பதிவுலகிலும் பத்திரிகையுலகிலும் அதிகம் புழங்கும் வார்த்தைகளுள் ஒன்று ராயல் சல்யூட்! செயற்கரிய செயலைப் போற்றுவதற்கு மக்கள் இந்த வணக்கத்தைப் பயன்படுத்துகின்றனர். இதை விட்டால் ராயல் சல்யூட் என்ற பெயரில் ஒரு புகழ் பெற்ற மதுபானக் கம்பெனி ஸ்காட்லாந்தில் இருக்கிறது. சரக்குகளெல்லாம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேற்பட்டவை. ராயல் சரக்குகள் என்றால் அதன் அதி உயர் தரத்தை குறிக்கிறதாம். 21 பீரங்கி குண்டுகளால் வணக்கம் செலுத்தும் முறை கூட இங்கிலாந்தில் உருவானதுதான். அதையும் ராயல் சல்யூட் என்று தான் அழைக்கிறார்கள்.

 

 

ராயல் என்ற வார்த்தை பொதுவில் மன்னர் குடும்பத்தினரை அடையாளம் காட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அதிலும் இங்கிலாந்து அரச பரம்பரையினர்தான் இந்த வார்த்தையால் அதிகம் சுட்டப்படுகின்றனர். ஐரோப்பாவில் மன்னர் குடும்பங்கள் பல நாடுகளில் இருந்தாலும், நமது குடியரசுத் தலைவர் போல அதிகாரத்தைக் கொண்டவர்களாக அவர்கள் பவனி வந்தாலும், நம்மைப் போன்ற ஆங்கிலேயர்களின் காலனி நாடுகளாக முன்னர் இருந்தவர்களுக்கு, இங்கிலாந்தின் அரசர் குடும்பம்தான் அதிகம் தெரிந்திருக்கும். நமக்கு மட்டுமல்ல உலக அளவில் கூட இந்த அரசர் குடும்பம்தான் புகழ் பெற்றவர்கள். என்ன இருந்தாலும் உலகின் கால்பங்கை ஒரு காலத்தில் ஆண்டவர்களில்லையா?

உலகச் செய்திகளில் இங்கிலாந்தின் அரசர் குடும்பத்து செய்திகள், அவர்களது திருமணம், படிப்பு, கேளிக்கை, அரசு சார் விஜயங்கள், விழாக்கள், கிசுகிசுக்கள் அதிகம் வந்தே தீரும். இன்று அரசியாக இருக்கும் வயதான மூதாட்டி இரண்டாம் எலிசபெத் அடுத்த ஆண்டு (1952இல் அரசியானவர்) டையமண்ட் ஜூப்ளியைக் (60 ஆண்டுகள்) கொண்டாட இருக்கிறார். இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளை உள்ளடக்கிய 16 நாடுகளுக்கு அரசியாக இருக்கும் இவர், இந்தியா, இலங்கை உட்பட ஆங்கிலேயர் ஆட்சி செய்த 54 நாடுகளின் அமைப்பான காமன்வெல்த்துக்கும் தலைவராகவும் இருக்கிறார். கூடுதலாக இங்கிலாந்து நாடு முழுமைக்குமான கிறித்தவ சர்ச் அமைப்பின் தலைவரும் கூட.

ஏகப்பட்ட அரசு மானியங்கள்,சொத்து மூலம் ஒரு பன்னாட்டு நிறுவனம் போல செல்வத்துடன் வாழும் இந்த அரசியின் குடும்பம் இன்றும் செல்வாக்குடன் நீடிப்பதற்கு காரணம்? மேற்கத்திய முதலாளித்துவ ஜனநாயகத்தின் கொடுமையிலிருந்து மக்களை மீட்பதற்கு, 19ஆம் நூற்றாண்டில் தொழிலாளி வர்க்கம் எழுச்சி கொள்ள ஆரம்பித்ததும், முதலாளிகள் தமது நிலபிரபுத்துவ எதிர்ப்பை மாற்றிக் கொண்டனர். நாட்டு மக்களை மதம், அரசர், தேசபக்தி,மரபு என்று அடிமைப்படுத்தவதற்கு இந்த அரச குடும்பங்கள் பிழைத்திருப்பதை அவர்கள் விரும்பினர். நேபாள் போன்ற ஏழை நாடுகளெல்லாம் இன்று மன்னராட்சியைத் தூக்கி எறிந்தாலும் ஐரோப்பிய நாடுகளில் அந்த வம்சம் தொடர்வதற்கு காரணம் இதுதான்.

இந்த மன்னராட்சியின் மகத்துவங்கள்  இப்போது எதற்கு?

அதற்கு நீங்கள் சமீபத்தில் வெளிவந்திருக்கும் "தி கிங்ஸ் ஸ்பீச்' எனும் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். ஆயினும் அந்த மரண மொக்கையை நீங்கள் பார்க்காமல்

இருப்பது சாலச் சிறந்தது. இந்தப்படம் தற்போதைய ஆஸ்கர் விருதுக்கான போட்டியின் 12 பிரிவுகளில் பரிந்துரைக்கப்படும் சிறப்பினைப் பெற்றிருக்கிறது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த திரைக்கதை ஆசிரியர் முதலான பிரிவுகளில் போட்டியிடும் 'பெருமையை' அந்தப் படம் எப்படி அடைந்தது? (தற்போது ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதில் நான்கு பிரிவுகளில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதைக்கான விருதினைப் பெற்றிருக்கின்றது.)

ஆஸ்கருக்குப் போட்டியிடும் படம், அதுவும் பதினாறு பிரிவுகளில் போட்டியிடும் படமென்றதும் உங்களுக்கு ஒரு ஆவல் பிறக்கும். அந்தப் படம் ஏதோ ஒரு வகையில் சிறப்பாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஆஸ்கர் எனும் அபத்தத்தின் அரசியல் புரியவில்லை என்று பொருள்.  ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட பிறகாவது நீங்கள் நோபலின் அரசியலைப் புரிந்து கொண்டீர்கள் என்றால் அந்த விதி இந்தப் படத்திற்கும், அதனால் ஆஸ்கர் விருதிற்கும் பொருந்தும். எனினும் இந்த மரண மொக்கையை நீங்கள் பார்க்காதிருக்க வேண்டுமென மீண்டும் எச்சரிக்கை செய்து உதவும் பொருட்டு அந்தப் படத்தின் கதைச் சுருக்கத்தை இங்கே தருகிறோம்.

•••

1925ஆம் ஆண்டு, ஐந்தாம் ஜார்ஜ் மன்னராக இருக்கிறார். அன்று இங்கிலாந்தின் வெம்பிளி மைதானத்தில் நடக்கும் பேரரசர் கண்காட்சியின் இறுதிநாள். அரசரின் மகன் இளவரசர் ஆல்பர்ட் தனது மனைவி எலிசபெத்துடன் அங்கே உரையாற்றச் செல்கிறார். அந்த உரையை பி.பி.சி. செய்தி நிறுவனம் முதன் முறையாக உலகம் முழுவதும் நேரடி ஒலிபரப்புச் செய்கிறது. ஆயிரக்கணக்கானோர் குழுமியிருக்கும் அந்த மைதானத்தில் இளவரசரால் சரளமாகப் பேச முடியவில்லை. ஆம். அவர் ஒருதிக்கு வாய் மனிதர்.

அரச குடும்பத்தில் பிறந்து விட்டு இது போன்ற குறையுடன் இருப்பது மிகவும் பிரச்சினையான ஒன்று. குடிமக்கள் முன் ஒரு கனவானைப் போல நடந்து கொள்ளும் நடிப்பு அவர்களுக்கு அத்தியாவசியமான ஒன்று. உடல் மொழி, வாய் மொழி தொடங்கி பல்வேறு பிரயத்தனங்களை ஒழுங்காகச் செய்வதன் மூலமே அவர்கள் அரசர்களாகக் காட்சியளிக்கிறார்கள். எனில் இளவரசர்  ஆல்பர்ட்டின் மனப்போராட்டத்தை நாம் புரிந்து  கொள்ள முடியும்.

அதற்காக அவர் பல முயற்சிகளைச் செய்கிறார். மருத்துவர் ஒருவர் ஆல்பர்ட்டிடம் புகை பிடிக்குமாறும், அதன் மூலம் இறுக்கத்தைக் களையலாம் என்றும் சொல்கிறார். வாயில் பவளங்களை அடைத்துவிட்டுப் பேசுமாறும் கூறுகிறார். பலனற்ற இந்த வழிமுறைகளினால் இளவரசரின் எரிச்சல்தான் அதிகமாகின்றது. இறுதியில் அவரது மனைவி வரி விளம்பரத்தின் மூலம் ஒரு பேச்சுப்பயிற்சி அளிக்கும் நிபுணரைச் சந்திக்கிறார். அவர் மூலம் இளவரசருக்கு பேச்சுப் பயிற்சி அளிக்கப்படுகின்றது.

ஆஸ்திரேலியரான அந்தப் பேச்சு நிபுணர் முறைப்படிப் படித்து அந்தத் தொழில் செய்பவரல்ல. ஆயினும் புதுமையான வழிமுறைகளால் அவர் இளவரசரது திக்குவாயைச் சரி செய்ய முயல்கிறார். ஆரம்பத்தில் இளவரசருக்கு இதில் நம்பிக்கை இல்லை என்றாலும், பின்னர் ஆர்வத்துடன் எல்லா வகையான பயிற்சிகளையும் செய்கிறார்.

இடையில் இளவரசரது தந்தை ஐந்தாம் ஜார்ஜ் மண்டையைப் போடுகிறார். மன்னரின் மூத்த மகன் எட்வர்டு மன்னராக வர வேண்டும். ஆனால் அவர் இருமுறை மணமாகி விவாகரத்து பெற்ற ஒரு அமெரிக்க சீமாட்டியை திருமணம் செய்ய விரும்புகிறார். நாட்டின் மதத்திற்கும் தலைவராக உள்ள மன்னர் விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணை மறுமணம் செய்யக்கூடாது. எனவே அவர் மன்னர் பதவியை ஏற்க மறுக்கிறார். வேறு வழியின்றி திக்குவாய்ப் பேச்சால் அவதிப்படும் ஆல்பர்ட் மன்னராகி ஆறாம் ஜார்ஜ் என்று அழைக்கப்படுகிறார்.

இதற்குள் பேச்சுப் பயிற்சி நிபுணரும் ஆறாம் ஜார்ஜும் நண்பர்களாகிறார்கள். நிபுணர் தனது தொடர் முயற்சியால் மன்னரது திக்குவாய்ப் பிரச்சினைக்கு காரணமான சிறு வயது மன அழுத்தங்களைக் கண்டுபிடிக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாகப் பேச்சுத் திறனையும் கொண்டு வருகிறார். இறுதியில் 1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் வருகிறது. ஹிட்லரின் ஜெர்மனியை எதிர்த்து இங்கிலாந்து போரிடத் தயாராகிறது. அதற்காக ஆறாம் ஜார்ஜ் வானொலியில் ஒரு மூன்று பக்க உரையை வானொலியில் ஆற்ற வேண்டும்.

பேச்சு நிபுணரது ஆலோசனையின் பேரில் மன்னர் ஒரு தனியறையில் நிபுணருடன் ஒலிவாங்கியில் பேசுகிறார். வெளியே மதத்தலைவர்கள், பிரதமர் சர்ச்சில் உள்ளிட்ட அரசியல்வாதிகள் காத்திருக்கின்றனர். பி.பி.சி மூலம் உலகம் முழுவதும் பேச்சு ஒலிபரப்பப்படுகிறது. மன்னர் ஆரம்பத்தில் தயங்கினாலும் நிபுணரது இயக்கம், ஊக்கம் காரணமாகப் பின்னர் சரளமாகப் பேசுகிறார். முடிந்ததும் அனைவரும் கை தட்டி மகிழ்கின்றனர். மன்னரை வாழ்த்துகின்றனர். மனைவி, இரு மகள்களுடன் மாடத்திற்கு வரும் மன்னர் கீழே குழுமியிருக்கும் மக்களைப் பார்த்து கை அசைக்கிறார். படம் முடிகிறது. பின்னர் இந்தப் பேச்சு நிபுணர் மன்னரது பல உரைகளைத் தயாரித்துப் பேச வைப்பதற்கு காரணமாக இருக்கிறார் என்ற வரிகளுடன் ஒரு வழியாகப் படம் முடிகிறது.

•••

இது இங்கிலாந்து தயாரிப்பு என்றாலும், ஹாலிவுட் படங்களுக்குள்ள நேர்த்திக்கு குறைந்ததல்ல. வரலாற்றுப் படமென்பதால் அதற்கே உரிய காலத்தைக் கொண்டு வரும் காட்சிகள், ராயல் குடும்பத்தினருக்கான உயர்ந்த உடைகள், உயர்ந்த வகை ஸ்காட்சுகள், தேர்ந்த நடிப்பு, இயக்கம் எல்லா இழவும் இருக்கின்றன. இவைகளே இப்போது ஆஸ்கர் விருதுப் போட்டிகளுக்கும் சென்றிருக்கின்றன.

டாம் ஹ_ப்பர் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்ப்படத்தின் திரைக்கதையினை 73 வயது டேவிட் சீடர் எழுதியிருக்கிறார். கலிபோர்னியாவில் வசிக்கும் இந்தப் பெரிசு இந்தக் கதைக்கான ஆய்வுகளை முன்னரே முடித்து விட்டாராம். 30 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தக் கதையினை வெளியிடலாமா என்று ஆறாம் ஜார்ஜின் மனைவியும், இன்றைய இரண்டாம் எலிசபெத் அரசின் தாயாருமான எலிசபத்திற்கு அவர் கடிதம் எழுதி அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால் அந்த அம்மா தனது வாழ்நாளில் அந்தக் கதை வெளிவருவதை விரும்பவில்லையாம். கணவனின் திக்குவாய்ப் பிரச்சினை எனும் சோக காவியத்தை அவர் நினைவுகூர விரும்பவில்லையாம்.

பிறகு 102 வயதில் 2002ஆம் ஆண்டு அந்த அம்மா இறந்து போகிறார். நாமெல்லாம் 60, 70 வருடங்கள் உயிர் வாழ்ந்தால் பெரிய விசயம். ஆனால் அரச பரம்பரையினரெல்லாம் சர்வ சாதாரணமாக செஞ்சுரி அடிக்கிறார்கள். அதன் பிறகு இந்தக் கதை நாடகமாக வெளிவந்து, இப்போது திரைப்படமாகவும் ஓடுகிறது. இங்கே ஒரு கேள்வி எழுகிறது.

இணையத்தில் ஆளாளுக்கு போகிற போக்கில் ஸ்டாலின் மக்களைக்கொலை செய்தார், மாவோ கலையைக் கொலை செய்தார் என்று கூசாமல் புளுகுவது இருக்கட்டும். இவையே எத்தனை நாவல்களாக, திரைப்படங்களாக வந்திருக்கின்றன. கம்யூனிஸ்டுகளை இழிவுபடுத்தும் அமெரிக்காவின் இந்தப் பூசைகளுக்கெல்லாம் யாரும் அனுமதி பெறவில்லை. அது குறித்து யாரும் கவலையும் படவில்லை. ஆனால் ஒரு அம்மாஞ்சி அரசன் பேசுவதற்கு சிரமப்பட்டான் என்ற ஒரு அக்கப் போரை மேற்குலகின் ஜனநாயகம் கதையாக எடுப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் அதனை என்ன வென்று சொல்ல? அதுவும் இந்த மாபெரும் வரலாற்று உண்மையை அந்த அரசி அம்மா இறந்த பிறகுதான் படமாக எடுத்திருக்கிறார்கள் என்றால் இவர்களது பேச்சுச் சுதந்திரத்தின் யோக்கியதையை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

இந்த படம் முடிவான பிறகு இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும் அந்தப் பேச்சு நிபுணரின் பேரனைக் கண்டு பிடித்தார்களாம். அவர் மூலம் நிபுணரது டைரிகள், கடிதங்கள் அத்தனையையும் சேகரித்து இந்த வரலாற்றுக் காவியத்தில் எந்தத் தவறும் வந்துவிடக்கூடாது என்று சர்வ ஜாக்கிரதையாக ஆய்வு செய்தார்களாம். படத்தில் முக்கியமான வசனங்களில் அந்தப் பேச்சு நிபுணரின் உண்மையான வார்த்தைகளே இடம் பெறுகின்றனவாம். சான்றாக இறுதி உரை முடிந்த பிறகு நிபுணர் "இன்னமும் உங்களுக்கு டபிள்யூ எழுத்து உச்சரிப்பதற்குக் கடினமாக இருக்கிறது' என்று மன்னனிடம் சொல்வார். இது அப்படியே வரலாற்றில் பதிவாகியிருக்கிறதாம். இந்த அறிஞர்களின் வரலாற்று உணர்வு குறித்து நமக்கும் புல்லரிக்கத்தான் செய்கிறது.

ஒரு மன்னன் பேச்சு சிரமத்தை மாற்றி அமைத்தான் என்பதெல்லாம் மாபெரும் வரலாறாகக் காட்சியளிக்கிறது என்றால் முதலாளித்துவ உலகம் உருவாக்கியிருக்கும் வரலாற்று நூல்களின் தரத்தை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. இத்தகைய வரலாறுகளைத்தான் நமது ஆர்.எஸ்.எஸ் அம்பிகளும் சரி, இல்லை தமிழினவாதத் தம்பிகளும் சரி படித்துவிட்டுப் போதை ஏறி உளறி வருகிறார்கள்.

இங்கிலாந்து அறிவாளிகள் ஆறாம் ஜார்ஜின் வாய்ப்பேச்சு குறித்த விசயத்தை வரலாறாக ஆக்கும் போது அம்பிகள் ராமனையும், தம்பிகள் ராசராச சோழனையும் எப்படியெல்லாம் ஆக்கியிருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆனாலும் தி கிங்ஸ் ஸ்பீச் திரைப்படம் தந்திரமாக சில வரலாற்று மோசடிகளையும் கொண்டிருக்கிறது என்பதை சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். உண்மையில் பேச்சு நிபுணர் தனது பேச்சுப் பயிற்சியை ஆறாம் ஜார் ஜுக்கு 1926ஆம் ஆண்டிலேயே துவக்கி விடுகிறார். ஆனால் படத்தில் அந்த காலவரிசை 1936ஆம் ஆண்டு என்று மாற்றப்பட்டிருக்கிறது. காரணம் காலத்தை நீட்டினால் அரச குடும்பத்தின் பல அக்கப்போர்களையும் சொல்ல வேண்டியிருக்கும் என்பதே.

படத்தில் ஆறாம் ஜார்ஜின் பேச்சை கேட்பதற்கு காத்திருப்பவராக பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் வருகிறார். உண்மையில் சர்ச்சில் ஆறாம் ஜார்ஜை விட அவரது அண்ணன் எட்வர்டையே மன்னராக வருவதற்கு விரும்பியிருக்கிறார். மேலும் இந்த எட்வர்டு  ஹிட்லர் மற்றும் நாசிக் கட்சியின் அனுதாபியாக இருந்திருக்கிறார். மேலும் 1940வரை அரச குடும்பத்தினர் நடத்திய கடிதப் போக்குவரத்தில் இந்த அனுதாபமே தென்படுகிறது என்பதைப் பல ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர்.

சர்ச்சிலுக்கு முன்னதாக பிரதமராக இருந்தவர் சேம்பர்லின். இவரும் ஹிட்லரோடு உடன்பாடு செய்து கொண்டதையெல்லாம் அரசரும் வெகுவாக வரவேற்று இருக்கிறார். மேலும் அன்றைக்கு ஹிட்லரின் பாசிசம் முழு உலகையும் பிடித்தாட்டப் போகின்றது என்பதை மேற்கு நாடுகளுக்கு தொடர்ந்து சோவியத் யூனியன் எச்சரிக்கை செய்தது. ஆனால் ஹிட்லர் எப்படியும் ரசியாவைப் பிடித்து அழிப்பார் என்றும் அதனால் கம்யூனிசம் மரணமடையும் என்பதையும் விரும்பிய இங்கிலாந்து, தோழர் ஸ்டாலினின் அறை கூவலை அலட்சியம் செய்தது. இதனாலேயே ரசியா செயல் தந்திர ரீதியில் ஜெர்மனியோடு ஒப்பந்தம் போடவேண்டியதாயிற்று.

இதையெல்லாம் ஒளித்து வைத்து விட்டு, பேரரசர் ஆறாம் ஜார்ஜ் தனது மக்களுக்குப் போர் அபாயம் குறித்துப் பேசுகிறார் என்று அவரை மாபெரும் பாசிச எதிர்ப்புப் போராளியாக திரைப்படத்தில் காட்டுகிறார்கள். ஆனாலும் இந்தப் போராளி படம் முழுவதும் தனது நாக்கோடுதான் சண்டை போடுகிறார், ஹிட்லரை எதிர்த்து அல்ல. மேலும் அன்றைக்கிருந்த போப்பாண்டவரும் கூட ஹிட்லரின் ஆதரவாளராகத்தான் இருந்திருக்கிறார்.

1930களின் பிற்பகுதி என்பது உலக வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டம். இங்கிலாந்து முதலான ஏகாதிபத்தியங்களின் கொடூரமான காலனி ஆதிக்கத்தை எதிர்த்து விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைகின்றன. சோவியத் யூனியனை முன்னோடியாக வைத்து அந்தக் காலனிய எதிர்ப்புப் போராட்டங்கள் போர்க்குணத்துடன் வளர்கின்றன. சீனா முதலான நாடுகள் சோசலிசப் புரட்சிக்காகப் போராடுகின்றன.

இத்தகைய காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு மன்னன், அதிலும் ஒரு ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் அமைப்புக்குத் தன்னைச் சக்கரவர்த்தியாகக் கருதிக் கொண்டவனது வரலாறு இங்கே என்னவாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும்? காலனிய நாடுகளில் ஆயிரக்கணக்கான பொது மக்களை ஏகாதிபத்திய இராணுவமும், போலீசும் கொன்று குவித்த நேரத்தில் இந்த மன்னன் ஒரு பேச்சுப்பயிற்சி நிபுணனோடு சாமனியனாகப் பழகுகிறானாம். படம் அப்படி எடுக்கப்பட்டிருப்பதைப் பலர் மனம் குளிரப்பாராட்டுகிறார்கள்.

என்ன இருந்தாலும் இது ஆண்டைகள் எழுதிய வரலாறு அல்லவா, அப்படித்தான் இருக்கும். சரி, கொந்தளிப்பான காலகட்டத்தில் ஒரு மன்னன் எப்படி எதிர்வினையாற்றுகிறான் என்பதை விடவா அந்தப் பேச்சுப் பிரச்சினை முக்கியமானது? இதை வைத்தே இவர்கள் ஒரு மாபெரும் வரலாற்றுப் படத்தை எடுத்திருக்கிறார்கள் என்றால், ஒன்று அந்த மன்னனது வாழ்வில் வேறு அதி முக்கியத்துவம் ஒன்றும் இருந்திருக்காது, அல்லது அவனது பிற வரலாறு வெளியே சொல்ல முடியாதபடிக்கு பிரச்சினைக்குரியதாக இருந்திருக்க வேண்டும். இல்லையா?

இந்த வரலாற்று கிங்கின் ஆஸ்கர் அக்கப்போருக்கு மத்தியில் மற்றுமொரு கிங் ஒரு விசயத்தை பேசியிருக்கிறார். அவர் இங்கிலாந்து வங்கியின் தலைவர் மெர்வின் கிங். "வரும் நாட்கள் இங்கிலாந்து பொருளாதாரத்திற்கு சிக்கல்கள் ஏற்படுத்தும் நாட்களாக இருக்கும்' என்று அவர் பேசியிருக்கிறார். இந்த விசயத்தில் மட்டும் கிங்கின் பேச்சு உண்மையாக இருக்கிறது.

வேலையில்லாத் திண்டாட்டம், அரசு மானியம் ரத்து, அதிகரித்து வரும் பணவீக்கம் என்று முதலாளித்துவத்தால் பெற்றெடுக்கப்பட்ட அபாயங்களை நோக்கி இங்கிலாந்து நாடு சென்று கொண்டிருக்கும் போது அந்த நாட்டு மக்களை தேசபக்தியிலும், அரச விசுவாசத்திலும் குளிப்பாட்டுவதற்கு இந்தப் படம் வந்திருக்கிறது. முக்கியமாக இந்த மகா குப்பை வரலாற்றுப் படம் ஆஸ்கர் பரிந்துரைகளுக்காக 12 பிரிவில் தெரிவாகியிருக்கிறது என்பதிலிருந்தே இதனை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான சதி என்பதையும் உணரலாம்.

மூன்றாம் உலக நாடுகளின் மக்களை இந்தப் படம் ஈர்க்காது. ஆனாலும் ஜெயமோகன், சாரு நிவேதிதா போன்ற அறிவாளி அம்பிகள் இந்தப் படத்தை சிலாகித்து உள்ளொளி, கொண்டாட்டம் என்று எழுதுவார்கள். இது போன்ற கதைகளைத் தேடிப்பிடித்து காப்பியமாக்கும் கிழக்கு பதிப்பகம் போன்றவர்கள் இதையே ஒரு தொழிலாக செய்கின்றனர். அது போல மேற்குலகின் ஊடகங்கள் இப்போதே இந்தப் படத்தின் அருமை பெருமைகளை எழுதி பிரச்சாரம் செய்யவும் ஆரம்பித்து விட்டன.

ஆனாலும் மேற்குலக நகரங்களில் "முதலாளித்துவம் ஒழிக" என்று தெருவுக்கு வந்து போராடும் மக்களை இந்தப் படம் நிச்சயம் கவர்ந்து விடாது.

இறந்த காலத்தின் வரலாற்றுப் புனைவுகள் எப்போதும் நிகழ்காலத்தின் இயங்கு விசையைத் தீர்மானிக்க முடியாது. ஏனெனில் வரலாறு என்பது மக்களால், அவர்களது போராட்டத்தால் எழுதப்படுவது. இந்த உண்மை இப்போது மறைக்கப்பட்டிருந்தாலும், எதிர்கால வரலாறு அதை நிரூபிக்கும். அதுவரை நாம் இந்த "வரலாற்று' அபத்தங்களைச் சந்திப்பதோடு, சகித்துக் கொள்ளவும் வேண்டியிருக்கும்.

(வினவு இணையத்தளத்தில் வெளியான கட்டுரை. – www.vinavu.com