09_2005.jpg

""கொக்கோ கோலாவிற்கு எதிராக நக்சலைட்டுகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர்களை எங்கே கண்டாலும் பிடித்துப் போலீசிடம் ஒப்படைக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறோம்'' ஆகஸ்டு 25ம் தேதியன்று காலை முதல் நெல்லை பேருந்து நிலைய வாயிலில் ஒலிபெருக்கியின் மூலம் நெல்லை நகரப் போலீசு வெளியிட்ட அறிவிப்பு இது. நெல்லை கங்கை கொண்டான் கோக் ஆலைக்கு எதிராக செப். 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் எமது போராட்டத்திற்கும்,

 அதனையொட்டித் தமிழகமெங்கும் நாங்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்திற்கும் போலீசு அளித்துள்ள எதிர்வினை இது. இந்த அறிவிப்பைக் கண்டஞ்சி எமது தோழர்கள் பிரச்சாரத்தை நிறுத்தவுமில்லை; மக்கள் யாரையும் போலீசிடம் பிடித்துக் கொடுக்கவுமில்லை. இருப்பினும் இந்த அறிவிப்பு மிகுந்த பொருட்செறிவுள்ளது.

 

விக்ரம், விஜய் போன்றோரடங்கிய தனது விளம்பரக் கூலிப்பட்டாளத்துடன் உயர் போலீசு அதிகாரிகளையும் கொக்கோ கோலா நிறுவனம் சம்பளத்திற்கு அமர்த்தியிருக்கிறது என்பது இந்த அறிவிப்பின் மறைபொருள். ""கருத்துரிமை ஜனநாயக உரிமை'' போன்ற மாய்மாலங்களெல்லாம் அ.தி.மு.க. தி.மு.க. லாவணிக் கச்சேரிக்காரர்களுக்குத்தானே ஒழிய அமெரிக்காவை எதிர்க்கும் புரட்சிக்காரர்களுக்கல்ல என்பது இதன் நேர்ப்பொருள். மறுகாலனியாக்கம் என்பது வெறும் பொருளாதாரச் சுரண்டல் அல்ல, அது பன்னாட்டு முதலாளிகளால் திணிக்கப்படும் பாசிசம் என்பது இந்த அறிவிப்பின் உள்ளே உறைந்திருக்கும் அரசியல் கருப்பொருள். தண்ணீர் தனியார்மயத்திற்கு எதிராகவும் கோக்கிற்கு எதிராகவும் தமிழகம் தழுவிய அளவில் விரிவாகவும் வீச்சாகவும் நாங்கள் மேற்கொண்டு வரும் இயக் கம், எதிரிகளிடம் தோற்றுவித்திருக்கும் அச்சத்திற்கு இது ஒரு விளைபொருள்.

 

கோக்கின் ஆக்கிரமிப்பையும், தண்ணீர் தனியார்மயம் என்ற சதியின் உண்மை முகத்தையும், மறுகாலனியாக்க அபாயத்தையும் அம்பலப்படுத்தி தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் முழங்கும் எமது ஆயிரக்கணக்கான சுவர் விளம்பரங்கள், லட்சக்கணக்கான துண்டறிக்கைகள், 60,000 வெளியீடுகள், நூற்றுக்கணக்கான தெருமுனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், வீதி நாடகங்கள், கலைநிகழ்ச்சிகள், ஓவியக் காட்சிகள், அனைத்துக்கும் மேலாக தமிழகத்தின் பேருந்துகள் கடைவீதிகள் குடியிருப்புப் பகுதிகள் எங்கும் கடந்த 3 மாதங்களாக ஓயாமல் ஒலித்துக் கொண்டேயிருக்கும் எமது தோழர்களின் குரல் எமது பிரச்சாரம் மக்களிடம் பெற்றுவரும் வரவேற்பு இவையனைத்தும் நிதரிசனமான உண்மைகள். ""விளம்பரம் 99 சரக்கு 1'' என்ற சதவீதக் கணக்கில் வியாபாரம் நடத்திவரும் இந்தப் பன்னாட்டு நிறுவனம் எமது பிரச்சாரம் கண்டு அஞ்சக் காரணம் இதன் அரசியல் உள்ளடக்கம். நட்சத்திரங்களைத் தனது விரல் சொடுக்கில் ஆடவிடும் கோக், நட்சத்திரக் கவர்ச்சிகள் ஏதுமற்ற எமது சாதாரணத் தோழர்களை பார்த்து அஞ்சக் காரணம் நட்சத்திரங்கள் வெறும் கூலிகள் இவர்கள் போராளிகள் என்பதுதான்.

 

""நக்சல்பாரி சகோதரர்களே, நாடாளுமன்றத்துக்கு வாருங்கள்! தேர்தலில் நின்று பெரும்பான்மை பெற்று தாராளமாக நீங்கள் விரும்பும் கொள்கைகளை அமல்படுத்துங்கள்!'' என்று அங்கே ஆந்திர மாவோயிஸ்டுகளுக்கு அறைகூவல் விடுகிறார் பிரதமர் மன்மோகன் சிங். தேர்தலில் நின்று "வைகுந்தம் போவது' இருக்கட்டும்; தெருவில் நின்று பிரச்சாரம் செய்யவே தடை விதிக்கிறது போலீசு. நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்டங்களில் பொதுக் கூட்டம், தெருமுனைக் கூட்டம், வாகனப் பிரச்சாரம் ஆகிய அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆள், அம்பு, சேனை அனைத்தும் தன் பக்கம் இருந்தும் "கோக்'கிற்கு அச்சம் விடவில்லை போலும்! ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒளிந்த கதையாக, ""நக்சலைட்டுகளைப் பிடித்துக் கொடுங்கள்'' என்று போலீசை வைத்து மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

 

ஆனால் கோக்கிற்கு எதிராகத் திரண்டு வரும் பொதுக்கருத்தை, அந்தக் கருத்திற்குச் செயல் வடிவம் தரவிருக்கும் மக்களை யாரிடம் பிடித்துக் கொடுக்க முடியும்? குடிநீருக்காகவும் பாசன நீருக்காகவும் அன்றாடம் அல்லல்படும் மக்கள், எண்ணிறந்த போராட்டங்களை நடத்தி வரும் மக்கள் தங்களது பிரச்சினையின் ஊற்று மூலத்தை மெல்ல மெல்லப் புரிந்து வருகிறார்கள். ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் நடத்தும் போராட்டங்களில் ""ஆறு எங்கள் சொத்து'' என்ற முழக்கம் கிளம்பும். களவு போகும் நிலத்தடி நீருக்கு எதிராக ஆங்காங்கு நடக்கும் போராட்டங்கள், ""நிலத்தடி நீர் எங்கள் சொந்தம்'' என்று முழங்கும். எத்தனைக் குடங்கள் தண்ணீர் ஊற்றினாலும் அடங்காத அத்தகையதொரு தாகத்தை "கோக் எதிர்ப்புப் போராட்டம்' மக்களிடம் தோற்றுவிக்கும். கோக் பெப்சியின் மொழியில் சொல்வதானால், ""இந்தத் தாகம் ரொம்பப் பெரிசு''. இது விடுதலைத் தாகம்!