பின்லேடன் கொலை!

சர்வதேச நாடுகள் எங்கிலும் சல்லடைபோட்டுத் தேடப்பட்டு வந்த ஒருவர் பில்லேடன். அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் முதல் நபராக இவர் இடம்பெற்றும் இருந்தார். இவரை அண்மையில் அமெரிக்க சிறப்புப்படையினர் சுட்டுக் கொன்று விட்டதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. எப்படி இலங்கையில் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்ட செய்திகள் வெளிவந்தபோது, அவரது ஆதரவாளர்களால் நம்பமுடியாமல் திகைத்துப்போய் இருந்தனரோ, அதேமாதிரி பில்லேடனின் ஆதரவாளர்கள் மத்தியிலும் இது காணப்பட்டது. பின்லேடன் உலகநாடுகளை எல்லாம் மிரட்டிக்கொண்டிருந்தாரோ இல்லையோ, அமெரிக்காவின் கண்களில் தன் விரலைவிட்டு ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தார் என்பது மிகையாகாது.

 

 

அமெரிக்காவால் ‘தேடி”வரப்பட்ட பயங்கரவாதப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்த பின்லேடன், சுட்டுக்கொல்லப்பட்டதை நம்பமுடியாத அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் பலர் உறைந்துபோயும் உள்ளனர். பாக்கிஸ்தான் தலைநகரில் இருந்து சுமார் ஒருமணிநேர பயணதூரத்தில் அபோட்டாபாத் நகரம் இருக்கிறது. பாக்கிஸ்தானின் மிகப்பெரிய இராணுவத்தளத்துக்கு மிக அருகாக இந்த நகரத்தில், ஓர் இராணுவ அக்கடமிக் குடியிருப்பும் (காக்குல்) அமைந்திருந்தது. இதிலிருந்து 20யார் தூரத்தில் இருந்த ஒரு பெரிய பங்களாவில் பில்லேடன் பதுங்கி இருந்தாராம்.

 

இந்த இடத்தை அமெரிக்கா ‘தீவிர முயற்சி கொண்டு” கண்டுபிடித்ததனால், உடனே தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டதாம். திட்டத்தின் படி எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் பில்லேடன் கொல்லப்பட்டதாகவும் வெள்ளைமாளிகைச் செய்திகள் வெளியாகியும் இருந்தன. இஸ்லாமாபாத்தில் இருந்து கிட்டத்தட்ட 60 கி.மீ தூரத்தில் இருந்த இக்கட்டிடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பில்லேடனும் அவரது 3 பாதுகாவலரும் அவரது மகன் ஒருவரும் கொல்லப்பட்டதாக முதலில் செய்திகள் வெளியாகின. 40 நிமிடங்கள் வரை நீடித்த இத்தாக்குதலை வெள்ளைமாளிகை அதியுயர் நிர்வாகம் திரையில் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் ‘வெள்ளைச் செய்தி”களே தெரிவித்தும் இருந்தது. பில்லேடன் தனது இளம் மனைவியை மனிதக்கேடயமாகப் பாவித்த நிலையில் அவரை சுட்டுக்கொன்றதாக முதலில் செய்திகள் வந்தன. பின்னர், பில்லேடனின் உடலில் எந்த மனிதக்குண்டுகளோ அல்லது
ஆயுதங்கள் ஏதும் தரித்திருக்காத நிராயுத பாணியாகவே அவர் இருந்நிருந்தார் எனச் செய்திகள் மாற்றப்படத் தொடங்கியது.

இவ்வாறு நாளொரு வண்ணமும் பொழுதொரு வண்ணமுமாகப் பல புதிய செய்திகள் வெளிவரத் தொடங்கியது. பில்லேடன் தனது தாய்வழிச் சொந்தத்தில் முதலாவது திருமணத்தைப் புரிந்திருந்தார். 14வயதான இப்பெண்ணை பில்லேடன் தனது 17வயதில் திருமணமும் செய்திருந்தார். பின்லேடன் இதுவரை 5 பெண்களைத் திருமணம் செய்திருந்தார். முதல் இரு மனைவிகளும் விவாகரத்துச் பெற்றுவிட்ட நிலையில், ஏனைய 3 மனைவிகளும் இத்தாக்குதலை அடுத்து அதிகாலையிலேயே பாக்கிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்டும் இருந்தனர். பில்லாடனின் இளம் ஆசைமனைவியான ஏமன் நாட்டைச் சேர்ந்த அமெல் அலிடா(29) இத்தாக்குதல் நடக்கும் போது பில்லேடனுடனே தங்கியிருந்தார். இவர் இத்தாக்குதலில் காலில் குண்டடியும் பட்டிருந்தார். ஏனைய இரு மனைவிகளும் 6 பிள்ளைகளும் மற்றும் 4 உதவியாளர்களும் இஸ்லாமாபாத்துக்கு வடக்கே 60 கி.மீ தொலைவிலுள்ள மலைப்பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டதாகவே செய்திகள் வெளிவந்தன.

பில்லாடனின் மகனான கம் (20) இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்திருந்த போதும் இது சரிவர உறுதிப்படுத்தப்பட்டிருக்கவுமில்லை. இறுதியாகத் தாக்குதல் நடந்த சமயம் இம்மகன் அவ்விடத்தை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாக பில்லேடனின் இம்மூன்று மனைவிகளும் பாக்கிஸ்தான் இராணுவத்திடம் தெரிவித்திருப்பதாக பிறிதொரு செய்தியும் வெளிவந்துமிருந்தது.

அமெரிக்கா தாங்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கை பற்றி பாக்கிஸ்தானுக்கோ வேறு நாடுகளுக்கோ ஏதும் தெரியாது என்றும் கூறியுள்ளது. நடவடிக்கை முடியும் தருவாயில் பாக்கிஸ்தான் போர் விமானம் ஒன்று தமது கெலிகப்டரை நெருங்கியதாகவும் ‘நல்லவேளையாக” அது தம்மீது தாக்குதல் நடத்தாமலே சென்றுவிட்டதாகவும் ஜான் பிரீனன் வாசிங்டன் செய்தியாளரிடம் கூறியுள்ளார்.

மேலும் இத்தாக்குதல் நடவடிக்கையின்போது எந்த ஒரு பொதுமக்களுக்கும் காயமேற்படாதவாறு தாம் வெற்றிகரமாக முடித்திருப்பதாக வெள்ளை மாளிகை இவ்வெற்றியை தம்மக்களிடம் தெரிவித்திருந்தது. பில்லாடனை வைத்து அமெரிக்கா தொடங்கிய இந்தப் பிரமாண்டமான சதுரங்க ஆட்டத்தின் ஆட்டத் தொடர்….

ஆட்டம்: 1

அல்கய்டா எனப்படும் ‘தளம்” அமெரிக்க ஏகாதியத்தியம் மற்றும் ரசிய சமூக ஏகாதிபத்தியங்களாக இருதுருவ ஏகாதிபத்திய பலப்பரீட்சை இவ்வுலகத்தை ஆட்டிப்படைத்த காலத்தில், ரசியா ஆப்கானிஸ்தானில் காலூன்றி இருந்தது. சோவியத் துருப்புக்களுக்கு எதிராகப் போராட இஸ்லாமிய கெரிலாப்படையான முகாஜதீனி அழைக்கப்பட்டார். தனது தாய்நாடான சவுதி அரேபியாவில் முகாஜிதீனிகளுக்கு ஆதரவாக அரேபிய மாணவர் இளைஞர் தொண்டர் படையை அமைக்க அமெரிக்கா பில்லாடனைத் தேர்ந்தெடுத்தது. ஆண்டொன்றுக்கு 22ஆயிரம் கோடி ரூபா வர்த்தகம் செய்யும் பெரும் செல்வந்த குடும்பத்தில் 1957 மார்ச் 10ஆம் திகதி பில்லேடன் பிறந்திருந்தார். அட்டாசின் 23 மனைவிகளுக்குப் பிறந்த மொத்தம் 54பிள்ளைகளில் 17வது மகனாக அவரது பத்தாவது மனைவிக்கு (ஹமிதா) பிறந்த பில்லேடன், ‘தளம்” என்ற அர்த்தத்தைக் கொண்ட அல்கைடா என்ற இயக்கத்தை அமெரிக்க உதவியுடன் உருவாக்கினார். இதற்கு முன்னர் ஆப்கானின் புனிதப் போருக்கு பணம் திரட்ட ‘மக்தாப் அல் கடாமத்” என்ற அமைப்பை (84) இவர் நிறுவியும் இருந்தார்.

ஆப்கானை சோவியத் ஒன்றியம் ஆக்கிரமித்தபோது, அமெரிக்கக் கட்டளைப்படி தனது தாய்நாடான சவுதி அரேபியாவில் இருந்து ஆப்கானுக்கு வந்திருந்தார் பில்லேடன். 79 முதல் முதல் 10 வருடங்கள்ஆப்கானில் ரசிய படைகளுக்கு எதிராக, தமது எசமானருக்காகச் செயற்பட்டார். அங்கிருந்தமுகாஜதீன் அமைப்பில் இணைந்து முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கான ஆப்கானுக்காகப்போரிட்டார். ரசிய சமூக ஏகாதிபத்திய படைகளுக்கு எதிராக பாக்கிஸ்தான் உளவுப்படையான(ஐ.எஸ்.ஐ) என்ற உளவுப்படையின் ஊடாக அமெரிக்கா தீவிரவாதிகளை ஆப்கானிலும், பாக்கிஸ்தானிலும் உருவாக்கியது. ரசியாவுக்கு எதிரான தன்னியல்பான மாணவர் கிளர்ச்சிகளை ஒன்றுதிரட்டி முல்லா ஓமர் தலைமையில் தலிபான் என்னும் அடிப்படைவாத இயக்கத்தையும் அமெரிக்காவுக்காக உருவாக்கியது பாக்கிஸ்தான் உளவுப்படை.

இதே காலத்தில் தான் ஈரான் – ஈராக் போர் நடந்து வந்தது (80-88). இப்போரில் சதாமுக்கு
உறுதுணையாக அமெரிக்கா உதவியது. ஆப்கானில் இருந்த முகாஜிதீன் அமைப்பினருக்கும்,பாக்கிஸ்தான் உளவுப்படையால் உருவாக்கப்பட்ட இதர தீவிரவாதக் குழுக்களுக்கும் அமெரிக்காஉதவிகளைத் தாராளமாக வழங்கி வந்தது.

கைபர் கணவாய் இந்துக்குஸ் மலைத்தொடர்ப் பகுதி வழியாக ஆப்கானுக்குள் படைகளும்,ஆயுதங்களும் கொண்டுவந்து குவிக்கப்பட்டன. அமெரிக்காவே இவர்களைப் பயிற்றுவித்துஉருவாக்கியும் வளர்த்தது. இரசியாவுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு பாக்கிஸ்தான் மற்றும்ஆப்கானில் முகாஜிதீன்களின் உதவியைப் பெற அமெரிக்கா அவர்களை வளர்த்தும் விட்டது. இதுதொடர்பாக கடந்த வருடம் அமெரிக்க இராணுவ அதிகாரி டேவிட் பெட்ரஸ் ஊடகம் ஒன்றுக்குஇவ்வாறு தெரிவித்தும் இருந்தார். ‘எங்களது பணம் சவுதி அரேபியா மற்றும் பலர் அளித்த பணம்தான் தீவிரவாதிகளை உருவாக்குவதற்கு ஐ.எஸ்.ஐ க்கு உதவியாக இருந்தது”.

ஈரான்-ஈராக் போர் முடிந்த கையோடு சதாம்குசைன் படைகள் குவைத்துக்குள் ஊடுருவத்தொடங்கியது. இதை அமெரிக்கா எதிர்க்கவும் எச்சரிக்கை செய்யவும் தொடங்கியவுடன், ரசியாசதாமுக்கு உதவியது. இரண்டு வருடத்துக்குள் சோவியத் ஒன்றியம் 16 துண்டுகளாக உடைந்தது (92). இவ்வாறு உடைந்த ஐந்து துண்டுகளான துர்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கசாக்கிஸ்தான்,தாட்சிகிஸ்தான், கீர்கிஸ்தான் ஆகிய முன்னாள் சோவியத் குடியரசுகள் தமது பிரதேசங்களில்அமெரிக்கா இராணுவ நடவடிக்கைக்கும் தளம் அமைப்பதற்கும் கதவுகளை அகலத் திறந்து விட்டன. இந்த அமெரிக்கப்படைகளின் புதிய வரவு, மத்திய ஆசியாவின் சரித்திரத்தில் ஒரு புத்தம்புதியஅத்தியாயமாகும். மகா அலெக்சாண்டருக்குப் பின்னர் அமெரிக்காவும் மற்றைய மேற்குலகஇராணுவங்களும் இம்மண்ணில் காலடிவைக்கும் ஒரு பிரமாண்டமான சதுரங்கப் பலகையை இது வழங்கியது. இந்தக்காலங்களில் பில்லேடன் உட்பட இந்தத் தீவிரவாதிகளை ஆப்கானின் சுதந்திர வீரத் தலைவர்களாக அன்றைய அமெரிக்க அதிபர் ரீகன் புகழ்ந்தும் வந்தார். கூடவே, இந்த நிகழ்காலத்தில் பொஸ்னியாவிலும், கொசோவாவிலும் நடந்த யுத்தங்களிலும் பில்லேடன்அமெரிக்காவுக்குக் கையாளாக உதவியே வந்தார்.

குவைத் மண்ணில் இருந்து சதாமின் படைகளை விரட்ட தனது தாய்மண்ணான சவுதியில் அமெரிக்கப் படைகளைக் கொண்டுவருவதை பில்லேடன் எதிர்க்கத் தொடங்கினார். எகிப்தில் இருந்துதொடங்கிய முஸ்லீம் சாம்பிராச்சியத்துக்கான, முஸ்லீம் அடிப்படைவாதம் ‘புனிதப்போராகக்”கட்டப்பட்ட நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை முரண்பாடுகளை இயல்பாகவேதோற்றுவித்தது. அல் கைடாவின் இந்த முரண்பாடுகள் 94ஆம் ஆண்டு பில்லாடனின் தாய் மண் (சவுதிஅரேபியாவின்) பிரஜா உரிமையைப் பறிப்பதில் போய்முடிந்தது. இதனால் பில்லேடன் தனதுமுதலாவது மனைவி நஜ்வா கானம் மற்றும் பிள்ளைகளுடன் சூடானில் தஞ்சமடைந்தார். 80களில் எண்ணையைக் கண்டறிந்த சூடானின் அப்போதைய சர்வாதிகார அதிபரான நிமோரி சவுதி அரேபியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணிவந்தார். இஸ்லாமிய ~hரியச் சட்டத்தை நாடெங்கிலும் திணித்தவரும் இவர்தான். இஸ்லாமியர் அல்லாத தென் சூடானியர் இதற்கெதிராகக் கிளர்ந்தெழச் செய்தனர்.

பேர் நகரில் இருந்த இராணுவ முகாம் சூடான் அரசுக்கு எதிராகக் கலகத்தில் குதித்தது. இதேநகரத்தைச் சேர்ந்த இராணுவத் தளபதி ஜான் கரங் தென் சூடான் கிளர்ச்சிக் காரர்களுடன் இணைந்துபோராட்டத்தைத் தொடங்கினார். 83 இல் இவரது தலைமையில் உருவானதுதான் ‘சூடான் மக்கள்விடுதலை இயக்கம்” (SPLM). 89 இல் சூடானின் இராணுவத் தளபதி அல்-பஷீர், இஸ்லாமியமுன்னணியான அடிப்படைவாதக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தினார்.

இதையடுத்து சூடானின் எண்ணை வளத்தை கொள்ளையிடுவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம்என்கின்ற தீராத விளையாட்டுப்பிள்ளை அவசரமாக அலுவலில் இறங்கியது. இது தென் சூடானின்‘தனிநாட்டுக்” கோரிக்கையாக உசுப்பிவிடப்பட்டது. கிறீஸ்தவ தெற்குச் சூடானில், கிறீஸ்தவ சபைகள் உட்பட மேற்குலகம் கெனியா வழியாக அமெரிக்காவுடன் இணைந்து ஆயுதங்களை வழங்கியது. தென் கிராமப்புறங்கள் சூடான் மக்கள் விடுதலைப் படையால் சூழப்பட்டு, ஓர் நீண்ட நெடிய கொடிய உள்நாட்டு யுத்தம் (22 வருடம்) நடந்து முடிந்தது. இந்த எண்ணைக்கான
ஏகாதிபத்தியத்தின் மனக்கணக்கால் யுத்தத்தில் ஏறத்தாழ 2லட்சம் மக்கள் கொல்லப்பட்டதுடன்,4லட்சம் மக்கள் வரை அகதிகளாகினர்.

இந்த யுத்தக்காலத்தில் தான் பில்லேடன் சூடானில் தஞ்சமடைந்திருந்தார் (94). இங்கிருந்துதான் அல்கைடாவின் முதலாவது தாக்குதலை பில்லேடன் தொடங்கினார். தொடர்ந்து நைரேபி, கெனியா,தன்சானியா உள்ளிட்ட இடங்களில் அமைந்திருந்த அமெரிக்கத் தூதரகங்களை அல் கைடா தாக்கத்தொடங்கியது. சூடான் அதிபர் அல் – பஷீர் டார்பர் பகுதியில் ஓர் இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்டதற்காக அவரை ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் ‘போர்க்குற்றவாளியாக” அறிவித்தது. (இன்று மகிந்தவைப் போல). இனப்படுகொலை மற்றும் அல் கைடா போன்ற பயங்கரவாதிகளுக்குஅடைக்கலத்தைக் கொடுத்திருந்த சூடான் அதிபர், போர்க்குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தால் சித்தரிக்கப்பட்டார். பயங்கரவாதப் பட்டியலில் சூடான் நாடு சேர்க்கப்பட்டது.

இந்த நெருக்குவாரங்களால் சூடான் அரசு பில்லேடனையும் அவரது குடும்பத்தையும் 96 இல் நாடு கடத்துவதாக அறிவித்தது. இதையடுத்து பில்லேடன் திரும்பவும் ஆப்கானிஸ்தானில்தஞ்சமடைந்தார். இக்காலத்தில் அமெரிக்காவால் பாக்கிஸ்தான் உளவுப்படை ஊடாக உருவாக்கப்பட்ட தலிபான்கள் மற்றும் தீவிரவாதக் குழுக்களின் உதவியுடன் ஆப்கான் அரசு வீழ்த்தப்பட்டிருந்தது.

ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளனும் முன்னாள் ஆப்கான் அதிபர் முகமத் நஜீபுல்லாவையும் அவரது சகோதரனையும் தலிபான்களும் ஏனைய (அமெரிக்க) பாக்கிஸ்தான் தீவிரவாதிகளும் அடித்தே கொன்றனர். கொல்லப்பட்ட இவரது உடலை காபூல்வரை ஜீப்பிலே கட்டி இழுத்து, தெருவோரத் தூண் ஒன்றில் தொங்கவிட்டனர். தலிபானின் இந்தத் தர்பார் ஆட்சிக் காலத்தில் (98) பில்லேடன் புனிதப் போரைப் பிரகடனப்படுத்தினார். பாலஸ்தீனத்துக்கு எதிராகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா செயற்படக் கூடாது என்றும், இஸ்லாமிய நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க இராணுவத்தை உடனே வாபஸ் பெறவேண்டும் எனவும் அல்கைடா கோரியது. அப்படிச் செய்யாதவரை அமெரிக்க இராணுவத்தையும்,
அந்நாட்டினரையும் கொன்று குவிக்கும் ‘புனிதப் போரான” பத்வா மத உத்தரவை பில்லேடன் பிறப்பித்தார்.

அடிப்படைவாதம் எப்பொழுதும் எந்த மக்களுக்கும் எதிரானது என்பதை அமெரிக்கா சரியாப் புரிந்துகொண்டது. இது தமக்கு இலாபமானது என்பதாலேயே இந்த நாறும் ஏகாதிபத்தியம் இதை வளர்த்தது.கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் இருந்த அமெரிக்கத் தூதரகங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கத் தொடங்கியது அமெரிக்கா. அமெரிக்க கிளிண்டன் நிர்வாகத்தால் அப்கான் தளமீதான தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலில் பில்லேடன் உயிர் தப்பினார். அவர் இரு நிமிடங்களுக்கு முன்அத்தளத்திலிருந்து வெளியேறி இருந்தார். அமெரிக்காவின் பல மில்லியன் பெறுமதியான கப்பலை பில்லேடன் ஓட்டைவிழுத்தித் தாக்கியபோது, பில்லேடன் என்றபெயர் மூலை முடுக்கெல்லாம் பிரபல்யமாகத் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல் பில்லேடனை பயங்கரவாதத்தின் கோபுரத்தில் நிறுத்தியது.

(தொடரும்)

-சுதேகு

முன்னணி (இதழ் -2)