"நலத்திட்டங்கள்' என்று தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியாலும் தொடர்ந்து இந்நாள் முதன்மந்திரி ஜெயலலிதாவாலும் அழைக்கப்படும் திட்டங்கள், "இலவசங்கள்' என்று மேட்டுக்குடி, ஆதிக்க சாதி அறிவுஜீவிகளாலும் முதலாளிய ஊடகங்களாலும் கொச்சைப்படுத்தப்படுகின்றன.

 

 

"சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்', "உடல்நலக் காப்புறுதித் திட்டங்கள்', "சமூகநலத் திட்டங்கள்' என்று அவற்றைக் குறிப்பிடும் கருணாநிதி, அவற்றின் அவசியம் குறித்துத் தெளிவான விளக்கங்கள் கொடுத்துள்ளார். இந்த விளக்கங்களை உள்வாங்கிக் கொள்ள மறுக்கும் அறிவுஜீவிகளா கக் காட்டிக் கொள்ளும் அறிவிலிகள், தகுந்த தர்க்க நியாயங்கள்  எதுவும் முன்வைக்காது, பொதுவில் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிராக, குறிப்பாகத் திராவிட அரசியல் கட்சிகளையும் தமிழக மக்களையும் அவதூறு செய்கிறார்கள்.

"எதிர்க்கட்சிகளா னா லும்,  ஆளும் கட்சி யானாலும், அரசாங்கத்தின் செயல்பாடுகள் அவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை, புத்திசாலித்தனமான இலவசங்களின் தொகுப்பு மட்டும்தான் பொருட்டாக உள்ளது. இலவசங்கள் என்பன அரசின் வருவாயைப் பயன்படுத்திக் கொண்டு, அப்பட்டமான தேர்தல் ஊழல் முறை கேடுகளைச் செய்வது தவிர, வேறொன்றும் இல்லை என்பதை தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிறிதும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. உண்மையில் இலவசத் திட்டங்கள் எதுவும் இலவசமாகக் கிடைப்பதில்லை. அரசுப் பணம்தான். இதனால் அரசு நிர்வாகம்தான் பாதிக்கப்படுகிறது. இத்தகைய இலவசங்களால் ஒரு இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மாநில அரசு கடனில் சிக்கிக் கொண்டுள்ளது'' என்கிறார்கள்.

"இந்தி எதிர்ப்பு, தமிழ் மொழியின் பெருமை, ஈழத்தமிழர் ஆதரவு என்று எளிதில் உணர்ச்சியைக் கிளப்பிவிடும் திராவிட அரசியல் சித்தாந்தத்தையும், கொள்கைகளையும் திராவிடக் கட்சிகள் எல்லாம் கை கழுவிவிட்டன. இந்த வெற்றுக் கூச்சல்கள் அரசியல் தவிர, திராவிடப் பொருளாதாரம் என்று அறிவுபூர்வமான பொருளாதாரம் இவர்களுக்குகிடையதது. பொருளாதாரத்துக்கும் இவர்களுக்கும் ஏதாவது ஒரு தொடர்பு உண்டென்றால், அது இலவசங்கள் அளிப்பது. மேலும் இலவசங்கள், மேலும் மேலும் இலவசங்கள்தாம். "ஏழை மக்களின் பசியை நாங்கள்தாம் புரிந்து கொண்டிருக்கிறோம்' என்பது எப்போதும் அவர்களின் புகலிடவாதம். இவற்றின் விளைவு தமிழ்நாட்டு வாக்காளர்கள் அரசாங்கத்திடமிருந்து வழக்கமாக இலவசங்களைப் பெறுகிறார்கள். உண்மையில் இலவசங்கள் ஒட்டுமொத்த மாநில மக்களின் மனநிலையில் ஊறிக் கிடக்கின்றன.'

"மொத்தத்தில் இலவசங்களை அறிவிக்காத ஒரு பாரிய அரசியல் கட்சி இல்லை. ஏதாவதொரு இலவசத்துக்காக ஏங்காத ஒரு வாக்காளரே இல்லை. திராவிட பொருளாதாரத்தைப் போலவே அதன் அரசியலும் வெற்று வேட்டுதான். நீண்ட காலமாகவே, "தமிழின் பெருமை, தமிழ்ச் சுயமரியாதையை மீட்பது' என்பதில் திராவிட அரசியல் பெருமை கொண்டிருக்கிறது. இப்போது அவையும் கொள்ளையில் திராவிடக் கட்சிகள் அளிக்கும் தமது பங்கைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதாகச் சுருங்கிப் போய்விட்டது' என்கிறார்கள்.

இவை திராவிடக் கட்சிகளையும், அவற்றின் "இலவச'த் திட்டங்களையும் அரசியல்பொருளாதாரத்தையும் மட்டும் விமர்சிப்பவை அல்ல. ஒட்டு மொத்தத் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார வாழ்வைக் கொச்சைப்படுத்தும் பார்ப்பன  பனியா மற்றும் ஆதிக்க சாதித்தனத்தைக் குறிக்கின்றன. இந்துராம், துக்ளக் "சோ', ஞாநி சங்கரன், வாசந்தி, சு.சாமி, சிவசங்கரி போன்ற பார்ப்பன மேதாவிகளும் மற்றும் ஆங்கில  அமெரிக்க மோகங்கொண்ட ஆதிக்க சாதிகளின் செல்லப்பிள்ளைகளாக வளர்ந்த ஊடகத்தார்களும் தரும் தகவல்கள், மதிப்பீடுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் அவதூறுகள்.

தமிழகத்துக்கு வெளியே உள்ள ஓட்டுக் கட்சிகளின் அரசியல், பொருளாதார யோக்கியதை என்ன? அகில இந்திய தேசியம் பேசும் பா.ஜ.க. மற்றும் காங்கிரசு கட்சிகள் பார்ப்பனபனியா ஆளும் வர்க்க அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையே, நேரடி, மறைக மதவாத நோக்கிலும், பிரிவினைவாத, பயங்கரவாத, தீவிரவாதப் பீதியூட்டி ஆதாயம் அடையும் முறையிலும் செயல்படுத்துகின்றன. மேற்கு வங்கம், கேரளத்தில் போலி கம்யூனிஸ்டுகள் சந்தர்ப்பவாத, பித்தலாட்ட அரசியல் நடத்துகிறார்கள். மாயாவதி, முலயம், லாலு போன்றவர்கள் சமூகநீதி என்ற பெயரில் பிழைப்புவாத அரசியல் நடத்துகிறார்கள். 1990களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் புகுத்தப்பட்டபிறகு, திராவிடக் கட்சிகள் உட்பட நாட்டிலுள்ள எல்லாஓட்டுக் கட்சிகளும் கட்சி வேறுபாடின்றி புதிய பொருளாதாரக் கொள்கையை வரித்துக் கொண்டு விட்டன. இந்த உண்மையை மறைத்துவிட்டு கட்சிகளின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் ஆய்வு செய்வதும் மதிப்பீடு செய்வதும் அறிவுஜீவித்தனம் அல்ல் அறிவிலிகளின் பித்தலாட்டம்தான்.

"இலவசத் திட்டங்கள்' என்பனவற்றின் வரலாறு என்ன? இவை எதற்காக, எப்போதிலிருந்து அவசியமாயின? இந்தியாவில், தமிழ்நாட்டில், திராவிடக் கட்சிகளால்தான் இவை புகுத்தப்படுகின்றனவா? பொருளாதாரக் கொள்கைகள் எதுவும் இல்லாததால், "இலவசத் திட்டங்கள்' கொண்டு வரப்பட்டனவா? "இலவசங்கள்' இல்லையானால் ஏற்படும் விளைவுகள் என்ன? இப்படிப்பட்ட கேள்விகளையும் அவற்றுக்குரிய பதில்களையும் கவனத்தில் கொள்ளாமல் அரசியல், பொருளாதார ஆய்வுகள், மதிப்பீடுகளை வெளியிடுவது உண்மையில் நாணயமற்ற செயல்.

திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ராஜாஜி, காமராஜர் தலைமையிலான அரசுகள் பொருளாதார நிபுணத்துவத்தோடு, திறமையான நிர்வாகத்தோடு தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தியதாக ஒரு பொய் பல ஆண்டுகளாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், அவர்கள் ஆட்சியில்தான் "அவுன்சு' (ஒரு ஆழாக்கு) அரிசி ரேசன்கடைகளில் தரப்பட்டன. வாரத்தில் ஒருநாள் சாப்பிடாமல் இருக்கும்படி பொருளாதாரப் பேரறிவோடு காங்கிரசு ஆட்சியில் மக்களை வலியுறுத்தினார்கள். அதனாலேயே ஆட்சியிலிருந்து துரத்தப்பட்டு, திரும்பவும் ஆட்சிக்கு வரவே முடியாமல் தவிக்கிறார்கள்.

கருணாநிதியின் 2006ஆம் ஆண்டு இலவசத் திட்டங்களைக் கேலி கிண்டல் செய்த பார்ப்பனபாசிச ஜெயலலிதா, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோற்று விடுவோமோ என்ற அச்சத்தால் அவரை, விஞ்சிவிடும் அளவு "இலவசங்களை' அறிவித்தார். கடன்படாமல் பொருளாதாரப் புலியாக ஆட்சி நடத்தியதாகக் கூறிக் கொள்ளும் ஜெயாவின் ஆட்சியில்தான் நெசவாளர்களுக்குக் கஞ்சித் தொட்டியும், தமிழகத்தின் நெற்களஞ்சியமாக அறியப்பட்ட தஞ்சையில் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டு உயிர் பிழைத்தார்கள்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கையை அமலாக்கிவரும் மன்மோகன்  மாண்டேக் சிங்ஆகிய பொருளாதாரப் புலிகளின் நிர்வாகத்தில், தொடர்ந்து விண்ணை முட்டும் விலைவாசிஉயர்வால் விவசாயிகள், பழங்குடிகள், மீனவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் வாழ்வாதாரங்

களைப் பறிகொடுத்து அலையும் நிலையில், தொழிலாளர்கள் ஒப்பந்தக் கொத்தடிமைகளாக்கப்படும் சூழலில், மலிவுவிலை அல்லது இலவச அரிசித் திட்டங்கள் இல்லை என்றால் எலிக்கறியும், கஞ்சித் தொட்டியும்கூட மக்களைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டிருக்கும். கூடவே வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளும் அரசு சாராயக் கடைகளும் முறையே பெண்களையும் ஆண்களையும் போதையில் மூழ்கடிக்காமல் போயிருந்தால், அவர்கள் கொந்தளித்துப்போயிருப்பார்கள்.

புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்டவுடன் மக்களிடையே எழுந்த கொந்தளிப்பை பாசிச அடக்கு முறையால் சமாளிக்க முடியாததால், உலகவங்கி, ஐ.எம்.எஃப், உலக வர்த்தகக் கழகம் ஆகியவை வழியே அமெரிக்க எஜமானர்கள் வகுத்துக் கொடுத்த வழிமுறைகளில் ஒன்றுதான் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு மூலம் சமூக நலத் திட்டங்களை இலவசமாக முதலாளிகளே செய்வது என்பதாகும். அந்த வேலையை அவர்கள் செய்ய மறுத்து விட்டார்கள். தமது புதிய பொருளாதார திட்டங்களின் பலன்கள் கசிந்து மக்களைச் சென்றடையும் வரை காத்திருக்கச் சொன்னார்கள், மாண்டேக் சிங் மன்மோகன்  சிதம்பரம் கும்பல். பா.ஜ.க.வின் "ஒளிரும் இந்தியா', காங்கிரசின் "கசிந்து மக்களுக்கு வரும் பலன்கள்'  என்கிற  "பயாஸ்கோப்' படங்காட்டும் முயற்சிகள் தோற்றுப்போன பிறகுதான், வேலை உத்திரவாதம், வேலைக்கு உணவு, ஜவகர், இந்திராகாந்தி ஆகியோர் பெயரில் பல்வேறு "இலவசத்' திட்டங்களை அமலாக்கினார்கள். இவையெல்லாம்கூட, காங்கிரசு, பா.ஜ.க. ஆட்சிகள் ஊழல் மோசடிகளில் மூழ்கிக் கிடக்கையில், இவற்றோடு "இலவசத் திட்டங்களை' இணைத்து நாட்டுக்கே முன்னுதாரணமாக விளங்குகின்றனர், கருணாநிதியும் ஜெயலலிதாவும்.

"எந்த அரசாங்கமாவது சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைப் புறக்கணித்து, வளர்ச்சித் திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தினால், அது ஏழை, எளிய மக்கள் நலன்களை அலட்சியப்படுத்துவதாகும்' என்ற புதிய ஆட்சியாளராகிய ஜெயாவை கருணாநிதி சமீபத்தில் எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கை, வெறும் அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல. ஹ_ண்டாய், நோக்கியா, டாடா போன்ற அந்நிய, உள்நாட்டு முதலாளிகளின் நலன்களை மட்டும் கவனித்துக் கொண்டு, சமூக நலத்திட்டங்களைக் கைவிட்டால் மக்களின் கடுங்கோபத்துக்கும் கொந்தளிப்புக்கும் ஆளாக நேரிடும் என்பதுதான் அந்த எச்சரிக்கை. உலகவங்கி, ஐ.எம்.எஃப். முதலிய உலகப் பொருளாதார, நிதி அமைப்புகள் முதற்கொண்டு, ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசு நாடுகளின் முன்னணிப் பொருளாதார நிபுணர்கள் பலரும் ஏற்றுக் கொண்டு, உலக நாடுகளுக்கு விடுத்துவரும் எச்சரிக்கையும் இதுதான்.

சமூகநலத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், சமூகக் காப்புறுதித் திட்டங்கள் என்று கருணாநிதி விளக்கும் போது, சமூக நலனில் முதன்மை அக்கறை கொண்டு பேசுகிறார் என்பதல்ல பொருள். சமூகத்திடமிருந்து, (பொது மக்களின் ஆத்திரம், கோபம், கொந்தளிப்பிலிருந்து) அரசும், ஆளும் வர்க்கங்களும் கார்ப்பரேட் முதலாளிகளும் தங்களையும் தங்கள் நலன்களையும் காத்துக் கொள்வதற்கான திட்டங்கள் தேவை என்றுதான் பொருள். ஏதுமற்ற ஏழைகளாக பெரும்பான்மை மக்களை ஓட்டாண்டிகளாகவும், விரல்விட்டு எண்ணக்கூடியவர்களை உலகப் பணக்காரர்களாகவும் செய்யும் வளர்ச்சித் திட்டங்களை எவ்வளவு நாள்தான் மக்கள் பொறுத்துக் கொள்வார்கள்! ஒரு வேளை பொங்கி எழுந்தால் கார்ப்பரேட் சாம்ராஜ்ஜியங்களைத் தகர்த்து விடுவார்கள் அல்லவா!  இந்த அச்சத்தின் விளைவாக, ஆளும் வர்க்கங்களின் ஆசியோடு வழங்கப்படுபவைதாம் இந்த இலவசத் திட்டங்கள்.

ஆனால், அதிமேதாவிகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் இலவச எதிர்ப்பாளர்களோ,  இரண்டு உண்மைகளைத் தமது சுயநலம் காரணமாக மூடிமறைக்கிறார்கள் அல்லது காண மறுக்கிறார்கள். ஒருபுறம் தமிழகத்தில் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு இலவசத் திட்டங்கள் வந்தாலும், மறுபுறம் நூறு இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இலவசமாகப் போய்ச் சேரும் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. "இலவசங்களை' எதிர்க்கும் இந்த அதிமேதாவி அறிவுஜீவிகளும் மேற்கண்ட மாதிரியான இலவசத்திட்டங்களால் தான் உடலையும் அறிவையும் வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.  இப்போதும் கார்ப்பரேட் முதலாளிகள்கோடி கோடியாய்ப் பெறும் இலவசச் சூறையாடல்களிலிருந்து ஒருபகுதியைத்தான் தகுதியற்ற ஊதியமாய்ப் பெற்று வாழ்கிறார்கள்.

ஆர்.கே.