09_2005.jpg

தனது சிறு படகில் கொச்சின் கடற்கரைக்குத் திரும்பும் மீனவர் பெர்னாண்டஸ் கண்களில் சோகம் தேங்கியிருக்க அனேகமாகக் காலியாக இருக்கும் தன் மீன் கூடையைக் காட்டுகிறார். பலமணி நேரம் போராடிய பிறகு அவருக்குக் கிடைத்திருக்கின்ற உழைப்பின் பரிசு அவ்வளவுதான்.

 

லத்தீன் அமெரிக்க மீன்பிடிக் கப்பல் மாலுமி ஜூவாரேஸ் ஒரு பேட்டியில் சொன்னார்: ""எங்கள் நாட்டு டி.வி. எங்களுக்குக் கோக் குடிக்கக் கற்று தருகிறது. ஆனால் அளவில் குறைந்து கொண்டே போகும் மீன் வளத்தைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லித் தருவதில்லை.''


வற்றாத மீன்வளம் உள்ள கடல் என்று சொல்வார்களே அதற்கு என்ன நேர்ந்தது?

ஒருபுறம் வறிய ஆசிய இந்தியக் கடற்கiர் இன்னொருபுறம் செல்வம் கொழிக்கும் டோக்கியோவின் சிகி ஜீ மீன் சந்தையில் மிகப் பெரிய சுவைமிக்க டூனா மீன் 6,500 டாலர் முதல் 11,000 டாலர் வரை விலை போகிறது. அங்கே ஓர் ஏலத்தரகர் 1ஃ2 மணி நேரத்தில் 200 மீன்கள் விற்கிறார். அமெரிக்க "அலாஸ்கா கடல்' என்ற தொழில்துறைக் கப்பல் (கப்பல் என்று சொல்வதைவிட மீன் புரதப்பாளங்களைக் கடல் மேலேயே தயாரித்து பனிக்கட்டிப் பெட்டியில் அடுக்கிவிடும் ஆலை என்று சொல்லலாம்) ஒரு நாளைக்கு மட்டும் ஆறு லட்சம் கிலோ பொலாக் கடல்மீன் கறியைப் பதப்படுத்துகிறது.


ஒருபுறம் "தர'மான மேட்டுக்குடி நுகர்வோர், இன்னொருபுறம் "தேவையற்ற' உழைக்கும் மக்கள் என்று ஆக்கியது யார்?

 

மீன் பிடித்தொழிலின் தொழில் நுட்பமும் போட்டா போட்டியும் படுவேகமாக ஏறிக் கொண்டே போகிறது; இதற்கு எதிர் விகிதத்தில் உலக மீனின் அளவு குறைந்து கொண்டே போகிறது. இதுதான் யதார்த்தம்; இதுவேதான் ஜூவாரேஸ_ம், பெர்ணாண்டசும் அடித்திருக்கும் எதிர்காலத்துக்கான எச்சரிக்கை மணி.

 

மீன்கள் அழிவதற்கு யார் காரணம்? ஆழ்கடலில் 400 அடி வாய் உள்ள பெரிய பை வலை கொண்ட பிரம்மாண்டமான யந்திரக் கப்பல்கள் (டிராலர்கள்) வைத்து மீன் அள்ளும் பன்னாட்டுக் கம்பெனிகளின் லாபவெறி முதற்காரணம். அடுத்து, கடற்கரை அருகிலேயே வெதுவெதுப்பான கடல்நீரில் விசைப்படகுகள் மூலம் வலைவீசி மீன்பிடிக்க பன்னாட்டுக் கம்பெனிகள் மூன்றாம் உலக நாடுகளின் அரசுகளை வளைத்துப் போட்டிருப்பது இரண்டாவது காரணம். அமெரிக்கப் பன்னாட்டுக் கம்பெனிகளின் டிராலர்கள் ஒரு கிலோ வளர்ந்த இறால் பிடிக்க 12 கிலோ அளவு பலவகை மீன் குஞ்சுகளையும், இறால் குஞ்சுகளையும், பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் குஞ்சுகளையும் சாகடிக்கின்றன. இவர்கள்தான் மீன்கள் அழிவதற்குக் காரணம்.

 

உலக மீன்வளத்தில் பெரும் மூலதனப் போட்டி தொடங்கி பல ஆண்டுகளாகி விட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கழுத்தறுப்புச் சண்டை கடலிலும் நடந்தது. 196070 ஆண்டுகளில் ஆழ்கடலில் மீன்பிடிப்பதில் ஏராளமான தாவாக்கள் வளர்ந்தன. ஏழை மூன்றாம் உலக நாடுகளின் விடாப்பிடியான போராட்டங்கள் காரணமாக ஐ.நா.வில் 1983இல் கடற்கரைக்கப்பால் சுமார் 370 கி.மீ (அது 200 நாட்டிகல் மைல்) "சிறப்புப் பொருளாதார மண்டலம்' (இ.இ.இசட் உஉழூ) என்ற எல்லை குறித்துச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ""உலக நாடுகள் இ.இ.இசட் எல்லைக்குள் அந்நியக் கப்பல்கள் மீன் பிடிக்க நுழையக் கூடாது.''

 

ஏகாதிபத்தியங்கள் சட்டங்களை மீறுவதற்காக மட்டுமே சட்டங்களைப் போடும். அதுபோலவே கடல் எல்லை மீறி ஆப்பிரிக்க ஆசியக் கரையோர சிறப்பு மண்டலத்துக்குள்ளேயே அந்நியக் கம்பெனிகளின் கப்பல்கள் புகுந்தன.

 

எண்ணெய், எரிவாயு, கனிமங்கள் என்று ஏராளமான செல்வம் வைத்திருக்கும் கடல் நேற்றுவரை பொதுச்சொத்து. அமெரிக்காவின் "கடல் திட்டம்' வந்தபிறகு உலகக் கடல் தனியார்மயமாக மாறத் தொடங்கும்.

கனடாவின் இ.இ.இசட் எல்லையின் மேலே நின்று கொண்டு ஸ்பெயின், போர்ச்சுக்கல் டிராலர்கள் அதிகபட்ச மீன்களைக் கொள்ளையடித்தன. ஸ்பெயினின் மேற்குக் கடற்கரையோர "விகோ' கடல் எல்லையில் சுறா வேட்டையாடி ஐரோப்பிய, ஆசியச் சந்தைகளுக்கு அனுப்பின பன்னாட்டுக் கழகக் கப்பல்கள். இதனால் அரியவகை ஐரோப்பியச் சுறா இனங்கள் அழிக்கப்பட்டதோடு, சுற்றுச் சூழல் உயிரியல் சமச்சீரும் அழிக்கப்பட்டது.

 

மீன் சந்தைக்கான வேட்டை எப்படி இருபதாண்டுகளாக இறால் பண்ணை மூலம் இந்தியாவைச் சீரழித்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். தமிழகத்தில் ம.க.இ.க., வி.வி.மு போன்ற புரட்சிகர அமைப்புகளின் "இறால் பண்ணை அழிப்புப் போராட்டத்தை' நீங்கள் அறிவீர்கள்.

 

இதுமட்டுமல்ல, எழுபதாம் ஆண்டுகளில் இந்தியாவில் திணிக்கப்பட்ட "பசுமைப் புரட்சித் திட்டம்', மற்றும், பிறகு வந்த "வெண்மைப்புரட்சி', சமூக நலக் காடுகள், விதை இல்லாத பழவகைகள், பீட்டாகாட்டன் அனைத்துமே பன்னாட்டுக் கம்பெனிகளின் நலன்களுக்கான திட்டங்கள்; அவை நம் விவசாயிகளைக் கொள்ளையடித்து வறுமைக்கும், தற்கொலைக்கும் தள்ளின.

 

இதோ, இப்போது உலக மீன்வளத் துறையில் (பசுமைப்புரட்சி, இறால் பண்ணை போன்று) கூடுதலான பேரபாயம் வந்து விழுந்திருக்கிறது. அமெரிக்க அரசு புதிய கடல் சட்டம் ஒன்றை விவாதிக்கத் தொடங்கியுள்ளது. அது தேசீய "கடற்கரை அருகில் உள்ள (நீரில்) மீன்வளம் பெருக்குவதற்கான சட்டம் (Nழுஅஅ, 2005)', மீன்வளம் பெருக்குவதைத் தொழில்துறையாக மாற்றுவதே அதன் நோக்கம்.

 

கடந்த 20 ஆண்டுகளாகச் செய்துவந்த பரிசோதனைகளின் பலன்களை அமெரிக்க அரசும், அமெரிக்கப் பன்னாட்டுக் கம்பெனிகளும் சேர்ந்து அமல்படுத்த முனைவதன் ஆரம்பமே அந்தச் சட்டம். ""அமெரிக்க கடல் கொள்கை ஆணைய''த்தில் 16 ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களில் 9 பேர் எண்ணெய், சுரங்கக் கனிவளம், வளர்ச்சித் திட்டங்கள், மீன்வளம் பலவிதக் கழிவுகளை அகற்றும் வேலைக்கான கம்பெனிகளின் முதலாளிகள். எனவே அவர்கள் புதிய கடல் திட்டத்தை முழுக்க அனுபவிக்கத் தயாராக நிற்கிறார்கள்.

 

இதற்கிடையே, அரசுச் செலவில் பல பல்கலைக்கழகங்கள் பல சோதனை முயற்சிகளைச் செய்து அங்கீகரித்துச் சொல்லியிருக்கின்றன. அவற்றில் முக்கிய 2 அம்சங்களாவன: ஒன்று, ஏற்கெனவே பயன்படுத்தி ஒப்பந்தம் தீர்ந்த எண்ணெய்த் துரப்பண மேடைகளையே மீன்பிடித் தொழிலுக்கும் பயன்படுத்துவது; இரண்டு, மீன்மிதவைகள் வைப்பது; "20,300' கிலோ (சுமார் 20 டன்) எடைகொண்ட மிதவைகள் அகலம் 80 அடி உயரம் 50 அடி உள்ள பிரம்மாண்டமான கூண்டுக்குள்ளே பல பத்தாயிரக்கணக்கான மீன்களுக்கு உணவு போட்டு, சிறப்பு வகை மீன்கள் வளர்க்கப்படும். கரையில் கம்ப்யூட்டர் மேசை முன்னால் அமர்ந்து யந்திரங்களை வைத்து அதன்மூலம் கடலுக்குள்ளே அந்த மிதவைப் பண்ணைகளை நடத்துவது. இதனால் எண்ணெய் மேடை சுத்தம் செய்யும் கோடிக்கணக்கான ரூபாய் செலவினம் குறையும், புதிய மீன் பண்ணைகளுக்கு வரிச்சலுகை உண்டு ஒரே அம்பில் பலமீன் வேட்டை. தவிர, தொழிலை விரிவுபடுத்தலாம் உலகில் எந்தச் சந்தையில் விலை சூடாக உள்ளதோ, அந்த இடத்திற்கு மிதவையை நகர்த்திப் புத்தம் புது மீன்களை விற்கலாம். எனவே, இத்திட்டம் மூலம் அமெரிக்க அரசின் முக்கிய முதல் தொழிலாக உள்ள எண்ணெய் வளத்தையும் மீன்வளத்தையும் இணைக்கப் போகிறார்கள்.

 

கடந்த இருபதாண்டுகளில் மீன்பிடித் தொழிலை பிரம்மாண்டமான தொழிலாக மாற்றுவது, உயிரியல் சோதனை மூலம் புதுவகை ருசி மீன்களை வளர்ப்பது, அதனால் ஏற்படும் விளைவுகளை வழமைபோலப் புதியவகை நிர்வாகம் அரசியல் கொண்டு சரிக்கட்டுவது என்று பலவித அமெரிக்க ஆராய்ச்சிகள் ரகசியமாக நடந்தேறியுள்ளன.

 

இதில் ஒன்றை மட்டும் சுருக்கமாகப் பார்க்கலாம்; ருசியான சாலமன் மீன்கள் வளர்ப்பு. இதற்கு அலங்காரமாக "உலக சாலமன் மீன் விவசாயம்' என்று பெயர். இதில் பெரிய ஆட்டம் போட்டது நார்வேயும் சிலியும். 70ஆம் ஆண்டுகளில் மீன்வளத் தொழில் நுட்பத்தில் விரிவாக வளர்த்தது நார்வே; நார்வே கம்பெனிகள் சிலியிலும், கனடாவிலும் பல லட்சம் சாலமன் மீன்கள் வளர்த்தன. "சாலமன்' என்றால் என்ன என்றே அறியாத சிலி 20 ஆண்டுகளில் உலகின் முதலிடத்தை சாலமன் உற்பத்தியில் பிடித்தது. சிலியின் மலிவான அடிமட்டக் கூலி உழைப்பு, சுற்றுச்சூழல் சமச்சீரைப் பற்றி அக்கறைப்படாமல் கடலைச் சகதியாக்கியது இரண்டும்தான் சிலியை உயர்த்தியது. உடனே உலகின் பல நாடுகள் சாலமன் விவசாயத்தில் இறங்க பேராசை கொள்ள வைக்கப்பட்டன.

 

சாலமன் மீனைப் போல வேறு உயர்ரகச் சுவைமீன் கண்டதும் சந்தை அந்தப் பக்கம் ஓடிவிட்டது. புதிய சாலமன் விவசாயிகள் ஒரே அடியில் அழிந்து போனார்கள். ஏற்கெனவே அத்துறையில் கொட்டை போட்ட ஏழே ஏழு பெரிய கம்பெனிகள் மட்டும் நின்றார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், நார்வேக் கம்பெனிகள் பன்னாட்டுக் கம்பெனிகள் மட்டும் உலகக் கடல் பிராந்தியங்களில் கால் ஊன்றும் அரசியல் போர்த்தந்திரத் திட்டத்தோடு கன ஜாக்கிரதையாக நகர்ந்ததால் "வென்றார்கள்'. பசுமைப்புரட்சி, வெண்மைப் புரட்சி போலவே இது நீலப்புரட்சி. பாரம்பரிய உற்பத்தி வகைகள், வினியோக முறைகள், வேர் அறுக்கப்பட்டு "இனி திரும்பி பழைய நிலைக்குப் போக முடியாது' என்பது போலப் பல நாடுகளின் விவசாய உற்பத்தி பசுமைப்புரட்சியால் சீரழிக்கப்பட்டதைப் போலவே நீலப் (கடல்) புரட்சியினாலும் பல நாடுகளின் கடல் உற்பத்தி சீரழிக்கப்பட்டது. அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானின் உயர் குடி மக்களுக்கு நாக்கின் சுவை கூடியது.

 

சாலமன் தொழில் முறை உற்பத்தி என்பது ஒரு வகைமாதிரி. சாலமன் மீன், மாமிச உணவு உண்டு வளர்வது. ஹெர்ரிங், ஆங்கோலி, சார்டைன், கிரில் (நம் ஊரில் கானாங்கெளுத்தி, மத்தி, வவ்வால், எறால் போன்றவை) போன்ற ஏழை நாடுகளின் கடலிலிருந்து பல லட்சம் மீன்கள் புரத உருண்டைகள் ஆக மாற்றப்பட்டு சாலமனுக்கு இரையாகின. தவிர, இந்தப் பலரக மீன் ஏற்றுமதிக்காக ஏழை நாடுகளுக்குள் உலக வங்கிக் கடன்கள், தனியார்மயக் கொள்கைகள் நுழைந்தன. அவல் அவர்களுக்கு, உமி நமக்கு ஊதி ஊதித் தின்றதில் உபரி ஆதாயம் ஓட்டுக் கட்சிகளுக்கு.

 

மேற்சொன்ன அனுபவங்களிலிருந்தான அமெரிக்க ஆராய்ச்சிகளின் இறுதி வடிவம் தான் தொழில்துறை மீன்வளத்துக்கான புதிய கடல் திட்டமாக உருவெடுத்துள்ளது. முதலில் அமெரிக்காவில் கடற்கரை அருகே உள்ள கடல் பகுதியில் (இ.இ.இசட்) செயல்படுத்தப்படும் இத்திட்டம் "அமெரிக்க மீன்வளத்தில் பற்றாக்குறை போக்குவோம்!', "உலகுக்கே உணவு ஊட்டுவோம்!' என்ற முழக்கங்களை வைத்து முன்னே தள்ளப்பட்டுள்ளது.


உலக உணவு உற்பத்தித்துறையைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உலக நாடுகளை "ஒற்றை விவசாயப் பொருள் உற்பத்தி' நாடுகளாக மாற்றுவதன் மூலம், வினியோகத்தையும் தன் கட்டுக்குக் கொண்டு வந்து உலக மேலாதிக்கத்தை நிறுவ வெறியோடு உலகெங்கும் பாய்ந்துவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கடல் ஆதிக்க நோக்கம் உலக மனிதாபிமானம் அல்ல. "உலகுக்கே உணவு ஊட்டுவோம்!' என்ற உள்நாட்டு முழக்கமும் இப்படிப்பட்டதே. இந்த அதிகார விரிவாக்கத்தை அமெரிக்க அரசு, அமெரிக்கப் பன்னாட்டுக் கம்பெனிகள் என்று இருமுனை கொண்ட ஏகாதிபத்திய விரிவாக்கமாகப் பார்க்கவேண்டும்.

 

தான் மிகப்பெரிய ஜனநாயகவாதி என்று மார்தட்டும் போதே "காட்டுமிராண்டிகளின்' அரசுகளை மாற்றி அங்கே ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்கிறோம் என்று சொல்கிறது அமெரிக்கா. ஈராக், ஆப்கான் போர்கள் இதன் நிரூபணங்கள். அதேபோன்றதுதான் வரவிருக்கும் கடல்திட்டமும், என்ஓஏஏ அமெரிக்க தேசிய மீன்வளத்திட்டம் 2005 என்ற கடல் சட்டமும். ஆழ்கடலில் உலகப் பொது உடைமையான கடலைச் சுரண்டியது போல, நாடுகளின் அருகே உள்ள கடல் பகுதிகளைச் சுரண்டுவதற்கு முன் ஓட்டமாக அமெரிக்காவில் சோதனை ஓட்டம் நடத்துகிறது; பிறகு உலக நாடுகளின் இ.இ. இசட் பகுதிகளும் அமெரிக்காவால் வளைத்து ஆக்கிரமிக்கப்படும்.

 

தற்சமயம் உலகவங்கி இந்தியத் திட்டங்களுக்குக் கடன் கொடுக்கும் போது "காட்', "காட்ஸ்' சட்டங்களைக் காட்டி தண்ணீர் தனியார்மயத்தை ஏற்கச் செய்வது போல, கடல் உரிமைகளைப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்கும் நிபந்தனைகளை ஏற்கச் செய்யும்.

 

"கடல்மீன் பிடித்தொழில்' என்ற சொல்போய் கடல் விவசாயம், கடல் விவசாயிகள் என்ற சொற்கள் வழக்கில் திணிக்கப்பட்டு வருகின்றன. உலகின் மூன்றில் 2 பாகம் உள்ள கடல் பெரும் பொதுச்சொத்து ஆகும். கடல் மீன்கள், பலவகை ஜீவராசிகள், இயற்கையாகவே உணவாகக் கூடிய கடற்கீரைகள் எனப்படும் பாசிவகைகள், கடலடிப் பூமியில் எண்ணெய், எரிவாயு, கனிமங்கள் என்று ஏராளமான செல்வம் வைத்திருக்கும் கடல் நேற்றுவரை பொதுச்சொத்து. அமெரிக்காவின் "கடல் திட்டம்' வந்தபிறகு ஒவ்வொன்றாக மாறும். உலகக்கடல் தனியார்மயமாக மாறத் தொடங்கும்.

 

அந்தத் திட்டத்தின் சாரம் என்ன? அது என்ன செய்யும்? தனது கடற்கரை அருகாமையில் உள்ள 370 கி.மீ. தொலைவுக்கு மீன்பிடித்தலை தொழில்துறையாக அறிவித்து அது மாற்றும். (கடல் எல்லை என்பது கடலடி நிலப்பரப்பையும் சேர்க்கிறது) முன்பு இருந்த இந்த எல்லைக்குள் அன்னியர் வரக்கூடாதென்ற விதியை மாற்றி சட்டத்தில் தொழில் செய்யும் "நபர்' என்ற சொல்லுக்கு அமெரிக்கர் மற்றும் அமெரிக்கர் அல்லாத தனிநபர்களும், பன்னாட்டுக் கார்ப்பரேசன் கம்பெனிகளும் என்று விளக்கம் அளிக்கிறது; "அரசு' என்று திட்டத்தில் வரும் இடங்களில் அமெரிக்க கடல் எல்லை நிலமும் மற்றும் அமெரிக்காவின் வசம் உள்ள பகுதிகளும் என்ற புதுவிளக்கம் அளிக்கிறது தன்வசம் என்பதற்கு அமெரிக்கா ஈராக், ஆஃப்கான் மற்றும் கடன் வாங்கும் ஏழை நாடுகள் என்று கூட விளக்கம் சொல்லலாம்.

 

இதுவரை சுற்றுச்சூழல் சம்பந்தமாக அமெரிக்க வேகத்தைத் தடுக்கும் தடுப்பரணாகச் சொல்லப்பட்ட மக்னூசன் ஸ்டீவென்ஸ் சட்டம் (எம்.எஸ். சட்டம்) புதிய கடல் சட்டத்தில் செல்லாது. அதாவது, சுற்றுச் சூழல் சமச்சீர் காக்கும் விதிகளை கம்பெனிகள் கடைப்பிடிக்க வேண்டாம்; லாபம் ஒன்றே குறியாக என்ன ஆட்டமும் போடலாம். மரபின ஆய்வில் வளர்க்கப்படும் புதுரக மீன்களுக்கு எம்.எஸ். சட்டப்படி முன்பு வரம்புகள் உண்டு. இனி இல்லை. 1996 முதல் 1999 வரை அமெரிக்க வளர்ப்பிலிருந்து தப்பி ஓடிய 6 லட்சம் சாலமன் வகை அட்லாண்டிக் சண்டை மீன்கள் வாஷிங்டன் கடலில் கலந்து பல ஆயிரம் ரக மீன்களை அழித்தன் புதுப்புதுக் கிருமிகளைப் பரப்பின. அவற்றை ரகசியமாக்கி விட்டார்கள். இனி, எதுவும் நடக்கும்.

 

***

 

உலகை வலம் வந்துவிட்டு, பெர்ணாண்டஸையும் ஜூவாரேஸையும் பார்த்தால் அவர்கள் சொற்களின் யதார்த்தம் நம்மைச் சுடுகிறது. மீனவர்களுக்கு மீனும் இல்லை; மீனவக் குடியும் இல்லை. தமிழகத்தில் ஒருமுறை சுனாமி அடித்து ஓய்ந்த உடனேயே பிணங்களின் மீதே உலகவங்கி அதிகாரி நடந்து வந்தான்; உள்ளூர் "ஜெ' அரசோடு பேச்சு வார்த்தை நடத்தினான். உடனே, ""மீனவர்களைப் பாதுகாக்கிறேன்'' என்ற "ஜெ' அரசு மீனவக் குடிகளைக் கடலின் அருகிலிருந்து வேறிடத்துக்கு இடம் பெயர்த்து அனுப்பியது. சுனாமி ஒரு சாக்குப்போக்கு; அவர்களை நிரந்தரமாகப் பாரம்பரியத் தொழிலை விட்டு விரட்ட ஒரு முகாந்திரம். பெர்ணாண்டஸின் சொற்கள் எவ்வளவு நிஜம் பாருங்கள்.

 

அமெரிக்கப் புதுச்சட்டத்தின் சூடு நம் ஊர்க்கடல் எல்லைக்குள் வேகமாகப் பாய்வதற்கு முன் விழித்துக் கொள்ள வேண்டும். இப்போதே மக்களைத் திரட்ட வேண்டும்.

 

அமெரிக்கச் சட்டத்தை எதிர்த்து இப்போது அமெரிக்க மீனவர்கள் போராடத் தொடங்கி விட்டார்கள். "பசுமை உலகம்' என்றழைத்துக் கொள்ளும் தன்னார்வ, தொண்டு நிறுவனங்கள் கூடவே களத்தில் உள்ளன. இ.இ.இசட் என்ற உள்நாட்டுக் கடல் பகுதியிலேயே ஒரு சில இடங்களை உள்நாட்டுச் சிறு மீனவர்களுக்கு என்று அறிவித்துவிட்டால், தொண்டு நிறுவனங்களுக்கு "நிதிகளை' எடுத்து வீசிவிட்டால் அடங்கிப் போவார்கள், ஒதுங்கி விடுவார்கள் என்று நேர்மையான அரசியல் ஆய்வாளர்களும், விமர்சகர்களும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளும் சொல்கிறார்கள். மீதம், நின்று போராடக் கூடியவை மக்கள் இயக்கங்களே.

 

பலமுனைகளிலிருந்தும் ஏகாதிபத்திய மறுகாலனியாக்கத் தாக்குதல்களைச் சமாளிக்க இயலாது போராட்டங்களைத் தொடரும் மூன்றாம் உலக மக்களே அமெரிக்கக் கடல் சட்டத்தின் எதிர்கால விளைவுகளுக்கும் சேர்த்து எதிர்த்துப் போராட முடியும், எதிர்க்க வேண்டும்.


நில உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏகாதிபத்தியங்களின் கம்பெனிகளுக்கு இழப்பதுபோல, கடலையும் நாம் இழக்க முடியாது. இது வாழ்வா சாவா என்ற போராட்டம். மீனவர்களின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல, இது உலக மக்கள் அனைவரின் வாழ்வுரிமைப் பிரச்சினை.


க.மு.