தீவிரவாத  பிரிவினைவாத எதிர்ப்பு என்ற பெயரில் காஷ்மீரில் நடத்தப்பட்டுவரும் "தேசபக்த' இனப்படுகொலைகள் பற்றிய உண்மைகள், அண்மையில் ஜம்மு காஷ்மீர் மாநில மனித உரிமைகள் கமிசன் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காஷ்மீரில் அப்பாவிகளான 2730 பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டு பாரமுல்லா, பண்டிபோரா, ஹந்த்வாரா, குப்வாரா ஆகிய நான்கு மாவட்டங்களில் 38 இடங்களில் "அடையாளம் தெரியாதவர்கள்' என்ற பெயரில் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இரகசியமாக இடுகாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, காஷ்மீர் போலீசாரால் புதைக்கப்பட்டுள்ளன.

 

 

1990  களில் காஷ்மீரில் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் புதிய வேகத்தில் முன்னேறத் தொடங்கியதிலிருந்து இதுவரை பல்லாயிரம் பேர் "காணாமல் போயுள்ளனர்'. ஆனால், மாநில அரசாங்கமோ 3744 பேர் மட்டுமே காணாமல் போயுள்ளதாகவும், 1990லிருந்து அவர்கள் பாகிஸ்தானில் தங்கி ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டுத் தீவிரவாதிகளாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தது. இதை ஏற்க மறுத்து கணவரையும் புதல்வர்களையும் உறவினர்களையும் பறிகொடுத்த காஷ்மீரிகள் "காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்க'த்தின் மூலம் தொடர்ந்து போராடியதன் விளைவாக, அம்மாநிலத்தின் மனித உரிமை கமிசன் தனது புலனாய்வுப் பிரிவைக் கொண்டு விசாரணையை மேற்கொண்டது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில், அடையாளம் தெரியாதவர்கள் என்று புதைக்கப்பட்ட கல்லறைகளில் 574ஐத் தோண்டிப் பிணங்களைச் சோதித்தபோது,  அனைவரும் காஷ்மீரின் உள்ளூர்வாசிகள் என்று இப்போது ஆதாரத்துடன் நிரூபணமாகியுள்ளது.

காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, கடந்த 1989 முதல் 2009 வரையிலான காலத்தில் 70,000 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.  அம்மாநிலத்தை ஆக்கிரமித்துள்ள 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணுவ மற்றும் துணை இராணுப்படைகள் கண்மூடித்தனமாக இப்படுகொலைகளை நடத்தியுள்ளன. தீவிரவாதிகளைக் கொன்றொழித்தால் பரிசுகளும் பதவி உயர்வும் இந்திய அரசால் அளிக்கப்படுவதால் போட்டிபோட்டுக் கொண்டு மோதல் என்ற பெயரில் உதிரத்தையே உறைய வைக்கும் படுகொலைகளும், போலீசு கொட்டடிக் கொலைகளும் கேள்விமுறையின்றி நடத்தப்பட்டுள்ளன.

இந்திய இராணுவத்தின் அரசு பயங்கரவாத இனப்படுகொலை அம்பலமானதைத் தொடர்ந்து, அனைத்துலக பொதுமன்னிப்புக் கழகமும் (ஆம்னஸ்டி), அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் மனித உரிமைக் கங்காணி அமைப்புகளும் மாநிலம் முழுவதுமுள்ள அடையாளம் தெரியாதவர்களின் கல்லறைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அக்கல்லறைகளும் பாதுகாப்புப் படையினரால் பாதுகாக்கப்பட்டு, மரபணுவியல்  தடயவியல் நிபுணர்கள் மூலம் சிதைந்த எலும்புகளைக் கொண்டு சோதனை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது. மனித உரிமைகள் கமிசனிடம் சாட்சிய மளித்தவர்களுக்கும், மனித உரிமை இயக்கச் செயல்வீரர்களுக்கும், கமிசனின் புலனாய்வுப் பிரிவினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்; காணாமல் போனவர்கள் பற்றி முழுமையான நீதியான வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்; குற்றம் சாட்டப்பட்டவர்களும் சந்தேகப்படுபவர்களும் அனைத்துலக நீதிமன்றத் தரத்தின்படி விசாரிக்கப்பட வேண்டும்; பாதிக்கப்பட்டோ ரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசைக் கோரியுள்ளன.

காஷ்மீர் மாநில அரசும் மைய அரசும் இது குறித்து இன்றுவரை மௌனம் சாதிக்கின்றன. மனித உரிமைக் கும் உயிர்  வாழும் உரிமைக்கும் இந்திய அரசு பயங்கரவாதிகளால் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள போதிலும், நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்தியுள்ள இந்த இனப்படுகொலையைக் குறித்து அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் இன்னமும் வாய்திறக்காமல் இருப்பதுதான் அதைவிடப் பெருத்த அவமானம்.

காஷ்மீரில் மட்டுமல்ல, இதற்கு முன் பஞ்சாபில் பயங்கரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில் 1984 முதல் 1995 வரை இதேபோல மோதல் படுகொலைகளும் சாமானியர்கள் காணாமல் போவதும் நடந்துள்ளன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இத்தகைய அரசு பயங்கரவாதப் படுகொலைகளும் அட்டூழியங்களும் இன்றும் கேள்விமுறையின்றித் தொடர்கின்றன.

ஈழத்தில் இனப்படுகொலை பயங்கரவாதத்தை நடத்திய ராஜபக்சே அரசு போர்க்குற்றவாளி என்றால், காஷ்மீரில் துடிக்கத் துடிக்க இனப்படுகொலைகளை இரகசிய மாக நடத்தியுள்ள இந்திய அரசும் அதன் இராணுவமும் புனிதர்களா? இத்தகைய அட்டூழியங்களை நடத்திவரும் போலீசு  இராணுவத்துக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு, காஷ்மீரில் காலனிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதுதான் தேசிய ஒருமைப்பாடா? ஜனநாயக உணர்வு கொண்ட ஒவ்வொருவரையும் உலுக்கும் கேள்விகளே இவை.

முத்து