எஃப்-1 கார் பந்தயம்: புதுப் பணக்காரக் கும்பலின் களிவெறியாட்டம்!

 

 

அக்டோபர் மாதம் முழுவதும், எந்தப் பத்திரிகையைப் படித்தாலும், எந்தத் தொலைக் காட்சியைத் திருப்பினாலும் பார்முலா1தான் பிரதானமாக இருந்தது. புதுதில்லிக்கு அருகில் புதிதாக  அமைக்கப்பட்ட பந்தய மைதானத்தில் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி பார்முலா1 பந்தயங்கள் ஒருவழியாக நடந்து முடிந்தன. இதனைக் காண இந்தியா முழுவதிலுமிருந்து பெரும் தொழிலதிபர்கள், சினிமா  கிரிக்கெட் நட்சத்திரங்கள், புதுப் பணக்கார மேட்டுக்குடியினர், அரசியல் தரகர்கள் என அனைவரும் தங்களுக்குச்சொந்தமான தனி விமானங்களில் வந்து குவிந்ததால், புது தில்லி விமான நிலையமே நெரிசலால் தடுமாறிப் போனது.

இவ்வளவு ஆடம்பரங்களோடு நடத்தப்படும் பார்முலா1 கார் பந்தயம் என்றால் என்ன?  மற்ற விளையாட்டுக்களில் இருந்து இது எவ்வாறு வேறுபட்டது? இந்த விளையாட்டிற்கு  இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுவதேன்?

பார்முலா1 எனப்படும் அதிவேகக் கார் பந்தயமானது, பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் ஒரு கேளிக்கை விளையாட்டாகும். சாதாரணமாகப் பார்க்கும் போது பார்முலா1  என்பது மற்றுமொரு விளையாட்டுதான் எனத் தோன்றினாலும், இது மற்ற விளையாட்டுக்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. உலகின் முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்கள், அனைத்து  பத்திரிகைகளிலும் பிரத்யேக பக்கங்கள், தொலைக்காட்சி நிறுவனங்களின் தொடர்ச்சியான  நேரடி ஒளிபரப்பு  என மற்ற விளையாட்டுகளைவிட பார்முலா1க்கு மிக அதிக அளவில்  முக்கியத்துவம் கிடைத்தாலும், இது மிகப் பெரிய அளவில் நடைபெறும் ஒரு வக்கிரமான சூதாட்டம்  என்பதே இதனை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

மற்ற விளையாட்டுக்களைப் போல யார் வேண்டுமானாலும் இதனை நடத்தவும்  முடியாது. சர்வதேசத் தானுந்து கழகம் என்ற அமைப்பு இந்தப் பந்தயங்களை நடத்த அனுமதி  வழங்குகிறது. இந்தப் பந்தயத்தை நடத்தத் தேவையான மைதானத்தை அமைக்கவே பலநூறு கோடி ரூபாய்கள் செலவாகும். அதுமட்டுமன்றி, போட்டியை நடத்த உரிமக்  கட்டணமாக 2000 கோடி ரூபாய் வரை இந்த அமைப்புக்கு வழங்க வேண்டும். போட்டியில்  தனி நபர்கள் பங்கு பெறவே முடியாது. ஓட்டுநர் உரிமத்துக்கும், காருக்கான உரிமத்திற்கும் நூறு கோடிக்கும் மேல் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், போட்டியில் பயன்படுத்தப்படும் காரின் விலை குறைந்தபட்சம் 300 கோடிகளிலிருந்து அதிகபட்சமாக 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை உள்ளது.

இவ்வளவு பணம் செலவழித்து இந்தப் போட்டியை ஏன் நடத்திட வேண்டும்? கோடிக்கணக்கில் கொடுத்து ஏன் அதில் கலந்து கொள்ள வேண்டும்? எல்லாவற்றிற்கும் காரணம்  இலாபவெறி தான். உலகம் முழுக்க 60 கோடி பார்வையாளர்களைக் கொண்ட இந்த விளையாட்டின்  பிரதான வருவாயே விளம்பரங்கள்தான். போட்டியைக் காணும் ரசிகர்களைப் பயன்படுத்தி  விளம்பரங்களின் மூலம் சம்பாதிப்பதுதான் போட்டியை நடத்தும் அமைப்பிற்கும் பங்கேற்கும்  நிறுவனங்களுக்கும் இலக்கு.

இந்த அமைப்பும் அதன் தலைவர்களும் ஜனநாயகத்தை விட சர்வாதிகாரத்தையே அதிகம்  விரும்புகின்றனர். இந்த அமைப்பின் தலைவரான எக்லீஸ்டோன், பாசிசத்தின் பகிரங்க ஆதரவாளராவார்.  இட்லரின்  தீவிர விசுவாசியான இவர், பந்தயம் நடக்கும் நாடுகளில் ஜனநாயக ஆட்சியை விட சர்வாதிகாரஆட்சி இருக்க வேண்டுமென்று தனது விருப்பத்தை வெளிப்படையாக அறிவித்தவர். இதே அமைப்பைச் சேர்ந்த மேக்ஸ் மூஸ்லி என்பவரும் தன்னை இட்லரின்  ஆதரவாளர் என்பதை வெளிப்படையாகக் கூறிக்கொள்பவர்.

தனியார்மயதாராளமயத்தால் ஆதாயமடைந்துள்ள தரகுப் பெரு முதலாளிகளும் பொதுச் சொத்துக்களை விழுங்கிய புதுப்பணக்கார கருப்புப்பணப் பேர்வழிகளும் இந்தியாவில் அதிகரித்துள்ளதால், மேலை நாடுகளைப் போல இப்புதுப்பணக்கார மேட்டுக்குடி கும்பலின் வக்கிரத்துக்கேற்ற புதுப் பாணியிலான கேளிக்கைகளும் சூதாட்ட களிவெறியாட்டங்களும் விளையாட்டுகளும் புகுத்தப்படுகின்றன. இதனையொட்டியே இதுவரை ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் மட்டுமே நடத்தப்பட்டு வந்த இந்தப் போட்டிகள் தற்போது இந்தியாவிற்குக் கொண்டுவரப்படுகின்றன.

ஏற்கெனவே இந்தியாவில் கிரிக்கெட் எனும் விளையாட்டின் மூலம் கோடிக்கணக்கில்  பணம் குவித்துவந்த முதலாளிகள், பார்முலா1 வந்தவுடன் அதனைக் கெட்டியாகப் பிடித்துக்  கொண்டுள்ளனர். இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் அமைப்புகளான பி.சி.சி.ஐயும், ஐ.பி.எல்.லும், அவற்றோடு சம்பந்தப்பட்ட முதலாளிகளும் கட்டுப்பாடின்றிக்  கொள்ளையடிப்பது எற்கெனவே தெரிந்ததுதான். இந்நிலையில், புதிதாக  வந்துள்ள பார்முலா1, இந்தியப் பெரு முதலாளிகளுக்குக் கொள்ளையடிப்பதற்கான புதிய  கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது.

இதனால்தான், தனது கிங் பிஷர் விமான நிறுவனத்தை நட்டக் கணக்குக் காட்டி மூடிவிடப் போவதாக அரசை மிரட்டி, அரசு வங்கிகளிடமிருந்து கறக்க முயற்சிக்கும் சாராய முதலாளி மல்லையாவும், சகாரா நிறுவனமும், தற்போதைக்கு ஐ.பி.எல். கிரிக்கெட்டை ஓரம்கட்டி வைத்துவிட்டு பார்முலா1 இன்  "டீம் இந்தியா" என்ற அணியில் முதலீடு செய்துள்ளனர். இதே காரணத்திற்காகத்தான் ஏர்டெல்  நிறுவனமும், கிரிக்கெட்டிற்கு ஒதுக்கி வைத்திருந்த நிதியை பார்முலா1இல் முதலீடு செய்துள்ளது.

இப்பகற்கொள்ளையின் பின்னணியை அறியாமல், இந்தப் பந்தயங்களின் மூலம் இந்தியா  உலக அளவில் பெயரும் புகழும் அடைந்துவிட்டதாக பார்முலா1 இன் ரசிகர்கள் கருதுவதுதான் மிகப்பெரிய அபத்தம். இந்தப் பந்தயத்தை நடத்துவது மிகவும் பெருமிதமாகச் சித்தரிக்கப்படுகிறது என்பதால் ஜப்பான், கொரியா, சீனா, போன்ற ஆசிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் இந்தக் கார்ப் பந்தயம் நடந்துள்ளதால், பணக்கார நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துவிட்டதாக அவர்கள் மார்தட்டிக் கொள்கின்றனர்.

இந்த வீண்பெருமைக்காக அவர்கள் கொடுத்த டிக்கெட் விலையும் மிக அதிகம். ரூபாய்  2,500இல் தொடங்கி ரூபாய் 35,000 வரை டிக்கெட் விற்கப்பட்டது. அத்துடன் மைதானத்தின் பிரத்யேக இடங்களில், சொகுசு அறைகளில் சீமைச் சாராயத்தைக் குடித்தபடியே  பந்தயத்தை ரசிப்பதற்குத் தனி டிக்கெட். அதன்விலை இரண்டரை லட்சம் ரூபாய்.  இவ்வளவு  பெரும்  தொகையைக் கொட்டிக் கொடுத்து சுமார் 95,000 பேர் இந்தப் பந்தயத்தைக் கண்டு  களித்துள்ளனர். பந்தயம் முடிந்த பின்னர் அமெரிக்க பாப் பாடகி லேடி காகாவின் இசை நிகழ்ச்சியும், களிவெறியாட்டக் கேளிக்கைக் கொண்டாட்டங்களும் நடைபெற்றன.  இந்நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விலையோ 10 லட்சம் வரை ஆகும்.

பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட இந்த வக்கிரக்கூத்திற்கு பலநூறு விவசாயிகளின் வாழ் வாதாரமான விவசாய நிலங்களைப் பறித்துள்ளார்கள். பார்முலா1 பந்தையம் நடத்தப்பட்ட மைதானம்  அமைக்க 2000 ஏக்கர் விவசாய நிலம் விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்குப் பிடுங்கப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து இன்றும் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் லேடிகாகாவின் ஆபாச நடனத்திற்கு தரும் முக்கியத்துவத்தில் ஒரு சதவீதத்தைக் கூட விவசாயிகளின் போராட்டத்திற்குத் தராமல்,  அதனை ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்து வருகின்றன.

தனியார்மயக் கொள்ளையின் புதிய வடிவமாக, மேட்டுக்குடி வக்கிரத்தின் அடுத்த பரிமாணமாக, நுகர்வு வெறியுடன் பாசிசத்தையும் சேர்த்தே பரப்பும் பார்முலா1 கார் பந்தயக் கேளிக்கைகளில் இந்திய முதலாளிகளும் மேட்டுக்குடி கும்பலும் கொட்டமடித்து வருகின்றனர். இந்திய விவசாயிகளோ வாழ்வாதாரத்தையும் இழந்து வயிறெரிய நிற்கின்றனர். இந்த வக்கிரத்தை நாட்டு மக்கள் இன்னமும் சகித்துக் கொண்டிருப்பதுதான் மிகப் பெரிய அவமானம்.

• அன்பு