கடந்த 1.10.2011 அன்று மாலை  6 மணி முதல் 2.10.2011 காலை 6 மணி வரை மதுரை அரசரடியில் தமிழ்நாடு இறையியல் கல்லூரி வளாகத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி ஹென்றி டிபேனின் மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பில்,  மரண தண்டனைக்கு எதிரான கூட்டமைப்பின் சார்பில் "தூங்கா நகரில் தூங்காநிலை போராட்டம்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் துண்டறிக்கை விநியோகித்து நன்கொடையும் திரட்டியவர், வழக்குரைஞர் வல்லரசு.

 

 

மக்கள் கண்காணிப்பகத்தில் ஏற்கேனவே பணியாற்றிய வல்லரசு, பின்னர் அதிலிருந்து விலகி விட்டார். கடந்த செப்டம்பர் மாதத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மக்கள் கண்காணிப்பகத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குப் பார்வையாளராகச் சென்றிருந்த வல்லரசுவிடம் ஹென்றி டிபேனின் மருமகனாகிய பிரதீப் சாலமோன் ஆர்ப்பாட்ட பேனரைப் பிடித்து நிற்குமாறு கூற, அதற்கு வல்லரசு, நான் மக்கள் கண்காணிப்பக ஊழியர் அல்ல என்று கூறி மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திர மடைந்த பிரதீப் சாலமோன், அவரை ஆபாசமாகத் திட்டியுள்ளார்.

இந்நிலையில், மக்கள் கண்காணிப்பகத்தின் சார்பில் நடைபெற்ற தூங்காநிலை போராட்டத்தைக் காணச் சென்றிருந்த வல்லரசு, தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுத் திரும்பி வரும்போது அது கீழே விழுந்து சேதமடைந்திருந்தது. அருகிலிருந்த பிரபு சாலமோன்தான் அதைக் கீழே தள்ளி சேதப்படுத்தியிருக்கிறார் என்பதால், அவரிடம் விளக்கம் கேட்டபோது, வல்லரசுவைத் தகாத வார்த்தைகளால் ஏசியிருக்கிறார், பிரபு சாலமோன். பின்னர் இது பற்றி ஹென்றி டிபேனிடம் வல்லரசு முறையிட்டபோது, அவர் வெறி பிடித்தவர் போல வல்லரசுவைத் தாக்கியதோடு, ஆபாச வார்த்தைகளால் ஏசியுள்ளார். வல்லரசுவை அவர் வெளியே இழுத்து வந்த போது பிரதீப் சாலமோனும் அவரது விசுவாசிகளும் சேர்ந்து கொண்டு மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர். பிரதீப் சாலமோனின் மனைவி அனிதா, ஹென்றியின் மனைவி சிந்தியா  ஆகியோ ர்  வல்ல ரசு மீது செருப்பை வீசியுள்ளனர்.  பலர் முன்பாக நடந்த இக்கொடுமையைப் பற்றி  போலீசில் புகார் கொடுத்துவிட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வல்லரசு உள்நோயாளியாக   ஒருவார காலம் இருந்து  சிகிச்சை பெற்றார்.

வல்லரசுவிடம் 4.10.2011 அன்று விசாரணை நடத்த வந்த போலீசு உதவி ஆணையர் கணேசன், "ஹென்றி டிபேனிடம் வீண்தகராறு செய்ய வேண்டாம், மருத்துவ மனையிலிருந்து சென்றுவிடுங்கள்' என்று எப்படியாவது அவரை மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற நிர்பந்தித்துள்ளார்.  4.10.2011 அன்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பிணை கோரி ஹென்றியும் அவரது குடும்பத்தாரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர். பாதிக்கப்பட்ட வழக்குரைஞர் வல்லரசு சார்பாக வாதாடிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் வாஞ்சிநாதன், புகார்தாரர் சிகிச்சையில் இருப்பதால், இவ்வழக்கில் பிணை வழங்கக் கூடாது என்றார். ஆனால், அரசு தரப்பு வழக்குரைஞரோ, வல்லரசு மருத்துவமனையிலிருந்து சென்றுவிட்டார் என்று கூற, இந்தப் பச்சைப் பொய்யை ஏற்று நீதிபதி பிணை வழங்கியுள்ளார். இப்படி போலீசுடனும் நீதித்துறையுடனும் கூட்டுச் சேர்ந்துள்ள ஹென்றி டிபேன், போலீசு சித்திரவதை மற்றும் நீதித்துறை ஊழலை எதிர்த்துப் போராடி வருவதாக நாடகமாடுகிறார்.

மதுரையில் ஹென்றி டிபேன் என்பவரைச் செயல் இயக்குநராகக் கொண்டு செயல்பட்டுவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம்தான், மக்கள் கண்காணிப்பகம். இது ஒரு ஏகாதிபத்திய கைக்கூலி அமைப்பு. ஏகாதிபத்தியங்களிடமே காசு வாங்கிக் கொண்டு மனித உரிமை பற்றி வாய்கிழியப் பேசும் துரோகத்தின் உருவம்தான் ஹென்றி டிபேன். மக்கள் கண்காணிப்பகத்தில் நிலவும் ஹென்றி டிபேனின் குடும்ப ஆதிக்கமும், ஊழியர்களை உரிமைகளற்ற அடிமைகளாக நடத்தும் திமிர்த்தனமும் ஏற்கெனவே அம்பலப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அமைப்புக்கு முற்போக்குச் சாயம் பூசி மக்கள் மத்தியில் அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட அனைத்து ஓட்டுக்கட்சிகளின் அயோக்கியத்தனத்தனத்தை எதிர்ப்பதே மனித உரிமை ஆர்வலர்களின் இன்றைய முக்கிய கடமையாகியுள்ளது.

தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை.