Language Selection

புதிய ஜனநாயகம் 2011

தமிழ்நாட்டில் 1970களிலிருந்து படிப்படியாக அதிகரித்து வந்த நகரமயமாக்கம், கடந்த பத்தாண்டுகளில் அதிக வேகம் பிடித்தது. குறிப்பாக தலைநகர் சென்னைக்கு பிழைப்பு தேடி தினமும் வந்து குவியும் மக்களின் தொகையும், புதிதாக முளைக்கும் குடியிருப்புகளும், இதைச் சார்ந்து எழுப்பப்படும் உயரமான வணிக வளாகங்களும் சேர்ந்து சென்னையைத் திணறடித்து வருகின்றன.

 

 

சென்னையில் கட்டப்படும் புதிய கட்டிடங்களை ஒழுங்குபடுத்துவதற்கென சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) ஆகிய இரண்டு அமைப்புகள் உள்ளன.

இவ்விரு அமைப்புகளும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும், உரிய காற்றோட்டத்துடனும், தீவிபத்திலிருந்து மக்களைக் காக்கவும் விதிமுறைகளை வகுத்துள்ளன. வணிக வளாகங்களுக்குத் தரை தளத்தில் வாகன நிறுத்தம், கடைக்கு முன் 40 அடி அகலம் வரைசாலை, போதிய இடைவெளியுடன் படிக்கட்டுகள், 2தளங்களுக்கு மேற்பட்டிருப்பின்  கட்டாயமாக தீ அணைப்பு கருவிகள், அவசர காலத்தில் வெளியேறும் வாயில்கள், இரு கட்டடங்களுக்கிடையே 5 முதல் 11 அடி வரை இடைவெளி ஆகியவை இருக்க வேண்டுமென விதிமுறைகள் உள்ளன.

ஆனால் பெரும்பாலான வணிக வளாகங்கள் இவ்விதிகளை மயிரளவும் மதிப்பதில்லை. சென்னை தியாகராய நகரிலுள்ள ரங்கநாதன் தெரு, இதற்கு தகுந்த சாட்சி. நெருக்கமாக எழுந்து நிற்கும் கட்டிடங்கள் அடைத்து நிற்கும் அத்தெருவில் தீவிபத்து ஏற்பட்டால் உயிர் தப்புதல் மிகவும் கடினம். தீயணைப்பு வண்டிகளே நுழைய முடியாத அத்தெருவிலுள்ள சரவணா ஸ்டோரில் இரண்டாண்டுக்கு முன் நடந்த தீவிபத்தில் அக்கடை ஊழியர்கள் இருவர் இறந்துள்ளனர்.

எவ்வாறு விதிமுறைகளை மதிக்காமல் கட்டபட்ட கும்பகோணம் பள்ளி யின் தீவிபத்து 96 குழந்தைகளைக் கொன்றதோ, அதைவிட மோசமான  நிலைமையில்தான் ரங்கநா தன் தெரு உள்ளது.  இத்தெருவில் எழும்பியிருக்கும் கட்டுமானங்களில் நடந்துள்ள விதிமீறல்கள் தெளிவாகத் தெரிந்தபோதும்,  இக்கடைகளுக்கு சீல் வைப்பதாக மாநகராட்சி மிரட்டுவது,  ஒப்புக்கு சில கடைகளின் சிறுபகுதிகளை  இடிப்பது, வியாபாரிகள் நீதி மன்றத் தடை பெற்று பழைய நிலையே தொடர்வது என இந்த நாடகம் தொடர்ந்து கொண்டுள்ளது.

இந்நிலையில்  சி.எம்.டி.ஏ.வும் மாநகராட்சியும், கடந்த அக்டோபர் 31ஆம் நாள் ரங்கநாதன் தெருவிலும், அதையொட்டியுள்ள உஸ்மான் சாலையிலுமுள்ள 25 கடை வளாகங்களுக்கு சீல் வைத்தன. இதனை எதிர்த்து அப்பகுதிப் பெருவணிகர்கள் நீதிமன்றத்தில் முறையீடு, கடை அடைப்பு என எதிர்ப்புக் காட்டி வருகின்றனர்.

அதிகரித்து வந்த நகர்மயமாக்கத்தாலும் நிலத்தரகுக் கும்பல்களாலும் சென்னை போன்ற பெருநகரங்களில் சதுர அடிமனையின் விலை பல ஆயிரங்களுக்கு உயர்ந்ததும் கட்டுமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகள் வணிகர்களால் மீறப்பட்டன. போதிய இடைவெளியோ, வாகன நிறுத்தமோ இல்லாமல் இவர்கள் கட்டிய பல அடுக்குமாடி கடைகளுக் கெல்லாம் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்புதல் தந்தனர்.

இவற்றுடன் நில்லாமல்  அதிகார வர்க்கம் 1988இல் நகர ஊரமைப்பு சட்டத்தின் கட்டிட விதிமுறைகளில் பல திருத்தங்களைச் செய்து, விதிமுறைகளைத் தளர்த்த முயன்றது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்குகள் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாக தொடர்ந்து இழுக்கப்பட்டு வந்துள்ளது.

இவ்வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, புதிய கட்டிடங்களில் விதிமுறைகள் மீறப்படுகின்றதா என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளைக் கொண்டு கண்காணிப்புக் குழு ஒன்று 2007இல் ஏற்படுத்தப்பட்டது.

2007இல் இருந்து இவ்வாண்டு வரை விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்கள் 6438 என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. ஆனால் கண்காணிப்புக் குழுவோ "தாராளமாக' ஆய்வு செய்து  விதிமுறைகள் மீறப்பட்டுள்ளவை 64 மட்டுமே எனக் கண்டறிந்தது. உடனே அவற்றை  இடித்திடாமல், "நோட்டீஸ் அனுப்பினோம், பதில் இல்லை' என்று நீதிமன்றத்தில் பசப்பியது, குழுவின் அறிக்கை. விதிமீறல்களுக்குப் பக்கபலமாக இருந்த 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உட்பட 33 அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையையும் இக் குழு எடுக்கவில்லை.

அதிகாரிகள் மட்டுமல்ல் ஓட்டுக்கட்சிகளும், விதிமுறை மீறல்களுக்கு துணையாக உள்ளன. தங்கள் லாபவெறிக்கு இடைஞ்சலாக விதிமுறைகள் உள்ளன என பெருவணிகர்கள் கருதிய போது, 1999 இல் தி.மு.க.அரசும், 2002 இல் அ.தி.மு.க. அரசும் மாற்றிமாற்றி அவசர சட்டங்களைப் போட்டு அதுவரை நடந்துள்ள விதிமீறல்களுக்கு "தப்புக்குத் தக்கபடி அபராதம்' என "முறைப்படுத்தி' சட்டவிரோத, பொதுமக்களுக்கு ஆபத்தான கட்டிடங்களைக் காக்க முயன்றன.

1988 இல் தொடரப்பட்ட பொது நல வழக்கு நிலுவையில் இருக்கும்போதே 1999இல் தி.மு.க. அரசு கொண்டுவந்த நியாயமற்ற சட்டம் செல்லாது எனத் தீர்ப்பு கொடுத்த உச்ச நீதிமன்றமோ, 1999இல் விதிமுறைகளை மீறிய கட்டிடங்களுக்கு மட்டும் அபராதம் கட்டிக் காப்பாற்ற வழிகாட்டியது.

மாநகரங்களில் விதிமுறைகள் மீறல் என்பது பல பத்தாண்டுகளாகவே இருந்துவருவதுதான் என்றாலும், தனியார்மய தாராளமயமாக்கலுக்குப் பிறகு அதன் தன்மை பெரிதும் மாறியுள்ளது. சில்லரை வணிகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் போன்ற சிலர் ஏகபோகமாக வளர்ந்தார்கள். இந்தப் புதுப்பணக்கார வர்க்கம், ஆபத்தான கட்டிடத்தால் தங்கள் ஊழியர்கள் மட்டுமல்ல, வாடிக்கையாளர்கள் கூட விபத்து ஏதேனும் ஏற்பட்டால் பாதிக்கப்படுவரே என்றெல்லாம் கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு தேவை லாபம் ஒன்று தான். தீயணைப்புக் கருவி வைக்கும் இடத்தில் கூடுதலாக ஒரு பீரோவை நிறுத்தலாமே என்றுதான் சிந்திக்கின்றனர்.

பிற துறைகளில் எவ்வாறு தனியார்மயம் ஊழலை ஊதிப் பெருக்கியதோ, அதேபோல மாநகராட்சி அதிகார வர்க்கமும் இப்புதுப்பணக்கார வர்க்கத்துடன் கைகோர்த்து ஊழலை இன்னொரு பரிமாணத்துக்கு எடுத்துச் சென்றன. தனியார்மயம் தீவிரமான பின்னரோ, நடப்பிலுள்ள சட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் தங்கள் லாபத்துக்கு இடையூறாக இருப்பதால், அவற்றை திருத்திடுமாறு பணக்கார வணிகர்கள் அரசைக் கோருகின்றனர். சீல்வைப் பினை அடுத்து  இவ்வணிகர்கள் கூடி அரசுக்கு அதைத்தான் கோரிக்கையாக வைக்கின்றனர். இக்கடைகளை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் உள்ளதாக அரசை நிர்ப்பந்திக்கின்றனர், அதுவரை அதே தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தி வந்த அண்ணாச்சிகள்.

போனால் போகிறதென்று பேருக்கு 64 கட்டடங்களை மட்டும் கண்டறிந்த அதிகாரிகள், ஒரே நாளில் அவற்றை இடித்துத் தள்ளாமல் அவர்களுக்கு 60 நாள் அவகாசமும், தீபாவளி விற்பனைக்காக கூடுதல் அவகாசமும் கொடுத்ததும் ஏன்? இதே அதிகார வர்க்கம் கூவம் நதிக்கரையிலும், பட்டினப்பாக்கத்திலும் குடிசைகளில் வாழ்ந்த மக்களிடம் இதே தாராளத்தைக் காட்டியதா?

விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ள ரங்கநாதன் தெருவிலுள்ள கடைகளுக்கு சீல் வைத்துள்ள  இந்நடவடிக்கைக்கு எதிராக வணிக சங்க தலைவர் வெள்ளையன் "தியாகராய நகரை வியாபார மண்டலமாக அறிவிக்க வேண்டும்' என்கிறார். ஆனால்,வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் கூவம் நதிக்கரையோர குடிசைகளை அரசு இடித்துத் தள்ளிய போது, அது குடியிருப்புப் பகுதியாக அறிவிக்கப்படவில்லை. கோடிகளில் புரளும் பெருவணிகர்களுக்கு ஒரு நீதியும் சாமானியர்களுக்கு ஒரு நீதியுமாகத்தான் அரசு அணுகுகிறது. வளர்ச்சித் திட்டங்களுக்காக விரட்டி அடிக்கப்படும் சாமானியர்களிடம் "வளர்ச்சிக்காக தியாகத்தை'க் கோரும் நீதித்துறை, விதிமீறல் கட்டிடங்கள் அனைத்தையும் இடிக்கவோ, துணை நின்ற அதிகாரிகளைக் கைது செய்ய உத்தரவிடவோ முன்வரவில்லை.  இக்கோரிக்கைகள் மக்கள் போராட்டமாக மாறாத வரை அதிகார வர்க்கத்தின் ஊழலும், பெரு முதலாளிகள் பெரு வணிகர்களின் விதிமீறல்முறைகேடுகளும், நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு என்ற நாடகமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

• கதிர்