Language Selection

புதிய ஜனநாயகம் 2011

இந்தியாவின் புதுப் பணக்கார கும்பல் உ.பி.யின் நொய்டாவில் நடந்த எஃப்  1 கார் பந்தயப் போட்டியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், முதலாளித்துவப் பத்திரிக்கைகள் அப்பந்தயத்தை இந்தியாவின் பொருளாதார வல்லமையின் அறிகுறியாகப் பறைசாற்றிக் கொண்டிருந்த அதே நேரத்தில், கிழக்கு உ.பி. பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளும் சிறுவர்களும் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.  இந்த மழைக்காலம் முடிவதற்குள் கிழக்கு உ.பி. பகுதியில் வாழ்ந்துவரும் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குழந்தையும்   இந்த வாழ்வா, சாவா போராட்டத்தைச் சந்தித்துத்தான் தீர வேண்டும்.

 

 

இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கிழக்கு உ.பி.யில் கோராக்பூர் நகரில் அமைந்துள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளுள் பெரும்பாலானவை, நோயின் தீவிரத்தால் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் மெலிந்து உருக்குலைந்து போய் மரணத்தின் வாயிலில் உள்ளன.  பல குழந்தைகள் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில், 15 நாட்களுக்கும் மேலாக நினைவு திரும்பாத நிலையில் மர ணத்துடன் போ ர hடி வருகின்றன. "இந்த மருத்துவமனைக்குள் நுழைவது ஏதோ பிணவறைக்குள் நுழைவது போல இருக்கிறது;  நோயின் தீவிரத்தாலும், மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததாலும், பெற்றோர்கள் தம் கண் முன்னே தங்களது குழந்தைகள் சிறுகச்சிறுக சாவாதைப் பார்த்துக் கதறியபடியே உள்ளனர்' என இந்த அவலத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது, ஃபிரண்ட்லைன் இதழ்.

உயிரைக் கொல்லும் அபாயம் நிறைந்த இந்த மூளைக் காய்ச்சல் தொற்றுநோய் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின்பொழுது  கிழக்கு உ.பி. பகுதியைத் தாக்கிக் கோரத் தாண்டவமாடும்.  அங்கிருந்து பீகார், அசாம், நேபாளம் எனப் பரவத் தொடங்கும்.  இந்தியா வல்லர சாகிக் கொண்டிருக்கிறது என்ற கூச்சல் நமது காதுகளைக் கிழித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில்தான், உ.பி. மாநிலத்தில் இந்தத் தொற்று நோய்க்கு 2007இல் 645 குழந்தைகளும், 2008இல் 537 குழந்தைகளும், 2009இல் 556 குழந்தைகளும், இந்த ஆண்டில் கடந்த அக்டோபர் மாதத்திற்குள் 465 குழந்தைகளும் பலியாகின.  பீகாரின் ஆறு மாவட்டங்களில் பரவியுள்ள இந்த நோய் காரணமாக இந்த ஆண்டு அக்டோபருக்குள் ஏறத்தாழ 200 குழந்தைகள் இறந்து போயுள்ளனர்.  மருத்துவமனையில் சேர்க்க வழியில்லாமல் நோய் தாக்கி வீட்டிலேயே இறந்து போய்விட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இப்புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இந்த நோய் தாக்கி உயிர் பிழைத்த குழந்தைகளை விட, இந்த நோய் தாக்கி இறந்த குழந்தைகளை ஒருவிதத்தில் அதிருஷ்டசாலிகள் என்றே கூறலாம். குரல் பறிபோதல், மூளை வளர்ச்சிக் குன்றிப் போதல், பிறர் பேசுவதைப் புரிந்து கொள்ளும் ஆற்றலை இழத்தல், கை கால்களை அசைக்க முடியாத அளவிற்கு மூட்டுகள் இறுக்கம் அடைதல், கண் பார்வை பறிபோதல் உள்ளிட்டுப் பல்வேறுவிதமான நரம்பு மற்றும் மூளை தொடர்பான பாதிப்புகளை இத்தொற்று நோய் உயிர் பிழைக்கும் குழந்தைகளிடம் ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.  இத்தொற்றுநோய் தாக்கிய நிலையில் கிடைக்கும் அற்பமான மருத்துவ வசதிகூட, இத்தொற்று நோயால் ஏற்படும் பிந்தைய பாதிப்புகளுக்குக் கிடைப்பதில்லை.  இப்படிப் பாதிக்கப்படும் குழந்தைகள் பெற்றோர்களுக்குப் பெரும் சுமையாக மாறிவிடுகிறார்கள்.

1978ஆம் ஆண்டு தொடங்கி கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மூளைக் காய்ச்சல் நோய் உ.பி.  மாநிலத்தைத் தாக்கி,  ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகளைப் பலி கொண்டு வருகிறது.  மூளைக் காய்ச்சல் உயிரைப் பறித்துவிடும் அபாயகரமான தொற்றுநோய் என்றபோதும், இதுவொன்றும் ஒழித்துக்கட்ட முடியாத, மருத்துவ உலகத்திற்கே சவால்விட்டு வரும் நோய் கிடையாது.  ஒவ்வொரு ஆண்டும் இந்நோய் தாக்கும் பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்கும் கீழான சிறுவர் களுக்கும்,  குழந்தைகளுக்கும் முறையாகத் தடுப்பூசிப் போடுவது; அப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரம் நிறைந்த கழிப்பிட வசதிகள், அங்கன்வாடிகள் மூலம் குழந்தைகளுக்குச் சத்தான உணவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது, மிகவும் முக்கியமாக இந்நோயைப் பரப்பும் கொசுக்களை ஒழிப்பது என்பது போன்ற சாதாரண நடவடிக்கைகள் மூலமே இந்நோயை முற்றிலுமாக ஒழித்துக் கட்டிவிட முடியும்.

எனினும், கடந்த முப்பது ஆண்டுகளில் மைய அரசும் சரி, மாநில அரசும் சரி கொசு மருந்து அடிப்பதற்குக்கூடப் போதிய நிதியை ஒதுக்கியதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.   கிழக்கு உ.பி. பகுதியில் உள்ள கிராமப்புற மக்களுக்குத் திறந்தவெளிதான் கழிப்பிடங்கள்; அக்கிராமப் புறங்களில் கணக்குக் காட்டுவதற்காக, ஏனோதானோவென்று போடப்பட்டுள்ள  கையடி பம்ப் வழியாகக் கிடைக்கும் மாசுபட்ட தண்ணீரைத்தான், அப்பகுதி மக்கள் குடிப்பதற்கும் குண்டி கழுவுவதற்கும் ஒருசேரப் பயன்படுத்தி வருகின்றனர்.

கிழக்கு உ.பி. பகுதியைச் சேர்ந்த ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏறத்தாழ 10 இலட்சம் முதல் 20 இலட்சம் பேர் வரை வாழ்ந்து வருகின்றனர்.  எனினும், இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கக்கூடிய அளவிற்கு ஓரளவு மருத்துவ வசதிகள் கொண்ட ஒரே அரசு மருத்துவமனை கோராக்பூரில்தான் உள்ளது.  கிழக்கு உ.பி. பகுதியிலிருந்து மட்டுமல்ல, மிகத் தொலைவிலுள்ள பீகாரின் கிராமப்புறங்களிலிருந்தும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு இம்மருத்துவமனைக்கு பெற்றோர்கள் ஓடிவருவதை இன்றும் காண முடியும்.  இந்தத் தொற்றுநோய் பெரும்பாலும் மிகவும் வறிய விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளைப் பாதிப்பதால், தனியார் மருத்துவமனைகள் இந்த நோய்க்குச் சிகிச்சை அளிப்பது பற்றி அக்கறை செலுத்துவதுதில்லை.

கோராக்பூரிலுள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இத்தொற்றுநோய்க்கான சிறப்பு மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகின்றபோதிலும், இந்நோய்க்குச் சிகிச்சை அளிப்பதற்கு ஏற்றவாறு போதிய எண்ணிக்கையில் சிறப்பு மருத்துவர்களோ, பிற சுகாதார ஊழியர்களோ இம்மருத்துவமனையில் பணியமர்த்தப் படவில்லை. அங்கு கிடைக்கும் மருத்துவ வசதிகளும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.  இத்தொற்று நோய் தாக்கிய குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு குறைந்தபட்சம் 50 செயற்கை சுவாசக் கருவிகள் தேவைப்படும் நிலையில், அம்மருத்துவமனையில் 20 சுவாசக் கருவிகள்தான் செயல்படும் நிலையில் உள்ளன.  போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், ஒரே படுக்கையை இரண்டு, மூன்று குழந்தைகளுக்குப் பகிர்ந்து கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலையில் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பீகார் மாநிலத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய அளவிற்குக் கழிப்பிட வசதிகளே கிடையாது எனும்பொழுது, அங்கு கிடைக்கும் மருத்துவ வசதிகளைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. இத் தொற்றுநோய் தாக்கி அம்மாநிலத்தில் தற்பொழுது இறந்து போயுள்ள 200 குழந்தைகளுள் 12 குழந்தைகள் போதிய செயற்கை சுவாசக் கருவிகள் இல்லாததனால் மரணமடைந்திருக்கின்றன.

"இந்தத் தொற்றுநோயை ஒழித்துக் கட்டுவதற்குத் தேசிய அளவில் ஒரு செயல்திட்டத்தையும், அதற்கான நிதியையும் ஒதுக்க வேண்டும்' என அரசு மருத்துவர்கள் கோரி வரும் வேளையில், மத்திய, மாநில அரசுகளோ இந்நோய்க்கான தடுப்பூசி மருந்தைக்கூட முறையாகவும் தொடர்ச்சியாகவும் போதிய அளவிலும் வழங்குவதில்லை.  இந்நிலையில், இந்தத் தொற்றுநோய்க்கான தடுப்பூசி மருந்தைத் தயாரித்துவரும் பொதுத்துறை மருந்து நிறுவனம் தற்பொழுது தயாரிப்புச் செலவு கூடுவதைக் காட்டி இத்  தடுப்பூசி  மருந்தைத் யாரிப்பதையே நிறுத்திக் கொண்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஏற்ப அதிகார வர்க்கமும் கடந்த பல ஆண்டுகளாகவே இத்தொற்றுநோய் பரவுவதையே ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்தியிலுள்ள காங்கிரசு கூட்டணி அரசும், உ.பி.யை ஆண்டு வரும் மாயாவதி அரசும் ஒருவர் மீது ஒருவர் பழி போடும்

அரசியல் லாவணி கச்சேரியை நடத்துவதற்கு இத் தொற்றுநோய் தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்ட அளவிற்கு, இந்த நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காட்டியதில்லை.  இதனால் வெறுத்துப் போன கிழக்கு உ.பி. பகுதியைச் சேர்ந்த 500 பேர் இந்தத் தொற்றுநோயை ஒழிக்கும் நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, பேனா மைக்குப் பதிலாக தமது இரத்தத்தால் கடிதம் எழுதி மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பியிருக்கின்றனர்.

இந்தத் தொற்றுநோய் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகளைத் தாக்கிப் பலி கொள்ளுவதற்கு மருத்துவ, சுகாதார வசதிகள் இல்லாதிருப்பது மட்டுமின்றி, அக்குழந்தைகள் சத்தான உணவு கிடைக்காமல் நோஞ்சன்களாக வளருவதும் முக்கிய காரணமாகும் என மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.  "இக்குழந்தைகளுக்கு புரோட்டீன் சத்து நிறைந்த பருப்பு சூப்பு மற்றும் பால் போன்ற உணவுகளைக் கொடுக்க வேண்டும்; ஆனால், இவர்களின் வாழ்க்கை நிலைமையோ வெறும் கடுகஞ்சி கொடுக்கக்கூடிய நிலையில்தான் உள்ளது' என இந்த அவலத்தை எடுத்துக் கூறுகிறார், பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையின் தலைமை உணவு நிபணர் நேஹா சிங். "எங்களின் வாழ்க்கையே அரைகுறை பட்டினி என்றிருக்கும்போது, எனது மகனுக்கு எப்படி சத்தான உணவைக் கொடுக்க முடியும்?' எனக் கேட்கிறார், சோனி சௌராஸியா என்ற தாய்.

சோனி சௌராஸியாவின் குடும்பம் மட்டுமல்ல, கிழக்கு உ.பி.யின் கிராமப்புறங்களில் வாழும் பெரும்பாலான விவசாயக் கூலிகளின், உதிரித் தொழிலாளிகளின் நிலைமை இதுதான்.  இந்த உண்மை தெரிந்திருந்தும், அந்த ஏழைக் குடும்பங்களுக்கு வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்ப அட்டைகளை வழங்க மறுத்து வருகிறது, உ.பி. மாநில அரசு.  மத்தியில் ஆளும் காங்கிரசு கூட்டணி அரசோ, ரேஷன் அட்டைகள் முழுவதையும் ஒழித்துக்கட்டிவிட நல்ல நாள் பார்த்துக் கொண்டிருக்கிறது.  இதற்காகவே, கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு 26 ரூபாய்க்கு மேல் கூலி பெறுபவர்களை ஏழைகளாகக் கருத முடியாது என வாதாடி வருகிறது.

உண்மை இவ்வாறிருக்க, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உ.பி. மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி அம்மா  நிலத்தில் பிரச்சாரம் செய்து வரும் ராகுல் காந்தியோ, மாயாவதியின் பிடியிலிருந்து ஏழை மக்களைக் காக்க வந்திருக்கும் ரட்சகனைப் போலத் தன்னைக் காட்டிக் கொள்கிறார்.  ஏழைகளின் குடிசைகளுக்குத் திக்விஜயம் செய்வது, அவர்களின் வீடுகளில் உணவருந்துவது என்ற மோசடி நாடகத்தை மீண்டும் நடத்திக் கொண்டிருக்கிறார்.

.ரஹீம்