தமிழகத்தில் இயங்கிவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மாருதி சுசுகி தொழிலாளர்களின் போராட்ட அனுபவத்தை தமிழகத் தொழிலாளர்களிடையே பதியவைத்து, முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கெதிராக அவர்களைப் போராட அறைகூவித் தமிழகமெங்கும் பிரசசார இயக்கங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, "மாருதி சுசுகி கார்
தொழிலாளர்களிடம் பணிந்தது நிர்வாகம்! பாடம் கற்போம்! முதலாளித்துவத்துக்குச் சவக்குழி வெட்டுவோம்!' என்ற முழக்கத்தை முன்வைத்து நவம்பர்20 அன்று சென்னைபூவிருந்தவல்லி, சீனிவாசா திருமண அரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கத்தைத் தலைமையேற்று நடத்திய பு.ஜ.தொ.மு.வின் மாநில அமைப்புச் செயலர் தோழர் சி.வெற்றிவேல் செழியன் தனது உரையில், நாட்டின் வடபகுதியிலுள்ள மானேசர் தொழிற்பேட்டை தொடங்கி தென்பகுதியில் அமைந்திருக்கும் சென்னையின் இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் வரையிலான அனைத்துத் தொழிற்பேட்டைகளிலும் தொழிலாளர்கள் மீதான வரைமுறையற்ற சுரண்டலும் அடக்குமுறைகளும் அன்றாட நிகழ்வுகளுள் ஒன்றாகிவிட்டதை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினார். ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் 200 பேர் போராடினால் 800 பேர் வேலையைத்
தொடரும் அவலம் இருப்பதை இடித்துரைத்த அவர், தொழிலாளி வர்க்கம் என்ற உணர்வோடு அணிதிரண்டு போர்க்குணத்தோடு எதிர்த்து நின்ற மாருதி சுசுகி தொழிலாளர்களின் போராட்டப் படிப்பினையை நாமும் பெற வேண்டும் என்பதே இக்கருத்தரங்கின் நோக்கம் எனச்சுட்டிக் காட்டினார்.
"மாருதி சுசுகி தொழிலாளர்களின் வெற்றி: அனுபவம் கற்போம்!' என்ற தலைப்பில் உரையாற்றிய பு.ஜ.தொ.மு.வின் மாநிலப்பொருளாளர் தோழர் பா.விஜயகுமார், மாருதி சுசுகி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சார்லி சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ் திரைப்படத்தில் தொழிலாளர்கள் படும்பாட்டைச் சித்திரித்து வரும் காட்சிகளை விஞ்சும் வகையில் சுரண்டப படுவதை விவரித்து, அதன் மூலம் மாருதி சுசுகி என்ப ஒரு ஜெண்டில்மேன் நிறுவனம் என்பதாக முதலாளித்துவப் பத்திரிக்கைகள் உருவாக்கியிருக்கும் பிம்பத்தைத் திரைகிழித்தார்.
"பல வேறுபாடுகளைக் கடந்து தொழிலாளி வர்க்கம் என்ற வகையில் அணிதிரண்டது; தொழிலாளர் நலத்துறை, போலீசு, அதிகார வர்க்கம் ஆகியவற்றின் மிரட்டல்களுக்கும் நரித்தனங்களுக்கும் பலியாகாமல் போர்க்குணத்தோடு எதிர்த்து நின்றது; சும்பள இழப்பு, வேலை நீக்கம் உள்ளிட்ட இழப்புகளைக் கண்டு துவண்டு விடாமல் மனஉறுதியுடன் போராட்டத்தைத் தொடர்ந்தது பிர்லா, ஹிந்துஸ்தான் யுனிலீவர் உள்ளிட்ட தரகு முதலாளித்துவக் கும்பல் வலிய வந்து, தொழிலாளர்களை தாஜா செய்யும் விதமாக அறிக்கை விடுமளவிற்கு அவர்களைப் பயபீதிக்குள்ளாக்கிய மாருதி சுசுகி தொழிலாளர்களின் உறுதி' எனத் தொழிலாளி வர்க்கம் இப்போராட்டத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பல முன்னுதாரணங்களைப் பட்டியலிட்ட அவர், சரியான அரசியல் தலைமை இல்லாததனால் போராட்டத் தலைமை துரோகமிழைத்துச் சென்றதை எதிர்மறை படிப்பினையாகப் பெறவேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டினார்.
"வால்ஸ்டிரீட் முற்றுகை: திணறும் முதலாளித்துவத் தலைமை பீடம்!' என்ற தலைப்பில் உரைநிகழ்த்திய பு.ஜ.தொ.மு.வின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் சுப.தங்கராசு, வால்ஸ்டிரீட்டில் நடந்து வரும் அமெரிக்க மக்களின் போ ர hட்டம், அமெரிக்கா ஒரு பூலோக சொர்க்கம் எனக் கூறப்படும் மாயையைத் தகர்த்திருப்பதைச் சுட்டிகாட்டினார். அமெரிக்கா மட்டுமின்றி,எ உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்களையும் உழைக்கும் மக்களையும் துன்ப துய ரங்களுக்குள் தள்ளிவரும் முதலாளித்துவக் கொடுங்கோன்மையை விளக்கிய அவர், இவற்றுக்கெதிராக நடைபெற்றுவரும் போராட்டங்களில் பாட்டாளி வர்க்க அரசியல் தலைமையை நிறுவ வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இத்தகைய முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராக கம்யூனிசமென்ற வாளையும் கேடயத்தையும் ஏந்திக் களம் காண அறைகூவல் விடுத்துத் தனது உரையை நிறைவு செய்தார்.
தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்துவதற்கு கண்டனம் தெரிவித்தும்; தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியும்; சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு மற்றும் விலைவாசி உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும்; தமிழக அரசால் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள்நலப் பணியாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தக்கோரியும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கருத்தரங்கின் நிறைவாக, பு.ஜ.தொ.மு.வின் மாநில இணைச் செயலர் தோழர் இரா.ஜெயராமன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இக்கருத்தரங்கில் மாருதி சுசுகி தொழிலாளர்களின் போராட்டம் மற்றும் வால்ஸ்டிரீட் போராட்டக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதோடு, ஓவியர் முகிலனின் மறுகாலனியாதிக்க எதிர்ப்பு ஓவியங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டன. பு.மா.இ.மு. சென்னைக் கிளை கலைக்குழுத் தோழர்கள் நடத்திய புரட்சிகர கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன.
பு.ஜ.தொ.மு. மற்றும் அதன் இணைப்புச் சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமின்றி, இருங்காட்டுக் கோட்டை, ஒரகடம் தொழிற்பேட்டைகளிலுள்ள நோக்கியா, ஹ_ன்டாய் மற்றும் அந்நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களைத் தயாரித்துத் தரும் நிறுவனங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான புதிய தொழிலாளர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர். மேலும், அவர்கள் இக்கருத்தரங்கம் தம்மிடம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பு.ஜ.தொ.மு.வின் முன்னணியாளர்களிடம் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர்.
இளம் தொழிலாளர்களால் நிரம்பி வழிந்த அரங்கமும் அத்தொழிலாளர்களிடையே ததும்பி நிறைந்த வர்க்க உணர்வும் இக்கருத்தரங்கின் வெற்றியைப் பறைசாற்றின.
• இளங்கதிர்