முத்துக்குமாரின் உடல் தமிழகத்தைத் தட்டியெழுப்பியதைப் போல, தன் உடலும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்களின் உயிரைக் காப்பாற்றப் பயன் படட்ம் என்ற நம்பிக்கையுடன் கடிதம் எழுதி வைத்து விட்டு, காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் இயங்கிவந்த 21 வயதான பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளம் பெண் தோழரான செங்கொடி, கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஞாயிறன்று தனது உடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டு தியாகியாகியுள்ளார்.
அரசியலற்ற அமைதியிலும் விரக்தியிலும் நம்பிக்கையின்மையிலும் மூழ்கடிக்கப்பட்டுள்ள தமிழகத்தைத் தனது தீக்குளிப் பினால் இரு ஆண்டுகளுக்கு முன்னர் தட்டியெழுப்பினார், முத்துக்குமார். இன்றும் அதே நிலைமைதான் தொடர்கிறது. இன்னும் விழித்தெழாத தமிழகத்தின் அரசியலற்ற கோழைத்தனமும், கருணையை எதிர்பார்த்து நிற்கும் அவலமுமே அந்த இளம் பெண்ணின் உள்ளத்தை எரித்திருக்கிறது. மூவர் தூக்கை நிறுத்துமளவுக்கு நம்பிக்கையூட்டும் போராட்டங்களும் அரசியல் முழக்கங்களும் தமிழகத்தைப் பற்றியிருந்தால், செங்கொடி தீக்குளிக்க நேர்ந்திருக்காது.
சென்றுவாருங்கள், தோழர் செங்கொடி! உணர்ச்சி வேகத்தில் நீங்கள் தீக்குளித்திருந்தாலும், சரியான திசையில் போராடாத தமிழகத்தை நீங்கள் சாடியிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டுள்ள தோழர்கள், நீங்கள் எழுப்பியிருக்கும் கோரிக்கையை நிறைவேற்றப் போராடுவார்கள். உங்களின் தீக்குளிப்பு அந்தப் போராட்டத்தை நெருப்பாய் பற்ற வைக்கும். மூவர் தூக்கிற்குக் காரணமான பாசிச காங்கிரசு அரசு, பாசிச ஜெயா, அநீதியான நீதிமன்றங்கள் மீதான போராட்டத் தீயின் அனலால் தமிழகமே கொதிக்கும்!