கடந்த ஜூன் 7ஆம் தேதியன்று சென்னையிலிருந்து பொள்ளாச்சிக்குச் சென்று கொண்டிருந்த கே.பி.என். சொகுசுப் பேருந்து, காவேரிப்பாக்கம் அருகில் சரக்கு வாகனத்தை மின்னல் வேகத்தில் முந்திச் செல்ல முயன்றபோது நிலைதடுமாறி கவிழ்ந்து தீப்பிடித்ததில், 22 பயணிகள் தீயில் கருகிப் பரிதாபமாக மாண்டுபோனார்கள்.

 

 

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவம் எதிர்பாராத விபத்து அல்ல. சாலை விதிகளைக் கடைபிடிக்காமல், சாலையின் தன்மை, வாகனத்தின் தன்மை, இரவுச் சூழ்நிலை  எதையும் பொருட்படுத்தாமல் தனியார் பேருந்துகளின் கண்முன் தெரியாத வேகம்தான் இக்கோர விபத்துக்குக் காரணம். அந்த வேகத்துக்குப் பின்னே ஒளிந்திருப்பது தனியார் பேருந்து முதலாளிகளின் இலாபவெறி. இதுதான் அனைத்து ஓட்டுக் கட்சிகளின் ஆதரவோடு தீவிரமாக்கப்பட்டுவரும் தனியார்மயத்தின் உண்மை முகம்!

பல ஆயிரம் மக்களின் உயிரைப் பறித்து, பல்லாயிரக்கணக்கானோரை நிரந்தர ஊனமாக்கிய போபால் விசவாயுப் படுகொலையையும், கும்பகோணத்தில் 63 பச்சிளம் குழந்தைகளைத் தனியார் பள்ளி முதலாளியின் இலாபவெறிக்குப் பலிகொடுத்ததையும், இன்னும் பலபன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின்  தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்காக மக்கள் கொத்துக் கொத்தாகப் பலியாக்கப்படுவதையும் பட்டியல் போட்டால் பக்கங்கள் போதாது.

தனியார்மயத்தின் கொடூரத்துக்கு ஓர் உதாரணம்தான் இப்படுகொலை என்பதை விளக்கி, ஓசூர் வட்டாரத்தில் ஆயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரச்சாரத்தை மேற்கொண்ட பு.ஜ.தொ.மு., அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 15 அன்று மாலை ஓசூர் அரசுப் பேருந்து பஸ் டெப்போ அருகில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தியது. "தனது இலாப வெறிக்காக 22 பேரின் உயிரைப் பறித்த கே.பி.என். முதலாளிக்குத் தண்டனை வழங்கு! தனியார் பேருந்து, தனியார் சொகுசு விரைவுப் பேருந்துகளை அரசுடமையாக்கு! மக்களின் உயிரைப் பறிக்கும் தனியார்மயத்துக்கு எதிராகப் போராடுவோம்!' என விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இத்தெருமுனைக் கூட்டம், தனியார்மயத்தின் கொலையையும் கொடூரத்தையும் உணர்த்தி, அதற்கெதிராக உழைக்கும் மக்களைப் போராட அறைகூவியது.

பு.ஜ. செய்தியாளர், ஓசூர்.