Language Selection

புதிய ஜனநாயகம் 2011

"வரலாறு  சொல்லித்தர வாரியாரு வருவாரு'  இது, இந்து மதவெறிக் கும்பல் அதிகாரத்தில் இருந்தால் கல்வித்துறையில் என்ன நடக்கும் என்பதை நையாண்டி செய்யும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடல் வரி. இந்த நையாண்டி வெறும் கற்பனையல்ல, உண்மை என்பதை அண்மையில் டெல்லியிலுள்ள மத்தியப் பல்கலைக்கழகமான டெல்லிப் பல்கலைக்கழகத்தில் நடந்துவரும் சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன.

 

 

அப்பல்கலைக்கழகத்திலுள்ள வரலாற்றுத்துறை இளங்கலை பட்டப்படிப்பில், "முன்னூறு விதமான இராமாயணக் கதைகள் இந்தியா, தெற்காசியா, கிழக்காசியாவைச் சேர்ந்த மக்கள் மத்தியில் பன்னெடுங்காலமாகப் புழக்கத்தில் இருந்து வருகின்றன' என்பதனை வரலாற்று ஆதாரங்களோடு நிரூபிக்கும் ஏ.கே. இராமானுஜன் என்ற வரலாற்றாசிரியர் எழுதிய "முன்னூறு இராமாயணங்கள்:ஐந்து உதாரணங்களும் மொழிபெர்ப்புப் பற்றிய மூன்று கருதுகோள்களும்' என்ற கட்டுரை பாடமாக வைக்கப்பட்டிருந்தது. "இக்கட்டுரை மதத் துவேஷத்தோடு எழுதப் பட்டிருக்கிறது' என்ற பச்சை பொய்யைத் திரும்பத்திரும்பக் கூறி, இக்கட்டுரையைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டுமென இந்து மதவெறி பாசிசக் கும்பலைச் சேர்ந்த மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தும், அப்பாசிசக் கும்பலுக்கு ஆதரவான ஆசிரியர் சங்கங்களும் டெல்லிப் பல்கலைக்கழகத்தை மிரட்டி வந்தன.

அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தைச் சேர்ந்த கும்பல் 2008 ஆம் ஆண்டு இக்கட்டுரையை எதிர்ப்பது என்ற பெயரில் டெல்லிப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை கட்டிடத்திற்குள் நுழைந்து ரவுடித்தனத்தில் இறங்கியதோடு, அப்பொழுது வரலாற்றுத் துறை தலைவராக இருந்த பேராசிரியர் எஸ்.இசட்.ஹெச். ஜாப்ஃரியைத் தாக்கவும் முனைந்தது.  இக்கட்டுரையைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை உச்ச  நீதிமன்றம் தனது விசாரணையின் கீழ் கொண்டு வந்து, "நான்கு வரலாற்று அறிஞர்களைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டு, அக்குழு இக்கட்டுரை பற்றி கருத்துத் தெரிவிக்க வேண்டும்; அதன் அடிப்படையில் டெல்லிப் பல்கலைக்கழகம் அக்கட்டுரையைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவது பற்றி முடிவெடுக்க வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது.

நான்கு பேர் கொண்ட அக்குழுவின் மூன்று உறுப்பினர்கள், "அக்கட்டுரை வரலாற்றுக் கண்ணோட்டத்தோடும், மதிநுட்பத்தோடும் எழுதப்பட்டிருப்பதால் அதனை நீக்கத் தேவையில்லை' எனக் கருத்துத் தெரிவித்தனர்.  ஆனாலும், டெல்லிப் பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு இப்பெரும்பான்மை கருத்தை ஒதுக்கித்தள்ளிவிட்டு, அக்கட்டுரையைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கி ஆர்.எஸ்.எஸ். கும்பலின் விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறது. டெல்லிப் பல்கலைக்கழகத்தின் இக்காவித்தனமான முடிவை எதிர்த்து, அப்பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை ஆசிரியர்களும், மாணவர்களும் போராடத் தொடங்கியுள்ளனர்.  அப்போராட்டத்திற்குப் பல்வேறு இடதுசாரி இயக்கங்கள் மட்டுமின்றி, ஜனநாயக உணர்வுமிக்க வரலாற்று அறிஞர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அகில பாரதிய வித்யார்தி பரிஷத் கும்பலைச் சேர்ந்த ஒருவன், "நான் டி.வி.யில் ராமாயணம் பார்த்திருக்கிறேன்.  அதைத் தவிர வேறு எந்த ராமாயணத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது' என்ற "ஆழ்ந்த' கருத்தை இப்பிரச்சினை தொடர்பாக முன்வைத்திருக்கிறான். இதனை ஒரு முட்டாளின் கருத்தாக ஒதுக்கித் தள்ளமுடியாது.  ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கொள்கையே புராணக் கட்டுக்கதைகளை இந்தியாவின் வரலாறாகத் திணிப்பதுதான்.

இப்புராணக் கதைகளையும், அதன் கதை மாந்தர்களையும் யாரும் விமர்சன ரீதியாகப் பார்க்கக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். கட்டளை போடுவதும், "மதச்சார்பற்ற' காங்கிரசு கூட்டணி அரசின் கட்டுப்பாட்டிலுள்ள டெல்லிப் பல்கலைக்கழகம் அப்"ஃபத்வா'விற்குப் பணிந்து போவதும் சகிக்கமுடியாத வெட்கக்கேடு.  சமச்சீர் கல்வி தரமற்றது எனக் கூப்பாடு போட்டுவரும் கும்பலைச் சேர்ந்த ஒரு "அறிவாளி'கூட, இந்த வெட்கக்கேட்டை எதிர்த்து இதுவரை வாய் திறக்கவில்லை என்பதும் தற்செயலானதல்ல.