Sat03282020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்

வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்

  • PDF

வாச்சாத்தி கிராம மக்கள் சந்தனமரக் கடத்தலில் ஈடுபடுவதாகவும், ஆற்றுப் படுகையில் சந்தனக் கட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதாகவும்  கூறிக்கொண்டு, 1992 ஜூன் பத்தாம் நாள் வாச்சாத்தி பழங்குடி கிராமத்திற்கு நூற்றுக்கணக்கில் வந்திறங்கினர், போலீசு, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் ஊழியர்களும்.  அதிகார போதையும் காமவெறியும் தலைக்கேற காட்டுமிராண்டித்தனமாகப் பாய்ந்து, பெற்ற தாய்மார்கள் கண்முன்பாகவே 13 வயது பள்ளிச் சிறுமி உட்பட 18 இளம்பெண்களை நிர்வாணப்படுத்திக் கும்பல் பாலியல் வன்முறை செய்தார்கள். ஆண்களில் பலர் உயிருக்கு அஞ்சி காடுகளுக்குள் ஓடி ஒளிந்து கொள்ள, கையில் சிக்கியவர்களையும் பெண்களையும் அடித்து நொறுக்கினார்கள்.  ஆடு, மாடு, கோழிகள் உட்பட அவர்களின் உடமைகளைக் கொள்ளையடித்ததோடு, உணவு தானியங்களைத் தீ வைத்துக் கொளுத்தியும், குடிநீர்க் கிணற்றில் மண்ணெண்ணெயைக் கொட்டியும் போலீசு ரௌடிகள் நாசப்படுத்தினர். இக்கோரச் சம்பவம் பதினைந்து நாட்களுக்குப் பிறகே வெளி உலகுக்குத் தெரியவந்தது.

 

வாச்சாத்தி வன்கொடுமையை அறிந்த பழங்குடி மக்கள் சங்கமும் அதன் அரசியல் தலைமையான சி.பி.எம். கட்சியும் அதிகாரிகள், அமைச்சர்கள், நீதிமன்றத்திடம் மன்றாடிய பிறகு, பழங்குடி ஆணைய விசாரணைக்கும் அதன் அறிக்கை அடிப்படையில் நட்டஈட்டுக்கும், சி.பி.ஐ. விசாரணைக்கும் வழிபிறந்தது. சி.பி.ஐ. விசாரணைக்குப் பிறகு 269 சீருடைக் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, முதலில் கோவை, கிருட்டிணகிரி, பிறகு தருமபுரி அமர்வு நீதிமன்றங்களில் வழக்கு நொண்டியடித்தது. ஜெயலலிதா ஆட்சியின் முட்டுக்கட்டை, கருணாநிதி ஆட்சியின் அக்கறையின்மை காரணமாக 19 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு, கடைசியாக உயர் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த மாதம் தீர்ப்பு வந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட 269 பேரில் 54 பேர் இறந்து போக, மீதி 85 போலீசார், 125 வனத்துறையினர் 6 வருவாய்த்துறையினர் என 215 பேரும் குற்றவாளிகள் என்றும், பல்வேறு குற்றவியல் பிரிவுகளின் கீழ் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு, அவர்களுள் பாலியல் குற்றவாளிகள் 17 பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதிப்பேர் உடனே பிணையில் விடப்பட்டனர். வழக்கு மேல்முறையீட்டுக்குப் போகிறது.

வாச்சாத்தி கிராம மக்களும், குறிப்பாக பாலியல் வன்முறைக்குப் பலியான பெண்களும், வெளியிலுள்ள அரசியலற்ற படித்த பாமரர்களும் இத்தீர்ப்பை வரவேற்று மனநிறைவு தெரிவித்ததில் வியப்பில்லை. ஆனால், வாச்சாத்தி வன்கொடுமைக்குக் காரணமான குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை.  வழங்கப்பட்டுள்ள தீர்ப்பும் தண்டனைகளும் மீண்டும் வச்சாத்திகள் நடக்காமல் தடுக்கக் கூடியவை அல்லவென்று அறிந்தும் சி.பி.எம். கட்சி மகிழ்ச்சியும் மனநிறைவும் தெரிவிப்பதோடு, நட்டஈடு தொகையைக் கூட்டி கேட்பதோடு அடங்கிக்கொள்வது நியாயமான அரசியலா? ""வாச்சாத்தியில் வன்கொடுமை எதுவும் நடக்கவேஇல்லை. நட்டஈடு தொகைக்கு ஆசைப்பட்டு, போலீசார் மீது பாலியல் வன்முறை புகார்களைப் பெண்கள் கூறுகின்றனர்' என்று சொல்லி போலீசு கிரிமினல் குற்றவாளிகளை அன்று பாதுகாத்த ஜெயலலிதா இப்போதும் முதலமைச்சர். வாச்சாத்தி, சின்னாம்பதி போன்ற பல பாசிச அரச பயங்கரவாதக் குற்றங்களைத் தானே அரங்கேற்றிய ஜெயலலிதா, நரேந்திர மோடி போன்ற இந்து மதவெறி பயங்கரவாதிகளைச் சகபாடிகளாகக் கொண்டிருப்பவர்;  இந்த அரசியல் பாசிசப் பண்பை அவர் ஒருபோதும் மாற்றிக்கொள்ளவே மாட்டார் என்று அறிந்தும், மாறி மாறி அவருடன்  அணிசேருகின்றனர் போலி கம்யூனிஸ்டுகள்.

வாச்சாத்தி மக்கள் மீது தாக்குதல் நடவடிக்கைக்கு உத்திரவிட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசு அதிகாரிகள் தண்டனை ஏதுமின்றித் தப்பித்துக் கொண்டார்கள். வாச்சாத்தி குற்றவாளிகள் 19 ஆண்டு காலம் சுதந்திரமாக இருந்ததோடு, மேலும் மேல்முறையீடு என்று தண்டனையின்றித் தப்பித்து வாழ்வார்கள். குற்றமிழைத்துவிட்டு இயல்பாக செத்துப் போனார்கள் 54 பேர். இதையும், குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனையை அனுபவிக்காமல் 15 ஆண்டுகளாகியும் இழுத்தடிக்கப்படும் சொத்துக் குவிப்பு வழக்கால் பாதிக்கப்படாமல் ஜெயலலிதா பதவி சுகத்தை அனுபவிப்பதையும் ஒப்பிடாமல் இருக்க முடியாது. ஜவ்வாதுஏலகிரி மலைப்பகுதியிலும், மாதேசுவர மலையிலும் அரச பயங்கரவாத வெறியாட்டம் போட்ட தேவாரம், விஜயகுமார் போன்ற அதிகாரிகள் விருதுகளும், வெகுமதிகளும் பெற்றதையும் எண்ணிப் பாராமல் இருக்க முடியாது.

போலீசு, அதிகாரிகளின் கைகள் கட்டப்படாமல், அரசியல் தலையீடின்றிச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று அக்கிரகார அரசியல்வாதிகள் பேசுவது ஊடகங்களால் ஊதி முழக்கப்படுகிறது. போலீசும் அதிகாரிகளும் சுதந்திரமாக செயல்பட்டால் மக்களுக்கு என்ன நேரும் என்பதற்கு வாச்சாத்திகளே சாட்சியமாகியுள்ளன.

Last Updated on Tuesday, 10 January 2012 20:34