Language Selection

புதிய ஜனநாயகம் 2011

"சிறப்புப் போலீசு அதிகாரிகள் (ளுPழு)' என்று சட்டிஸ்கர் மாநில அரசாங்கத்தால் அழைக்கப்படும் சல்வா ஜூடும் அமைப்பை கலைத்து விடும்படியும் நிராயுதபாணியாக்கிவிடும்படியும் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது  அரிதிலும் அரிதான வழக்கு என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்றும் மனித உரிமை மற்றும் ஜனநாயகப் போராளிகளால் போற்றப்படுகிறது.

 

 

இத்தீர்ப்பை சட்டவாதக் கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது அவ்வாறானதுதான் என்று தோன்றும். ஆனால், சட்டவாதத்திற்கு அப்பாற்பட்டு சற்று ஆழமாக தீர்ப்பின் உள்ளடக்கத்தைப் பரிசீலிக்கும்போது மிகவும் எச்சரிக்கையாகவும் எதிர்மறையிலும் வரம்புக்குட்பட்டும் இந்த வழக்கு அணுகப்பட்டிருப்பதாகவே புரியும்.

நந்தினி சுந்தர், தில்லியைச் சேர்ந்த சமூகவியல் பேராசிரியர்; ராமச்சந்திர குகா, ஒரு வரலாற்று அறிஞர்; இ.ஏ.எஸ். சர்மா, மத்திய அரசின் முன்னாள் செயலாளர் ஆந்திர அரசின் பழங்குடி நல ஆணையாளர். இந்தியக் குடிமக்கள் முனையம் என்ற சமூக அமைப்பு சட்டிஸ்கருக்கு அனுப்பிய உண்மை அறியும் குழுவில் இம் மூவரும் பங்கேற்க சென்றிருந்தபோது, சல்வா ஜூடுமின் அட்டூழியங்களைப் பற்றி அறிந்தனர். சட்டிஸ்கரில் சல்வா ஜூடுமின் மனித உரிமை மீறல்கள் குறித்து, பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையங்களிடம் முறையிட்டும் அவர்களுக்கு உரிய, பொறுப்பான விடையோ, விளைவோ எதுவும் கிடைக்கவில்லை.

எனவே, 2006ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தின் நீண்ட படிகளில் ஏறினர். 26 நாட்கள் மட்டுமே விசாரணை நடப்பதற்கு 5 ஆண்டுகள் ஆகின. வௌ;வேறு அமர்வுகளில் பதினோரு நீதிபதிகள் மாறிமாறி வௌ;வேறு சமயங்களில் வழக்கு விசாரணையைக் கேட்டனர். 20.10.2011ஆம் ஆண்டில் தொடர்ந்து, 16 நாட்கள் வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுதர்சன ரெட்டியும், சுரீந்தர் சிங் நிஜ்ஜாரும் கடைசியாகத் தீர்ப்பு வழங்கினர்.

சல்வா ஜூடும்  சிறப்பு போலீசு அதிகாரிகள் பாதுகாப்புப் படையினரோடும், மாவட்ட போலீசாருடனும் பழங்குடி கிராமங்களுக்குள் போனார்கள்; வீடுகளைக் கொளுத்தினார்கள்; தானியங்கள், ஆடு,மாடு  கோழிகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டார்கள்; பெண்கள் மீது பாலியல் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர்; பழங்குடி இனத்தவர்கள் பலரைப் படுகொலை செய்தார்கள் என்று குற்றச்சாட்டுகள் மனுதாரர்கள் மூவராலும் ஆதாரங்களுடன் உச்ச நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டது. மனித உரிமைகள் கண்காணிப்பகம், குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணயைம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றின் அறிக்கைகள் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தின.

இவற்றோடு சல்வா ஜூடும் சிறப்புப் போலீசு அதிகாரிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பலியானவர்களின் வாக்குமூலங்கள் நீதிபதிகளின் முன் வைக்கப்பட்டன.  பிரிட்டனின் சேனல் 4 தயாரித்த ஆவண ஒலிஒளிப்படம், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடமிருந்து பெற்று இணைப்புச் சாட்சியம் எம்.எப்3 ஆக குற்றச்சாட்டுப் பட்டியலுடன் இணைக்கப்பட்டிருந்தது.

2005-07 ஆண்டுகளில் மட்டும் 644 பழங்குடி கிராமங்களில் இருந்து சுமார் 50,000 பேர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு 20 சல்வா ஜூடும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர். இவர்களுக்கு தினமும் ரூ. 50 மட்டுமே தரப்படுகிறது. உணவு, மருத்துவம், கல்வி வசதி எதுவும் கிடையாது. ஆனால் சட்டிஸ்கர் அரசோ, இவையெல்லாம் நிவாரண முகாம்கள் என்று வாதிடுகிறது.

2007 ஜூனில், ஆந்திராவின் கம்மம் மாவட்டம் சேர்லாவில் நடந்த பழங்குடி மாநாட்டில் திறந்தவெளியில் அளிக்கப்பட்ட 110 பழங்குடி கிராமங்களின் பிரதிநிதிகளுடைய வாக்குமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவை பெருமளவில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதையும் அரச பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாக சல்வா ஜூடும் அட்டூழியங்களையும் பற்றி தெளிவாகப் படம்பிடித்துக் காட்டின.  அந்த வாக்குமூலங்கள் எல்லாம் பழங்குடி மக்களின் கோண்டி மொழியிலும், இந்தியிலும் ஆதாரங்களாக நீதிபதிகள் முன்பு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இக்குற்றச் சாட்டுகள் எதற்கும் உச்சநீதிமன்றத்திடம் இருந்து பதில் ஏதும் இல்லை. இவை எதையும் உச்சநீதி மன்றம் கணக்கில் எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை.சல்வா ஜூடும்  சிறப்புப் போலீசு அதிகாரிகளின் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தற்போது வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் தக்க நிவாரணமும், நீதியும் கிடைக்கவில்லை. குற்றவாளிகளுக்குத் தண்டனையும் விதிக்கப்படவில்லை.

அதற்குப் பதிலாக சல்வா ஜூடும் சிறப்புப் போலீசு அதிகாரிகள் உருவாக்கப்பட்ட முறை, அவர்களின் தகுதி, கல்வி, பயன்பாடு, பயிற்சி, ஊதியம்,மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரில் அவர்களுக்குள்ள ஆபத்துகள், இவற்றிலெல்லாம் அரசின் சட்டத்துக்கு முரணான நிலை இவை பற்றித்தான் நீதிபதிகள் கணக்கில் எடுத்துக் கொண்டனர். சல்வா ஜூடும்  சிறப்புப் போலீசு அதிகாரிகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகள், பாதுகாப்பின்மை, ஆபத்து, மக்கள் நலன்கள், உரிமைகளை விட, சல்வா ஜூடும்  சிறப்புப் போலீசு அதிகாரிகளின் பாதுகாப்பின்மை, நலன்கள், உரிமைகள் பற்றிய கூடுதலான அக்கறை என்ற நோக்கில் இருந்துதான் பரிசீலித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. முதலாளிய ஊடகங்களும் அம்மாதிரியான அக்கறையைத்தான் மேலும் கூடுதலாக வெளிப்படுத்தியிருக்கின்றன.

மாவோயிஸ்டுகளுக்கு எதிரான அரசின் போரில்சல்வா ஜூடும்  சிறப்புப் போலீசு அதிகாரிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பழங்குடி இளைஞர்கள் "பீரங்கித் தீனியாகப்' பலியிடப்படுகிறார்கள் என்று நீதிபதிகளும் ஊடகங்களும் கண்ணீர் வடிக்கிறார்கள். அவர்கள் குறைந்தபட்சக் கல்வி அறிவு இல்லாதவர்கள். போதிய பயிற்சியில்லாமல் சக்தி வாய்ந்த, நவீன ஆயுதங்களோடு போரில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சல்வா ஜூடும் அமைப்பை உருவாக்கியதன் மூலம் தேவையான ஆயுதங்களும் போதிய எண்ணிக்கையில் நிரந்தர போலீசு மற்றும் பாதுகாப்புப் படையையும் நிறுவி, குடிமக்களைக் காக்க வேண்டிய பொறுப்பிலிருந்து அரசு ஒதுங்கிக் கொண்டது, என்கிறார்கள். போலீசு செய்ய வேண்டிய வேலைகளில் சல்வா ஜூடும்  சிறப்புப் போலீசு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டது, அரசியல் சட்டத்தின் 14வது விதி (சட்டத்தின் முன் அனைவரும் சமம்) மற்றும் 21வது விதி (குடிமகனின் உயிருக்கும் சுதந்திரத்துக்கும் உறுதி) ஆகியவற்றை மத்தியமாநில அரசுகள் மீறியுள்ளன என்கிறது, உச்ச நீதி மன்றத் தீர்ப்பு.

அதாவது, பயங்கரவாதக் கிரிமினல் குற்றச் செயல்களில் ஈடுபடும் சல்வா ஜூடும் சிறப்புப் போலீசு அதிகாரிகள், அவற்றுக்குப் பலியாகிற பழங்குடி மக்கள் ஆகிய இரு தரப்பையும் சமமாக வைத்தே பார்க்கும் வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை அனுகியுள்ளனர்.

மேலே சென்று, சல்வா ஜூடும் சிறப்புப் போலீசு அதிகாரிகளை நிராயுதபாணிகளாக்கியும், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்துவதை நிறுத்தியும் அவர்களின் உயிர்களை மாநில அரசாங்கம் காத்திடவேண்டும் என்றும் உச்சநீதி மன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

நாட்டின் ஐந்து மாநிலங்களில் 40,000க்கும் மேலான பழங்குடி இளைஞர்கள் வௌ;வேறு பெயர்களில் சல்வா ஜூடும் போன்ற அரசு பயங்கரவாத கொலைப் படைகளாகத் திரட்டப்பட்டிருக்கிறார்கள்; நாங்கள் மட்டுமா இதைச் செய்கிறோம், என்கிறார் சட்டிஸ்கர் மாநில பா.ஜ. க. முதல்வர். அதற்கு உச்ச நீதிமன்றத்தின் பதில் என்ன?

தேர்தல் அரசியலில் நாய்ச் சண்டை போடும் காங்கிரசும் பா.ஜ. க.வும் மக்களுக்கு எதிராக அரசு பயங்கரவாதத்தை மூர்க்கமாகத் தொடர்வதில் கை கோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள். உச்சநீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து மறுசீலனை வழக்குப் போடப்போவதாகக் கூட்டுமுடிவு செய்துள்ளார்கள். சல்வா ஜூடும் ஒரு அமைதி இயக்கம் என்று சாதிக்கிறார்கள். உச்சநீதி மன்றத் தீர்ப்பும் ஒருவகையில் இக்கருத்தையே கொண்டிருக்கிறது.

. ஆர்.கே.