Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மூடிமறைக்கப்பட்ட ஒரு அரசியல் பின்னணியில், முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றம் பற்றி அரசியல் நடத்துகின்றனர். இந்த அறிக்கையில் கே.பி, கருணா, பிள்ளையானிடம், டக்ளஸ் போன்றோரிடம் … கேட்டு இருந்தால் அவர்களும் கையெழுத்திட்டிருப்பார்கள். அறிக்கையின் சாரம், புலியெதிர்ப்பு, தமிழினவெதிரிப்பு, தேசியவெதிர்ப்பு அரசியலாலானது.

தமிழ் மக்கள் மேலான அரசவொடுக்குமுறைக்கு எதிராக சமூக அக்கறை அற்றவர்கள், முஸ்லீம் மக்கள் பற்றிய அக்கறை என்பது போலியான புரட்டுத்தனமானது. அரசு இனங்களைப் பிளந்தும் பிரித்தும் கையாளும் அணுகுமுறையில் இருந்து தம்மை வேறுபடுத்தாத அரசியல், புரட்டுத்தனமானது, சதித்தனமானது.

1990களில் உடுத்த உடுப்புடன் மிகக் குறுகிய நேரத்தில் துரத்தப்பட்ட முஸ்லீம் மக்கள் வாழ்வு மீதான அக்கறையும், அந்தக் கொடூரமும் கொடுமையும் நிறைந்த அரசியல் மீதான எதிர்வினை என்பது, மக்களைச் சார்ந்த அரசியலால் மட்டும் தான் நேர்மையாக நடாத்தமுடியும். இவை அல்லாத அனைத்தும் போலியானது, புரட்டுத்தனமானது.

 

மாபியா அரசியல் நடத்தும் ஈ.பி.டி.பி. என்ற அரச கூலிக் கும்பல் முதல் குறுகிய குறும் அரசியல் நடத்தும் எல்லா வகையான அரசியல் பின்னணியில், முஸ்லீம் மக்கள் பற்றிய அக்கறை என்பது, குறுகிய நோக்கில் திட்டமிட்டு நடத்தும் சதியை அடிப்படையாகக் கொண்டது. புலித்தேசியம் எப்படி தேசியத்தை மட்டும் மையப்படுத்தி குறுந்தேசியமாக மக்கள் விரோதமாக இருந்ததோ, அப்படித்தான் சமூகத்தின் ஒரு முரண்பாட்டை மட்டுமே முன்னிறுத்தி நடத்தும் அனைத்து அரசியலும்;. அது பெண்ணியத்தின் பெயரில், சாதியத்தின் பெயரில், பிரதேசவாதத்தின் பெயரில் என எதுவாக இருந்தாலும் கூட இங்கு பொருந்தும்.

தேசியத்தை மட்டும் முன்னிறுத்திய தேசியத்தின் பின், முற்போக்கு வாதங்கள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் … கடந்து அவை எப்படி பிற்போக்காக இயங்கியது என்பதே எம்மினத்தின் அவலமான வரலாறு. இப்படி இருக்க அதே பாணியில் அரசுடன் நிற்பவர்கள் முதற்கொண்டு குறுகிய அடையாள அரசியலை முன்னிறுத்துகின்ற தர்க்கள் வாதங்களின் பின் அதே வக்கிரத்தைப் பார்க்கின்றோம். புலிகள் தேசியத்தின் பெயரில் செய்ததை இவர்கள் சாதி முதல் முஸ்லீம் மக்கள் என்று பல வேஷங்கள் கட்டி செய்ய முற்படுகின்றனர்.

இந்த வகையில் தான் எம்மால் 71 பேர் கையெழுத்திட்ட உள்நோக்கம் கொண்ட அரசியல், முதன் முதலில் விமர்சிக்கப்பட்டது. பார்க்க. ( 71 பேர் கையெழுத்திட்ட "வேண்டுகோளின்" பின்னான அரசியல் பின்னணி)

இதன் பின் வெளிவந்த வேறு சில விமர்சனங்கள், நிர்மலாவின் வானொலி விவாதங்கள், கையெழுத்திட்டவில்லையென்ற மறுப்பும் அதற்கான எதிர்வினையும், தீபம் தொலைக்காட்சியில் ஈ.பி.டி.பி. உட்பட இனியொரு நாவலன் வரை, இது பற்றி ஆதரித்ததும் எதிர்த்ததுமான தர்க்கங்களும் குதர்க்கங்களும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இதில் உள்நோக்கம் கொண்ட தங்கள் குறுகிய அரசியலை அடிப்படையாகக் கொண்டு கையெழுத்திட்ட அறிக்கையை விமர்சிப்பதை, முஸ்லீம் மக்களுக்கு எதிரானதாக காட்டுகின்ற அரசியல் பித்தலாட்டத்தை செய்ய முற்படுகின்றனர். இதன் மூலம் மார்க்சியம் மீதான சேறடிப்பை நடத்த முற்படுகின்றனர். இதற்கு மாறானது உண்மைகள். முஸ்லீம் மக்களுக்கு நடந்த கொடுமைகள் பற்றிய விரிவான கட்டுரையை, முன்னோடிகளாய் சமரில் நாம் முன்பு எழுதி இருந்தோம். பார்க்க : முஸ்லீம் மக்கள் மீதான வன்முறையும் அதற்கு எதிரான போராட்டமும்

இன்னும் பல. இப்படி இருக்க முஸ்லிம் மக்கள் மீதான திடீர் அக்கறையும், இடம் வலம் தெரியாது யாருடன் சேர்ந்து கையெழுத்திட்டோம் என்பது கூட தெரியாத விலாங்குத்தனமான அரசியல் அக்கறை அனைத்தும் நேர்மையற்றது. இப்படித்தான் திட்டமிட்ட அரசியல் சதிப் பின்னணியுடன் கையெழுத்தானது. ஈ.பி.டி.பி. முதல் அரசு தரப்பிடம் கையெழுத்து கோருமளவுக்கு, இடுமளவுக்கு அரசியலும், அக்கறையும் வெளிப்பட்டு அம்பலமாகியுள்ளது. அரசுடன் நிற்கின்ற ஈ.பி.டி.பி. கூட கையெழுத்திட்டு, அதற்காக வாதிடும் எல்லை வரை, இந்த அரசியல் பின்னணியைப் புரிந்துகொள்ள முடியும்.

ஈ.பி.டி.பி. தனது தீபம் தொலைக்காட்சி வாதத்தின் போது கூறுகின்றது, நாட்டுக்கு வந்து பார்க்காதவர்கள் இதை விவாதிக்க முடியாது என்று. நல்ல வேடிக்கை இது போங்கள். புலிகள் முன்பு சொன்ன அதே வார்த்தை. மற்றொரு அரச எடுபிடி, கம்பியூட்டர் முன் அமர்ந்த அரசியல் என்று கூறுகின்றது. இதைத்தான் புலிகள் முன்பு சொன்னார்கள். இப்படி கூறி தங்கள் அரச விசுவாசத்தை பீற்றிக்கொண்டு முஸ்லீம் மக்கள் என்று புலம்புகின்றனர், வாலையாட்டிக் குலைக்கின்றனர்.

இலங்கை செல்ல முடியாமல் இருப்பது ஏன்? நீங்கள் செல்ல முடிவது எப்படி? இங்கு எம் அரசியல் தான் காரணம். அங்கு சுதந்திரம் கிடையாது. எம் அரசியலுக்காக எமக்கு காத்திருப்பது மரண தண்டனையும், காணாமல் போதலும் தான். அதைச் செய்து, தமக்கு எதிரான குரலை இல்லாததாக்கவே இலங்கை வராதது பற்றிப் பேசுகின்றனர். இந்த அரசின் பின் நின்று, அதை ஆதரித்து நிற்கும் நீங்கள், கொன்று போட சவால் விட்டு அழைக்கின்றீர்கள். ஏன் என்றால் அது உங்களை அம்பலமாக்குகின்றது. உங்கள் மனிதவிரோத நடத்தையை உலகறியப் பறைசாற்றுகின்றது.

இப்படி இந்த கேடுகெட்ட அரசியல் பின்னணியில், பின்புலத்தில் முஸ்லீம் மக்கள் பற்றிய உங்கள் அக்கறை போலியானது, அரசு சார்பானது. இதற்கு வெளியில் எந்தத் தனித்துவமும் உங்களுக்குக் கிடையாது.

முஸ்லீம் மக்கள் பற்றிய அக்கறையை உண்மையாக வெளிப்படுத்துபவர்கள், தமிழ்மக்களுக்கு எதிரான அரசுக்கு எதிராக தம்மை அரசியல்ரீதியாக நடைமுறைரீதியாக வெளிப்படுத்தி வரவேண்டும். மக்களைச் சார்ந்து நின்று போராடவேண்டும். அரசைச் சார்ந்து அல்ல. சமூகத்தின் அனைத்து ஒடுக்குமுறையையும் எதிர்த்துக் கொண்டு ஒன்றை முதன்மைப்படுத்தினால், குறைந்தபட்சம் அதில் தான் உண்மையாவது நேர்மையாவது இருக்கும்.

அரசுடன் நின்று தமிழ்மக்களை ஒடுக்கும் கூட்டம், இலங்கையில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் கருவறுக்கும் கூட்டம், முஸ்லீம் மக்கள் பற்றிப் புலம்புவது தங்கள் மனித விரோத அரசிலை மூடிமறைத்துக் கொள்ளத்தான். அதைத்தான் இந்த அறிக்கை செய்கின்றது.

முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றம் பற்றி குறிப்பாக பார்ப்போம்.

இலங்கையில் எந்த இன மக்களும் எங்கும் சுதந்திரமாக வாழ முடியும். யுத்தம் மற்றும் இனவாதத்தால் தங்கள் வாழ்விடத்தை இழந்து அகதியான அனைத்து இன மக்களும், குடியேற்றப்படவும் தம் வாழ்விடத்தை மீளப் பெறவும் உரித்துடையவர்கள். இதற்கு எதிரான அனைத்து இனவாத மற்றும் எல்லாவிதமான தடைகளுக்கும் எதிராக போராட வேண்டும். இதில் முரண் இருக்க முடியாது.

இந்த நிலையில் தான் முஸ்லீம் மக்கள் பற்றி விடையமும் அணுக வேண்டும். 20 வருடத்துக்கு முந்தைய இந்த மக்களின் பிரச்சனையை இன்று எழுப்பும் காலகட்டம், திட்டமிட்ட அரசு நடத்திய இனப்படுகொலையின் பின்னானது. இந்தவகையில் பாரிய அளவில் தமிழ் மக்களைக் கொன்ற, அவர்கள் வாழ்விடத்தைச் சிதைத்த அழித்த காலகட்டத்தில் இது எழுப்பப்படுகின்றது. அரசு தொடர்ந்தும் இனவழிப்பைத் தொடருகின்ற காலத்தில், இது திட்டமிட்டு முன்வைக்கப்படுகின்றது. அவை பற்றிப் பேசாதவர்களால் இது முன்வைக்கப்படுகினறது. அறிக்கை அதை உள்ளடக்காத வண்ணம், குறுகிய அரசியல் மூலம் மக்களைப் பிளக்கும் அரசியலை முன்வைக்கின்றது. அரசுக்கு எதிரான சர்வதேச கண்டனங்கள், முதலில் தீர்வை முன்வைக்க வேண்டும் என்ற பொது நிர்ப்பந்தம் நிலவும் சூழலில், இது திட்டமிட்டு அரசு தரப்புடன் இருப்பவர்களுடன் கூடி முன்னின்று முன்வைக்கப்படுகின்றது.

இந்த அரசும், இந்த அரசு தரப்புடன் நிற்கின்றவர்களும் தமிழ் மக்களை ஒடுக்குகின்றவர்களாக இருந்தபடி, முஸ்லீம் மக்கள் மேலான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவது எப்படி சாத்தியம்? சொல்லுங்கள்.

குறிப்பாக 20 வருடத்துக்கு முன் புலிப் பாசிட்டுகள் குறுகிய தேசியத்தின் பெயரில் அவர்கள் உடமைகளை புடுங்கிய பின் துரத்தினர். இன்று அவர்களின் மீள் குடியேற்றத்தை எடுத்தால்

1. அவர்கள் அசையாச்சொத்துகள் தொடர்பானது.

2. அவர்கள் தொழில் இடங்கள் தொடர்பானது.

3. புலிகள் சூறையாடிய சொத்துகள் தொடர்பானது.

4. இழைக்கப்பட்ட குற்றத்திற்கு பொறுப்பு ஏற்பது

இப்படி இதை பிரித்து அணுகிப் பார்க்கும் போதுதான், 71 பேர் கையெழுத்திட்ட அறிக்கையில் உள்ள மோசடி வெட்ட வெளிச்சமாகத் தெரியும்.

1. இன்று முஸ்லீம் மக்களின் அசையாச் சொத்துகள் சட்டப்படி மீளப்பெறுவதற்குரிய அனைத்து உரிமையும் கேள்விக்கு அப்பாற்பட்டது. அப்படி அதை அவர்கள் பெற்று இருகின்றார்கள். இதையும் மீறி ஒரு சில உதிரி சம்பவங்கள் சட்டத்தின் எல்லைக்குள் தீர்வு காணப்படுகின்றது. இதில் சிக்கல் இருப்பதாக அடையாளம் காணவும் முடியாது. இதை தமிழ்மக்கள் எதிர்க்கவும் முடியாது.

2. வாடகைக் கடைகள், வாடகை வீடுகள் என்பது மற்றொரு பரிணாமத்துக்கு உட்பட்டது. இது தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் கூடப் பொதுவானது. இதை வைத்து அரசியல் நடத்த முடியாது. கடைகள், வீடுகள் வாடகைக்கு விடுதல், இன அடிப்படையில் வடக்கு கிழக்கில் அரங்கேறவில்லை.

3. இழந்த சொத்துக்கான நஷ்ட ஈட்டை அரசுதான் கொடுக்கவேண்டும். புலிகள் இன்று இல்லை. வேறு எந்த வழியிலும் இதற்குத் தீர்வு காண முடியாது. புலிகளிடம் இருந்து அரசு எடுத்துக் கொண்ட சொத்தில் அல்லது அதில் பெரும் பகுதியை கொள்ளையிட்ட மகிந்த குடும்பம் தான் அதை இன்று மீளக் கொடுக்கவேண்டும். அரசு என்ற வகையில் கூட, அதை அரசு தான் செய்யவேண்டும். கையெழுத்திட்ட அரச கனவான்களே, அதை உங்கள் அரசிடம் கோருங்கள். ஏன் தான் பொதுவெளியில் சேர்ந்து கும்பி அடிக்கின்றீர்கள்.

4. முஸ்லீம் மக்களின் பரம்பரையினர் இருக்க இடம் என்பது, அவர்கள் தமது பழைய வாழ்விடத்தை சார்ந்த தொழில் மற்றும் வாழ்வை ஒட்டியதாக அணுகவேண்டும். வில்லங்கமாக இதை முன்னிறுத்தி திணிப்பது கபட நோக்கம் கொண்டது. இது தமிழ் மக்களுக்கும் பொருந்தும். இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் மீள வரும் போது ஏற்படும் அதே பிரச்சனை போன்றது இது. இராணுவச் சூனியப் பிரதேச மக்கள் மீளக் குடியேறும் போது ஏற்படும் அதே பிரச்சனை. இதைக் கடந்து வேறு வாழ்வியல் சூழலுக்குள், வாழ்பவர்களுக்கு இது பொருந்தாது. விரிவான தலைமுறைக்கு, அவர்களின் வாழ்வியல் சூழலுக்குள் வைத்து அணுக வேண்டும். இதையும் அரசு தான் தீர்க்கவேண்டும்.

ஆக இங்கு முஸ்லீம் மீள்குடியேற்றத்தில் உள்ள பிரச்சனை தங்கள் அசையாச் சொத்துக்களை பெறுவதல்ல. அவர்களுக்கான நஸ்ட ஈடுதான். இதை அரசுதான் கொடுக்கவேண்டும். அரசை நோக்கித்தான் இதனைக் கோர வேண்டும்.

5. இந்தத் தவறுக்கு பொறுப்பு ஏற்பது யார்? இந்த வலதுசாரிய அரசியலை கொண்டவர்கள்தான். குறும் அரசியல் நடத்துபவர்கள் தான். இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைத்த குற்றத்தை ஒத்த, மற்றொரு பரிணாமம் தான் முஸ்லீம் மக்கள் மீதான ஒடுக்குமுறை. இந்த வகையில் இனவாத அரசியலை யாரெல்லாம் கொண்டிருக்கின்றனரோ, அவர்கள் அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த வகையில் ஒட்டுமொத்தமாக இதைக் கோராத அரசியல், தமிழ் மக்களை மட்டும் கோரும் பேரினவாத அரசியலுடன் பின்னிப்பிணைந்தது. இந்த வகையில் அரசின் கூலிக்குழுவாக இயங்கும் மாபியாக் கும்பல் வரை இதைக் கோருவது வேடிக்கையானது.

சமூகத்தின் ஒட்டுமொத்த ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கின்ற அரசியல் தளத்தில் எழுகின்ற அரசியல் விழிப்புணர்ச்சிதான், இது போன்ற குற்றங்களை இனம்கண்டு இந்தத் தவறுக்கான சமூக கட்டமைப்பை இல்லாதாக்கும். இது அரசுக்கு எதிராக நிச்சயமாக இருக்கவேண்டும். அரசு தான் இதை நிறுவனப்படுத்தி பாதுகாக்கின்றது. இதற்கு வெளியில் குறுகிய எந்த அரசியலும், இதை செய்யாது. இவை உள் நோக்கம் கொண்ட சதி அரசியலாகும்.

பி.இரயாகரன்

24.01.2012

 

முஸ்லீம் மக்கள் பற்றிய முந்தைய சில கட்டுரைகள்

1.முஸ்லீம் மக்கள் மேல் விடப்பட்டுள்ள மிரட்டலின் விளைவு தான் என்ன?

2.இஸ்லாமியர் என்ற பொது அடையாளமே தவறானது

3.திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல.

4.புலிகள் மூதூரில் நடத்தியது என்ன?