தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்கெனவே தனியார் பேருந்துகளும் லாரிகளும் ஒரு மாதத்துக்கு ஏறத்தாழ ரூ.3,000 செலுத்தி வந்த டோல் கேட் கட்டணம், இப்போது ரூ.38,000 முதல் ரூ.65,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இப்பகற் கொள்ளையை எதிர்த்தும், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்,டோல்கேட் அமைந்துள்ள மாவட்டங்களைச் சேர்ந்த லாரிகளுக்கு 50 சதவீத வரியை வசூலிக்க வேண்டும், காலியான வாகனங்களுக்கு 25 சதவீத வரியை வசூலிக்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளுடன் கடந்த ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் தனியார் பேருந்து, லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாரிகள் ஓடாததால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டதோடு, காய்கறிகள்தானியங்களின் விலை உயர்ந்து பொதுமக்கள் பெருத்த பாதிப்புக்கு ஆளாகினர். கிருஷ்ணகிரி வட்டத்தின் அரசு போக்குவரத்துக் கழகம் மாதம் ரூ. 8 லட்சம் அளவுக்கு டோல்கேட் கட்டணம் செலுத்தி தொடர்ந்து நட்டப்பட்டு வருகிறது. இதைக் காரணம் காட்டி தனியார்மயமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

டோல்கேட் பகற்கொள்ளை என்பது பேருந்து  லாரி உரிமையாளர்களின் பிரச்சினை மட்டுமல்ல, நம் அனைவரின் பிரச்சினை என்பதை விளக்கி பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட பு.ஜ.தொ.மு., வி.வி.மு. ஆகிய அமைப்புகள், அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே 19.8.2011 அன்று மாலை மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தின. பு.ஜ.தொ.மு. மாவட்டச் செயலர் தோழர் சங்கர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த தொழிலாளி தோழர் செல்வராஜ், பு.ஜ.தொ.மு. பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர் இரவிச்சந்திரன், பு.ஜ.தொ.மு. மாவட்டத்தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் உரையாற்றினர். உள்ளூர் பேருந்து மற்றும் லாரி உரிமையாளர்கள் உழைக்கும் மக்களுடன் இணைந்து தனியார்மயக் கொள்ளைக்கு எதிராகப் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டம், இவ்வட்டாரமெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

பு.ஜ.செய்தியாளர், கிருஷ்ணகிரி.