இதுவே தான் இந்தியாவில் ஏழ்மையை உருவாக்குகின்றது. இது இப்படி இருக்க, இந்த ஏழ்மையை இந்தியாவின் தேசிய "அவமானம்" என்கின்றார் இந்திய பிரதமர். உழைக்கும் மக்களின் உழைப்பைச் சூறையாடி கொழுக்க வைக்கும் உன் கொழுப்புத்தான், தேசிய அவமானமாகும். ஊட்டச்சத்து இன்றி, வருடம் தோறும் இலட்சக்கணக்கில் மரணிக்கின்ற நிலைக்கு யார் காரணம்? அவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணி யார்? இன்று 42 சதவீதமான இந்தியக் குழந்தைகள் ஊட்டச்சத்து இன்றி மரணத்துக்கும் வாழ்வுக்கும் இடையில் போராட யார் தான் காரணம்? அவமானம்" என்று கூறுகின்றனரோ, அவரும் அவரின் வர்க்கமும் தான் இதற்கு காரணமாகும். மனித உழைப்பை சுரண்டிக் கொழுக்கும் அட்டைகளாக உள்ள இந்த சமூக அமைப்பும், அந்த அட்டைகளைப் பாதுகாக்கும் அரசமைப்பும் தான் இந்த "தேசிய அவமானத்தை" உருவாக்குகின்றது. உன் நடத்தைக்கு வெளியில், எங்கிருந்துதான், "தேசிய அவமானம்" வருகின்றது.

 

மற்றவன் உணவைப் புடுங்கித் தின்பதே உன் தேசியக் கொள்கையாக இருக்க, அதன் விளைவை "தேசிய அவமானமாக" இருப்பதாகக் கூறுவதே கொழுப்புதான். மக்களின் வாழ்வாதாரத்தை புடுங்கி அன்னியனுக்கும், இந்திய பெருமூலதனத்துக்கும் தாரை வார்ப்பது எப்படி என்று, சதா சதித் திட்டம் போட்டு அதை புடுங்கிக் கொடுக்கும் மன்மோகன்சிங் கும்பல்தான் கொழுப்பெடுத்து "அவமானம்" பற்றி பேசுகின்றது.

இந்திய நாட்டில் உள்ள 10 சதவீதப் பணக்காரர்கள், நாட்டின் மொத்தச் செல்வத்தில் 52 சதவீத சொத்துக்களையும் வளங்களையும் அனுபவிக்கின்றனரே இது எப்படிச் சாத்தியமானது? அடித்தட்டில் இருக்கும் 10 சதவீதமான ஏழைகள் அனுபவிக்கும் வளங்களோ 0.21 சதவீதமாக சுருங்கி உள்ளதே எப்படி? நீ தலைமை தாங்கும் உனது இந்த சமூக அமைப்புத் தானே காரணம். இது தானே ஏழ்மைக்கும், ஏழ்மையிலான மரணத்துக்கும் காரணம்.

இந்திய மக்களில் 91 கோடி பேர்களின் தினசரி வருமானம் 80 ரூபாய்க்கும் கீழாக உள்ளது. இதைக் கொண்டு உணவு, வீட்டு வாடகை, மருத்துவம், கல்வி என்ற பற்றாக்குறையான வாழ்வும், இதையும் புடுங்க முனையும் சமூக அமைப்புமாக இருப்பதையே ஜனநாயகமாக காட்டிப் புடுங்குகின்றது. இந்த நிலையில் பட்டினியால் வாடும் மக்களின் தன்மை பற்றிய சர்வதேச அளவீட்டுப் படி, இந்தியா 94 ஆவது இடத்திலேயே உள்ளது.

இந்தியக் கிராமங்களின் வறுமையைப் பற்றி உட்சா பட்நாயக் என்ற பொருளாதார நிபுணர் கூறுகிறார். "கிராமத்து ஏழைக் குடும்பம் ஒன்று, ஒரு வருடத்தில் சராசரியாக உட்கொள்ளும் உணவு தானியத்தின் அளவு 10 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட, இன்று 100 கிலோ குறைவாக உள்ளது" என்று. இப்படி இந்திய மக்களைச் சூறையாடிக் கிடைத்த சிலரின் செல்வச் செழிப்பையே, நாட்டின் வளர்ச்சி என்கின்றனர். இப்படி செல்வந்தர்கள் இடையே பணப் புழக்கம் பெருகியது. இந்தப் பணக்கார கொடுமையால், மேலும் ஏழையாகிய 2 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்தனர். செல்வச் செழிப்பால் தற்கொலை 27 சதவீதத்தால் அதிகரித்திருக்கின்றது.

இந்திய தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், ஒரு தனிமனிதன் ஆண்டொன்றுக்கு உண்ணும் தானியத்தின் எடை குறைந்தபட்சம் 157 கிலோ இருக்க வேண்டும் என நிர்ணயித்துள்ளது. இது 1991இல் 161 கிலோவாக இருந்தது. தாராளமயத்தின் காலகட்டத்தில் 144 கிலோவாகக் குறைந்து வந்தது. குறிப்பாக உடலுழைப்புக்கு அவசியமாகத் தேவைப்படும் புரதத்தை வழங்கும் பருப்பின் நுகர்வோ 15.2 கிலோவில் இருந்து 10.6 கிலோவாகச் சரிந்துள்ளது. எங்கு போனது இந்த உணவு? யார் தான் இதை நுகருகின்றனர்? "தேசிய அவமானம் யாரால் ஏற்படுகின்றது?

உலக அளவில் நாளொன்றுக்கு தனிநபர் உண்ணும் உணவின் கலோரி மதிப்பு 3206. ஆனால் இந்திய மக்களில் ஏழைகளான 30 சதவிகிதம் பேர் உண்பதோ வெறும் 1626 கலோரிதான். இப்படி வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் போராடும் இந்திய மக்களின் இந்த நிலைக்கு காரணமென்ன? இந்தச் சமூக அமைப்பு தானே காரணம். மற்றவன் உழைப்பைப் புடுங்கிக் கொழுக்கும் வர்க்கம் தானே காரணம்;.

இந்த அவல நிலைமை சமூகத்தின் சமூக ஒடுக்குமுறையைச் சார்ந்து, இது இன்னமும் கொடுமையானது. பெண்கள், சாதியம், மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகள் சார்ந்து இது மேலும் கொடூரமானது. வறுமை நிலையில் வாழும் இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்களில் 66 சதவீதமான பேர்களும், பிற்படுத்தப்பட்ட சாதியினரில் 58 சதவீதமான பேர்களும், மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினரில் 81 சதவீதமான பேர்களும் கடுமையான வறுமையில் உள்ளனர். இப்படி "தேசிய அவமான" உண்மைகள் இருக்க, அவர்களின் வாழ்விடங்கள் உழைப்பு ஆதாரங்கள் தொடர்ந்து சூறையாடப்படுகின்றது. "தேசிய அவமான" த்தை உருவாக்குபவன், அதை கொள்கையாகக் கொண்டவன், அதை மூடிமறைக்கும் நாடகத்தையே தான் இங்கு அரங்கேற்றுகின்றனர்.

சுரண்டிக் குவிப்பதை கொள்கையாக்கி உழைப்பை மறுத்தல் மற்றொரு கொடுமை. உற்பத்தியில் ஈடுபடாத மூலதனத்தை கொண்டு புடுங்குவது மற்றொரு கொடூரம். மூலதனத்தை அடிப்படையாக கொண்ட உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு 1970களில் 28.3 சதவிகிதமாக இருந்தது. அதுவே 80களில் 16.9 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. புதிய பொருளாதாரக் கொள்கை உருவாக்கிய வேலைவாய்ப்போ 1.7 சதவிகிதம் மட்டும் தான்.

அந்நிய முதலீடு உருவாக்கியதாய்ச் சொல்லப்பட்ட வேலைவாய்ப்புகளின் சதவிகிதம் வெறும் 0.2 சதவிகிதம் தான். அதுவும் உயர்கல்வி கற்றலை முன்நிபந்தனையாக முன்வைக்கும் தகவல் தொழில் நுட்பத் துறையில் மட்டும்தான் வேலைவாய்ப்பை அது உருவாக்கியது. இத்துறையினால் உள்நாட்டு உற்பத்திக்கு எத்தனை சதவிகிதம் பங்களிப்பு உள்ளது? வெறும் 3.2 சதம் மட்டுமே.

வறுமையையே வாழ்வாக விதைக்கும் விவசாயத்துக்கு 1990இல் வங்கிகள் வழங்கிய கடன் 13.8 சதவீதமாக இருந்தது. அதே வங்கிகள் 2001-02 நிதியாண்டில் வழங்கிய கடனோ 7.2 சதவீதம் தான். இப்படி விவசாயத்தை விட்டு விவசாயியைத் துரத்தி விடும் வண்ணம் "தேசிய அவமானம்" தேசிய கொள்கையாகின்றது.

இந்த வகையில் 1991இல் விவசாயத் துறையில் அரசு செய்த முதலீடு 3.4 சதவிகிதமாக இருந்தது. இது 2001இல் 1.3 சதவிகிதமாகச் சுருங்கியது. இப்படி விவசாயிக்கு சுருக்குக் கயிறையே தேசிய கொள்கையாக்கினர் ஆளும் வர்க்கம். 2000 த்தில் இந்தியப் பொருளாதாரத்துக்கு விவசாயத்தின் பங்களிப்பு 25.3 சதமாக இருந்த நிலை மாறி, இன்று அது 19.9 சதவிகிதமாக, குறைந்தது. இதன் பின்னான வறுமையை எப்படித்தான் மூடிமறைக்க முடியும்?

இதன் விளைவு பற்றி உலக வங்கி தெளிவான சான்றிதழ் அளிக்கிறது. உலகின் எடை குறைவான குழந்தைகளில் 49 சதவீதம் பேரும், உடல் வளர்ச்சி தடைப்பட்ட குழந்தைகளில் 34 சதவீதம் பேரும், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளில் 46 சதவீதம் பேரும் வாழும் இடம் இந்தியாவாகியது. இதுதான் இந்திய தேசியப் பெருமையாகியது. பணக்காரரைக் கொழுக்க வைக்கும் இந்தியா தான், உலகிலேயே குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடாகியது.

மூலதனத்தின் நலனை அறமாகப் பே,ம் இந்தியாவில், தாய்மை தகுந்த உணவின்றி இருக்க, "கலாச்சாரத்தின்" பெயரில் பெண் போற்றப்படுகின்றாள். இந்த இந்தியப் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைகளில் 20 சதவீதத்திலிருந்து 30 சதவீதக் குழந்தைகள் 2500 கிராமிற்கும் குறைவான எடையுடனே பிறக்கின்றனர். மகப்பேற்றின் போது போதிய மருத்துவ வசதி இன்மையால் இறந்து போகும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு 1.17 இலட்சம். இப்படி இருக்கின்றது இந்திய "கலாச்சாரப்" பெண்ணின் பெருமை.

வயது வந்த இந்தியர்களில் 48.5 சதவீதம் பேர்கள் ஊட்டச்சத்துக்குறைவானவர்கள். 3 வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 47 சதவீதமான பேர்களுக்கு வயதுக்கேற்ற உயரமில்லை. 15.5 சதவீதம் பேர்களுக்கு உயரத்துக்கேற்ற எடை இல்லை. இதுதான் இன்றைய இந்திய சமூகம்.

இந்தியாவில் 6 மாநிலங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, மருத்துவம் தனியார்மயமானதன் விளைவாக மருத்துவச் செலவு மட்டும் 16 சதவீதம் மக்களை வறுமைக்கோட்டுக்குக் கீழே கொண்டு போயுள்ளது என்றும் 12 சதவீதம் பேர் தங்கள் குடும்பத்தின் மருத்துவச் செலவிற்காகச் சொத்தை விற்றுள்ளனர். 43 சதவீதம் பேர் நிரந்தரக் கடனாளிகளாகியுள்ளனர்.

இப்படி நாட்டின் ஓவ்வொரு கொள்கையும், பெரும்பான்மை மக்களை ஏழையாக்குகின்றது. சிறுபான்மையான மக்களை பணக்காரனாக்குகின்றது. இதுதான் தேசிய அவமானம். மற்றவன் உழைப்பை புடுங்கித் தின்னும் பெருமைதான் தேசிய அவமானமானது. புடுங்கிக் கொடுக்கும் மாமாத்தனம் தான் தேசிய அவமானம்.

(இக்கட்டுரையில் உள்ள புள்ளிவிபரத் தரவுகள் புதிய ஜனநாயகத்தில் இருந்து எடுத்தாளப்பட்டது.)

 

பி.இரயாகரன்

12.01.2012