Language Selection

புதிய ஜனநாயகம் 2011

இந்தியாவின் வடமேற்கே பாகிஸ்தானை அடுத்துள்ள நாடான ஆப்கானிஸ்தானின் அதிபர் கர்சாயும் இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கும் கடந்த அக்டோபர் 5ஆம் தேதியன்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்தியாவின் போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளியாக ஆப்கான் திகழும் என்று அந்த ஒப்பந்தத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2014இல் ஆப்கானிலிருந்து நேட்டோ படைகள் முற்றாக விலகிய பிறகு, ஆப்கானின் பாதுகாப்புக்கு உற்ற துணையாக இந்தியா நிற்கும் என்றும், ஆப்கான் படைகளுக்கு இந்திய இராணுவம் முறைப்படி 2014லிருந்து பயிற்சி அளிக்கும் என்றும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கான் படைகளுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பதற்கு ஈடாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடத்தைப் பெற அந்நாடு வாக்களிக்க ஒப்புக் கொண்டுள்ளது.

 

 

இது தவிர, ஆப்கானின் ஹஜிகாக் பகுதியில் உள்ள வளமான இரும்புத் தாதுவைத் தோண்டியெடுக்கும் சுரங்கங்கள் அமைக்கவும்,  வடக்கு ஆப்கானில் உள்ள எண்ணெய்  எரிவாயு வளத்தை அகழ்ந்தெடுக்கவும் இந்தியா உதவும் என்றும், விமானப் போக்குவரத்து மட்டுமின்றி, கடன் மற்றும் காப்பீடு துறைகளிலும் இந்தியாவும் ஆப்கானும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்படும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போருக்குப் பிந்தைய ஆப்கானில் மறு நிர்மாணப் பணிகளைச் செய்தல், வர்த்தக மையங்களை இணைக்கும் சாலைகள் அமைத்தல், சிறிய அளவிலான மின் திட்டங்கள் மற்றும் மருத்துவமனைகள் அமைத்தல் முதலான அடிக்கட்டுமானத் துறைகளிலும் இந்தியா பங்கேற்கும் என்றும், கடல்வழியைப் பயன்படுத்த பாகிஸ்தானை மட்டுமே சார்ந்திருந்த நிலை மாறி, இனி இந்திய உதவியுடன் கடல் வழியை ஆப்கான்  பயன்படுத்தும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்தியாவுடனான நட்புறவுக்குப் பெரிதும் முயற்சித்தவரும், ஆப்கான் அமைதி நடவடிக்கைக்கான உயர் தலைவருமான முன்னாள் ஆப்கான் அதிபர் பர்ஹானு தீன் ரப்பானி கொல்லப்பட்ட பிறகு போடப்படும் இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பும் பெரும் முன்னேற்றத்தை அளிக்கும்' என்று இந்திய ஆட்சியாளர்கள் ஏற்றிப் போற்றுகின்றனர். "2 பில்லியன் டாலர் அளவுக்கு ஆப்கானுக்கு உதவி செய்து, இந்தியா மிக முக்கிய கொடையாளராக உள்ளது என்று ஆப்கான் மக்கள் பாராட்டுகின்றனர். மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கும் வர்த்தகத்துக்கும் அடிக்கடி ஆப்கானியர்கள் இந்தியாவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். சினிமா நடிகர் நடிகைகள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் படங்களைத் தங்கள் கடைகள், வீடுகளில் ஒட்டி வைக்கும் அளவுக்கு இந்திய சினிமாக்கள், தொலைக்காட்சித் தொடர்களுக்கு ஆப்கான் மக்களிடம் பெருத்த வரவேற்பு உள்ளது.  இந்துஸ்தான் எங்களது நண்பன், பாகிஸ்தான் எங்களது எதிரி என்று ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் உளமாறக் கூறுகின்றனர்' என்று ஊடகங்கள் இந்தப் போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை ஆப்கானியர் வரவேற்பதாக வானளாவப் புகழ்ந்து தள்ளுகின்றன.

"அமெரிக்காவின் நீண்டகால நெருங்கிய  கூட்டாளியாகச் செயல்பட்ட பாகிஸ்தான், இந்த ஒப்பந்தத்தால் தனிமைப்பட்டுள்ளது. ஆப்கான் படைகளுக்குப் பயிற்சி அளிப்பதோடு, உஸ்பெகிஸ்தானின் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைத் தாக்கி அழிக்கும் நோக்கத்துடன்   உருவாக்கப்பட்ட ஆப்கானின் அண்டை நாடான தாஜிகிஸ்தானிலுள்ள போர்விமானத் தளத்தையும் இந்தியா பயன்படுத்தும். ஆப்கான் மட்டுமின்றி, அதன் அண்டை நாடுகளிலும் தீவிரவாதத்தை வேரறுக்க இந்தியா பாடுபடும். இவற்றின் மூலம் இந்தியா தெற்காசியாவில் மட்டுமின்றி,  மேற்காசியாவிலும் செல்வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது' என்று இராணுவ ஆலோசகர்கள் இந்த ஒப்பந்தம் குறித்துக் கருத்து தெரிவிக்கின்றனர்.

பெருமிதத்துடன் சித்தரிக்கப்படும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் ஆப்கானில் மூலதனமிட்டு வளரவும் விரிவடையவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், தெற்காசியாவில் அமெரிக்காவின் நம்பகமான அடியாளாக உள்ள இந்தியா, இப்போது மேற்கு, மத்திய ஆசியப் பகுதிகளிலும் தலையிட்டு அமெரிக்காவுக்கு அடிமைச் சேவகம் செய்ய இன்னுமொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வல்லரசுக் கனவில் மிதக்கும் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு இந்த ஒப்பந்தம் சாதகமானதாகத் தோன்றினாலும், அதன் மறுபக்கமோ பேரபாயமானது.

கடந்த அக்டோபர் 7ஆம் நாள் ஆப்கான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் பத்தாம் ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் நாளாகும். தீவிரவாதத்தை முறியடிப்பதும், தாலிபான்களையும் அல்கய்தா தலைமையையும் அழித் தொழிப்பதும்தான் நோக்கம் என்று ஆப்கானை ஆக்கிரமித்த அமெரிக்கா, கடந்த மே மாதத்தில் பின்லாடனையும் சுட்டுக் கொன்ற பின்னரும் தனது ஆக்கிரமிப்பை நீக்கிக்கொண்டு விடவில்லை. ஆப்கானில் அது வெற்றி பெறவும் முடியவில்லை.

ஆப்கான் பிரச்சினையைத் தீர்த்து, அமைதியை நிலை நாட்டுவதல்ல அமெரிக்காவின் நோக்கம். ஆப்கானிலும் மத்திய ஆசியப் பகுதியிலும் காலூன்ற ஒரு காரணம் தேவை. அமெரிக்காவின் தலையீடு தேவை என்பதை நியாயப்படுத்துவதற்கு ஒரு தீராத பிரச்சினை இப்பகுதியில் நீடிக்க வேண்டும். அப்போதுதான் மத்திய ஆசியப் பிராந்தியத்தைக் கட்டுப்படுத்தி மேலாதிக்கம் செலுத்த முடியும். அதற்காகவே பயங்கரவாதத்தை அமெரிக்கா காரணமாகக் காட்டுகிறது. உள்நாட்டு நெருக்கடிகளின் காரணமாக ஆப்கான் சிக்கலிலிருந்து மீள அமெரிக்கா விரும்பினாலும், அதனால் ஆப்கானிலிருந்து காலை எடுக்க முடியவில்லை. எனவே, பாக். மூலமாக தாலிபான்களில் ஒரு பிரிவினருடன் சமரசப் பேச்சு வார்த்தைக்கு முயற்சிக்கிறது.

மறுபுறம், அமெரிக்காவின் விசுவாச நாடான பாகிஸ்தான், ஆப்கானில் மேற்கொள்ளப்படும் எந்த அமைதி நடவடிக்கையிலும் தன்னை முன்னிறுத்த விழைகிறது. பாகிஸ்தானின் மேற்குப் பகுதியிலுள்ள தீவிரவாத ஹக்கானி இயக்கத்தினருக்கும் ஆப்கானின் தாலிபான் இயக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதால், சமரசப் பேச்சு வார்த்தைகளில் பாகிஸ்தான் தலையிட்டு செல்வாக்கு செலுத்தவே விரும்புகிறது.

பாக். ஆளும் வர்க்கம் அமெரிக்காவை ஆதரிக்கிறது என்றாலும், பாகிஸ்தானில் அதிகரித்துவரும் அமெரிக்கத் தலையீட்டின் காரணமாகவும், பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில்   அமெரிக்கா நடத்திவரும் ஆளில்லாத விமானத் தாக்குதலாலும் பாக். மக்களிடம் அமெரிக்க எதிர்ப்பு மனப்போக்கு நிலவுவதால், அதையும் கணக்கில் கொண்டு மக்களின் பொதுக்கருத்துக்கு மதிப்பளிப்பதாகக் காட்டிக் கொள்ள அமெரிக்காவுக்குப் பெயரளவிலான எதிர்ப்பைக் காட்டுகிறது.

பாகிஸ்தானின் மேற்குப் பகுதி தாலிபான்களின் புகலிடமாக இருப்பதால், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த அங்கு பெருமளவு படைகளை பாகிஸ்தான் குவிக்க வேண்டியிருக்கிறது. கிழக்குப் பகுதியில் உள்ள இந்தியாவுடன் முறுகல் நிலை இருந்தால், இந்திய எல்லையில் மேலும் படைகளைக் குவிக்க வேண்டியிருக்கும் என்பதால், தற்காலிகமாக இந்தியாவுடன் முறுகலற்ற நிலையை மேற்கொள்ள பாக். விரும்புகிறது.

இதனடிப்படையில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியபாக். வர்த்தக அமைச்சர்கள் இருதரப்பு உறவுகள் மேம்பட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். விசா, கடவுச்சீட்டு முதலான விவகாரங்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் பாக். முன்வந்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தேர்தலில் நிரந்தரமற்ற உறுப்பினராக பாக். போட்டியிடுவதை இந்தியா எதிர்க்கவில்லை. பாக். ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் ஆப்கானில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்திவரும் சூழலில், அமெரிக்கா தனது நிதியுதவிகளை நிறுத்தப் போவதாக மிரட்டி வருவதால் பாக். இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல முனைகளில் போர் தொடுத்து பின்னடைவைச் சந்திப்பதை விட, தற்போதைக்கு இந்தியாவுடன் இணக்கமாக நடந்து கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைமை பாக்.கிற்கு உள்ளது. மறுபுறம், பாகிஸ்தானின் புதிய அணுகுமுறையைக் கணக்கில் கொண்டு செயல்படுமாறு அமெரிக்கா இந்தியாவை வலியுறுத்துகிறது.

இவற்றை வைத்து பாகிஸ்தான் அமெரிக்காவால் ஓரங்கட்டப்பட்டு, ஆப்கான் விவகாரத்தில் இந்தியா முக்கியத்துவம் பெற்று வருவதாக ஊடகங்கள் சிலாகிக்கின்றன. தெற்காசியா மட்டுமின்றி, மத்திய ஆசியாவில் செல்வாக்கு செலுத்துமளவுக்கு இந்தியா வல்லரசாக வளர்ந்து வருவதாகவும், ஆப்கான் ஆட்சியாளர்கள் பாகிஸ்தானை நம்பாமல் இந்தியாவைப் பெரிதும் நம்புவதைப் போலவும் அவை ஊதிப்பெருக்குகின்றன. ஆனால் ஆப்கான் அதிபரோ, பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இரட்டைச் சகோதரர்கள் என்று டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானபோது தெரிவித்துள்ளார். அதாவது, பாகிஸ்தானைப் புறக்கணித்துவிட்டு ஆப்கானில் அமைதியையோ வளர்ச்சியையோ சாதிக்க முடியாது என்று அவர் வெளிப்படையாகவே தெரிவிக்கிறார்.

ஆப்கானில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் அந்நியத் துருப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் அமெரிக்கத் துருப்புகள் மட்டும் ஒரு லட்சம் பேராவர். சி.என்.என். தொலைக்காட்சியின் கூற்றுப்படி, கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படையினர்  2,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் அமெரிக்கர்கள் மட்டும் 1,780 பேராவர். பத்தாம் ஆண்டு ஆக்கிரமிப்புப் போரின் தொடக்கத்தையொட்டி, கடந்த செப்டம்பரிலிருந்தே தாலிபான்களின் தாக்குதல்கள் அடுத்தடுத்து நடந்தன. ரப்பானி கொல்லப்படுவதற்கு ஒரு வாரம் முன்னதாக பாக். ஆதரவு பெற்ற ஹக்கானி குழுவினர் காபூலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது தற் கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். காபூல் நகரை ஏறத்தாழ 20 மணி நேரத்திற்கு தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அச்சுறுத்துமளவுக்கு தாலிபான்கள் இன்னமும் வலுவாகவே உள்ளனர். அமெரிக்கா மற்றும் அதன் தலைமையிலான நேட்டோ கூட்டணிப்படைகளாலேயே ஆப்கா னில்வெற்றி கொள்ள முடியாத சூழலில், இப்போது இந்தியா அங்கு நுழைவது புலி வாலைப் பிடித்த கதையாகவே முடியும்.

இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் விரிவடைவதற்கும் இந்திய ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் அடியாளாகச் சேவை செய்யவும் இன்னுமொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பாகிஸ்தானின் வாலை முறுக்கி வம்புக்கு இழுப்பது இந்திய ஆளும் வர்க்கத்தின் விரிவாக்கத்துக்கும் மேலாதிக்கத்துக்கும் அவசியமாகிவிட்டது. மறுபுறம், தற்காலிகமாக இந்தியாவுடன் இணக்கம் காட்டும் பாகிஸ்தான், நாளை போர் தொடுக்கத் துணிந்தால் அது அணு ஆயுதப் போராகமாறும் அபாயம் உள்ளது.

மேலும், ஏற்கேனவே அமெரிக்க பொம்மையாட்சிக்கு ஆதரவாக உள்ள இந்தியாவை எதிர்க்கும் தாலிபான்கள் ஆப்கானிலுள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு, இந்தியக் கட்டுமானப்பணியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போதைய ஒப்பந்தத்தின் மூலம் ஆப்கான் ஆட்சியாளர்களுடனான இந்தியாவின் கூட்டு வலுப்பட்டுள்ள நிலையில் தாலிபான்களின் தாக்குதல் ஆப்கானில் மட்டுமின்றி, இந்தியாவிலும் தொடர்வதற்கான பேரபாயமும், இஸ்லாமியத் தீவிரவாதிகள் மற்றும் அமெரிக்க எதிர்ப்பாளர்களின் தாக்குதல் இலக்காக இந்தியா மாறும் பேரபாயமும் ஏற்பட்டுள்ளது.

இவற்றைக் காட்டி மீண்டும் பயங்கரவாதப் பீதியூட்டிக் கருப்புச் சட்டங்கள் நாட்டு மக்கள் மீது ஏவப்படும். பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் என்று புரட்சிகர  ஜனநாயக இயக்கங்கள் ஒடுக்கப்படும். இந்துவெறி பயங்கரவாத சக்திகள் இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாத வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விடும். இவற்றின் விளைவாக அமெரிக்கக் கைக்கூலித்தனம் மேலும் அதிகரிக்கும். பாகிஸ்தானைப் போல இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலும் அதற்கெதிராக அரசு பயங்கரவாதத் தாக்குதலும் தீராத தலைவலியாக மாறிப் போகும். எவ்வாறு பாகிஸ்தான் மதவெறிச் சக்திகளாலும், தீவிரவாதத்தாலும், இராணுவஒடுக்குமுறையாலும், அமெரிக்காவின் தாக்குதலாலும் கந்தலா கிக் கிடக்கிறதோ, அதைப் போன்றதொரு நிலைக்கு இந்தியா இழுத்துச் செல்லப்படும் பேரபாயம் சூழ்ந்துள்ளதையே நிலைமைகள் சுட்டிக்காட்டுகின்றன.

. குமார்