தமிழகம் முழுவதும் 411 வாகனங்களைப் பல ஊர்களில் நிறுத்தி வைத்து, எதிர்பாராமல் நிகழும் சாலை விபத்துகள், மாரடைப்பு, தீக்காயங்கள் மற்றும் நோய்களுக்கு அவசர உதவிகளைச் செய்து, பாதிக்கப்பட்டோரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்று காப்பாற்றும் பணியைச் செய்து வருகிறது, 108 ஆம்புலன்ஸ் சேவை. ஆனால், இதில் பணியாற்றும் ஊழியர்கள் நிர்வாகத்தால் கசக்கிப் பிழியப்படும் கொடுமையும், இச்சேவையைப் பயன்படுத்தி ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. (அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிக்கழகம்  என்ற தனியார் நிறுவனம் அடிக்கும் கொள்ளையும் பலரும் அறியாதது.

நாளொன்றுக்கு 12 மணிநேரம் வீதம் இரண்டு ஷிப்டுகளில் பணிபுரியும் இதன் ஊழியர்கள், வாகனம் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் ஓய்வறையோ, கழிவறையோ,குடிநீர் வசதிகூட இல்லாமல் கொத்தடிமைகளைவிடக் கேவலமாக நடத்தப்பட்டு சுரண்டப்படுகின்றனர். இதற்கு வட்டார, மாவட்ட மருத்துவத்துறை அரசு அதிகாரிகள் உடந்தையாக நின்று ஆதாயமடைகின்றனர்.  குறிப்பாக சிவகங்கை,  இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களின் அதிகாரியான (டி.எம்.) பால் ராபின் சன், தொழிலாளர்களைக் கேவலமாக வசைபாடுவதோடு, சட்டவிரோதமாக வேலை வாங்குவதும் மிரட்டுவதும் கேள்விமுறையின்றித் தொடர்கிறது.

இக்கொத்தடிமைத்தனத்துக்கு எதிராகக் குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு.வைத் தொடர்பு கொண்ட பிறகு, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை விளக்கியும் தனியார்மயக் கொத்தடிமைத்தனத்தை அம்பலப்படுத்தியும் துண்டுப் பிரசுரம், சுவரொட்டிகள் வாயிலாகப் பிரச்சார இயக்கத்தை பு.ஜ.தொ.மு. மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, 18.8.2011 அன்று மாலை இராமநாதபுரம் அரண்மனை வாயிலருகே சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டங்களின் பு.ஜ.தொ.மு. அமைப்பாளர் தோழர் நாகராசன் தலைமையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று 108இன் நிர்வாகம் மிரட்டியபோதிலும் அதனைத் துச்சமாக மதித்து நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம், தொழிலாளர்களிடம் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழகமெங்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை அமைப்பாக்கிப் போராடஉந்துவிசையாக அமைந்தது.

பு.ஜ. செய்தியாளர், சிவகங்கை.