை சோதனையிட்டு, நகையைக் கண்டுபிடிப்பதுடன், அதனை அங்கே கொண்டுவந்து விற்ற திருடனையும் கண்டுபிடிக்கிறது.

கறுப்புப் பண விவகாரத்தில் நடப்பது என்ன? குறிப்பிட்ட சேட்டு கடையில் ஒரு திருடன் பத்து பவுன் நகையை விற்றிருக்கிறான் அல்லது அடகு வைத்திருக்கிறான் என்ற விவரம் அரசுக்குத் தெரிந்துவிட்டது. ஆனால், சேட்டும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார், திருடனும் மறுக்கிறான். சேட்டின் மேல் கைவைக்க முடியாது (படையையா அனுப்ப முடியும்?) என்று சொல்லிவிட்டார் பிரணாப் முகர்ஜி. திருடன் மீதும் அரசு கைவைக்காதாம். குறிப்பிட்ட ஆண்டுகளில் திருடனின் வரவுசெலவு கணக்குகளை வருமானவரித்துறை மூலம் பரிசீலித்து, கணக்கில் காட்டாத வரவு இருந்தால் அதைக் கண்டுபிடித்து, அதன் அடிப்படையில், "அந்தப் பணம் திருட்டு நகையை விற்று வந்ததா கத்தான் இருக்க முடியும்' என்று அரசு நிரூபிக்குமாம். இந்தக் கேலிக்கூத்துக்குப் பெயர்  கறுப்புப் பணத்தைக் கண்டுபிடிக்கும் சட்டபூர்வமான வழிமுறையாம்.

அப்படிக் கண்டுபிடித்து விடுவதாகவே வைத்துக் கொள்வோம். வருமானவரித்துறை என்ன செய்யும்? சுவிட்சர்லாந்தில் உள்ள எச்.எஸ்.பி.சி வங்கியில் 700 இந்தியர்கள் இரகசியக் கணக்கு வைத்திருக்கின்றனர் என்ற விவரத்தை பிரான்சிடமிருந்து பெற்றிருக்கிறது இந்திய அரசு. கணக்கு வைத்துள்ளவர் பெயர், அவரது கடவுச்சீட்டு எண், மொத்த முதலீடு உள்ளிட்ட விவரங்கள் தற்போது அரசிடம் உள்ளன. ஆனால் இந்த விவரங்கள் உண்மை என்று அந்த வங்கியோ, அந்நாட்டு அரசோ சாட்சியமளிக்காது. எனவே, நீதிமன்றத்தில் குற்றத்தை நிரூபிக்க முடியாது.

ஒரு குறிப்பிட்ட நபருக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு இருக்கிறது என்று வருமான வரித்துறை நிரூபித்து விடுவதாகவும் வைத்துக் கொள்வோம். சுவிஸ் வங்கியில் ரகசியக் கணக்கு வைத்துக் கொள்வதே கிரிமினல் குற்றம் என்று இந்தியச் சட்டம் சொல்லவில்லை. சுவிஸ் வங்கியில் போட்டு வைத்திருக்கும் பணத்துக்கு வருமானவரி கட்டவில்லை என்பதுதான், அந்தக் கறுப்புப் பணம் தொடர்பாக இந்திய அரசு சாட்டுகின்ற குற்றம். இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்களுடைய சுவிஸ் வங்கிக் கணக்கை இந்திய அரசால் முடக்க முடியாது.

ஏனென்றால் சுவிஸ் நாட்டின் சட்டப்படி, வரிஏய்ப்பு என்பது குற்றமல்ல. அது மட்டுமல்ல, உலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப, அந்நியச் செலாவணி தொடர்பான மோசடிகளை கிரிமினல் குற்றமாகக் கருதிய இந்தியாவின் பெரா (ஊஉகீஅ) சட்டத்துடைய பல்லைப்பிடுங்கி, அதனை 1999 இல் பெமா (ஊஉஆஅ ) என்ற உரிமையியல் சட்டமாக மாற்றிவிட்டது பா.ஜ.க அரசு. எனவே, அதை வைத்தும் எதுவும் செய்ய இயலாது.

எனவே, எச்.எஸ்.பி.சி (சுவிஸ்) வங்கியில் 438 கோடி ரூபாயை இரகசியக் கணக்கில் வைத்திருந்த 80 இந்தியர்களிடம், "ஐயா, அருள் கூர்ந்து அந்தப் பணத்துக்கு வரியைக் கட்டிவிடுங்கள்' என்று வருமானவரித்துறை கெஞ்சியது. "டேய் முடியலடா, ஓடாதடா' என்று திருடனிடம் மூச் சிரைக்க கெஞ்சும் சிரிப்பு போலீசின் நிலைமைதான்! மனமிரங்கிய அந்த 80 தேசபக்தர்களும் வரி செலுத்திவிட்டார்கள். கொன்னால் பாவம், தின்னால் போச்சு என்ற கதைதான். 438 கோடிரூபாயும் இப்போது வெள்ளையாகிவிட்டது. அந்த 80 பேரின் பெயரைக்கூட அரசு வெளியிடவில்லை. இது கறுப்புப் பணம் தொடர்பான ஒரு கதை. (எகனாமிக் டைம்ஸ், நவ,10,2011)

இலஞ்ச ஊழல்தான் நம் நாட்டின் தலையாய பிரச்சினை என்றும், ஊழலை ஒழித்துச் சிறந்த அரசாளுமையை வழங்க முடிந்தால் ஏழ்மை ஒழிந்துவிடும், நாடு வல்லரசாகிவிடும் என்ற பிரமையும், 70 இலட்சம் கோடியைக் கைப்பற்றி விநியோகிக்கும் கனவும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை. குறிப்பாக 1.76 இலட்சம் கோடி ஊழல் என்று கூறப்படும் 2ஜி ஊழல் மற்றும் சுமார் 50,000 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி மற்றும் வரி ஏய்ப்பு மோசடி என்று குற்றம் சாட்டப்படும் ஹசன் அலி விவகாரம் ஆகிய இரண்டையும் எடுத்துக் கொள்வோம். அலைக்கற்றை ஊழலை விசாரித்து வரும் சி.பி.ஐ., இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களைப் பட்டியலிட்டு, "இவர்களுக்கு உங்கள் நாட்டின் வங்கிகளில் கணக்கு இருந்தால் எமக்குத் தெரிவியுங்கள்' என்று கறுப்புப் பணத்தின் சொர்க்கங்களாக கருதப்படும் சுவிஸ், கேமேன் தீவுகள், வர்ஜின் தீவுகள், மொனாகோ போன்ற பல்வேறு நாடுகளுக்கும் கடிதம் (டூழூவவழூணூ ணூணிஞ்ச்வணிணூதூ) அனுப்பியது. ஒரு மரியாதைக்காகக் கூட எந்த நாடும் பதிலளிக்கவில்லை. அதேபோல ஹசன் அலி வழக்கிலும் பல நாடுகளுக்குக் கடிதம் எழுதியும் பதில் இல்லை. (தெகல்கா, 23 ஜூலை, 2011)

வெளிநாட்டு வங்கிகளில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவரவேண்டும் என்று ராம் ஜெத்மலானி தொடுத்திருக்கும் வழக்கு, ஜனவரி 19, 2011 அன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  லீசென்ஸ்டைன் வங்கியில் 18 இந்தியர்கள் 43.83 கோடி ரூபாய் பணம் போட்டிருப்பதாகவும், அதற்கு  24.26 கோடி ரூபாய் வரியும் அபராதமும் செலுத்துமாறு  கேட்டிருப்பதாகவும்  மத்திய அரசு கூறியது. மேற்படி இந்தியர்களின் பெயரை வெளியிட்டால் அது நாடுகளுக்கு இடையிலான உறவைப் பாதிப்பதுடன், அதன்பின் எந்த விவரத்தையும் பெற இயலாத சூழல் எற்படும் என்றும், லீசென்ஸ்டைன் உள்ளிட்ட பல நாடுகளுடன் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் இருப்பதால், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார், சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம்.

"இவ்வளவு தான் கறுப்புப் பணத்தைப் பற்றிய விவரமா? நாம் பிரம்மாண்டமான தொகையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த தேசம் சூறையாடப்படுகிறது. இது கற்பனைக்கு எட்டாத குற்றம். இது கலப்படமில்லாத திருட்டு. இப்பிரச்சினை நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களைப் பற்றியதல்ல. இது எங்களுக்குப் பெரிதும் கவலையளிக்கிறது' என்றார்கள் சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகிய நீதிபதிகள். இதன் தொடர்ச்சியாக  கறுப்புப் பணத்தை புலனாய்வு செய்து கண்டுபிடிப்பதற்காக ஜூலை 4, 2011 அன்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜீவன்ரெட்டி, எம்.பி.ஷா ஆகியோர் தலைமையில் ஒரு சிறப்புப்புலனாய்வுக் குழுவை அமைப்பதாக உத்தரவிட்டது உச்சநீதி மன்றம். இவ்வாறு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பது, நிர்வாக எந்திரத்தின் செயல்வரம்புக்குள் தலையிட்டுச் சீர்குலைப்பதாகும் என்றும், இந்தத் தீர்ப்பை மீளாய்வு செய்யவேண்டும் என்றும் மனு செய்திருக்கிறது, மன்மோகன் அரசு.

திருட்டு, சூறை, கற்பனைக்கு எட்டாத குற்றம் என்று உணர்ச்சிகரமான பல சொற்றொடர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உதிர்த்தாலும், இச்சொற்களுக்கு சட்டரீதியாகவோ நடைமுறையிலோ எவ்விதப் பொருளும் இல்லை. திருட்டுப் பணம், கறுப்புப் பணம், வரி ஏய்ப்புப் பணம், போதை மருந்துப் பணம், ஆயுதக் கடத்தல் பணம் என்று என்ன அடைமொழிகளைச் சேர்த்து அழைத்தாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அந்தப் பணத்தைப் பாதுகாக்கும் பல சொர்க்கத் தீவுகளைத் தனித்தனி நாடுகளாக உலக முதலாளித்துவம் உருவாக்கி வைத்திருக்கிறது. ஒரு இந்தியச் சிறுநகரத்தின் பரப்பளவு கூட இல்லாத தீவுகளும், மக்கள் தொகையாக 10,000 பேர் கூட இல்லாத இடங்களும் இவ்வாறு தனித்தனி நாடுகளாகப் பராமரிக்கப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை சுமார் 70. இந்த 70 நாடுகளின் மொத்த மக்கட்தொகையைக் கூட்டினாலும் ஒரு கோடிப் பேர் கூட வராது. ஆனால், உலகப் பொருளாதாரத்தின் மூன்றில் ஒரு பங்கு இந்த "நாடுகளுக்கு'ச் சொந்தம்.

கறுப்பை வெள்ளையாகக் கருதும் இந்த சொர்க்கத்தீவுகளை மூலதனத்தின் மன்னராட்சிகள்  என்றும் கூறலாம். எனினும், திருவிதாங்கூர் மன்னர்களைப் போலதம் செல்வத்தை முதலாளிகள் இங்கே புதைத்து வைக்கவில்லை. இது மூலதனம். சுரண்டலில் ஈடுபட்டால் மட்டுமே இது வாழவும் வளரவும் முடியும். எனவே, சுவிஸ் வங்கியின் கறுப்புப் பணம் என்று அழைக்கப்படும் மூலதனம், கண நேரத்தில் அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்கும் தாவியபடியே இருக்கிறது. அங்கிருக்கும் போது கறுப்பாகவும், இங்கிருக்கும்போது வெள்ளையாகவும் அது நம் கண்ணுக்குத் தென்படுகிறது.

(தொடரும்)