09_2005.jpg

பத்துக்கு பத்து குடித்தனத்தில் பெத்தபிள்ளை அருகே வந்தாலும் ""ச்சே போ அந்தாண்ட கசகசங்குது நீ வேற'' என்று காயும் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் அண்ணா டவரின் உயரத்தில் இடைவிடாது வரும் காற்று, கொஞ்சலையும் நெருக்கத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.

 

ஒரு சிறுமி பக்கத்திலுள்ள சிறுவனைப் பார்த்து, ""டேய் அங்க பாருடா, பச்சப்பசேல்னு அழகா இருக்குல்ல!'' ""ஏ இங்க பாரு கலர் கலரா பூவெல்லாம் சூப்பரா தெரியுது!'' ""எவ்ளோ மரம் அழகா இருக்குல்ல!'' பூமியைப் பார்க்கப் பார்க்க இயற்கையின் மீதான பிள்ளைகளின் பாசமும் பரந்து விரிந்தது. இயற்கையின் மீது வைக்கும் அன்பு உயிர்கள் அனைத்துக்குமானது என்பதை குழந்தைகளின் உணர்ச்சி குறிப்பாய் உணர்த்திக் கொண்டிருக்க பக்கத்தில் செருப்பிலிருந்து சட்டை வரை வெள்ளையாக இருந்த இருவரில் ஒருவன் ""அந்த ஹன்ட்ரட் ஃபீட் ரோட்டோரமா அடர்த்தியா மரமா இருக்கு பாருங்க. அந்த லொகேஷனை தட்டிவிட்டு பிளாட் போட்டோம்னு வச்சுக்குங்க இப்ப உள்ள சூழ்நிலைக்கு ரேட்டு எகிறும்'' என்று உயரத்தில் இருந்து ஒவ்வொரு இடமாய் வெறித்துக் கொண்டிருந்தனர்.

 

இயற்கையைக் கூட இயற்கையாகப் பார்க்கத் தெரியாத இந்த வணிக மிருகங்களைப் பார்த்தபோது தூக்கிவாரிப் போட்டது எனக்கு. பன்னெடுங்காலமாக இயற்கை அம்சங்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற மனிதகுலத்தின் முயற்சியும், விருப்பமும் குழந்தைகளின் உணர்ச்சியில் வெளிப்படுகிறது. ஆனால் வளர்ந்த பெரியவர்கள் என்பவர்களிடம் மனிதன் உட்பட இயற்கை அனைத்தையும் வெறும் பண்டமாக, லாபம் தரும் உற்பத்திக் கருவியாக மட்டும் பார்க்கும் முதலாளித்துவ வணிகவெறி அல்லவா வக்கிரமாக வெளிப்படுகிறது. குழந்தையிடம் உள்ள நாகரிகம் வளர்ந்தவனிடம் இல்லையே?


எவ்வளவுதான் பழங்காலமாக இருந்தாலும் அனைவருக்குமான இயற்கை வளங்களைப் பொதுவில் வைத்துப் போற்றிப் பாதுகாத்த மனிதகுலத்தின் மகத்தான உணர்ச்சிகளை நாம் கைக்கொள்ள வேண்டும். எவ்வளவுதான் நவீனமாக இருந்தாலும் இயற்கையை வெறும் லாபம் ஈட்டும் பண்டமாகப் பார்க்கும் முதலாளித்துவ வணிகவெறியை ஒழித்துக் கட்ட வேண்டும். வெறும் பண்ட உற்பத்தியும், கருவிகளும் மட்டுமா முன்னேற்றம்? முன்னேற்றம் என்ற பெயரில் நடக்கும் இந்த முதலாளித்துவ வணிகச் சுரண்டலால் நாம் பெற்றதைவிடவும், இழந்தது அதிகம்.

 

இயற்கை மனிதனைப் பெற்றெடுத்தது, மனிதன் இயற்கையின் மீது வினையாற்றி, தனது வாழ்நிலைக்கேற்ற மனித இயற்கையை உருவாக்கினான். இருக்கின்ற தண்ணீரைத் தோட்டத்தில் பாய்ச்சி, பாத்தியில் தேக்கி இன்னுமொரு இயற்கையை விளைவித்தான். ஆனாலும் மலையும், காடும் பொது வளங்களாகப் போற்றப்பட்டன.

 

ஈரப்பசை இழையோடும் பழைய இலக்கியமெங்கும் கவிஞர்கள் தண்ணீரைப் பாட்டில் முகந்து மனித உணர்ச்சிகளைப் பறைசாற்றியிருக்கின்றனர். பாட்டிலில் அடைத்து அதனைக் காசாக்கும் வணிக வெறி அவர்களுக்கு வந்ததில்லை. "அறிவு' வளராத காலமல்லவா அது!

எந்தத் தனிமனிதனும் உற்பத்தி செய்யாத இயற்கை வளங்களை காட்டையும், மலையையும், ஆற்றையும், ஏரியையும், குளத்தையும் இன்று தனி ஒரு முதலாளிக்கு சொந்தமாக்கி அதை எவ்வளவு வேண்டுமானாலும், இயற்கையே இற்றுப் போகும்படி விற்றுக் காசாக்கும் வெறியோடு முதலாளித்துவம் அலைவதையா முன்னேற்றம் என்பது?

 

""இயற்கை தாய்; மனித உழைப்பு தந்தை'' என்று கூறிய ஓர் அறிஞரை ஆமோதித்து மேற்கோள் காட்டுகிறார் மார்க்ஸ். அத்தகைய தண்ணீரையே வெறும் சரக்காக மாற்றி, தனியுடைமையாக்கும், மொத்த இயற்கைக்கும் எதிரான முதலாளித்துவ வெறியுணர்ச்சியை, காலங்காலமாக இயற்கையைப் பொதுவாக்கி, போற்றிப் பாதுகாத்த நம் முன்னோர்களின் உணர்ச்சியிலிருந்து முன்னேறி, தாக்கி தகர்க்க வேண்டிய "இயற்கையான' உணர்ச்சி கூட நமக்கு எழாதா என்ன?

 

தண்ணீர் இயற்கைக்கே உணவு; தண்ணீரை எந்த முதலாளி உருவாக்கினான், அதைத் தனியுடைமையாக்கிக் காசாக்க? ஈரப்பசை இழையோடும் பழைய இலக்கியமெங்கும் கவிஞர்கள் தண்ணீரை பாட்டில் முகந்து மனித உணர்ச்சிகளைப் பறைசாற்றியிருக்கின்றனர். பாட்டிலில் அடைத்து அதனைக் காசாக்கும் வணிக வெறி அவர்களுக்கு வந்ததில்லை. "அறிவு' வளராத காலமல்லவா அது!

 

பசி என்று வந்தவர்களுக்குச் சோறும் தண்ணீரும் தருவதே உயர்ந்த அறம் என்று ""சோறிடும் தண்ணீரும் வாரும் ஃ ஆறு தருமமே சார்பாக உண்ணீர்மை வீறும் உயர்ந்து'' என்கிறது நல்வழி. ""காசுக்கு மட்டுமே இனி தண்ணீர்'' என்ற பண்பாட்டுக்கு மாறச்சொல்லி தாமிரவருணிக் கரையில் குழாயை இறக்கி விடுகிறது "கோக்' கம்பெனி. ""ஆறுகெட நாணல் இடு; ஊரு கெட பூணூல் இடு'' என்பது பழமொழி. நம் பூமியே கெட ஆறு குளமெங்கும் குழாயை இறக்கிக் கொண்டிருக்கிறார்கள் தண்ணீர்க் கொள்ளையர்கள்.

 

தண்ணீர் தனியார்மயமானால் இயற்கையின் இயல்பு மட்டுமல்ல மனிதர்களின் இயல்பும் கெடும்; கெட்டும் விட்டது. ஒரு குடம் தண்ணீரை யாரும் மாற்றி எடுத்துப் போய்விட்டால் ""உன் ஆயி, ஆத்தா, அப்பன், ஊர்மேல...'' என்று குழாயடியே பண்பாட்டுக் கொலைக்களமாக மாறுகிறது; ஒரு குடம் தண்ணீருக்காக திருச்சியில் ஒரு கொலையே விழுந்தது.

 

""ஆறுகெட நாணல் இடு; ஊரு கெட பூணூல் இடு'' என்பது பழமொழி. நம் பூமியே கெட ஆறு குளமெங்கும் குழாயை இறக்கிக் கொண்டிருக்கிறார்கள் தண்ணீர்க் கொள்ளையர்கள்.

நீர்வளம் பெருக்கி, ஊர்வளம் காக்காது தான் மட்டும் சொகுசாய் வாழ்ந்த மன்னன் நெடுங்கிள்ளி என்பவனைப் பார்த்து கோவூர்கிழார் என்ற புலவர் ""பால் இல் குழவி அலறவும் ஃ மகளிர் பூஇல் வறுந்தலை முடிப்பவும் ஃ நீர் இல் வினை புனை நல் இல்... ஃ இன்னாது அம்ம! ஈக்கு இனிது இருத்தல்!'' என்று மக்கள் பலவாறு வருத்தப்படும்போது நீ மட்டும் இன்பமாக இருப்பது உனக்கு வெட்கமாயில்லையா என 2000 ஆண்டுகளுக்கு முன்பே கேட்டார்.

 

இன்றும் தமிழகத்துப் பெண்கள் பாலுக்கு அழும் குழந்தைகளை அலறவிட்டு காலிக் குடத்தோடு அலையும் போது தாய்மார்களின் "நீர்இல்' துயரம் போக்காமல் கோக் கம்பெனிக்குக் குழாய் போட்டுக் கொடுத்து காசுக்கு தண்ணீரை விற்கச் சொல்லும் காரிகை ஜெயலலிதாவைப் பார்த்து ""உனக்கு வெட்கமில்லையா?'' என்று எந்த ஊர் கிழார் கவிபாடுகிறான்?

 

பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இயற்கை பட்டினி கிடப்பதைப் பார்த்து ""வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்'' என்றார் வள்ளலார். ""வானம் சுருங்கின் தானம் சுருங்கும்'' என்றார் அவ்வையார். ""பன்னெடுங் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சமுண்டாகும்'' என்று மழையை வேண்டினார் அப்பர். பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒரு "மார்க்கமாக' ஒதுங்கிவிட்ட இந்திய நீதிமன்றங்களோ கேரள பிளாச்சிமடாவில் ஊரே பட்டுப் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சுவது கோக்கின் உரிமை என்று இயற்கையை அழிக்க "உரிமை'ப் பண்பாடுகின்றன.

 

பக்தி மார்க்கமானாலும் பயிருக்கு நீர் கேட்கும் பரிவுணர்ச்சி எங்கே? உன் உயிருக்கே கேடானாலும் உறிஞ்சிக் காசாக்குவதை விடமாட்டேன் எனும் பன்னாட்டுக் கம்பெனிகளின் வெறியுணர்ச்சி எங்கே? மூடநம்பிக்கையை விடவும் மோசமானது முதலாளித்துவ நம்பிக்கை. மாறாக, இயற்கையைப் போற்றிப் பாதுகாக்கும் பண்பாட்டு மரபுகளைக் கைக்கொள்ள வேண்டும். இயற்கையை ரசித்த, இயற்கை வளங்களை வலியுறுத்திய மரபு வழியான உணர்வுகளைக் கொண்டாட வேண்டும். இயற்கையை ரசிக்கிறோம் நாம் ஏனெனில் நாமே இயற்கையால் ஆனவர்கள்.

 

நான் தண்ணீராலானவன்; தண்ணீரை ரசிக்கிறேன். நான் காற்றால் ஆனவன்; காற்றை ரசிக்கிறேன். மொத்தத்தில் இயற்கையை ரசிப்பதும் வாழவைப்பதும் மனிதன் தன்னைத்தானே வாழவைத்துக் கொள்வதன் தொடர்ச்சி. ஆனால் இப்படி எதாலும் ஆகாத மனித குலத்தின் அறியாமையால் ஆன கடவுள், மத, மூட உணர்வுகளை மட்டும் காலம் கடந்தாலும் முதலாளித்துவம் கம்ப்யூட்டர் சாம்பிராணி போடும்போது இயற்கையைப் போற்றும் மரபுகளை மட்டும் "பழசு' என எள்ளி நகையாடி எட்டி எறியப் பார்க்கிறது.

 

ஆனால் நமக்கோ பாய்ந்து வரும் புதுவெள்ளம் கண்டு, மக்கள் பறையொலி எழுப்பியதைப் பாடும் பரிபாடலின் ""வெங்காற்று வேசனை நாற்றாய் குதுகுதுப்ப ஃ ஊரூர் பறையொலி கொண்டன்றுயர் மதிலில்'' என்ற இயற்கையின் மீதான மகிழ்வுணர்ச்சி வேண்டும். மாசேதுங் குறிப்பிட்டது போல ""கடந்த காலங்களில் இருந்து பெறப்பட்ட இலக்கியம் கலை ஆகியவற்றில் உள்ள பழம் செல்வங்களையும் நல்ல மரபுகளையும் நாம் எடுத்து வார்ப்பிக்க வேண்டும்.''

 

""அம்மா ஊடு எங்க? ஆத்துக்கு அந்தாண்ட'' என்று விளையாடிய பால்ய நண்பனைப் பார்க்க ஒருமுறை அவன் ஊருக்குப் போயிருந்தேன். ஒருவரிடம் வீட்டைக் கேட்க அவரோ ""நேரா போங்க ஒரு காஞ்ச குட்டை இருக்கும். அப்படியே மேக்கால திரும்புனா நடாம வயல் கெடக்கும். அந்த வழியா போனா தெருவு வரும். பம்படியில குடமெல்லாம் கெடக்கும். அதுக்கு எதிர் வீடு'' என்று "காய்ந்த' அடையாளங்களை அடுக்கிக் கொண்டே போனார்.


நாம் வாழ்வது கம்ப்யூட்டர் யுகமாம். ஆனால் ஊரில் சூத்து கழுவ தண்ணியில்லையே என்றால்? அதனாலென்ன? வேத்து கிரகத்தில் தண்ணி இருப்பதை விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்க முடியும் என்று வாயைக் கழுவச் சொல்கிறது ஆளும் வர்க்கம்.

 

ஆனால் கால்நடை யுகத்தில் ஊரின் நீர்வளத்தை ஒரு கால்நடையை வைத்தே பாடுகிறார் நத்தத்தனார் என்ற புலவர், ""கொழுமீன் குறைய ஒதுங்கி, வள்இதழ் கழுநீர் மேய்ந்த கயவாய் எருமை...'' (பத்துப்பாட்டு 4146) அதாவது, கொழுத்த மீன்கள் காலடியில் நசுங்க, வயக்காட்டில் தேனுள்ள பூக்களை மேய்ந்து கரையேறும் எருமை, மிளகுக் கொடிகள் படர்ந்த பலா மரத்தின் நிழலில், காட்டு மல்லிகைகள் நிறைந்த இடத்தில் படுத்துக் கொள்ள, மஞ்சளின் மெல்லிய இலைகள் எருமையின் முதுகைத் தடவிக் கொடுத்ததாம். இப்படி எருமைக்குக் கிடைத்த இயற்கை வளங்கள் இப்போது நமக்கில்லையே என எருமையைப் பார்த்து ஏங்க வைக்கிறது பாடல்.

 

பன்னாட்டுக் கம்பெனி எருமைகள் இந்நாட்டு வளங்களையெல்லாம் மேய்ந்து இலாபம் பார்க்க, தேசியக் கொடியால் முதுகைத் தடவிக் கொடுக்கும் இந்தத் தரகு அரசாட்சியை அடித்துவிரட்ட பத்துப்பாட்டோடு, பட்டினப்பாலையும் வேண்டும் நமக்கு.

 

கரும்பு ஆலையின் புகையால் பக்கத்து வயல்களில் நெய்தற்பூக்கள் வாடுவதைக் கண்டு, சுற்றுப்புற வனப்பு கெடுவதைப் பார்த்த கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் ""கார்க் கரும்பின் கமழ் ஆலைத் தீத்தெறுவில் கவின்வாடி, நீர்ச்செருவின் நீள் நெய்தல்'' என்று வாடினார். திருப்பூர் சாயப்பட்டறை முதலாளிகளோ அந்நியச் செலாவணிக்காக ஆலைக் கழிவுகளை ஆற்றில் தான் விடுவோம். "இலாபத்தின்' சுற்றுச் சூழலே முக்கியம் என வாதாடுகின்றனர்.

 

தொடர்ந்து மழையால் நனைந்து கருத்துக் காட்சியளிக்கும் வைக்கோல் பரப்பிய குடில்களைப் பார்த்து ""பருவ வானத்துப் பாமழை கடுப்பக் கருவைவேய்ந்த கவின் குடிச்சீ×ர்'' என சுற்றுச்சூழலின் ஈரம் கண்டு பெருமிதம் பாடுகிறது பெரும்பாணாற்றுப் படை. கொளுத்தும் வெயிலோடு ஹ_ண்டாய் கார் புகையும், மாட மாளிகைகளின் மட்டற்ற ஏ.சி. வெப்பமும் சேர்ந்து நகரத்தையே தீக்கிரையாக்கி விட்டு "நாடு முன்னேறிவிட்டதாக' நம்பச் சொல்கிறது அரசு.

 

சுற்றுச்சூழலையே எழிலற்றதாக ஆக்குகிறது என்று கருத்த குடிசைகளைக் காலி செய்யும் ஆளும் வர்க்கம், நம் கருவறையையும் கருப்பாக்கும் கார் கம்பெனிகளை வருந்தி அழைக்கிறது. ஓசோன் படலத்தில் ஓட்டை போடுவது யார்? காஜா பீடி அடிக்கும் தொழிலாளியா? கார் கம்பெனி முதலாளியா? அறம்பாடிய சங்ககாலப் புலவனுக்குள்ள மனிதகுல மேம்பாடு கூட அறிவியல் விழிப்புணர்வு கொண்டதாய்க் கூறிக் கொள்ளும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இல்லை.

 

கி.மு. 242லேயே நீர்நிலைகளைப் பயன்படுத்துவதிலும், காடுகளை அழிப்பதிலும் இயற்கையை அழிக்காமல் பாதுகாக்க சட்டங்களை இயற்றினானாம் பேரரசன் அசோகன். உலகமயத்தின் குலக்கொழுந்து மன்மோகன்சிங்கோ தாய்நாட்டு நீர்வளங்கள் மேல் பன்னாட்டு கோக்கையும், பெப்சியையும் வர்க்கப் பாசத்துடன் ஏவிவிடுகிறார். தமிழ்நாடெங்கும் தண்ணீர் பாட்டிலின் ஓசையில் ""நான் ஏழு வயசிலே இளநீர் வித்தவ் அய்ம்பது வயசில அக்வாஃபினா வித்தவ'' என ஜெயலலிதாவும் தன் பங்குக்கு வாங்கிப் பாடுகிறார்.

 

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளோ காவிரி ஆற்றில் நீர் ஓடுவதால் உழவர்கள் வேலை செய்யும் ஓசை, மதகு ஓசை என காவிரிக் கரையெங்கும் நீரால் விளைந்த பயனைப் பார்த்து ""உழவரோதை மதகோதை உடைநீரோதை... விழவரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவிரி'' என்று நீர்வளத்தையே ஊர் வளமாகப் போற்றினார்.

 

நீருயர நெல் மட்டும் உயரவில்லை, மக்களின் கலாச்சார மட்டமும் உயர்ந்தது, ""முரவை போகிய முறியா அரிசி ஃ விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்'' என முனை முறியாத விரல் போலத் தனித்து நீண்ட அரிசிச் சோறு கிடைக்கும் என உபசரிப்பைப் பாடுகிறது பொருநர் ஆற்றுப் படை. ரேசன் அரிசி விளைவிக்கவும் வழிகாட்டாத அரசாங்கமோ ""தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம், வா ஆறு குளமெல்லாம் தயாராக்கித் தாரேன். குழாயப் போட்டுக் காசாக்கு!'' என பன்னாட்டு முதலாளிகளுக்கு விருந்தோம்பல் செய்கிறது.

 

""பாலின் நீர் தீயணுகப் பால்வெகுண்டு தீப்புகுந்து மேலும் நீர் கண்டமையும் மேன்மை போல்'' என தன் நண்பனாகிய நீர் ஆவியாகிப் பிரிவதைப் பார்த்து பால் சீறிப் பாயும் எனக் கருத்து ஏற்றிப் பாடுகிறது நீதிநெறி வெண்பா.

 

ஒரு பொருளின் மீது மனித உணர்ச்சியை ஏற்றிப் பாடுகிறான் அறிவியல் வளர்ச்சி காணாத அந்தக் காலத்தின் புலவன். இன்று உயிரையே பண்டமாக்குகிறது முதலாளித்துவம். அந்தப் பண்டத்திற்கு நம் பண்பாட்டையும் பலியிடலாமா?


பணம் கொடுத்து பாட்டில் தண்ணீர் வாங்க முடியாத ஏழைகள் பணமில்லாத காரணத்தினால் இன்னும் தமது பண்பாட்டை இழக்காமலிருக்கிறார்கள். தண்ணீருக்காகப் போராடுகிறார்கள்.

 

தண்ணீரைக் காசாக்கச் சம்மதிப்பது நம் மரபிற்கு இழுக்கு; மனித குலத்துக்கே இழுக்கு. நமது பண்பாட்டின்மீது படையெடுக்கும் பன்னாட்டு வெறிநாய்களை விரட்ட நம் முன்னோர்களின் பழைய செருப்புக்களையும் பயன்படுத்துவோம். தேய்ந்து அறுந்த செருப்புதான், எனினும் அந்தத் தோலில் இன்னும் சொரணை இருக்கிறது. அது நமக்குத் தேவைப்படுகிறது.


துரை. சண்முகம்