09302022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

கோடிகளில் சூதாடும் முதலாளிகளின் தீபாவளி!

12_2005PK.jpg

தீபாவளியின் கவலைகளும் மகிழ்ச்சியும் பலவிதம். தமிழகத்தில் விடாது பெய்த அடை மழையால் சிறு வியாபாரிகளுக்கும் பாதையோர வியாபாரிகளுக்கும் இந்த ஆண்டு தீபாவளி இல்லை! ஆர்.எம்.கே.வி., போத்தீசு நிறுவனங்களின் கவலை, யார் அதிக விலையில் புதிய பட்டுப் புடவைகளை வெளியிடுகிறார்கள் என்பது! இது போக, ராணி, தேவி குடும்ப வார இதழ்களில் தீபாவளி கொண்டாட இயலாத ஏழைக் குழந்தைகளுக்கு பணக்காரக் குழந்தைகள் உதவிய சிறு கதைகளும் வெளிவந்திருக்கும். இது நாம் அறிந்த தீபாவளி. நாம் அறியாத தீபாவளி ஒன்றும் உண்டு.

 

எந்தத் தாராளமயம் நாட்டு மக்களைக் காவு வாங்குகிறதோ அதே தாராளமயத்தால் கோடிகளைக் குறுக்கு வழியில் குவித்திடும் முதலாளிகள் கொண்டாடும் தீபாவளிதான் அது. ஜெசிகாலால் என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை ஒட்டி மேட்டுக்குடியினரின் நடனவிருந்துக் கேளிக்கைகளை அம்பலப்படுத்தி முன்பு புதிய கலாச்சாரத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதுவும் அதோடு சேர்ந்ததுதான்.

 

புதுதில்லியின் பணக்காரர்கள் வசிக்கும் ஆடம்பரமான பண்ணை வீடுகள் பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பி.எம்.டபிள்யு, மெர்சிடஸ் கார்கள் அணிவகுத்து நிற்கும். விண்ணிலும், மண்ணிலும், கடலிலும், கனவிலும் தொழில் செய்யும் சினிமா முதல் கப்பல் வரையிலான முதலாளிகளும் வந்திறங்குவார்கள். மதுக்குவளைகளும் ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுக்களும் மேசையில் வீற்றிருக்கும். தீபாவளி முன்னிரவில் தொடங்கும் சூதாட்ட சீட்டாட்டம் விடிய விடிய நடக்கும். ஆட்டத்தின் பந்தயம் இலட்சத்தில் தொடங்கி கோடிகள் வரை நீளும்.

 

இந்தச் சீட்டாட்டம் ஒரு இந்துமதச் சடங்கும் கூட! தீபாவளி அன்று காசு தேவதை இலட்சுமி வீடு தேடி வருவாளாம். வந்தவளை வரவேற்க விழித்திருக்க வேண்டுமாம். சிவராத்திரி போல இது லட்சுமி ராத்திரி. வட இந்திய முதலாளிகளிடம் நிலவி வரும் இந்தச் சடங்கில் முன்பு 500, 1000 என்று சீட்டாடியது மருவி தற்போது கோடியில் நிற்கிறது. அதுவும் இந்த வருடம் பங்குச் சந்தையில் வர்த்தகம் அதிகம் என்பதால் சென்ற வருடச் சீட்டாட்டத்தை விட இந்த வருடம் பந்தயத் தொகை 20 சதம் அதிகமாம். இரண்டு சூதாட்டங்களிலும் ஏற்பட்டிருக்கும் இந்த வளர்ச்சிதான் இந்தியாவின் உண்மையான பொருளாதார வளர்ச்சி! மேலும் இப்படிச் சீட்டாடுவதற்கென்றே வெளிநாட்டு என்.ஆர்.ஐ. முதலாளிகளும் வருவார்களாம். அதில் லட்சுமி மிட்டல் என்ற உலகின் பணக்கார இந்திய முதலாளியும் அடக்கம்.

 

திரையரங்கின் அருகே 5 ரூபாய் வைத்து மூன்று சீட்டு ஆடுபவர்களை போலீசு அடித்து இழுத்துச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். காரணம், சூதாட்டம் சட்டத்திற்குப் புறம்பானது. இது? இதுவும் சட்டத்திற்குப் புறம்பானதுதான். அதனாலென்ன, சட்டம் என்பதே முதலாளிகளின் கால் செருப்புத்தானே? மும்பையிலும், புதுதில்லியிலும் நடக்கும் இத்தகைய சீட்டாட்டங்களுக்கு சுங்கவரித்துறை, வருமான வரித்துறை, காவல்துறை அதிகாரிகள் வரவழைக்கப்படுகிறார்கள். வந்தவர்கள் வேண்டுமென்றே வெற்றி பெற விடப்படுகிறார்கள். சில இடங்களில் இரகசியப் பதுங்கு அறைகளில் விளையாடுகிறார்கள். இன்னும் பணத்தைப் பதுக்கிவிட்டு டோக்கன் வைத்து விளையாடுவதும் உண்டு. இந்த ஆண்டு மும்பையில் லிப்ரோ என்ற சொகுசு கப்பலில் சர்வதேசக் கடல் எல்லையைத்தாண்டி சட்டபூர்வமாகவே விளையாடினார்கள். மேலும் எம்.எல்.ஏ., எம்.பி. முதலான அரசியல்வாதிகளும் இந்த விசேட தீபாவளி சீட்டாட்டத்திற்கு வரவேற்கப்படுவதால் மொத்தத்தில் அரசியல், அதிகாரவர்க்க பாதுகாப்புடன் ஆட்டம் செழித்தோங்குகிறது.

 

அடுத்து, இந்தச் சீட்டுக் கச்சேரிகள் தொழிற்பிரச்சினைகளைத் தீர்க்கும் புண்ணியத்தலங்களாகவும் இருக்கின்றது. பணம் காலியானால் கார், வீடு போன்றவற்றை வைத்து ஆடுவது, பிரச்சினைக்குரிய சொத்துக்களை பணயம் வைத்து ஆடுவது, புதுப்பணக்காரனை பழைய பணக்காரர்கள் சிண்டிகேட் அமைத்து மொட்டையடிப்பது, குடித்துவிட்டு தேவையானால் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வது முதலிய ஒழுக்கங்களும் தவறாமல் இடம் பெறுவது உண்டு. இத்தகைய ஒழுக்கக் கதைகள் அடுத்த தீபாவளி வரை விறுவிறுப்பான கிசுகிசுக்களாக மேட்டுக்குடியினரிடையே உலா வருவதுண்டு.

 

காசுமீரில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் குளிரில் நடுங்கிக் கொண்டு பரிதவித்துக் கொண்டிருந்த அதே இரவில்தான் முதலாளிகளின் இந்தக் கோடீசுவர சூதாட்ட தீபாவளியும் நடந்திருக்கிறது. நீரோக்கள் இருக்கும் வரை ஊர் தீப்பிடித்து எரிவதும் பிடில் வாசிப்பதும் இயல்பான விசயங்கள்தானே!

 

சாத்தன்