Language Selection

புதிய ஜனநாயகம் 2011

முதலாளித்துவத்தின் முதுகெலும்பை முறித்து, பஞ்சைப் பராரிகளான பாட்டாளிகளின் முதல் சோசலிச அரசு உதித்த நாள் நவம்பர் 7,1917. கண்ணெக்கெட்டிய தூரம்வரை தீர்வுக்கான சாத்தியமே இல்லாத ஒரு கட்டமைப்பு நெருக்கடிக்குள், அதாவது மீளமுடியாத சமுதாயப் பொருளாதார  நெருக்கடியில் ஏகாதிபத்திய முதலாளித்துவ அமைப்பு இன்று விழுந்து கிடக்கிறது. அதற்கு நிரந்தரமான அமைதியை வழங்க வல்லது பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சிதான்; உலக மக்களைக் காக்க வல்லது கம்யூனிசம் மட்டும்தான் என்பதை உணர்த்தி,  உலகின் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பில் பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி மலர்ந்த 95ஆம் ஆண்டு சோசலிசப் புரட்சி நாளை தமிழகமெங்கும் ம.க.இ.க் வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு; ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து தாங்கள் செயல்படும் பகுதிகளில் எழுச்சியோடு கொண்டாடின. இப்புரட்சிகர அமைப்புகள் செயல்படும் பகுதிகள் அனைத்தும் அந்நாளில் விழாக்கோலம் பூண்டிருந்தன. நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இங்கேயும் ஒரு பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியைச் சாதிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக அமைந்தன.

 

 

திருச்சியில், நவம்பர் புரட்சி நாளன்று காலையில் இப்பகுதியின் புரட்சிகர அமைப்புகள் இணைந்து கள்ளங்காடு பகுதியில் பட்டாசுகள் வெடித்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி, காலை 10 மணியளவில் காந்திபுரம் 80 அடி ரோடு பகுதியில் பகுதிவாழ் உழைக்கும் மக்களை ஒருங்கிணைத்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தின. மாலையில் உறையூர் கைத்தறி திருமண மண்டபத்தில் நடந்த அரங்கக் கூட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கி, முன்னணியாளர்கள் உரையாற்றினர். சிறுவர்சிறுமியருக்கான மாறுவேடப் போட்டியில் பாரதிதாசன், பகத்சிங், பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின், ஜான்சிராணி, அம்பேத்கர் ஆகியோர் வேடமிட்டு  இளந்தோழர்கள் உரையாற்றிய காட்சியும், ம.க.இ.க. மையக்க லைக்குழுவின் கலை நிகழ்ச்சியும் சிறுவர்களின் கலைநிகழ்ச்சியும் போராட்ட உணர்வுக்குப் புதுரத்தம் பாய்ச்சின. இன்றைய உலகளாவிய நெருக்கடிகளுக்கு பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியே ஒரே தீர்வு என்பதை உணர்த்திய இவ்விழா ஒரு புரட்சிகரப் பண்பாட்டு விழாவாக நடந்தது.

சென்னையில், புரட்சிகர அமைப்புகள் இணைந்து நடத்திய அரங்கக் கூட்டத்தில், "நவம்பர் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்!' என ம.க.இ.க. பெண் தோழர்களால் எழுதி இசைக்கப் பட்ட பாடலும், பெ.வி.மு தோழர்களின் "பொண்ணாப் பொறந்தா' என்ற நாடகமும், ம.க. இ.க. இளந்தோழர்களின் மாறுவேட நிகழ்ச்சியும்,  குறிப்பாக பகத்சிங் வேடமிட்டு வந்த இளந்தோழர் நாட்டையும் மக்களையும் விடுவிக்க "இன்குலாப் ஜிந்தாபாத்!' என்று முழங்கியதும் பெருத்த  வரவேற்பைப் பெற்றன. பு.மா.இ.மு. தோழர்களின் தப்பாட்டமும், "நான் உலகம், தொழிலாளி நானே உலகம்'' என்ற காட்சி விளக்கப் பாடலும், மாவீரன் திப்புசுல்தானின் வாழ்க்கையைச் சித்தரித்த "ஒப்பற்ற மாவீரன்' என்ற பாடலும், "கஷ்டஜீவிகள் நாங்கள் கம்யூனிஸ்டுகள்' என்ற பாடலும் போராட்டக் களத்துக்கு பார்வையாளர்களை இழுத்துச் சென்று உணர்வூட்டின.  ஆக்சல் இந்தியா, மேத்தா மருத்துவமனை ஆகிய தொழிலகங்களில் சங்கம் அமைத்து வெற்றி பெற்ற போராட்ட அனுபவத்தை களப் போராளிகளான பு.ஜ.தொ.மு. தோழர்கள் நேருரை நிகழ்த்தினர். சிறப்புரையாற்றிய  பு.மா. இ.மு. மாநில அமைப்பாளர் தோழர் கணேசன், இந்தியாவில் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான ஒரு விடுதலைப் போரை நக்சல்பாரி புரட்சியாளர்கள் தலைமையில் சாதிக்க அறைகூவினார்.  மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்ற, அரங்கம் நிரம்பி வழிந்த இந்த விழாவில், பு.மா.இ.மு. சார்பில் "சோவியத் திரைப்படத் தொகுப்பு வரிசை1' என்ற டிவிடி வெளியிடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட புரட்சிகர அமைப்புகள் இணைந்து, நவம்பர் சோசலிசப் புரட்சிப் பாதையில் நம் நாட்டிலும் ஏகாதிபத்தியத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் வீழ்த்த அறைகூவி பாகலூர்  சூடாபுரம் பகுதியில் விழாவை நடத்தின. காலை முதல் பிற்பகல் வரை நடந்த சிறுவர், மகளிர், ஆடவருக்கான விளையாட்டுப் போட்டிகளில், குறிப்பாக, மன்மோகன் சிங் உருவப்படத்துடன் கூடிய உரியை அடிக்கும் போட்டி பெருத்த வரவேற்பைப் பெற்றது. பின்னர், தோழர்களும் உழைக்கும் மக்களும் ஊர்வலமாகத் திரண்டு முழக்கமிட்டபடியே பாகலூர் சர்க்கிளில் கூடி பட்டாசுகள் வெடித்து செங்கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர். அதைத் தொடர்ந்து நடந்த அரங்கக் கூட்டத்தில் பாட்டுப் போட்டி, கவிதைப் போட்டியும், மாணவர்களின் சிற்றுரையும், அதைத் தொடர்ந்து முன்னணியாளர்களின் சிறப்புரையும் வர்க்க உணர்வைப் பறைசாற்றுவதாக அமைந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்ராம் பாளையத்தில், நவம்பர் புரட்சி நாள் விழாவுடன் புதிய ஜனநாயகக் கட்டிடத் தொழிலாளர் சங்கத் தொடக்கவிழாவும் நடைபெற்றது. மேள தாளத்துடன், பட்டாசுகள் வெடித்து அத்திமரத்தூரிலிருந்து புறப்பட்டு நாட்ராம் பாளையம் பேருந்து நிலையம் வரை விவசாயத் தொழிலாளர்களும் கட்டிடத் தொழிலாளர்களும் செங்கொடி ஏந்தி அணிவகுத்து வந்த பேரணியின் முடிவில், கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னர், மாலை நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் முன்னணியாளர்கள் எழுச்சியுரையாற்றினர்.

தஞ்சையில் மானோஜிப்பட்டி, கீழவாசல், பாத்திமா நகர், அண்ணா நகர், இரயிலடி ஆகிய இடங்களில் செங்கொடியேற்றி இனிப்புகள் வழங்கி தோழர்கள் சூளுரையேற்றன்ர். மாலையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் "உலக முதலாளித்துவ நெருக்கடி' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன், கேடுகெட்ட ஏகாதிபத்திய அமைப்பு முறையைத் தூக்கியெறிவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்த்தினார். சிறுவர்களின் கலைநிகழ்ச்சி, கவிதை வாசித்தல், நாடகம் ஆகியவற்றோடு  மூத்த தோழரும் லாவணி இசைக் கலைஞருமான தோழர் காதர் பாடிய பொதுவுடமை இயக்கப் பாடல்கள் நிகழ்ச்சிக்கு எழுச்சியூட்டின.

விருத்தாசலத்தில், நவம்பர் புரட்சிநாள் விழாவும் பெண்கள் விடுதலை முன்னணியின் தொடக்க விழாவும் இணைந்து நடைபெற்றன.  கல்வி உரிமைக்கான மாணவர்களின் பெற்றோர் சங்கத்தின் முன்னணியாளர்களும், பு.மா.இ.மு தோழர்களும் உரையாற்றியதைத் தொடர்ந்து, ம.உ.பா. மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜு சிறப்புரையாற்றினார். மாறுவேடப் போட்டியில்  பெரியார், வேலு நாச்சியார் வேடமணிந்து வந்த சிறுவர்களும் மாணவர்களும் மக்களைப் போராட அறைகூவினர்.

இவை தவிர, திருவாரூர் அம்மையப்பன்  டாக்டர் அம்பேத்கர் நகரிலும், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் வட்ட வி.வி.மு. கிளைகளிலும்,  தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வி.வி.மு. கிளைகளிலும், நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலும், சேலம் திருவள்ளுவர் நகரிலும் விண்ணதிரும் முழக்கங்களுடன் செங்கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சூளுரை ஏற்பும், அதைத் தொடர்ந்து நடந்த அரங்கக் கூட்டங்களில் முன்னணியாளர்களின் சிறப்புரையும் கலைநிகழ்ச்சிகளும்  நடைபெற்றன. கடலூரில் பு.மா.இ.மு சார்பில் டவுன்ஹாலில் கட்டுமானத் தொழிலாளர்களும் பெண்களும் குழந்தைகளும் திரளாகப் பங்கேற்ற  அரங்கக் கூட்டத்தில் முன்னணியாளர்களின் சிறப்புரையும் பெண் தோழர்களின் கலை நிகழ்ச்சியும் புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிக்க சூளுரை ஏற்பதாக அமைந்தன.

போலி கம்யூனிஸ்டுகள் சடங்கு போல இந்த விழாவை நடத்திவரும் நிலையில், இப்புரட்சிகர திருநாளை வர்க்க உணர்வோடும் மக்கள் திருவிழாவாகவும் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டு விழாவாகவும் இப்புரட்சிகர அமைப்புகள் நடத்தியுள்ளதோடு, பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியைச் சாதித்த போல்ஷ்விக்குகளின் உண்மையான வாரிசுகள் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளன.

. பு.ஜ.செய்தியாளர்கள்.