12_2005PK.jpg

வியட்நாம்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் போராளிகளின் சிந்தையில் உற்சாகத்தைத் தோற்றுவிக்கும் மாபெரும் ஊற்று. இந்தோசீன தீபகற்பத்தில் இருக்கும் இந்தச் சிறிய நாடு கோலியாத் போன்ற அமெரிக்க வல்லரசை 1975ஆம் ஆண்டு வீழ்த்தி 30 ஆண்டுகள் முடிந்துவிட்டது. கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் வியட்நாமிய மக்கள், குறிப்பாக, விவசாயிகள் போராடிப் பெற்ற இந்த வெற்றி உலக வரலாற்றில் ஒரு சகாப்தம். அமெரிக்க அதிபர்கள் கென்னடி முதல் நிக்சன் வரை 10 ஆண்டுகளாக 50 சதவீத தரைப்படை, விமானப்படைகள், 15 விமானம் தாங்கிக் கப்பல்கள் என 10 லட்சம் துருப்புக்களைக் குவித்துக் கொண்டும், ஒரு கோடி டன் வெடிகுண்டுகள்; என வெறிகொண்டு தாக்கியும் அமெரிக்கா படுதோல்வியடைந்தது.

தங்களைத் தாங்களே ஆள்வதற்கும், போர் புரிவதற்கும் வியட்நாம் லாயக்கற்ற நாலாந்தர நாடு என்று 1970இல் அமெரிக்காவின் 37வது அதிபர் நிக்சன் எகத்தாளம் பேசினார். கடைசியில் முதல் தர நாடான அமெரிக்கா தனது படுதோல்வியை ஒப்புக் கொண்டு 1975இல் சமாதான ஒப்பந்தம் போட பாரீசு நகருக்கு வந்தது. இராணுவ ரீதியாக மட்டுமல்ல் அரசியல், உளவியல் மற்றும் தார்மீக ரீதியாகவும் அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டது. ஆக்கிரமிப்புப் போர் நடத்திய 10 ஆண்டு காலத்தில் அமெரிக்காவால் ஒரு வியட்நாமிய கம்யூனிசத் தலைவரைக் கூடப் பிடிக்க முடியவில்லை. அவர்களின் மறைவிடத்தையும் தாக்க முடியவில்லை. பதிலாக நூற்றுக்கணக்கான வியட்நாமிய கிராமங்களை சின்னாபின்னமாக்கி அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது அமெரிக்கா.

 

அமெரிக்க இராணுவத்தின் மனதில் வியட்நாமிய மக்களின் வீரம் ஏற்படுத்திய பீதி நெடுங்காலம் ஆட்சி செய்தது. அதனால்தான் தற்போது ஈராக்கை கற்காலத்திற்கு அனுப்பும் வகையில் குண்டுவீசி அழித்துக் கொண்டிருக்கும் புஷ்ஷின் தகப்பன் "அப்பா புஷ்' ஒருமுறை சொன்னார்: ""கடவுளே, இறுதியாக வியட்நாமிய பீதியை உதைத்து அனுப்பிவிட்டோம்.'' பாவம், புஷ் பரம்பரையின் வேண்டுதல் பலிக்கவில்லை. இப்போது ஈராக்கியப் போராளிகள் ஈராக்கிய பீதியை அமெரிக்காவின் மனதில் அடித்தல் திருத்தலில்லாமல் அழகாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

 

கணினியும், செயற்கைக்கோளும், பி52 எனும் பிரம்மாண்டமான குண்டுவீச்சு விமானங்களும் மனிதனின் விடுதலை உணர்வை வெல்ல முடியாது என்பதை உலகிற்கு உணர்த்தியது வியட்நாம். அதற்காக வியட்நாம் மக்கள் அளித்த விலையும் தியாகமும் ஒப்பிட முடியாத ஒன்று. போரில் வியட்நாமை நேரடியாக வெல்ல முடியாத அமெரிக்க இராணுவம் பல்வேறு இரசாயனக் குண்டுகளை வீசி வியட்நாமை மறைமுகமாக சுடுகாடாக்கியது. இந்தப் பேரழிவு ஆயுதங்கள் ஏற்படுத்திய பாதிப்பு குறித்த உண்மைகள் இன்றுவரை அமெரிக்காவால் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்த அநீதிக்காகவே இனிவரும் அமெரிக்க அதிபர்களையும் சேர்த்து சிரச்சேதம் செய்தால்கூட நீதியின் கணக்கு வழக்கு தீராது.

 

1950களில் மலேயாவிலிருந்து பிரிட்டிஷ் இராணுவம் கம்யூனிசப் போராளிகளை அழிக்க டயாக்சின் கலந்த இரசாயனக் குண்டுகளை முதன்முதலாகப் பயன்படுத்தியது. இதனால் நாட்டுப்புறங்கள் மற்றும் காடுகளில் மரங்கள், பயிர்கள் பட்டுப்போய் விவசாயப் பொருளாதாரம் அழிவுக்குள்ளானது. இதிலிருந்து பரிசோதனை செய்து ஏஜெண்ட் பர்ப்பிள், ஏஜெண்ட் ப்ளூ, ஏஜெண்ட் ஆரஞ்சு போன்ற பேரழிவு இரசாயனக் குண்டுகளை உருவாக்கியது அமெரிக்க இராணுவம். இவற்றை 1965 முதல் 1975 வரை கப்பல் கப்பலாகக் கொண்டு போய் வியட்நாமில் இறக்கியது. இதைப் பற்றி தெற்கு வியட்நாமில் இருந்த அமெரிக்க ஆதரவு பொம்மை ஆட்சியாளர்களுக்குக் கூடத் தெரியாமல் செய்தது அமெரிக்கா.

 

ஏஜெண்ட் ஆரஞ்சு எனப்படும் டயாக்சின் கலந்த இந்த வெடிகுண்டு 28 வகையான நோய்களை உருவாக்கும். இந்த நோய்கள் உடனடியாகவும் வரும். அல்லது 10,20 ஆண்டுகள் கழித்தும் வரலாம். டயாக்சின் நோய்களுக்கான சிகிச்சை செலவு மிக மிக அதிகம். நோய் இருப்பதைக் கண்டுபிடிக்கும் பரிசோதனைச் செலவு மட்டும் 45 ஆயிரம் ரூபாய் (45,000). வியட்நாமின் அமெரிக்க விமான ஓட்டிகள் பறந்த சென்சஸ் கணக்குப் படி 3,000 கிராமங்களில் 42,00,000 மக்கள் மீது ஏஜெண்ட் ஆரஞ்சு வீசப்பட்டுள்ளது. இதில் 5,00,000 மக்கள் கொல்லப்பட்டார்கள்; 7,00,000 மக்கள் டயாக்சின் பாதிப்பினால் நடைப்பிணமானார்கள். மொத்த வியட்நாமின் பரப்பளவில் 10 சதவீத நிலம் நஞ்சாக்கப்பட்டது. இந்த நச்சுத்தன்மை 7 அடி ஆழம் வரை நிலத்தில் ஊடுருவி முப்பது ஆண்டுகள் வரை அதனை பட்டுப்போன நிலமாக ஆக்கி விடும். ஏஜெண்ட் ஆரஞ்சின் பயங்கரத்தை ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் நியூயார்க் நகரத்தின் குடிநீர்த் தொட்டியில் இந்த வெடிமருந்தின் 80 கிராம் அளவு கலக்கப்பட்டால் அந்த நகரத்தின் 70,00,000 மக்களும் கொல்லப்பட்டு விடுவார்கள்.

 

வியட்நாமில் எவ்வளவு வீசினார்கள் என்ற கணக்கு எவருக்கும் தெரியாது. தற்போதைய ஆய்வின்படி சுமார் 600 கிலோ ஏஜெண்ட் ஆரஞ்சு வீசப்பட்டுள்ளதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படியென்றால் வியட்நாமின் பாதிப்பை நினைத்துப் பார்க்கவே நடுங்க வைக்கிறது. இரத்தத்தைக் கொதிக்க வைக்கும் இந்த உண்மை குறைந்தபட்சம் மேற்கத்தியச் செய்தி ஊடகங்களில் கூட வெளிவரவில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது வியட்நாமிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய நட்ட ஈடு குறித்து எவரும் மறந்தும் கூடக் கேட்டதில்லை. ஆனாலும் உலகில் ஜனநாயகமும், ஐ.நா. சபையும் இன்னபிற இழவுகளும் இருப்பதாய்ச் சொல்கிறார்கள்.

 

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் ஏஜெண்ட் ஆரஞ்சின் பயங்கரம் குறித்த உண்மைகள் வியட்நாம் மக்களை முன்னிட்டுப் பேசப்படவில்லை. மாறாக, வியட்நாமில் போரிட்ட 3,00,000 அமெரிக்க வீரர்களுக்கு டயாக்சின் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்து, அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. பாதிக்கப்பட்ட அமெரிக்க வீரர்களுக்கு நட்டஈடாகத் தரப்பட்ட 1,000 கோடி ரூபாய் மேற்குலகின் ஜனநாயகக் கண்களைத் திறந்துவிட்டது. ஏஜெண்ட் ஆரஞ்சு குறித்த பயங்கரம் உலகத்தின் தோலில் உறைத்தது. குண்டு வீசிய விமான ஓட்டுனர்களுக்கே இப்படியொரு பாதிப்பு என்றால் அதற்கு இலக்கான வியட்நாமிய மக்களின் நிலைமை எவ்வளவு பயங்கரமாக இருக்கும்.

 

அமெரிக்க இராணுவத்திற்கு டயாக்சின் எனும் இந்த இரசாயனப் பொருளைத் தயாரித்து அளிப்பது யார் தெரியுமா? நமக்கு அறிமுகமான மான்சான்டோ எனும் பன்னாட்டு நிறுவனம்தான். தற்போது பருத்தி விதைகளில் டெர்மினேட்டர், பி.டி. காட்டன் எனும் புதுப்புது ரகங்களை அறிமுகப்படுத்தி நமதுநாட்டு பருத்தி விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளியதும் இந்நிறுவனம்தான். டயாக்சினைத் தயாரித்து அமெரிக்க இராணுவத்திற்கு சப்ளை செய்வதன் மூலம் கோடி கோடியாகச் சம்பாதிக்கிறது. இந்தக் கொலைகார நிறுவனத்திற்கு இந்தியாவிலும் ஆய்வகங்கள் இருக்கின்றன. மான்சான்டோவிற்கும் அமெரிக்க இராணுவத்திற்கும் உள்ள வர்த்தக உறவு முற்றிலும் இரகசியமானது. டயாக்சின்போல இன்னும் வேறு என்னென்ன இரசாயனக் கொலைப் பொருட்களை அந்த நிறுவனம் தயாரிக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.

 

உண்மைகளின் மேல் ஏறி நின்று சளைக்காமல் பொய் சொல்வதில் அமெரிக்கர்களை யாரும் விஞ்ச முடியாது. அமெரிக்காவின் அரசுத்துறைச் செயலராக இருந்த காலின் பாவெல் இப்படிச் சொன்னார். ""முதல் உலகப் போருக்குப் பிறகு இரசாயன உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தியது ஈராக்கின் சதாம் உசேன்தான்.'' வியட்நாம் போரின்போதே இரசாயன ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்தி விதிகளை மீறியது. இது ஒருபுறம் இருக்க, இரசாயன உயிரியல் ஆயுதங்களை இராணுவ இலக்குகளைத் தாக்குவதற்குக் கூடப் பயன்படுத்தக் கூடாது என்று 1980இல் ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்தத் தடையை ஈராக்கில் அமெரிக்கா வெளிப்படையாகவே மீறி இருப்பது அம்பலமாகியுள்ளது.

 

இத்தாலியின் அரசுத் தொலைக்காட்சி நிறுவனமான ஆர்.ஏ.ஐ. ""ஃபலூஜா மறைக்கப்பட்ட படுகொலை'' என்ற ஆவணப்படத்தை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இதில் அமெரிக்க இராணுவம் எம்.77 எனும் வெள்ளை பாஸ்பரசைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இரசாயனக் குண்டை பலூஜா நகரத்தில் மக்கள் குடியிருப்பில் வீசியிருப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது. பாஸ்பரஸ் குண்டு விழுந்த மாத்திரத்திலேயே 150 மீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் எரிந்து, உருகி, இறந்து போனார்கள். பெண்கள், குழந்தைகளின் சட்டைகள் அப்படியே இருக்க சதையும், எலும்பும் சாம்பலாகும் கோரக் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. குண்டுவீசிய வீரர்களின் நேர்காணலும் படத்திலுள்ளது. இதை ஆரம்பத்தில் ஒப்புக் கொள்ளாத அமெரிக்க அரசு தற்போது ""ஆமாம், வீசினோம், அதனால் என்ன?'' என்று திமிராகப் பேசி வருகிறது.

 

அமெரிக்காவின் பிரம்மாண்டமான இராணுவ பலத்தை வெறும் மூங்கில் ஆயுதங்களைக் கொண்டு விரட்டியடித்தார்கள் வியட்நாமிய மக்கள். தங்கள் உடலையே ஆயுதமாக்கி அமெரிக்காவை எதிர்கொண்டு தாக்குகிறார்கள் ஈராக்கியப் போராளிகள். வியட்நாமிலும், ஈராக்கிலும் அமெரிக்கா ஏற்படுத்தியிருக்கும் பேரழிவுகளுக்கு வருங்கால வரலாறு நிச்சயம் கணக்குத் தீர்க்கும். வீரம் செறிந்த வியட்நாமின் 30 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறே அதை நிரூபித்திருக்கிறது.

 

வேல்ராசன்