09302022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம்!

09_2005.jpg

ஆறு, கடல், காடு, மலைகள் அனைத்தையும் தனியார்மயமாக்கக் கோரும் உலக முதலாளி வர்க்கத்தின் கரங்களில் வேதப்புத்தகமாகவும் நீதிநூலாகவும் பயன்பட்டு வருகிறது ஒரு கட்டுரை. "பொதுச் சொத்தின் அவலம்' (The Tragedy of the commons) என்ற அந்தக் கட்டுரையை எழுதியவர் காரட் ஹார்டின் என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.

 

 

1968 டிசம்பரில் "சயின்ஸ்' என்ற அமெரிக்க இதழில் வெளியான அந்தக் கட்டுரை மாபெரும் அறிவியல் ஆய்வாக முதலாளிவர்க்கத்தால் கொண்டாடப்படுகிறது. இதுவரை 600 பதிப்புகள் வெளியாகியுமிருக்கிறது.

 

ஹார்டின் முன்வைக்கும் "அறிவியல் பூர்வமான' ஆய்வின் முடிவுகளை கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கூறலாம்:

 

""இந்த உலகின் வளங்கள் வரம்புக்குட்பட்டவை. எனவே அவற்றை நுகரும் மக்கட்தொகையும் வரம்புக்குட்பட்டதாகவே இருக்க முடியும். ஆனால் ஏழைகள்தான் வகைதொகையின்றி பெற்றுத் தள்ளுகிறார்கள். வேண்டுகோள்களால் இதைக் கட்டுப்படுத்த முடியாது. இதற்குரிய "தண்டனை' வழங்கப்பட வேண்டும். பொறுப்பற்ற பெற்றோர்களின் பிள்ளைகள் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

 

பொதுச் சொத்து என ஒன்று இருப்பதனால் தான் இப்படி உருவாகும் கூட்டம் அதனை நாசமாக்குகிறது. எனவே பொதுச் சொத்துக்களை ஆறு, கடல், காடு போன்றன தனியாருக்கு விற்றுவிடலாம்; அல்லது அவற்றைப் பயன்படுத்தும் உரிமை குறிப்பிட்ட அளவு சொத்துள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலையை உருவாக்க அவற்றை ஏலம் விடலாம். பொதுச்சொத்தின் அழிவா, தனியார்மயமா என்பதை நாம் உடனே முடிவு செய்தாக வேண்டும்'' என்று கூறுகிறார் ஹார்டின்.

 

கார்ல் மார்க்ஸ் தன்னுடைய மூலதனத்தில் ஏளனம் செய்து ஒதுக்கிய மால்தஸ் பாதிரியின் மக்கள் தொகைக் கோட்பாடுதான் ஹார்டின் முன் வைக்கும் "அறிவியல்' ஆய்வின் வழிகாட்டி. எனினும் இதனை "இன்னொரு அமெரிக்கக் குப்பை' என்று நாம் புறந்தள்ளி விடவும் முடியாது. இந்தக் "குப்பை' தான் இன்று உலகவங்கியின் பைபிள். உலக வங்கியின் ஆணைக்கிணங்க மகாராட்டிர அரசு கொண்டு வந்துள்ள "நீர்வள ஒழுங்குமுறைச் சட்டம்' என்பதே "ஹார்டின் சட்டம்' தான்.

 

""தனது சொத்தாக இல்லாத எதையும் ஒரு மனிதன் பாதுகாக்கமாட்டான். இது மனித இயல்பு. எனவே இயற்கை வளங்களைத் தனிச் சொத்தாக்குவது ஒன்றுதான் அவற்றைப் பாதுகாப்பதற்குகந்த அறிவியல் பூர்வமான வழி'' என்கிறார்கள் பன்னாட்டு முதலாளிகள்!

 

"மாநிலத்தின் நீர்வளங்கள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் அதிகாரத்தை முதலாளிகள் அதிகாரிகள் வல்லுனர்கள் அடங்கிய மூவர் குழுவிடம் ஒப்படைப்பது; ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு பாசன வரி ரூ. 8000. இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்ற விவசாயிகளுக்கு ரூ. 12,000' என்ற விதிமுறைகளின் பொருள் வேறென்ன?

 

"எனக்குப் பிள்ளையில்லை; நிலமும் இல்லை. அரசாங்கம் எனக்கு நிலம் தரப்பேகிறதா?'' என்று மகாராட்டிர அரசை நோக்கிக் கேள்வி எழுப்பினார் ஒரு விவசாயி. உடைமைகள் ஏதுமற்ற இந்தப் பாமர விவசாயியின் கேள்வி உலக முதலாளி வர்க்கத்தின் நோக்கத்தை அம்பலமாக்குகிறது. நீர்வளத்தைப் பாதுகாப்பதோ, இயற்கை வளங்களைக் காப்பாற்றுவதோ உலக முதலாளிகளின் நோக்கமல்ல் அவற்றைத் தங்களது தனிச் சொத்தாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது வேட்கை.

 

""உங்களுக்கு வேலை கொடுப்பதற்காகத்தான் நான் ஆலை தொடங்குகிறேன்'' என்று தொழிலாளியிடம் கூறும் இந்தப் பரோபகாரிகள், "இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்டு'த்தான் அதனைத் தங்கள் சொத்தாக மாற்றிக் கொள்ள விரும்புவதாக நம்மிடம் சொல்கிறார்கள்.

 

"இது பேராசை அல்ல் இயற்கையைப் பாதுகாப்பதற்கு இதுதான் அறிவியல்பூர்வமான வழி' என்றும் நமக்கு விளக்கமும் சொல்கிறார்கள்.
""தனக்குச் சொந்தமில்லாத எதையும் ஒரு மனிதன் பாதுகாக்க மாட்டான்; ஏனென்றால் தனிச் சொத்தைச் சேர்ப்பதுதான் மனிதனின் இயல்புணர்ச்சி. எனவே பொதுச் சொத்தான இயற்கையைத் தனிச் சொத்தாக்குவதொன்றுதான் இயற்கையைப் பாதுகாப்பதற்கான வழி'' என்பதே முதலாளி வர்க்க அறிவுத்துறையினரும் பன்னாட்டு நிறுவனங்களும் முன் வைக்கும் வாதங்கள்.

 

சொத்து சேர்ப்பது மனிதனின் இயல்புணர்ச்சி! பொதுச் சொத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கு முதலாளித்துவம் முன்வைக்கும் "அறிவியல் பூர்வமான' இந்தக் காரணத்தைத்தான் பொதுவுடைமைக் கொள்கையை எதிர்ப்பதற்கும் முதலாளித்துவம் பயன்படுத்தி வருகிறது. கம்யூனிசத்தை எதிர்ப்பதற்குப் பயன்பட்ட இந்தக் காரணம், இன்று தேசியத்தை எதிர்ப்பதற்கும், உலகின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் முதலாளித்துவ சர்வதேசியத்தை நியாயப்படுத்தவும் ஏகாதிபத்தியங்களால் பயன்படுத்தப் படுகிறது.

 

பொதுச் சொத்தைச் சூறையாடத் தூண்டும் இதே "இயல்புணர்ச்சி'தான் கோடிக்கணக்கான சிறு உடைமையாளர்களின் தனிச் சொத்தைச் சூறையாடுமாறும் பன்னாட்டு முதலாளிகளைத் தூண்டுகிறது.

 

எனவே, முதலாளித்துவச் சொத்துடைமையைக் கேள்விக்குள்ளாக்காதவரை, அதன் சமூக விரோதத் தன்மையை அம்பலப்படுத்தாத வரை, இயற்கையையே உடைமையாக்கிக் கொள்ள எத்தனிக்கும் இந்த ஏகாதிபத்தியச் சதியை நாம் முறியடிக்கவியலாது.

எனவேதான், தண்ணீர் முதல் கடல், காடு, மலை, உயிரணுக்கள், விதைகள் ஈறான அனைத்தையும் தனியார்மயமாக்கும் ஏகாதிபத்திய வெறித்தனத்தை இன்று கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி கம்யூனிஸ்டு அல்லாத பலரும் எதிர்த்துப் போராடுமாறு தள்ளப்படுகிறார்கள்.

 

ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற அடிப்படையில் இத்தகைய போராட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவையெனினும் இவர்கள் முன்வைக்கும் மாற்றுகள் பலவீனமானவை, முரண்பாடானவை. முதலாளித்துவ சொத்துடைமையை இவர்கள் ஏற்றுக் கொள்வதால் தற்போதிருக்கும் நிலையைத் தக்க வைப்பது, சிறு தொழில் மற்றும் சிறு உடைமைகளைப் பாதுகாப்பது, மரபுரிமைகளைக் காப்பது என்ற பல கோணங்களிலேயே இந்த மாற்றுகள் முன்வைக்கப்படுகின்றன.

 

சூழலியம், புவி ஜனநாயகம், மையப்படுத்துதல் எதிர்ப்பு, மரபுக்குத் திரும்புதல் போன்றவை எவையும் முதலாளித்துவத்தைத் தகர்ப்பது பற்றிப் பேசுவதில்லை.


"சொத்து சேர்ப்பது மனிதனின் இயல்பு' என்று கூறும் முதலாளித்துவத்தை இவர்கள் யாரும் சித்தாந்த ரீதியில் கேள்விக்குள்ளாக்குவதில்லை. மாறாக, வௌ;வேறு விகிதங்களில் அந்தக் கருத்துடன் உடன்படுகிறார்கள்.

 

ஆனால், "சொத்துரிமை மனிதனின் பிரிக்கவொண்ணாத உரிமை' என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டால் சொத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் உரிமை, அதாவது அடுத்தவன் சொத்தை அபகரிக்கும் உரிமையும் மேற்படி பிரிக்கவொண்ணாத உரிமையின் அங்கமாகி விடுகிறது.

 

எனவே, முதலாளித்துவச் சொத்துடைமையைக் கேள்விக்குள்ளாக்காதவரை, அதன் சமூக விரோதத் தன்மையை அம்பலப்படுத்தாத வரை, இயற்கையையே உடைமையாக்கிக் கொள்ள எத்தனிக்கும் இந்த ஏகாதிபத்தியச் சதியை நாம் முறியடிக்கவியலாது.

 

***

 

அனைவரும் அறிந்த ஒரு உதாரணத்திலிருந்து தொடங்குவோம். நகராட்சிக் குழாயில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறது. குடம் நிறைந்து தண்ணீர் சாலையில் ஓடுகிறது. ஒரு வழிப்போக்கர் குழாயை மூடிவிட்டுச் செல்கிறார் அவர் அந்தக் குழாயின் உரிமையாளர் அல்ல.

 

விளைந்த பயிரை மாடு மேய்ந்து கொண்டிருக்கிறது. அந்த வழியே செல்லும் விவசாயி அதனை விரட்டிவிட்டுச் செல்கிறார் அவர் அந்த நிலத்தின் உடைமையாளரல்ல.

 

தண்ணீரின் பயன் மதிப்பையும் தானியத்தின் பயன் மதிப்பையும் அவர்கள் உணர்ந்திருப்பதன் வெளிப்பாடுதான் அவர்களது நடவடிக்கைகள்.


ஒழுகும் குழாயைக் காணும் ஹார்டினும் பதறுகிறார்; சுமார் எத்தனை லிட்டர் தண்ணீர் வீணாகியிருக்கும் என்று மதிப்பிட்டு அதனை 12 ரூபாயால் பெருக்கிப் பார்க்கிறார். தண்ணீருக்கு முதலாளித்துவம் நிர்ணயித்திருக்கும் சந்தை மதிப்பின்படி சுமார் 1200 ரூபாய் தண்ணீர் வீணாகியிருக்கிறது. "தனியார்மயம்தான் இதற்குத் தீர்வு' என்று உடனே குரல் கொடுக்கிறார்.

 

மண்ணுக்கும் மனிதனுக்கும், நீர் வளத்துக்கும் மனிதவளத்துக்குமிடையே முதலாளித்துவம் பாரபட்சம் காட்டுவதில்லை.


பொரி பொரியாய்த் தெறித்து ஈரப்பசை ஒட்ட மறுக்கும் பாலாற்றின் படுகைக்கும், சொறியும் சிரங்கும் வந்து தோல் வறண்டு போன அந்தப் பகுதி மக்களின் தோலுக்கும் என்ன வேறுபாடு?


ஒரத்துப்பாளையம் கழிவுநீருக்கும் சிறுமி செல்வராணியின் கொப்புளங்களிலிருந்து
வழியும் சீழுக்கும் என்ன வேறுபாடு?

வழிப்போக்கனின் பார்வையில் அங்கே வீணாகிக் கொண்டிருந்தது பயன் மதிப்புமிக்க தண்ணீர். எனவேதான் அவர் குழாயை மூடுகிறார். ஹார்டினின் வர்க்கத்øத் சேர்ந்தவர்கள் குழாயை மூடுவதில்லை.

 

ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை குடத்தில் நிரம்பியிருக்கும் தண்ணீருக்கும் வழிந்து தெருவில் ஓடும் தண்ணீருக்கும் வேறுபாடு இல்லை. ஏனென்றால் அது விலைமதிப்பு நிர்ணயிக்கப்படாத நகராட்சித் தண்ணீர், இல வசக் குடிநீர். சரக்காக மாற்றப்படும் வாய்ப்பில்லாத தண்ணீர், குடத்தில் நிரம்பினாலும் தெருவில் ஓடினாலும் அது அவர்களைப் பொருத்தவரை வீணானதுதான்.

 

மனிதன் உள்ளிட்ட இயற்கை அனைத்தையுமே முதலாளித்துவம் பண்டமாகவும், உற்பத்திச் சாதனமாகவுமே பார்க்கிறது. எனவே அத்தகைய பண்டம், தான் மட்டும் நுகரக் கூடியதாகவோ, தான் மட்டுமே சுரண்டக்கூடியதாகவோ, தன்னால் விற்கப்படக் கூடியதாகவோ இல்லாதவரையில் எந்த ஒரு பொருளின் பயன் மதிப்பையும் அது பொருட்படுத்துவதில்லை.

 

"தனிச் சொத்துடைமை நம்மை முட்டாள்களாகவும் ஒரு தரப்பானவர்களாகவும் செய்து விட்டபடியால், ஒரு பொருள் நம்மிடம் இருந்தால்தான் அது நம்முடையதாகிறது'' என்றார் கார்ல் மார்க்ஸ். பொதுச் சொத்துகளையும் இயற்கையையும் வீணாக்கும் பொறுப்பற்ற தன்மை மக்களிடம் நிலவுகிறதென்றால் அதற்கு முழு முதற்காரணம் முதலாளித்துவம் அவர்களிடம் தோற்றுவித்திருக்கும் சிந்தனையும் பண்பாடும்தான்.

 

முதலாளித்துவத்தால் இன்னமும் தின்று செரிக்கப்படாமல் மக்களிடம் எஞ்சியிருக்கும் மரபுகளும், விழுமியங்களும், பாட்டாளி வர்க்கத்திற்கேயுரிய பொதுமை நாட்டமும்தான் "நமக்குச் சொந்தமில்லாததையும் நம்முடையதாகக் கருதும்' பண்பாட்டை மக்களிடம் நிலவச் செய்திருக்கின்றன.


முதலாளித்துவமோ தனக்குச் சொந்தமில்லாத எந்தப் பொதுச் சொத்தையும் நாசமாக்குகிறது. பாலாறும், ஒரத்துப்பாளையம் அணையும், கங்கை, யமுனையும் சில எடுத்துக்காட்டுகள். முதலாளிகள் இயற்கையை நேசிக்குமாறு செய்யும்பொருட்டு இயற்கை வளங்களை ஹார்டினின் அறிவுரைப்படி தனியார்மயமாக்கி விடலாம்தான். ஆனால் அவற்றைச் சூறையாடுவதன் வாயிலாகத்தான் முதலாளித்துவம் தன்னுடைய நேசத்தை வெளிப்படுத்திக் கொள்கிறது.

 

ஆயிரம் ஆண்டுகளாய் சேமிக்கப்பட்ட பிளாச்சிமடாவின் நிலத்தடி நீர் வளத்தை இரண்டே ஆண்டுகளில் கொக்கோ கோலா ஏன் உறிஞ்சித் தீர்க்க வேண்டும்? பல லட்சம் ஆண்டுகளாய் சூரியனின் வெப்பத்தால் உருவாகிச் சேமிக்கப்பட்டிருக்கும் நிலக்கரியையும் எண்ணெய் வளத்தையும் சில பத்தாண்டுகளிலேயே சுரண்டி எடுத்து விட்டு "சூரிய ஒளியிலிருந்தே மின்சாரம்', "புதுப்பிக்கப்படக் கூடிய எரிபொருள்', "காற்றிலிருந்து மின்சாரம்', "கடல் நீரிலிருந்து குடிநீர்' என்று எதற்காகத் தவிக்க வேண்டும்?

 

பிளாச்சிமடாவின் நிலத்தடி நீரையும் வளைகுடாவின் எண்ணெய்க் கிணறுகளையும் வற்றச் செய்தவர்கள் ஏழைகளால் பெற்றுப் போடப்பட்ட மக்கள் கூட்டமல்ல. யாரிடம் இயற்கை வளங்களை ஒப்படைக்க வேண்டுமென ஹார்டின் சொல்கிறாரோ, அந்தப் பணக்கார வர்க்கத்தின் கார் தாகமும் பெப்சி தாகமும்தான், ஏனைய மக்களைத் தாகத்தில் தள்ளியிருக்கிறது.

 

இந்தப் பணக்கார வர்க்கத்தின் தாகமும் இயல்பான தேவையிலிருந்து எழுந்ததல்ல் இதுவும் விளம்பரங்களால் உற்பத்தி செய்யப்பட்ட தாகம்; மூலதனத்தின் தாகத்தை, முதலாளி வர்க்கத்தின் லாப வேட்கையைத் தணிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட தாகம்.

 

"இந்தத் தாகம் ரொம்பப் பெரிசு'. அதனால்தான் பல ஆயிரம் விவசாயிகள், சில நூற்றாண்டுகளாய் விவசாயம் செய்தும் அழியாத நிலத்தடி நீர்வளத்தை, ஒரே ஒரு கம்பெனி இரண்டே ஆண்டுகளில் அழித்து விட்டது.

 

நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் என்ற ஒப்பந்தத்தின் வரம்புக்குள் நின்று பத்தாண்டுகளுக்கு உற்பத்தியை விரிவாக்காமல் ஒரே அளவில் வைத்திருப்பதற்கு கோக் நிறுவனம் ஒரு விவசாயி அல்ல் தாமிரவருணியிலிருந்து நாளொன்றுக்கு எவ்வளவு தண்ணீர் எடுக்க வேண்டுமென்பது ஒப்பந்தக் காகிதத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது அட்லாண்டாவில் உள்ள கோக்கின் தலைமையகத்தால் தீர்மானிக்கப்படுகிறது. "தண்ணீருக்குப் பதிலாக கோக்' என்பதைத் தனது முழக்கமாக வைத்துள்ள கம்பெனியின் தாகம் தாமிரவருணி ஆற்றையே பாட்டிலில் அடைத்தாலும் அடங்கப் போவதில்லை.


இயற்கையை ஓம்பும் விதத்திலோ, இயற்கை தன்னைப் புனரமைத்துக் கொள்ளும் வேகத்தைக் கணக்கில் கொண்டோ முதலாளித்துவச் சுரண்டலின் வேகம் தீர்மானிக்கப்படுவதில்லை. இலாபம் மட்டுமே அதன் உந்து சக்தி. எனவே இயற்கை வளங்களையும் மனித வளத்தையும் சுரண்டுவதில் முதலாளித்துவம் காட்டும் வரைமுறையற்ற வெறி என்பது அதன் இயல்பான பண்பு.

 

குடகு மலையின் காடுகளை அழித்து பல்லாயிரம் ஏக்கர் காப்பித் தோட்டம்! மழை பொய்த்தது, காவிரி வறண்டது, விவசாயம் அழிந்தது. திக்கற்றவர்களாக திருப்பூருக்கு ஓடிவரும் விவசாயிகளை 12 மணிநேரம், 15 மணிநேரம் என்று வேலை வாங்கி அவர்களையும் 40 வயதுக்குள் முடமாக்கி, மனிதக் கழிவுகளாக்கி வெளியேற்றுகிறது முதலாளித்துவம்.

 

ஒவ்வொரு அழிவிலும், ஒவ்வொரு துயரத்திலும் தனக்கான சந்தையைக் கண்டுபிடிக்கிறது
முதலாளித்துவம். மேற்பரப்பு நீரை அழித்துவிட்டு நிலத்தடி நீர் வேட்டைக்கு பம்பு செட்டு வியாபாரம்; ஒருபுறத்தில் குடிநீரைக் கழிவு நீராக்கும் ஆலைகள் மறுபுறம் கடல்நீரைக் குடிநீராக்கும் எந்திரங்கள்!

இயற்கையின் ஆதாரப் பொருளான தண்ணீரை நஞ்சாக்குவதைப் போலவே, இயற்கையின் அதிஉன்னதப் படைப்பான மனிதனையும் அது நஞ்சாக்குகிறது. மண்ணுக்கும் மனிதனுக்கும், நீர் வளத்துக்கும் மனிதவளத்துக்குமிடையே முதலாளித்துவம் பாரபட்சம் காட்டுவதில்லை. பொரி பொரியாய்த் தெறித்து ஈரப்பசை ஒட்ட மறுக்கும் பாலாற்றின் படுகைக்கும், சொறியும் சிரங்கும் வந்து தோல் வறண்டு போன அந்தப் பகுதி மக்களின் தோலுக்கும் என்ன வேறுபாடு? ஒரத்துப்பாளையம் கழிவுநீருக்கும் சிறுமி செல்வராணியின் கொப்புளங்களிலிருந்து வழியும் சீழுக்கும் என்ன வேறுபாடு?


""சமூகத்தைப் போலவே இயற்கை சம்பந்தமாகவும் கூட இக்காலத்தில் (முதலாளித்துவ) உற்பத்தி முறை உடனடியான விளைவுகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளது. பிறகு இந்த நோக்கத்தின் பால் திசைமுகம் திரும்பியுள்ள செயல்களின் எதிர்கால விளைவுகள்... பெரும்பாலும் நேர் முரணானவையாக மாறிவிடுகின்றன.'

 

"உற்பத்தி செய்த, அல்லது விலைக்கு வாங்கப்பட்ட சரக்கை வழக்கமான பேராசைப்பட்ட லாபத்துடன் விற்றவுடன் அவன் (முதலாளி) திருப்தியுறுகிறான். அதன் பிறகு அந்தச் சரக்கிற்கோ அதை வாங்குபவர்களுக்கோ என்ன நேர்கிறது என்பதைப் பற்றி அவன் கவலை கொள்பவனாக இல்லை'' என்றார் எங்கெல்ஸ்.

 

முதலாளித்துவத்தின் அருந்தவப் புதல்வனான ப.சிதம்பரம் எங்கெல்சின் கூற்றைப் பொய்ப்பித்துக் காட்டிவிட்டார். சிகரெட் தயாரிக்கும் தரகு முதலாளித்துவ நிறுவனமான ஐ.டி.சி. நடத்திய வரி ஏய்ப்பை "மன்னித்து' 350 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தார். புற்று நோய்க்கான மருந்தின் விலையை 100இலிருந்து 1000 ரூபாயாக உயர்த்திக் கொள்ளும் ஏகபோக உரிமையை நோவார்ட்டிஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு நீதிமன்றத்தில் பெற்றுக் கொடுத்ததன் மூலம், சிகரெட் புகைப்பவர்களுக்கு என்ன நேர்கிறது என்பது குறித்தும் தான் "கவலை' கொண்டிருப்பதை அவர் நிரூபித்துக் காட்டினார்.

 

ஒவ்வொரு அழிவிலும், ஒவ்வொரு துயரத்திலும் தனக்கான சந்தையைக் கண்டுபிடிக்கிறது முதலாளித்துவம். மேற்பரப்பு நீரை அழித்துவிட்டு நிலத்தடி நீர் வேட்டைக்கு பம்பு செட்டு வியாபாரம்; நிலத்தடி நீரை அழித்து முடித்தவுடனே கடின நீரை நன்னீராக்கும் கருவிகளின் விற்பனை; ஒருபுறத்தில் குடிநீரைக் கழிவுநீராக்கும் ஆலைகள் மறுபுறம் கடல்நீரைக் குடிநீராக்கும் எந்திரங்கள்!

 

""இயற்கையை ஆளும் விதிகளைக் கண்டு பிடிப்பதென்பது நுகர்வுப் பொருள் அல்லது உற்பத்திச் சாதனம் என்ற முறையில் மனிதனுடைய தேவைகளுக்கு அதனைக் கீழ்ப்படுத்துகின்ற சூழ்ச்சியாகவே தோன்றுகிறது'' என முதலாளித்துவத்தின் கையில் அகப்பட்ட இயற்கையின் அவலநிலையையும், அறிவியலின் தரத்தையும் விமரிசித்தார் மார்க்ஸ்.

 

இயற்கையின் மீதான தனது வினைகள் எத்தகைய எதிர்வினைகளைத் தோற்றுவிக்கக் கூடும் என்பது குறித்து முதலாளித்துவம் கவலைப்படுவதில்லை. ""ஆறு வற்றினால் நிலத்தடி நீர், அதுவும் வற்றினால் பனிப்பாறைகளை உருக்கு, கடல்நீரைக் குடிநீராக்கு...'' என்று வெட்டுக்கிளியைப் போல இயற்கையைச் சூறையாடியபடியே செல்கிறது. ஒவ்வொரு அழிவும், ஒவ்வொரு மாற்றமும் என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற தூரப்பார்வை அதற்குக் கிடையாது.

 

"மனிதகுலம் உயிர்வாழ்வதன் நோக்கம் உற்பத்தி உற்பத்தியின் நோக்கம் லாபம்' என்ற கிட்டப்பார்வைதான் முதலாளித்துவத்தை வழிநடத்துகிறது. இயற்கையை அழிக்கும்போதும், மாற்றியமைக்கும் போதும் அது மனிதனின் மீது என்ன விளைவுகளைத் தோற்றுவிக்கிறது என்பதைப் பற்றியும் முதலாளித்துவம் கவலைப்படுவதில்லை.

 

இயற்கையின் அதியுன்னதப் படைப்பான மனிதன் உயிரியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் நாசமாக்கப்படுகிறான். கார்கள் வெளியிடும் புகையைச் சுவாசிப்பதன் விளைவாக மட்டும் மனிதனின் உடலில் ஈயத்தின் அளவு 100 மடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது ஒரு ஆய்வு. ""ஒரு நுகர் பொருள் தோற்றுவிக்கும் நோயைக் குணப்படுத்த இன்னொரு நுகர்பொருள்'' என்று மனிதனின் உடலையே தனது லாப வேட்டைக்கான சுரங்கமாக மாற்றுகிறது முதலாளித்துவம். முதலாளித்துவப் போட்டியும் நெருக்கடியும் வேலை இழப்பும் பதட்டமும் நிச்சயமற்ற வாழ்க்கையும் மனிதர்களின் நரம்பு மண்டலத்தைச் சின்னாபின்னமாக்கி மன நோயாளிகளைப் பெருக்குகிறது.

 

பல லட்சம் ஆண்டுகளாய் நிலத்தடியில் சேமிக்கப்பட்ட எரிபொருட்களைச் சூறையாடும் அந்த லாபவெறி, மனிதன் எனும் இயற்கையின் அற்புதப் படைப்பையும் ஊனப்படுத்திச் சிதைக்கிறது. ""இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்டு மனிதர்களைக் கொல்ல வேண்டும்'' என்று பேராசிரியர் ஹார்டினைச் சொல்ல வைப்பது இயற்கையின் பால் அவர் கொண்ட காதல் அல்ல் அது லாபத்தின் மீதான காதல். இயற்கையின் சிறந்த படைப்பாகக் கூட மனித உயிரை மதிப்பிடவிடாமல் அவருடைய கண்ணை மறைக்கின்ற லாபவெறி!

 

முதலாளி வர்க்கத்தைப் பொறுத்தவரை இயற்கையைப் போலவே மனிதனும் ஒரு உற்பத்திச் சாதனம்; இயற்கை வளத்தைப் போலவே மனித உழைப்பும் ஒரு விற்பனைச் சரக்கு. தேய்ந்து போன உற்பத்திச் சாதனங்களைத் தூக்கியெறிவதைப் போல, விற்க முடியாமல் தேங்கிப் போன தானியங்களைக் கடலில் கொட்டுவதுபோல, தேவைப்படாத மனிதர்களையும் ஹார்டின் அழிக்கவிரும்புகிறார். எனவே அவர்களை உபரி உற்பத்திப் பொருட்களாகக் கருதுகிறார்.

 

யார் எந்தப் பொருளை எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்று விரல்விட்டு எண்ணக் கூடிய பன்னாட்டு முதலாளிகளை அழைத்து ஆணை பிறப்பிக்க முடியாத ஹார்டின், யார் எவ்வளவு பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உலக மக்களுக்கு ஆணையிடுகிறார். ""பொருளுற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியாது, அதற்கேற்ப மனித உற்பத்தியைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்! முதலாளிகளின் லாபம் சேர்க்கும் "மனித உணர்ச்சி'யை கட்டுப்படுத்த முடியாது; அதற்குப் பொருத்தமாக உங்கள் புலனுணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்!'' என்று மக்களை, குறிப்பாக, ஏழை மக்களை எச்சரிக்கிறார் ஹார்டின்.

 

அராஜகம் என்பது முதலாளித்துவத்தின் பிறப்பியல்பு. சமூகமே உற்பத்தியில் ஈடுபடுவது, ஒரு சிலர் மட்டும் அதை நுகர்வது; ஒரு நிறுவனத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி, மொத்த உற்பத்தியில் அராஜகம் - என்பது முதலாளித்துவத்தின் முரண்பாடுகள். தானே தோற்றுவிக்கும் இந்த முரண்பாட்டிலிருந்து தான் விடுபடுவதற்காக போர்கள், பட்டினிக் கொலைகள் மூலம் முதலாளித்துவம் மனிதனைச் சூறையாடுகிறது, இயற்கையையும் சூறையாடுகிறது.

 

இயற்கை பதிலடி கொடுக்கிறது. பெருமழையாக, வறட்சியாக, பனிப்பொழிவாக, சூறைக்காற்றாக..., உடனுக்குடனோ, சற்றுத்தாமதித்தோ பதிலடி கொடுக்கிறது. ""இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்குகிறது'' என்று குறிப்பிட்டார் எங்கெல்ஸ்.


தன்னளவில் ஒத்திசைவு கொண்டதாக இயங்கும் இயற்கையை ஒத்திசைவு அற்ற மனித சமூகம் எதிர்கொண்டு நிற்க இயலாது. "தனது உற்பத்தி சக்திகளை ஒரே திட்டத்தின் அடிப்படையில் ஒன்றோடொன்று இணக்கமாகச் சேர்ந்து கொள்வதைச் சாத்தியமாக்குகின்ற சமூகம் மட்டும்தான்' இயற்கையுடனான உறவைச் சரியான முறையில் பேண முடியும்.

 

இயற்கையைத் தனது உடலாகவும், உழைப்பைத் தனது சாரமாகவும் கருதுகின்ற பொதுவுடைமைச் சமூகத்தில் மட்டுமே இயற்கையுடனான முரண்பாட்டை மனிதகுலம் சரியாகக் கையாள முடியும். தனிச் சொத்துடைமையை மனிதனின் இயல்புணர்ச்சியாக அங்கீகரிக்கும் சமூகம், இயற்கையை அழிப்பதற்கு முன், தன்னுடைய சொந்த அழிவை, தானே விரைவுபடுத்திக் கொள்ளும்.

 

***

 

உலகமயமாக்கம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாக்கத்தின் உள்ளடக்கம் முதலாளித்துவம். வேறொரு வகை முதலாளித்துவச் சித்தாந்தத்தால் இதனை முறியடிக்க முடியாது. மனித குலமும் உயிரினச் சூழலும் பிழைத்திருக்க வேண்டுமாயின் முதலாளித்துவம் அழிந்தாக வேண்டும்.


""பொதுச்சொத்தின் அழிவா, தனியார்மயமா என்பதை நாம் உடனே முடிவு செய்தாக வேண்டும்'' என்கிறார் பேராசிரியர் ஹார்டின். ""இரண்டும் ஒன்றுதான்'' என்ற பதிலே இத்தகைய அற்பர்களுக்குப் போதுமானது.

 

எனினும் ஹார்டினையொத்த முதலாளித்துவ அற்பமதியினரின் வாதங்களை முன் ஊகித்துத் தனது மூலதனத்தில் விடையளித்திருக்கிறார் மாமேதை கார்ல் மார்க்ஸ்:

"ஒரு மனிதன் பிறிதொரு மனிதனைத் தனது தனிச்சொத்தாக வைத்திருந்ததென்பது எங்ஙனம் (இன்று) அபத்தமானதாக ஆகிவிட்டதோ, அதேபோல, ஒரு உயர்ந்த சமூக பொருளாதார அமைப்பின் பார்வையில், தனிப்பட்ட சிலர் (இன்று) இந்தப் புவியில் கொண்டிருக்கும் தனிச் சொத்துடைமை என்பதும் (நாளை) அபத்தமானதாகவே கருதப்படும். ஒரு முழுச் சமூகமோ, ஒரு தேசமோ, அல்லது சமகாலத்தில் நிலவும் எல்லாச் சமூகங்களும் இணைந்தால்கூட யாரும் இந்தப் பூமியின் உடைமையாளர்களாகிவிட முடியாது. அவர்கள் இந்தப் பூமியில் (வாழப்)பெற்றிருக்கிறார்கள், பயனடைகிறார்கள் அவ்வளவுதான். "ஒரு நல்ல குடும்பத் தலைவன் செய்வதைப் போல', தனக்குப் பின்னர் வரும் தலைமுறைகளுக்கு இந்தப் பூமியை மேலும் சிறப்பான நிலையில் அவர்கள் விட்டுச் செல்ல வேண்டும்.'

 

மருதையன்