ஓசூர் சிப்காட்1 பகுதியில் இயங்கி வரும் கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் கமாஸ் வெக்ட்ரா லிமிடெட் எனும் நிறுவனத்தில் 13 ஆண்டுகளாக வேலை செய்துவரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த டிசம்பர் 2010 முதலாக பு.ஜ.தொ.மு. சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு கூலி உயர்வு, போனஸ் முதலான உரிமைகளைப் போராடிப் பெற்றனர். கடந்த ஜூன் மாதத்தில் விக்டர் பிரசாத் என்ற மனிதவள அதிகாரி, முந்தைய ஒப்பந்ததாரரை மாற்றிவிட்டு, புதிய ஒப்பந்ததாரரைக் கொண்டு ஆகஸ்டு 2011 முதலாக 5 ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு வேலையில்லை என்று அறிவித்தான். இந்த திடீர் ஆட்குறைப்பு நடவடிக்கையை எதிர்த்து 10.8.2011 அன்று பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டத்தை நடத்தியதைத் தொடர்ந்து, தொழிற்சங்கத்துடன் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வந்தது. வேலை நீக்கத்துக்குப் பதிலாக, சுழற்சி முறையில் ஒவ்வொரு தொழிலாளியும் 4 நாட்கள் வேலை இழப்பை ஏற்பது, இழப்பை அனைத்து தொழிலாளிகளும் பகிர்ந்து கொள்வதென பேச்சுவார்த்தையில் முடிவாகி, வர்க்க ஒற்றுமையின் மூலம் பு.ஜ.தொ.மு. இச்சதியை முறியடித்தது.  இதனால் அரண்டுபோன மனிதவள அதிகாரி விக்டர் பிரசாத், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க முன்னணியாளர்கள் 4 பேரை கட்டாயமாக வேலையைவிட்டு நீக்குவதாக கடந்த செப்டம்பர் 12 அன்று ஒப்பந்ததாரரைக் கொண்டு அறிவித்தான். இந்த அநீதிக்கு எதிராகக் கொதித்தெழுந்த நிரந்தரத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் ஆலையினுள் உள்ளிருப்புப் போராட்டத்தை அறிவித்து நடத்தினர்.

 

 

பின்னர், செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் வட்டாட்சியர் முன்னிலையில் தொழிற்சங்கத்துடன் நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு வந்தது. தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் சேர்ந்ததுதான் இந்த ஆட்குறைப்புக்கான காரணம் என்பது வெட்டவெளிச்சமானதால், பேச்சுவார்த்தையின் இடையிலேயே ஒப்பந்ததாரர் நழுவி விட்டார். விழிபிதுங்கிய நிர்வாகம், இறுதியில் தொழிலாளர்களின் போராட்டத்தின் முன்னே பணிந்து, வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்துவதாக உறுதியளித்தது.

நிரந்தரத் தொழிலாளர்கள், தற்காலிகத் தொழிலாளர்களின் பேராதரவுடன் ஒப்பந்த தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டத்தில் பெற்ற இந்த வெற்றியானது, ஓசூர் தொழிலாளர் இயக்க வரலாற்றிலேயே முதன்முறையாகும். இதுவரை எந்த தொழிற்சங்கமும் சாதித்திராத வெற்றியாகும். இந்தப் போராட்ட வெற்றியானது, ஓசூர் வட்டாரத்திலுள்ள அனைத்து தொழிலாளர்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதோடு, தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தியுள்ளது.

பு.ஜ.செய்தியாளர், ஓசூர்.