Language Selection

புதிய ஜனநாயகம் 2011

"பொறுக்கித் தின்னப் போட்டிபோடும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்! உள்ளாட்சித் தேர்தலின் நோக்கம் அதிகாரத்தைப் பரவலாக்குவதல்ல! ஊழலைப் பரவலாக்குவதே! கிராம மக்களுக்கு உண்மையான அதிகாரம் என்பது உழுபவருக்கு நிலம் வேண்டும்; விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் வேண்டும்; தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்கவும் மக்களுக்கு அதிகாரம் வேண்டும். இந்த உரிமைகளை மக்களுக்கு அளிக்காத இப்போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்! மக்களே நேரடியாக அதிகாரம் செலுத்தக்கூடிய மக்கள் சர்வாதிகார மன்றங்களைக் கட்டியமைக்கப் போராடுவோம்!' என்ற முழக்கத்துடன் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரித் தமிழகமெங்கும் ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு, ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள், தட்டிகள், தெருமுனைக் கூட்டங்கள் மூலம் வீச்சான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன.

 

 

"எலும்புச் சின்னத்தில் போட்டி போடும் உங்கள் அன்புத் தம்பி பைரவன் வருகிறார், இவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர், சொத்து சேர்க்கத் தெரியாதவர், எட்டி உதைத்தாலும் நன்றி விசுவாசமிக்கவர், நிற்க நேரமில்லாமல் ஊரெங்கும் சுற்றி வருபவர்' என்ற அறிவிப்போடு, இப்படிப்பட்ட உயர்ந்த வேட்பாளரான திருவாளர் நாய்க்கு வாக்கு சேகரிக்கும் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சார இயக்கத்தை 13.10.2011 அன்று சென்னை  நொளம்பூர் பகுதியில் இப்புரட்சிகர அமைப்புகள் மேற்கொண்டன." நிலம் வேண்டும், தண்ணீர் வேண்டும், சாலை வேண்டும்;, வேலை வேண்டும். அதைப் பெற்றுத் தராத உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!' என்ற முழக்கத்துடன் பட்டாசுகள் அதிர, பறையொலி முழங்க, பொன்னாடை போர்த்திய நாய் ஊர்வலமாக வர, ஆரவாரமாக நடந்த இந்த நூதனப் பிரச்சாரம் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது. உழைக்கும் மக்கள் கெக்கலி கொட்டி மகிழ்ச்சியுடன்  திரண்டு வந்து, தாமாகவே வேட்பாளர் பைரவனுக்கு ஆரத்தி எடுத்தும் தேங்காயில் கற்பூரம் கொளுத்திச் சுற்றியும் உற்சாகத்துடன் இப்பிரச்சாரத்தை வரவேற்று ஆதரித்தனர்.

14.10.2011 அன்று சென்னை  டாக்டர் சந்தோஷ் நகரில் வேட்பாளர் பைரவனுடன் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரம் செய்தபோது, எந்த ஓட்டுக்கட்சி வேட்பாளருக்கும் திரளாத அளவுக்கு மக்கள் ஆரவாரத்துடன் திரண்டனர். அப்போது ஓட்டுக் கேட்க வந்த அ.தி.மு.க.வின் வடசென்னை மாவட்டச் செயலாளரான பாலகங்கா, இக்கூட்டத்தைப் பார்த்து பிரச்சாரம் செய்ய முடியாமல் திரும்பிச் சென்றதர். சென்னை குரோம் பேட்டையில்  வேட்பாளர்கள் எதிரில் வரும்போது, "யோக்கியன் வர்றான் பாரு, சொம்பை  எடுத்து உள்ளே வை!' என்று முழக்கமிட்டபடியே தோழர்கள் பிரச்சாரம் செய்த போது, ஓட்டுக்கட்சி வேட்பாளர்கள் கூனிக்குறுகி முகத்தைத் திருப்பிக் கொண்டு ஒதுங்கிச் சென்றனர்.

ஓசூரில் 14.10.2011 அன்று மாலை மூக்கண்டப்பள்ளி பேருந்து நிலையம் முன்பும், 15 ஆம் தேதியன்று  தர்கா பேருந்து நிலையம் முன்பாகவும் பெருந்திரளான உழைக்கும் மக்களின் ஆதரவோடு இப் புரட்சிகர அமைப்புகள் தெருமுனைக் கூட்டங்களை நடத்தின. இவ்விரு நாட்களிலும் ஆலைவாயில்களிலும் பொதுமக்கள் திரளும் இடங்களிலும் ஆயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரம் விநியோகித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

13.10.2011 அன்று திருச்சியில் தேர்தல் புறக்கணிப்புச் சுவரொட்டி ஒட்டிய தோழர்களிடமிருந்து அவற்றைப்பிடுங்கி, போலீசார் வீடியோ எடுத்துப் பீதியூட்டினர். 14ஆம் தேதியன்று திருச்சியில் ஆண்டாள் வீதி, சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் இப்புரட்சிகர அமைப்புகள் தெருமுனைக் கூட்டங்களை நடத்தின.  14ஆம் தேதியன்று காலை 8 மணியிலிருந்து துவாக்குடி மலை அய்யம்பட்டி சாலையில் தெருமுனைக் கூட்டமும், அதைத் தொடர்ந்து வீடு வீடாகப் பிரச்சாரமும் நடந்தன. இதைத் தடுத்து நிறுத்த முடியாத ஆத்திரத்தில் போலீசார் ஒரு தோழரின் வீட்டில் புகுந்து துணிமணிகளை அள்ளி வெளியே வீசிப் பயபீதியூட்ட முயற்சித்தனர். தேர்தல் புறக்கணிப்புத் துண்டுப்பிரசுரம் விநியோகித்தது இளம் தோழர்கள்தான் என்று தெரிந்து, அவர்களை போலீசு தேடியது.  அவர்களோ அருகிலிருந்த மதில் சுவர் மீது ஏறி நின்று கொண்டு போலீசுக்கு பெப்பே காட்டினர். 2 தோழர்கள் மீது பொய்க்குற்றம் சாட்டிக் கைது செய்த போலீசு, பின்னர் அவர்களைப் பிணையில் விடுவித்தது.

13ஆம் தேதியன்று திருச்சியில் அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச்  சங்கத்தின் சார்பில் தரைக்கடை பகுதியில் பிளக்ஸ் தட்டிகள் கட்டித் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரம் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் திரளாக தரைக்கடைகளுக்கு வந்ததால் இது சிறப்பான பிரச்சாரமாக அமைந்தது.

திருச்சியில் "புதிய ஜனநாயகம்' இதழில் வெளிவந்த உள்ளாட்சித் தேர்தல் பற்றிய கட்டுரையை விளக்கிப்பேருந்தில் பு.மா.இ.மு. தோழர்கள் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரம் செய்த போது, கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு தாய், நீங்கள் சொல்வதுதான் உண்மை, சாமிக்குப் போடுற காணிக்கையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று தான் சேர்த்து வைத்திருந்த ரூ.500க்கான சில்லறைக் காசுகளை தோழர்களின் உண்டியலில் போட்டு இப்பிரச்சார இயக்கத்தை ஆதரித்தார். இதைக் கண்டு பேருந்திலிருந்த பலரும் ரூ.50, 100 என நன்கொடைகளை அள்ளிக் கொடுத்துத் தோழர்களை உற்சாகப்படுத்தி ஆதரித்தனர்.

கடலூரில் மஞ்சக்குப்பம் பகுதியில் 16.10.2011 அன்று பறையொலி முழங்க, செங்கொடி ஏந்தி, செஞ்சட்டையுடன் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டு பு.மா.இ.மு., தோழர்கள் வீடுவீடாகத் துண்டுப் பிரசுரம் கொடுத்தும் தெருமுனைக் கூட்டங்களை நடத்தியும் தேர்தல் புறக்கணிப்புப்  பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

தமிழக மக்களைக் குடிகாரர்களாக்கி, இலவசங்களையும் அன்பளிப்புகளையும் வாரியிறைத்து மக்களை ஊழல்மயப்படுத்தும் ஓட்டுக்கட்சிகளை அம்பலப்படுத்தியும், மக்களுக்கு அதிகாரமளிக்காத உள்ளாட்சித் தேர் தலைப் புறக்கணித்து கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு எதிராக அணிதிரள மக்களை அறை கூவியும் நடந்த இப்பிரச்சாரஇயக்கம்,  உழைக்கும் மக்களின் நெஞ்சங்களில் போராட்டத் தீயை மூட்டுவதாக அமைந்தது.

பு.ஜ. செய்தியாளர்கள்.