Language Selection

புதிய ஜனநாயகம் 2011

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)இன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான கிஷன்ஜி என்றழைக்கப்படும் தோழர் மலோஜுலா கோடேஸ்வர ராவ், மத்திய ரிசர்வ் போலீசு படையினரால், 24.11.2011 வியாழனன்று படுகொலை செய்யப்பட்டு தியாகியானார். மேற்கு வங்க மாநிலம், மேற்கு மித்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த புரிசோல் காட்டுப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக போலீசு தெரிவித்தது. துப்பாக்கிச் சண்டை நடந்ததாகக் கூறப்படும் இடம்,  ஜம்போனி போலீசு நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், அரசு விவசாயப் பண்ணையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ள ஆள் நடமாட்டமும் போலீசு நடமாட்டமும் அதிகமுள்ள இடமென்பதால், அங்கே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறுவதே சந்தேகத்திற்குரியது என்று கூறியிருக்கின்றன, சில பத்திரிகைகள்.

 

 

முந்தைய நாளன்று, ஆயிரம் பேர்கொண்ட படை யினர் கிஷன்ஜியைச் சுற்றி வளைத்துவிட்டதாகவும், ஆனால், இறுதி நேரத்தில் அவர் தப்பிவிட்டதாகவும் போலீசு செய்தி வெளியிட்டது. தோழர் கிஷன்ஜி நவம்பர் 23 அன்றே கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, நவம்பர் 24 அன்று போலி மோதலில் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று தோழர் வரவரராவ் குற்றம் சாட்டினார். கொல்கத்தாவைச் சேர்ந்த ஏ.பி.டி.ஆர். என்ற சிவில் உரிமை அமைப்பின் தலைவரும், மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மம்தா அரசு நியமித்துள்ள குழுவின் உறுப்பினருமான சுஜாதோ பத்ரோவும்,  வலது  கம்யூனிஸ்டு  கட்சித்  தலைவர் குருதாஸ் தாஸ்குப்தாவும் இது போலி மோதல் கொலை என்றே கூறியிருக்கின்றனர்.

இது போலி மோதல் கொலை அல்ல என்றும், குறிப்பான உளவுத் தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட "சுத்தமான' நடவடிக்கைதான் என்றும் கூறியிருக்கிறார், மத்திய ரிசர்வ் போலீசு படையின் டைரக்டர் ஜெனரல் விஜயகுமார். போலீசின் வாய் சுத்தம் நாம் அறிந்ததுதான் என்பது ஒருபுறமிருக்க, விஜயகுமார் தமிழகத்தில் இருந்தபோது, அவர் தலைமையிலான சிறப்பு அதிரடிப் படை வீரப்பன் பிணத்தைச் "சுட்டுக் கொன்ற கதை' யும் நமக்குத் தெரியும்.

தோழர் கிஷன்ஜியின் உடலை அடையாளம் காண்பதற்காக நவம்பர் 26 அன்று மித்னாபூர் மருத்துவமனைக்கு நேரில் சென்ற வரவரராவும், தோழர் கிஷன்ஜியின் அண்ணன் மகள் தீபாவும் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்களாக அவரது உடல் முழுதும் காயங்கள் இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர். அவரது உடலில் 6 இடங்களில் தோட்டாக்கள் பாய்ந்திருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுகிறது. கொலை வழக்கு பதிவு செய்யப்படவேண்டும் என்றும் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் தீபா மனு தாக்கல் செய்யவிருக்கிறார்.

•••

கிஷன்ஜி என்றழைக்கப்பட்ட தோழர் மலோஜுலா கோடேஸ்வரராவ் ஆந்திர மாநிலம், கரீம் நகர் மாவட்டத்திலுள்ள பெட்டபள்ளியைச் சேர்ந்தவர். கல்லூரிக் காலத்திலேயே முற்போக்கு மாணவர் சங்கத்தைத் துவங்குவதில் முன்நின்றதாகவும், 1975 அவசரநிலைக் காலத்தின்போதே தலைமறைவு வாழ்க்கையைத் தொடங்கிவிட்டதாகவும் ஒரு பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். மக்கள் யுத்தக் குழுவிலும், பின்னர் ஒன்றுபட்ட மாவோயிஸ்டு கட்சியிலும் தலைமைப் பொறுப்புகளில் இருந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மூத்த தோழராக இருந்தபோதிலும், லால்கர் போராட்டத்தை ஒட்டித்தான் ஊடகங்களின் வாயிலாக அவர் அறிமுகமானார்.

லால்கர் போராட்டத்தின் போது, பொய் வழக்குகளில் போலீசால் கைது செய்யப்பட்ட பழங்குடிப் பெண்களை விடுவிக்கக் கோரி, அக்டோபர் 2009இல் சங்க்ரெயில் போலீசு நிலையத்தின் மீது தாக்குதல் தொடுத்து, இன்ஸ்பெக்டர் அதீந்திரநாத் தத்தாவைப் பிணையக் கைதியாகப் பிடித்தனர் மாவோயிஸ்டுகள். 14 பழங்குடிப் பெண்கள் விடுவிக்கப்பட்ட பின்னர், அந்த போலீசு அதிகாரியையும் விடுவித்தனர். மார்க்சிஸ்டு அரசை இந்த நடவடிக்கை கொதிப்புறச் செய்தது. இந்நடவடிக்கையின் போது, ஒரு கட்டம் போட்ட கைத்தறித் துண்டால் தலையைப் போர்த்திக் கொண்டு, தோளில் துப்பாக்கி தொங்க, தொலைக்காட்சி காமெராவுக்கு முதுகைக் காட்டியபடி ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார் ஒரு தோழர். ஒடிசலான உடல்வாகும், மென்மையான குரலும் கொண்ட அவர்,  "கிஷன்ஜி' என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

பின்னர் பிப்ரவரி 2010இல், சில்டாவில் கிழக்குப் பிராந்திய ரைபிள்ஸ் முகாமின் மீது தாக்குதல் நடத்தி, 24 சிப்பாய்களைக் கொன்று, 47 நவீன ஆயுதங்களையும் மாவோயிஸ்டு படையினர் கொண்டு சென்ற போது, கிஷன்ஜிதான் இதற்கு காரணம் என்று போலீசு குற்றம்சாட்டியது. கிஷன்ஜிக்கு எதிரான தேடுதல் நடவடிக்கைகளை மே.வங்க அரசு முடுக்கி விட்டிருந்த நிலையிலும், அவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த வண்ணமிருந்தார். மார்க்சிஸ்டு அரசினால் அவரைப் பிடிக்க முடியவில்லை.

ஆனால், "ஜங்கல் மகல் பகுதியிலிருந்து மத்திய மாநிலக்கூட்டுப் படைகளைத் திரும்பப் பெறுவோம், எல்லா அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்வோம், மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்' என வாக்குறுதி அளித்த மம்தாவின் அரசு தான் கிஷன்ஜியைப் பிடித்துச் சித்திரவதை செய்து கொன்றிருக்கிறது. இந்தப் படுகொலைக்கு மன்மோகன், சோனியா, சிதம்பரம், மம்தா ஆகியோர்தான் பொறுப்பு என்றும் மம்தாவும் மத்திய அரசும் கூட்டாக நடத்திய சதியின் விளைவாகத்தான் இந்தப் படுகொலை நடந்திருக்கிறது என்றும் மாவோயிஸ்டு கட்சியின் மத்தியக்குழுவின் சார்பில் தோழர் அபய் குறிப்பிட்டிருக்கிறார்.

2004 இல் ராஜசேகர் ரெட்டியுடனான பேச்சு வார்த்தையை முறிந்தவுடனே, நல்லமலா காட்டுப் பகுதியை சுற்றி வளைத்து தோழர் ராமகிருஷ்ணாவைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. மாவோயிஸ்டுகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக ப.சிதம்பரம் நாடகமாடிக் கொண்டிருந்த போதே, கோப்ரா படையினரால் தோழர் ஆசாத் நயவஞ்சகமாகக் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். தற்போது மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, சிவில் உரிமை அமைப்பினர் சிலரை மம்தா அரசு நியமித்து, அவர்கள் இரண்டு சுற்றுகள் பேசிவிட்ட நிலையில், கூட்டுப் படைகள் தோழர் கிஷன்ஜியைப் பிடித்துக் கொலை செய்திருக்கின்றன.

அமைதி, சமாதானம், பேச்சுவார்த்தை என்று கூறிக் கொண்டு மாவோயிஸ்டு கட்சியின் தலைமையைக் கொன்றோழிப்பது, கட்சிக்குள் உளவாளிகளை ஊடுருவச் செய்வது என்ற உத்திகளையே மத்தியமாநில அரசுகளும் போலீசும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றன.   "கிஷன்ஜி பற்றிய தகவல்களை எங்களுடைய ஆதரவாளர்களே போலீசுக்கு கசிய விட்டிருக்கின்றனர். கடைசியாக நான் கிஷன்ஜியுடன் பேசியபோது, நம்முடைய ஆதரவாளர்களுக்குள்ளேயே எதிரிகள் ஊடுருவிவிட்டனர் என்று அவர் கூறினார்' என மாவோயிஸ்டு கட்சியின் மேற்கு வங்கச் செயலர் ஆகாஷ் தொலைபேசியில் கூறியதாக கொல்கத்தாவிலிருந்து வெளிவரும்டெலி கிராப் நாளேட்டின் (நவம்பர்,26) நிருபர் பிரணாப் மண்டல் குறிப்பிட்டிருக்கிறார்.

சிங்குர், நந்திகிராம் மக்கள் போராட்டங்களின் அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்து கொண்ட மம்தா பானர்ஜி, லால்கர் போராட்டத்தையும் விட்டு வைக்கவில்லை.  லால்கரிலிருந்து துணை இராணுவத்தை திரும்பப் பெறவேண்டும் என்று சவடால் அடித்தார். ஆசாத்தின் கொலையைக் கண்டிப்பதாக நாடகமாடினார். ஜெயலலிதாவின் ஈழத்தாய் வேடத்தைப் போன்றதே மம்தாவின் இந்தப் "புரட்சி' வேடம் என்பதை ஆளும் வர்க்கங்கள் புரிந்து வைத்திருந்தன. வங்கத்து அறிவுஜீவிகள் சிலருக்குத்தான் அது புரியவில்லை.

மம்தா பதவிக்கு வந்தவுடன், கூட்டுப்படை நடவடிக்கையை நிறுத்தாதது மட்டுமல்ல, மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்கு சல்வா ஜுடுமைப் போன்ற 10,000 பழங்குடி இளைஞர்களைக்  கொண்ட சிறப்புப் போலீசு படை அமைப்பதாக அறிவித்தார். ஒருபுறம் பேச்சுவார்த்தைக்குத் தூதர்களை நியமித்து மாவோயிஸ்டுகளுடன் பேசச் சொல்லிவிட்டு, மறுபுறம் தலைவர்களைக் குறிவைத்து அழிக்கும் திட்டத்தையும் முடுக்கிவிட்டார். அதன் விளைவுதான் தோழர் கிஷன்ஜியின் படுகொலை.

தன்னுடைய வாழ்க்கையை மக்களின் விடுதலைக்கு அர்ப்பணிப்பதென்று முடிவு செய்து புறப்பட்ட தோழர் கோடேசுவர ராவ், இன்னல்மிக்க தலைமறைவு வாழ்க்கையை ஏற்று, புரட்சி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு கிராமங்கள், நகரங்கள், காடுகள் என 33 ஆண்டு காலம் எங்கெங்கும் சுற்றிப் பணியாற்றி, கடந்த நவம்பர் 27 அன்று தியாகி கிஷன்ஜியாக பெட்டபள்ளிக்குத் திரும்பியிருக்கிறார். 33 ஆண்டுகளுக்குப் பின் தனது மகனைப் பிணமாகப் பார்க்க நேர்ந்த அவரது தாய் மதுரம்மா நெஞ்சம் வெடித்துக் கதற, திரண்டிருந்த தோழர்கள் "தியாகி கிஷன்ஜிக்கு செவ்வணக்கம்' என்று முழங்க, ஆயிரக்கணக்கான மக்களும் பல்வேறு அரசியல் அமைப்புகளின் தலைவர்களும் அஞ்சலி செலுத்த தோழர் கிஷன்ஜி விடைபெறுகிறார்.

தலையில் போர்த்திய துண்டும், முதுகில் தொங்கும் துப்பாக்கியுமாக அவர் முன்னே செல்கிறார்.  தோழர் கிஷன்ஜியின் தியாகத்தைப் பின்தொடர்வோம்! வீரவணக்கம் தோழர் கிஷன்ஜி!

• அஜித்