09302022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

கோக்: அடிமைத்தனத்தின் சுவை

09_2005.jpg

வெள்ளையனுக்குக் கப்பம் கட்ட மறுத்து தூக்கில் தொங்கினான் கட்டபொம்மன். சுதேசிக் கப்பல் கம்பெனியை இயக்கிக் காட்டினார் வ.உ. சிதம்பரம். சுந்தரலிங்கம், பூலித்தேவன் என்று ஒரு வீரம் செறிந்த மரபைக் கொண்ட நெல்லை மண்ணின் மக்களுக்கு ஒரு சோடா கலர் கம்பெனி இன்று சவால் விடுகிறது.

 

கேவலம் ஒரு சோடா கலர் கம்பெனிதானே என்று நினைக்கலாம்; அரசாங்க முட்டை அம்மியை உடைக்கும் என்பதுபோல, இது அமெரிக்கக் குளிர்பானம்; எனவே, இது ஆற்றையே குடிக்கும்!

 

200 நாடுகளில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வியாபாரம் செய்யும் இந்த அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனம் ஒரு வகையில் ஆயுதக் கம்பெனிகளைக் காட்டிலும் அபாயகரமானது.

 

90களின் துவக்கத்தில் இந்திய மென்பானச் சந்தையில் 60 சதவீதத்தை வைத்திருந்த கோல்ட் ஸ்பாட், தம்ஸ் அப் போன்ற பானங்களைத் தயாரித்து வந்த பார்லே நிறுவனத்தை வெறும் 123 கோடி ரூபாய்க்கு வாங்கியது கோக். வாங்கியவுடன் பார்லேவின் புகழ் பெற்ற தயாரிப்பான கோல்ட் ஸ்பாட்டை அழித்தது. "தம்ஸ் அப்' கோக் நிறுவனத்தின் தயாரிப்பாக விற்பனை செய்யப்பட்டது. கோக் கைப்பற்றியது பார்லேயின் சந்தையை மட்டுமல்ல, அதன் இரண்டு இலட்சம் சில்லரை வியாபாரிகளையும், நாடு தழுவிய வலுவான வலைப் பின்னலையும்தான்.

 

பார்லேவைப் போன்ற மிகப் பெரிய நிறுவனமே கோக்கிடம் சரணடைந்தபின் மற்ற சிறு மென்பான நிறுவனங்களை பற்றிக் கேட்கவும் வேண்டுமா? தமிழக மென்பானத் தயாரிப்புகளான காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் மற்றும் வேலூர் பன்னீர் சோடாக்கள் கோக் பெப்சி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நாடெங்கும் இது போன்ற நூற்றுக்கணக்கான சிறு நிறுவனங்கள் அழிந்ததால் பல ஆயிரம் தொழிலாளர் குடும்பங்கள் வாழ்விழந்தன.


இப்படி உள்ளூர்த் தொழிலை அழித்து தன் தயாரிப்பைத் தவிர வேறெதுவும் சந்தையில் விற்கப்பட முடியாத நிலையை உருவாக்கி, இன்று 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய மென்பானச் சந்தையில் 95 சதவீதத்தைக் கைப்பற்றியுள்ளன கோக் மற்றும் பெப்சி நிறுவனங்கள்.

 

கோக்கின் சுவை இந்திய நாக்கிற்கே புதியது. அச்சுவைக்குக் காரணமான இரசாயனக் கலவையைப் பற்றி யாருக்கும் தெரியாது. அதில் போதையளித்து அடிமையாக்கக் கூடிய கோகோ சாறு உள்ளிட்ட பல பொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் கேவலம் ஒரு மென்பானத்தில் கலக்கப்படும் மூலப்பொருட்கள் என்ன என்ற இந்த அற்பமான விசயம் ஒரு இராணுவ இரகசியம் போலக் காப்பாற்றப்பட்டு அந்த "பார்முலா' இன்று வரை அட்லாண்டாவிலிருந்து விமானத்தில் வந்து இறங்கிக் கொண்டிருக்கிறது.

 

கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பதிலாக சோடா கலர் கம்பெனி; ராபர்ட் கிளைவ், வாரன் ஹேஸ்டிங்ஸ் போன்ற கொடுங்கோலர்களுக்குப் பதிலாக த்ரிஷா, விக்ரம், சூர்யா போன்ற "கிளுகிளு' பார்ட்டிகள்; தூக்குமரம், செக்கு, அந்தமான் சிறை ஆகியவற்றுக்குப் பதில் பிட்ஸா கார்னர், மழை நடனங்கள், களியாட்டங்கள்! வியக்கத்தக்க முன்னேற்றம்தான்!

2003இல் கோக்பெப்சி பற்றிய இன்னொரு "சிதம்பர இரகசியம்' அம்பலமானது. டில்லியைச் சேர்ந்த "விஞ்ஞானம் மற்றும் சுற்றுச் சூழலுக்கான கழகம்' (இ.கு.உ.), கோக் பெப்சி தயாரிப்புகள் அனைத்தையும் ஆராய்ந்து, அதில் பெரும் அபாயத்தை விளைவிக்கக் கூடிய பூச்சிக் கொல்லிகளான டி.டி.டி., மாலதியான், லின்டேன் போன்றவை அனுமதிக்கப்பட்ட சர்வதேச அளவைவிட 36 மடங்கு அதிகமாக உள்ளது என அறிவித்தது.உடனே அப்போதைக்கு ஒரு சலசலப்பும் விற்பனை வீழ்ச்சியும் ஏற்பட்டதென்னவோ உண்மைதான். ஆனால் விரைவிலேயே அந்த பூச்சி மருந்து வியாபாரம் பழையபடி களைகட்டத் தொடங்கிவிட்டது.

 

நஞ்சு எனத் தெரிந்தபின்னரும் கோக் ரசிகர்கள் அதை வாங்கிக் குடிக்கிறார்கள் என்றால், டி.டி.டி.யைவிடக் கொடியதொரு நஞ்சுக்கு அவர்களது மூளை பழக்கப்பட்டு விட்டது என்பதே காரணம். அமெரிக்க நுகர்வுப் பண்பாட்டைக் கடைவிரிக்கும் ஹாலிவுட், பர்கர், பீட்சா, ராப்பிசை, எம்.டி.வி., எஃப்.டி.வி., வால்ட் டிஸ்னி போன்றவைகளுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது கோக்பெப்சி கலாச்சாரம்.

வாங்கும் சக்தியுடைய வலுவான 15 கோடி இந்திய நடுத்தர வர்க்கமே கோக்கின் குறி. இந்த வர்க்கத்தினரை ஒவ்வொரு மாதமும் சில நூறு ரூபாய்களை கோக்பெப்சிக்காகச் செலவிட வைப்பதே அவர்களின் இலக்கு. இதை அடைய கோக்பெப்சி வகுக்கும் உத்திகள்தான் அவர்களின் வர்த்தக மேலாண்மை. அந்த உத்திகளுள் மிக முக்கியமானது இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பது. ""சேமிக்காதே செலவழி, கையில் காசு இல்லையா கிரெடிட் கார்ட் இருக்கிறதே; வாரம் முழுவதும் மாடு மாதிரி வேலை செய் வார இறுதியில் மாடு மாதிரி கொண்டாடு; சனிக்கிழமை இரவா காபி பார், டிஸ்கொத்தே, அல்லது பிட்சா ஹட்; ஞாயிறா சத்தியம், மாயாஜால், கிஷ்கிந்தர் அரசியலா அதுபற்றிக் கவலையில்லை, சமூகமா எவன் எப்படிப் போனா என்ன?'' என இந்திய நடுத்தர வர்க்கத்தின் சிந்தனையை, பொருளாதாரக் கண்ணோட்டத்தை, உணவை, உறவை, உடையை அனைத்தையும் அமெரிக்கத் "தரத்' திற்கு மாற்றுவதுதான் கோக்பெப்சியின் வழிமுறை. இதைச் சாத்தியமாக்க அவர்கள் கையாளும் ஆயுதங்கள்தான் விளம்பரங்கள்.

 

ஒரு உற்பத்தியாளர் தனது தயாரிப்பை விளம்பரப்படுத்தும் பொழுது அதன் தரத்தையும் பயன்பாட்டையுமே விளம்பரம் செய்வாரென நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் கோக்பெப்சியின் பதினைந்து ஆண்டுக்கால விளம்பரங்களை நினைவுபடுத்திப் பாருங்கள்! அவை ஒன்று கூட பயன்பாட்டைச் சொல்லாது, வாழ்க்கைக் கண்ணோட்டத்தையே சொல்லும்.

 

பெப்சி, தான் ஏன் சரியான தேர்வு எனச் சொல்லாமலேயே ""யே ஹி ஹே ரைட் சாய்ஸ் பேபி'' என இந்திய மக்களை "ஆஹா!' போட வைத்ததில் துவங்கிய இந்த விளம்பர மோசடி இன்று ""கூல் டிரிங்குன்னா கோக்ககோலா'' வரை தொடர்கிறது. "சுதந்திரம்னா பெப்சி' "மனம் போல் தினம் ஜமாய் கோக்ககோலா என்ஜாய்'', "உள்ளம் கேட்குமே மோர்', "கோக் அடி கூல், லைஃபே தூள்', "ஹேவ் எ பெப்சி ப்ளே இட் கூல்', "என்ஜாய் கோக்' போன்ற விளம்பரங்களை கோல்ட் வின்னரின் எண்ணெய் விளம்பரத்துடனோ, சக்தி மசாலா விளம்பரத்துடனோ ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை சட்டென புரிந்து விடும்.

 

லாபம் மட்டும்தான் இலக்கு என்றால், ஏற்கெனவே இந்திய மக்களின் நாவுக்குப்
பிடித்தமானதாக இருக்கும் ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைச் சுவைகளிலேயே தனது பானத்தை கோக் அறிமுகப்படுத்திக் காசு பார்த்திருக்கலாம். ஆனால், ""இதுதான் கோக்கின் சுவை!


இந்தச் சுவைக்கு ஏற்ப உன் நாக்கை மாற்றிக் கொள். நான் மாற முடியாது!'' என்கிறது கோக்.

கோக்பெப்சி விளம்பரப் படங்களின் காட்சிகளை அமைத்திருக்கும் விதமே அவர்களின் நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது. அழகான பெண்கள், ராக் இசை நிகழ்ச்சிகள், கிரிக்கெட் போட்டிகள், மேட்டுக்குடி கல்லூரி வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், சொகுசுக் கார்கள், சினிமா கதாநாயகர்கள், நாயகிகள், கிரிக்கெட் வீரர்கள், கல்லூரி மாணவர்கள் என இவர்கள் தங்கள் பானத்துடன் சேர்த்து ஒரு பண்பாட்டுச் சூழலையும் விற்கிறார்கள். தொலைக்காட்சி, எஃப்.எம், செய்தித்தாள், பிரம்மாண்ட விளம்பர பலகைகள், சுவர் விளம்பரங்கள், வாகன விளம்பரங்கள், தோரணங்கள், கடைகளின் பெயர்ப் பலகைகள், தொப்பிகள், தட்டிகள், பேனர்கள், போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் ஏன் இமயமலைப் பாறைகளைக் கூட சிவப்பும் நீலமுமாக மாற்றியிருக்கின்றன கோக்பெப்சி நிறுவனங்கள்.

 

மேற்கூறியவை போல நேரடி விளம்பரங்கள் மட்டும் அல்லாமல் சினிமா, டிவி சீரியல்கள், சிறப்பு நிகழ்ச்சிகள், நுகர்பொருள் கண்காட்சிகள், விளையாட்டுப் போட்டிகள், கேளிக்கை நடனங்கள் போன்றவற்றின் விளம்பரதாரர்கள் இவர்கள்; பீட்சா முதல் தோசை வரை அனைத்து உணவுப் பொருட்களுடனும் இலவசமாகவோ, கூட்டாகவோ, பெப்சி கோக் வழங்குகிறார்கள்; ரெயில்வே நிலையம், பேருந்து நிலையம், கல்லூரிகள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், பெட்ரோல் பங்குகள், சூப்பர் மார்ட்டுகள், உடற்பயிற்சி நிலையங்கள், உணவகங்கள், திரையரங்குகள் போன்ற பொது இடங்களில் குடிநீர்த் தொட்டிகளை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தை கோக்பெப்சியின் தானியங்கி இயந்திரங்கள் ஆக்கிரமித்து உள்ளன.

 

இவைதவிர "பெப்சி குடி சினிமாவில் நடி', "கோக் லேபிளைப் பிரி செல்போன் ஃப்ரீ' என்னும் போட்டிகள்! தனது விளம்பரச் செலவுகளுக்காக மட்டும் பல நூறு கோடிகளை வாரி இரைத்து, நடுத்தர வர்க்கத்தை நான்கு திசைகளிலிருந்தும், அணுகுண்டு போல தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்கித் தனது குளிர்பானங்களில் அமெரிக்க நுகர்வெறிப் பண்பாட்டைக் கலந்து பருக வைத்து, அடிமையாக்கி இருக்கிறது கோக்.

 

பூச்சி மருந்துப் பிரச்சினை ஒருபுறமிருக்கட்டும். ஒரு மென்பானம் என்ற முறையில் கோக்கின் சுவையில் அப்படி என்னதான் சிறப்பு இருக்கிறது? அது நமது நாட்டின் விதவிதமான பழச்சாறுகள் வழங்கும் சுவையைக் காட்டிலும் உன்னதமான சுவையா என்றால் அதுவுமில்லை.

 

முதன்முதலில் கோக் குடிப்பவர்கள் அதைச் சிரமப்பட்டுத்தான் விழுங்குகிறார்கள். உலகத்துக்கே "பிடித்தமான' இந்தச் சுவை நமக்கு மட்டும் பிடிக்காமல் போனால் அது இழிவோ என்று அஞ்சி சகித்துக் கொள்கிறார்கள். பிறகு மெல்ல மெல்ல அதற்குப் பழகி அடிமையாகி விடுகிறார்கள்.

 

வணிகமும் லாபமும் மட்டும்தான் இலக்கு என்றால், ஏற்கெனவே இந்திய மக்களின் நாவுக்குப் பிடித்தமானதாக இருக்கும் ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைச் சுவைகளிலேயே தனது பானத்தை கோக் அறிமுகப்படுத்திக் காசு பார்த்திருக்கலாம்.

ஆனால் காசுக்காகக் "கொள்கை' யைத் துறக்க கோக் நிறுவனம் தயாராக இல்லை. ""இதுதான் கோக்கின் சுவை! இந்தச் சுவைக்கு ஏற்ப உன் நாக்கை மாற்றிக் கொள். நான் மாற முடியாது!'' என்கிறது கோக்.

 

""இந்தியச் சந்தையில் எங்கள் முதல் எதிரி எலுமிச்சைச் சாறுதான்'' என்று பத்தாண்டுகளுக்கு முன் அறிவித்தார் கோக் நிறுவனத்தின் தலைவர். பல்வேறு விதமான உணவுகள், பல்வேறுவிதமான சுவைகளுக்குப் பாரம்பரியமாகப் பழக்கப்பட்டிருக்கும் மக்களுடைய நாவின் சுவை நரம்புகளையே தான் சொன்னபடி ஆட்டி வைக்க முயலும் இந்த ஆதிக்க மனோபாவத்திற்கு இன்னுமென்ன விளக்கம் வேண்டும்?

 

"ஒரே பண்பாடு, ஒரே வாழ்க்கை முறை, ஒரே சுவை' என்று வெளிப்படையாகச் சொல்லாமல் நடைமுறையில் இந்த அடிமைத்தனத்திற்குத் தன் ரசிகர்களைப் பழக்கப்படுத்தியிருக்கிறது கோக். அதனால்தான் "கோக்'கின் மீதான விமரிசனங்களைத் தன் மீதான விமரிசனமாகவும், தனது ஆளுமை மீதான விமரிசனமாகவும் கருதுகிறார்கள் கோக் ரசிகர்கள். ரஜினி ரசிகனைக் காட்டிலும் இழிந்த இந்த மனநிலை "பூச்சிமருந்தை'ச் சுவைத்துக் குடிப்பதில் வியப்பில்லை.கோக் குடிப்பவர்கள் அதன் கலாச்சார வன்முறைக்கு இலக்காகிறார்களென்றால், அதனைக் குடிக்காதவர்கள் "கோக்'கின் நேரடி வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

 

ஒரு லிட்டர் கோக் தயாரிக்க ஏழு லிட்டர் கழிவு நீரை வெளியேற்றுகின்றன கோக்பெப்சி ஆலைகள். வெளியேறும் ஒவ்வொரு லிட்டர் கழிவு நீரும் மேலும் எட்டு லிட்டர் நிலத்தடி நீரை மாசுபடுத்திப் பயனற்றதாக்குகிறது என்கிறார்கள் சூழலியல் ஆய்வாளர்கள். ஆக 1 லிட்டர் கோக் தயாரிக்க 56 லிட்டர் நல்ல நீர் அழிகிறது. ஏற்கெனவே நிலத்தடி நீரில்லாமல் மரணத்தின் விளிம்பில் நிற்கும் இந்திய விவசாயிகளின் தலையில் இடியென இறங்கிக் கொண்டிருக்கின்றன கோக்கின் ஆலைகள்.

 

கேரளா (பிளாச்சிமடா):

 

வறட்சியென்றால் என்னவென்றே அறியாத கேரளாவின் நீர்வளமிக்க பிளாச்சிமடா கிராமத்தில் 2000ம் ஆண்டு இந்தியாவிலேயே தனது மிகப்பெரிய ஆலையை அமைத்தது கோக். நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சியெடுத்து இரண்டே ஆண்டுகளில் பிளாச்சிமடாவை நீர் ஆதாரமற்ற பாலை நிலமாக மாற்றியது.

 

உத்திரப்பிரதேசம் (வாரணாசி):

 

வாரணாசியில் இயங்கிவந்த பார்லேயின் ஆலையை வாங்கிய கோக், நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சியெடுத்தது. மேலும் தனது நச்சுக் கழிவுகளை வயல்வெளிகளிலும், கால்வாய்களிலும், கங்கை நதியிலும் கொட்டி ஊரையே சாக்கடையாக்கியது கோக். விவசாயிகள் தங்கள் வயல்களில் கொட்டப்பட்ட கழிவுகளை அப்புறப்படுத்த முனைந்த பொழுது பல வினோதமான சரும நோய்களால் பீடிக்கப்பட்டனர். கொசுக்கள் பெருகி மலேரியா காய்ச்சல் பரவியது. மண் அழிந்தது, நீர் அழிந்தது, வாழ்வழிந்தது.

 

ராஜஸ்தான் (காலாதரா):

 

பாலைனப் பகுதியான ராஜஸ்தானையும் கோக் விட்டு வைக்கவில்லை. அம்மாநிலத்தின் நீர்வளமிக்க பகுதியான காலாதராவில் 1999இல் ஆலை அமைத்த கோக், 24 மணி நேரமும் போர் பம்புகளை இயக்கி ஒன்பதே மாதங்களில் 1,74,301 கன அடி தண்ணீரை உறிஞ்சி எடுத்து காலாதராவையும் பாலைவனமாக்கியது.

 

மகாராட்டிரம் (தானே):

 

1997இல் தானேவின் வாடா தாலூக்காவில் ஆலை அமைத்த கோக் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சியது. ஆற்றில் நீர் வரத்து இல்லாத பொழுதும் அணையிலிருந்து குழாய் மூலம் நீரை வரவழைத்து மக்களுக்கு நீரில்லாமல் செய்ததன் விளைவாகக் குடிக்கக் கூட நீரில்லாமல் ஊரை காலி செய்யும் நிலைக்கு மக்களைத் தள்ளியது கோக்.

 

இவை தவிர ஆந்திரம், வங்காளம், பஞ்சாப் என பெப்சி கோக் ஆலைஅமைத்த இடங்களிலெல்லாம் நன்னீர் வளங்களை அழித்தே தனது மென்பானத்தையும், பாட்டில் நீரையும் விற்பனை செய்கிறது.

 

தனது பணபலம், அதிகார பலத்தின் மூலமாக கோக்பெப்சி தனது குற்றங்களையும் அதற்கெதிரான மக்கள் போராட்டங்களையும் எந்த ஊடகங்கள் வாயிலாகவும் உலகத்திற்குப் போய்ச் சேராமல் இருட்டடிப்பு செய்கிறது.

 

பூச்சி மருந்து விவகாரம் கிளம்பியவுடனே கோக்கிற்கு நற்சான்று கொடுத்தார் அமைச்சர் சுஷ்மா சுவராஜ்; பிளாச்சிமடாவில் நிலத்தடி நீர் வற்ற கோக் காரணமல்ல என்றது "நிபுணர்' குழு; கோக்கின் கழிவுகளால் நிலம் பாழாகவில்லை என்று சத்தியம் செய்கிறார்கள் உ.பி. மாநில மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள்.

 

கோக்கிற்கு எதிராகப் பேசுபவர்கள் அரசின் அடக்குமுறையைச் சந்தித்தாக வேண்டும். பிளாச்சிமடாவில் அமெரிக்க மூலதனம் "தாக்கப்படுவது' குறித்துக் கவலை தெரிவிக்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர்.

 

அரசு மூலமாக மட்டுமல்ல, கேரள உயர்நீதி மன்றம் மூலமும் கோக் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. தற்போது உச்சநீதி மன்றத்தில் நடக்கும் வழக்கில் கோக் முன்வைக்கும் வாதம் சொரணையே இல்லாத எருமை மாடுகளுக்கும் சொரணை அளிக்கத்தக்கது.

 

""உங்கள் நாட்டுத் தண்ணீரிலும் கரும்பிலும் பூச்சி மருந்து இருக்கும்போது என்னுடைய குளிர்பானத்தை மட்டும் ஏன் கேள்வி கேட்கிறாய்?'' என்கிறது கோக்.

 

இந்த "கோக்'கிற்குத்தான் லிட்டர் ஒண்ணே கால் பைசாவுக்குத் தாமிர வருணித் தண்ணீரை வழங்க இருக்கிறது தமிழக அரசு. பாட்டில் தண்ணீர் பிரியர்களும், கோக் ரசிகர்களும் அதைக் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கவும் போகிறார்கள்.

 

கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பதிலாக சோடா கலர் கம்பெனி; ராபர்ட் கிளைவ், வாரன் ஹேஸ்டிங்ஸ் போன்ற கொடுங்கோலர்களுக்குப் பதிலாக த்ரிஷா, விக்ரம், சூர்யா போன்ற "கிளுகிளு' பார்ட்டிகள்; தூக்குமரம், செக்கு, அந்தமான் சிறை ஆகியவற்றுக்குப் பதில் பிட்ஸா கார்னர், மழை நடனங்கள், களியாட்டங்கள்!

 

வியக்கத்தக்க முன்னேற்றம்தான்!

கார்மேகம்