மத்திய அரசின் திட்டங்கள், ஒப்பந்தங்கள், வருவாய், செலவினம் போன்றவற்றை ஆண்டுதோறும் தணிக்கை செய்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதுதான் இந்திய பொதுத் தணிக்கை அதிகாரியின் பணியாகும். இந்தத் தணிக்கைகளில்தான் 2ஜி அலைக்கற்றை ஊழல் அம்பலமானது. இந்த வரிசையில், இவ்வாண்டின் அறிக்கை வெளிக்கொண்டு வந்திருப்பதோ தில்லி விமான நிலைய ஊழல்.
தில்லியில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தை விரிவாக்கி, மூன்றாவது முனையம் (டெர்மினல்3) எனும் புதிய விமான நிலையத்தை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜெர்மானிய ஃப்ராபோர்ட், மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் ஆகியவை இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்திய விமானதள ஆணையத்துடன் இணைந்து ஆண்டுக்கு 3.4 கோடி பயணிகள் பயன்படுத்தும் வகையிலான இப்புதிய விமான முனையத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. இந்தத் திட்டத்திற்கென்று டி.ஐ.ஏ.எல். (தில்லி பன்னாட்டு விமானநிலையம் லிமிடெட்) எனும் பொதுத்துறை தனியார்துறை கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இதில் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனமான ஜி.எம்.ஆர். குழு மத்தின் தலைமையிலான பல நிறுவனங்களின் கூட்டமைப்புக்கு 74 சதவீதப் பங்குகளும், பொதுத்துறை நிறுவனமான இந்திய விமானதள ஆணையத்துக்கு 26 சதவீத பங்குகளும் உள்ளன. ஒப்பந்தப்படி, இவ் விமானநிலைய சேவையில் கிட்டும் வருமானத்தில் 46 சதவீதம் இந்திய விமானதள ஆணையத்துக்கு வரவேண்டும். மீதியை ஜி.எம்.ஆர். குழுமத்தின் தலைமையிலான பல நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும். 2006 இல் தில்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையத்தின் இயக்கம் மற்றும் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொண்ட டி.ஐ.ஏ.எல்., மூல ஒப்பந்தத்தை மீறி பல துணைநிறுவனங்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு விமானச் சேவை மற்றும் பிற சேவைகளில் துணைநிறுவனங்களுக்குத் துணை ஒப்பந்தங்கள் அளித்து இந்திய விமானதள ஆணையத்துக்குக் கிடைக்க வேண்டிய 46 சதவீத இலாபத்தை குறைத்தது. இலாபத்தில் வெறும் 15 சதவீதம் மட்டுமே பொதுத்துறைக்கு வருமளவுக்கு ஏகப்பட்ட துணை ஒப்பந்தங்களைத் தனியாருக்கு வழங்கி முறைகேடு செய்துள்ளதை தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. நூற்றுக்கு ரூ.46 லாபம் வந்திருக்க வேண்டிய இடத்தில் வெறுமனே ரூ.6.90 மட்டுமே பொதுத்துறைக்கு வந்துள்ளது.
டி.ஐ.ஏ.எல். நிறுவனமும் அது உருவாக்கிய பலகூட்டு ஒப்பந்த துணை நிறுவனங்களும் நடத்திய ஊழல் கொள்ளை முறைகேடுகளால் இத்திட்டத்திற்கான செலவு ரூ. 8,955 கோடி அதிகரித்துள்ளது. விமான நிலைய விரிவாக்கத்துக்காக வாங்கப்பட்ட 48.5 ஏக்கர் நிலத்தை டி.ஐ.ஏ.எல். நிறுவனம், வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்கான உரிமையை தில்லி ஏடோட்ரோபொலிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு ரூ.775 கோடிக்கு உரிமம் அளித்துள்ளது. தில்லி விமானநிலையத்தின் அருகே ஒரு சதுர மீட்டர் நிலத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் என்றிருப்பதால், மொத்த மதிப்பு ரூ.1,960 கோடியாக இருக்க வேண்டும். இந்த வகையில் அரசுக்கு ரூ.1,185 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதைத்தவிர, விமானநிலையச் சேவைகளான உணவு, குடிபானங்கள், விளம்பரங்கள், எரிபொருள் நிர்வாகம், தகவல்தொழில்நுட்பசேவை போன்றவை பொதுத்துறைக்குத் தரப்படாமல், ஒப்பந்தத்தை மீறி கூட்டு ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விதிமுறை மீறல்களைக் குறிப்பிட்டு விமானநிலையப் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் (ஏ.ஈ.ஆர். ஏ.), 'வருவாய்ப் பகிர்வு முறையில், முக்கியமான வருமான வழிகளை எல்லாம் கூட்டு ஒப்பந்த நிறுவனங்களிடம் டி.ஐ.ஏ.எல். கொடுத்து விட்டதால், இந்திய விமானதள ஆணையத்தின் வருமானம் பாதிக்கப்படுகிறது' என விமானத்துறை அமைச்சகத்திடம் முறையிட்டுள்ளது.
விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான தேசியவாத காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த பிரபுல் பட்டேலுக்கு மிகவும் நெருக்கமான அதிகாரத் தரகர் தீபக் தல்வாருக்கு இத்திட்டத்தில் இரண்டு பெரிய ஒப்பந் தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை அப்போதைய விமானத்துறைச் செயலர் எம்.நம்பியாரும் எதிர்த்துள்ளார். தீபக் தல்வார் 17 சதவீதப் பங்குகளை வைத்திருக்கும் "ஏர் ரியான்டா இந்தியன் டூட்டி ஃப்ரீ சர்வீசஸ்' எனும் நிறுவனத்துக்கு தில்லி விமானநிலையத்துக்குள் சுங்கவரியில்லாப் பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, விமானங்களின் உள்ளே இயக்கப்படும் சிறப்புத் தொழில்நுட்பம் கொண்ட பிரத்யேக டிவிடிக்கள் தல்வாரின் நிறுவனம் மூலம் வாங்கப்பட்டுள்ளன. இதில் தல்வார் நிறுவனம் பெருமளவுக்குக் கொள்ளையடித்தது. வெளிச்சந்தையில் 300 டாலர் மதிப்பிலான டிவிடிக்களுக்கு இந்நிறுவனம் 3600 டாலர்கள் என விலை நிர்ணயித்து, பேரங்களுக்குப் பின் 3 ஆயிரம் டாலருக்கு அவற்றை விற்றுள்ளது.
உலகம் முழுவதும் சரக்கு விமானப் போக்குவரத்து வருவாயில் உயர்வு ஏற்பட்டுள்ளபோது, 2009 நவம்பருக்கும் 2010 செப்டம்பருக்கும் இடையில் தில்லி விமானநிலைய சரக்குப் போக்குவரத்து கையாளுகை வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது, ரூ. 73 கோடி அளவிற்கு வருவாய் குறைந்ததுள்ளது. விமான நிலையக் கட்டுமானத்துக்கு முதலில் திட்டமிட்ட செலவான ரூ.5900 கோடி உயர்த்தப்பட்டு, ரூ.12700 கோடியாக்கப்பட்டது. இந்தச் செலவு அதிகரிப்பு விவகாரத்தில் சிவில் விமானத்துறை, இந்திய விமானதள ஆணையம் ஆகிய பொறுப்புள்ள அமைப்புகள் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும் தணிக்கை அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
மொத்தத்தில், தனியார்பொதுத்துறை கூட்டுத் திட்டத்தின் பெயரில், தில்லி விமான நிலையத் திட்டத்தில் முறைகேடுகள், மோசடிகள் மலிந்து ஊழல்மயமாகியுள்ளதை தணிக்கை அறிக்கை அம்பலமாக்கியுள்ளது. இந்த ஊழல் மட்டுமல்ல் எல்லாத் துறைகளிலும் தனியார்மயம் சாதித்திருப்பது இதைத்தான். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், இஸ்ரோ அலைக்கற்றை ஒதுக்கீடு, கிருஷ்ணாகோதாவரி எரிவாயுத் திட்டம் என அடுத்தடுத்து தனியார்மயத்தின் ஊழல்கொள்ளைகள் அம்பலமாகிக் கொண்டுள்ளன. தில்லி விமானநிலைய நவீனமயத் திட்டத்திலோ பத்தாயிரம் கோடிக்கும் மேல் தனியார் நிறுவனங்கள் பொதுப் பணத்தை ஏப்பம் விட்டுள்ளன. தனியார்மயமும் தாராளமயம் தீவிரப்படுத்தப்பட்ட இரண்டாம் கட்ட சீர்திருத்தத்தில், ஊழல்கொள்ளையின் பரிமாணமும் பல மடங்கு பெருகி கார்ப்பொரேட் கொள்ளையர்களின் அகோரப் பசிக்கு இந்தியாவின் பொதுச்சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.
மத்திய கண்காணிப்பு ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி என்.விட்டல், "தனியார்மய தாராளமயக் கொள்கைகள்தான் வியக்கத்தக்க அளவில் ஊழலுக்கு இட்டுச் சென்றுள்ளன. முன்பு ஊழல் என்பது சில்லரை வணிகம் போல இருந்தது. அப்போது தனி நபர்கள் உரிமங்களைப் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால், இப்போது பிரம்மாண்டமான நிறுவனங்கள் என்பதால் ஊழல்களும் பிரம்மாண்டமானதாக நடக்கின்றன' என்கிறார். தனியார்மயம் என்பதே ஊழல்மயம்தான்; அது சூறையாடுவது பொதுச்சொத்தைத்தான் என்பது ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு நாளும் நிரூபணமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில், விமான நிலைய ஊழல் குறித்த தணிக்கை அதிகாரியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு விசாரணை நடக்கும்; அதைத் தொடர்ந்து லோக்பால் சட்டம் நடைமுறைக்கு வந்து இத்தகைய கார்ப்பரேட் கொள்ளை ஒழிந்துவிடும் என்று நம்புவதும், கேழ்வரகில் நெய்வடிகிறது என்று நம்புவதும் ஒன்றுதான்.
. அழகு