எகிப்து, துனிசியா, பஹ்ரைன், ஏமன், ஜோர்டான், லிபியா உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகளில் நடந்து வரும் போராட்டங்கள் பற்றி வெளிவரும் பெரும்பாலான செய்திகள், விமர்சனக் கட்டுரைகள் அந்நாடுகளில் நடந்துவரும் சர்வாதிகார ஆட்சி, போலீசு ஒடுக்குமுறை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய பிரச்சினைகளை அம்பலப்படுத்துவதற்கு அப்பால் செல்லுவதில்லை. குறிப்பாக, இப்போராட்டங்களுக்கும் அந்நாடுகளில் நிலவிவரும் பொருளாதாரக் கட்டமைப்பிற்கும் இடையேயுள்ள உறவு பற்றியோ, அந்நாடுகளில் நிலவிவரும் சர்வாதிகார அல்லது மன்னராட்சிக்கும் தனியார்மயம்  தாராளமயத்திற்கும் இடையேயான உறவு பற்றியேர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுத் தொழிற்கழகங்கள் இச்சர்வாதிகார அல்லது மன்னராட்சியைப் பயன்படுத்திக் கொண்டு அந்நாடுகளின் விவசாயம், தொழில் மற்றும் நிதித் துறைகளையும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட இயற்கை வளங்களையும் கைப்பற்றிக்கொண்டு கொழுத்த ஆதாயம் அடைந்துவருவது பற்றியேர் அமெரிக்கா இச்சர்வாதிகார அல்லது மன்னராட்சியைப் பாதுகாப்பதற்காகவே எகிப்திற்கும், துனிசியாவிற்கும், ஜோர்டானுக்கும் பொருளாதார, இராணுவ நிதியுதவிகளை அளித்துவருவது பற்றியோ முதலாளித்துவ அரசியல் விமர்சகர்கள் முழுமையாக எழுதுவதில்லை.

 

 

அகண்ட அரபு தேசம் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அமெரிக்கா  இசுரேல் கூட்டணிக்கு எதிராகவும் செயல்பட்டு வந்த எகிப்து, 1978  இல் அமெரிக்காவின் முன்னிலையில் இசுரேலோடு அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது. இசுரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் இசுரேல் பெற்ற வெற்றியும், எகிப்தில் நாசரின் மறைவுக்குப் பின் அன்வர் சதாத் அதிபராக இருந்ததும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்குப் பின்னணியாக இருந்தன. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின், அரபு நாடுகளின் மத்தியில் அமெரிக்கா  இசுரேல் கூட்டணியின் நலனை முன்னிறுத்திப் பாதுகாக்கும் அடியாளாக எகிப்து மாறியது.

அமெரிக்கா இந்த மாற்றத்திற்குப் பரிசாக எகிப்திற்கு வருடாவருடம் பல நூறு கோடி டாலர்களை நிதியுதவி என்ற பெயரில் இலஞ்சமாகக் கொடுத்து வந்தது. எகிப்து, தனக்குத் தேவையான ஆயுதத் தளவாடங்களையும், உணவுப் பொருட்களையும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளுவதற்கு ஏற்றவாறு இந்த நிதியுதவி அளிக்கப்பட்டது. மேலும், எகிப்தைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் அமெரிக்காவிலிருந்து நுகர் பொருட்களை இறக்குமதி செய்து உள்நாட்டுச் சந்தையில் விற்பதற்கு ஏற்றவாறு பண்ட இறக்குமதித் திட்டமொன்றையும் தயாரித்துக் கொடுத்ததோடு, அதற்கான நிதியுதவிகளையும் அளித்து வந்தது, அமெரிக்கா. அதாவது, 1978  க்குப் பின் எகிப்து அமெரிக்காவின் அடியாளாக மட்டுமின்றி, அமெரிக்காவின் சந்தையாகவும் மாற்றப்பட்டது.

எகிப்தில் பொருளாதாரக் கட்டுமானச் சீர்திருத்தங்களை அமுலாக்கும் நோக்கமும் அமெரிக்க நிதியுதவியின் பின் மறைந்திருந்தது. குறிப்பாக, சோவியத் சமூக ஏகாதிபத்தியம் உடைந்து சிதறி, பனிப்போர் காலக் கட்டம் முடிவுக்கு வந்த பின், எகிப்தில் தனியார்மயம்  தாராளமயத்தைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என நிர்பந்தித்தது, அமெரிக்கா. எகிப்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் 1991  ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தப்படி, ரொட்டியைத் தவிர, பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் நுகர்பொருட்களுக்கும் வழங்கப்பட்டு வந்த மானியங்கள் வெட்டப்பட்டன் கார்ப்பரேட் நிறுனங்கள் மீது விதிக்கப்பட்டு வந்த வரிகள் குறைக்கப்பட்டன் இறக்குமதிக்கும் அந்நிய முதலீட்டிற்கும் இருந்து வந்த வரம்புகளும் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது, விவசாயத்தில் தனியார் முதலீட்டிற்கு இருந்து வந்த கட்டுப்பாடுகளை நீக்குவது, விவசாய விளைபொருட்களின் விலைகளைத் தீர்மானிப்பதில் இருந்த வந்த கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வது ஆகிய சீர்திருத்தங்கள் புகுத்தப்பட்டன.

எகிப்தில் அமெரிக்காவின் முதலீட்டை அதிகரிப்பதற்காக அவ்விரு நாடுகளுக்கும் இடையே 1994  ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதன் தொடர்ச்சியாக 1998  ஆம் ஆண்டு வர்த்தக மற்றும் முதலீட்டிற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியது. மேலும், அமெரிக்க மற்றும் எகிப்தைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட வர்த்தக சங்கமொன்று, "அதிபர் கவுன்சில்' என்ற பெயரில் அமைக்கப்பட்டது. எகிப்தின் (முன்னாள்) அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் மகன் கமால் முபாரக் தலைமையில் இயங்கிய இக்கவுன்சிலில் அமெரிக்காவைச் சேர்ந்த மோடோரோலா, சிட்டி பேங்க், ஜெனரல் எலெக்ட்ரிக், ஃபைசர் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருந்தன. இந்த அதிபர் கவுன்சில் எகிப்தின் தொலைதொடர்பு, வங்கி, சுங்க வரி மற்றும் கார்ப்பரேட் வரிகளில் தனியார்மயம்  தாராளமயத்தைப் புகுத்த ஆலோசனைகளை வழங்கி வந்ததோடு, எகிப்தின் நிழல் அமைச்சரவையாகவும் செயல்பட்டது.

ஹோஸ்னி முபாரக்கைப் பதவி விலகக் கோரும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், அமெரிக்க அரசு முபாரக்கோடு பேச்சுவார்த்தை நடத்த விஸ்னர் என்பவரை எகிப்துக்கு அனுப்பி வைத்த து. விஸ்னர் எகிப்துக்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றியவர் என்றாலும், தற்பொழுது விஸ்னர் சட்ட ஆலோசகராகப் பணியாற்றிவரும் பேட்டன் பாக்ஸ் என்ற அமெரிக்க நிறுவனம்தான் எகிப்தைச் சேர்ந்த மிக முக்கியமான கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடுகளையும், வியாபாரங்களையும் கவனித்து வருகிறது. மேலும், எகிப்திற்கு ஆயுதத் தளவாடங்களை விற்கும் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பேட்டன் பாக்ஸ்தான் சட்ட ஆலோசகராக இருந்து வருகிறது. எகிப்தின் அரசியலைத் தீர்மானிப்பதில் அமெரிக்க மற்றும் எகிப்தின் கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த அளவிற்குச் செல்வாக்கு செலுத்தி வருகின்றன என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளமுடியும்.

அமெரிக்கா திணித்த கட்டுமான சீர்திருத்தங்களின் விளைவாக, அந்நிய ஏகாதிபத்திய நிறுவனங்கள், அவற்றின் உள்நாட்டுத் தரகர்களைக் கொண்ட சிறு கும்பலிடம் எகிப்தின் பொருளாதாரமே சிக்கிக் கொண்டது. இக்கும்பல் தனது மூலதனத்தையும் இலாபத்தையும் பாதுகாத்துக் கொள்ள அரசு இயந்திரத்தை மிகவும் வெளிப்படையாகவே பயன்படுத்திக் கொண்டது. குறிப்பாக, அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் தலைமையின் கீழ் இருந்த தேசிய ஜனநாயகக் கட்சி, இக்கும்பலின் சங்கமாகவே மாறியது. அரசியலும், கார்ப்பரேட் நிறுவனங்களும் ஓர் உயிர் ஈருடலாக ஒன்றோடு ஒன்று கலந்தன.

மேற்காசியாவிலேயே பெரும் உருக்காலை அதிபரான அகமது இஸ் என்பவர்தான் தேசிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலராகப் பதவி வகித்தார். இவரின் உருக்காலை வியாபாரத்திற்காகவே, அரசு  தனியார் கூட்டணியின் கீழ் பல்வேறு அடிக்கட்டுமான வசதிகளை உருவாக்கும் திட்டங்களை ஹோஸ்னி முபாரக் அரசாங்கம் அறிவித்தது. நாடாளுமன்ற விவகார அமைச்சராக இருந்த தலத் முஸ்தபா ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருந்ததன் காரணமாக வீட்டுமனை வளர்ச்சித் திட்டங்களுக்கானஒப்பந்தங்கள் அவருக்கு அளிக்கப்பட்டன.

சட்டவிரோதமான ஊழலைவிட, சட்டபூர்வமாக நடந்த இந்த கார்ப்பரேட் பகற்கொள்ளையின் விளைவாக, ஆளும் கும்பலின் சொத்து மதிப்பு எகிறிப் பாய்ந்தது. குறிப்பாக, அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் சொத்து மதிப்பு 300 கோடி அமெரிக்க டாலரில் இருந்து 7,000 கோடி டாலர் வரை இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலராக இருந்த அகமது இஸ்ஸின் சொத்து மதிப்பு 1,800 கோடி டாலர், சுற்றுலாத் துறையின் அமைச்சராக இருந்த ஜோஹயர் காரானாவின் சொத்து மதிப்பு 1,300 கோடி டாலர், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அகமது அல் மக்ரபியின் சொத்து மதிப்பு 1,100 கோடி டாலர், உள்துறை அமைச்சராக இருந்த ஹபிப் அட்லியின் சொத்து மதிப்பு 800 கோடி டாலர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள்  கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இணையாக இராணுவ அதிகாரிகளும் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதற்கு வழி ஏற்படுத்தித் தரப்பட்டது. குறிப்பாக, நல்ல இலாபத்தில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனங்களை ஒருபுறம் கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரை வார்த்துவந்த ஹோஸ்னி முபாரக், இன்னொருபுறம் பல பொதுத்துறை நிறுவனங்களை சிவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து இராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தார். இதன் மூலம், இராணுவ அதிகாரிகள் கொழுத்த சம்பளம் மற்றும் பல்வேறு சலுகைகளோடு இந்த நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பில் அமர்த்தப்பட்டனர்.

இன்னொருபுறமோ, அமெரிக்கா வருடாவருடம் எகிப்து இராணுவத்துக்கு வழங்கி வந்த 130 கோடி அமெரிக்க டாலர் (6,500 கோடி ரூபாய்) பெறுமான நிதியுதவி, அந்த நாட்டு இராணுவத்தை அமெரிக்காவின் ஆயுதத்தளவாட ஏகபோக நிறுவனங்களின் வாலாகவே மாற்றியது. அமெரிக்காவின் இந்த நிதியுதவியைப் பயன்படுத்திக் கொண்டு எகிப்திற்கு ஆயுதங்களை விற்றுவந்த ஜெனரல் டைனமிக்ஸ், போயிங், லாக்ஹீட் மார்டின் உள்ளிட்ட பல அமெரிக்க நிறுவனங்கள் எகிப்து இராணுவ அதிகாரிகளைத் தமது தரகர்களாகவும், "லாபியிஸ்டு' களாகவும் நியமித்துக் கொண்டன.

எகிப்தின் உள்நாட்டு ஆளும் கும்பல் கார்ப்பரேட் பகற்கொள்ளையின் மூலம் சுருட்டிய பெருஞ்செல்வத்தை வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவிக்கவும், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கவும், நிதிச் சூதாட்டத்தில் போடவும், ஆடம்பரமாக வாழவும்தான் பயன்படுத்தியதேயொழிய, உள்நாட்டின் தொழிற்வளர்ச்சிக்கு பயன்படுத்தவில்லை. கட்டுமானத் துறை, சுற்றுலா, "ஷாப்பிங் மால்' போன்ற நவீன தொழில் மற்றும் சேவைத் துறைகள் குறைந்த அளவிற்கே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியதால், பெருவாரியான இளைஞர்கள் தெருவோரம் கடைகள் போடுவது, டாக்ஸி ஓட்டுவது, ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலிகளாக வேலை பார்ப்பது போன்ற அமைப்புசாராத் தொழில்களை நோக்கித் தள்ளப்பட்டனர்.

மாதமொன்றுக்குக் குறைந்தபட்ச கூலியாக 240 அமெரிக்க டாலர்கள் தர வேண்டும் என்ற தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைளும், போராட்டங்களும் ஒடுக்கப்பட்டு, குறைந்தபட்ச கூலியை 100 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக நிர்ணயித்தது, ஹோஸ்னி முபாரக் அரசு. இதனால், 40 சதவீதத்துக்கும் மேலான எகிப்திய மக்கள் நாளொன்றுக்கு வெறும் 100 ரூபாய்க்கும் (2 அமெரிக்க டாலர்கள்) குறைவான தினக் கூலியில் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசியமான சேவைத் துறைகளில்கூட மறைமுகமாகத் தனியார்மயம் புகுத்தப்பட்டதால், உழைக்கும் மக்கள் இச்சேவைகளைப் பெறுவதில் இருந்து ஒதுக்கித் தள்ளப்பட்டனர். இதன் காரணமாக, பெருவாரியான ஏழைக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, அவர்களைக் கூலி வேலைக்கு அனுப்பி வந்தனர்.

இந்த ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பின் "அமைதி'யைப் பாதுகாப்பதற்காகவும், மக்கள் மத்தியில் வீசும் பாலஸ்தீன ஆதரவு, இசுரேல் எதிர்ப்பு உணர்வுகளை அடக்கி ஒடுக்கவும் கடந்த முப்பது ஆண்டுகளாக எகிப்து அவசர நிலைக் கொடுங்கோன்மையின் கீழ் இருத்தி வைக்கப்பட்டது. போலீசுக்கும் உளவு அமைப்புகளுக்கும் வரம்பற்ற அதிகாரம் தரப்பட்டு, மக்கள் நிரந்தரக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டனர். சாலையோரத் தடையரண்களும், தேடுதல் நடவடிக்கைகளும் எகிப்திய மக்களின் அன்றாட வாழ்வில் வாடிக்கையான நிகழ்ச்சிகளாக இருந்தன.

சுயதொழில் தொடங்குவதற்காக வாங்கப்பட்ட கடனை வசூலிக்கும் அதிகாரமும் போலீசுக்குத் தரப்பட்டதால், கடனைக் கட்டத் தவறும் இளைஞர்கள் சித்திரவதை செய்யப்படுவதும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும் வரைமுறையின்றி நடந்தது. இலஞ்சத்தில் ஊறிப் போயிருந்த போலீசு, பொது மக்களை மிரட்டிப் பணம் பறிக்கும் ரவுடித்தனங்களில் ஈடுபட்டு வந்ததோடு, கார்ப்பரேட் நிறுவனங்கள், கந்துவட்டிக் கும்பலின் நேரடியான அடியாளாகவும் செயல்பட்டு வந்தது. எகிப்தில் முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டதற்கு இந்த சமூகப் பின்னணிதான் காரணமாக அமைந்தது.

எகிப்து சமூகத்தின் இந்தக் குறுக்கு வெட்டுத் தோற்றம் பெருவாரியான அரபு நாடுகளுக்கும் பொருந்திப் போகக் கூடியதுதான். துனிசியாவோடு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மட்டுமின்றி, அணுசக்தி கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளும் அளவிற்கு அமெரிக்காவிற்கும், அந்நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த பென் அலிக்கும் நெருக்கம் நிலவிவந்தது. துனிசிய மக்களை ஒடுக்கிவந்த அந்நாட்டின் இராணுவத்துக்கு அமெரிக்கா வருடாவருடம் 120 இலட்சம் அமெரிக்க

டாலர்களை நிதியுதவியாக அளித்துவந்தது. துனிசியாவின் கச்சா எண்ணெய், சுற்றுலா, ஜவுளி, மின் கருவிகள் மற்றும் கனரக இயந்திரத் தொழில்களில் முதலீடு செய்துள்ள ஜெனரல் எலெக்ட்ரிக், கோகோ கோலா, கேட்டர்பில்லர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு பென் அலி அரசின் மனித உரிமை மீறல்கள் தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளாகத்தான் தெரிந்தன. பென் அலியின் சர்வாதிகார ஆட்சி இல்லையென்றால், அந்நாட்டின் சந்தையில் தமது நாட்டின் உற்பத்திப் பொருட்களைக் கொண்டுபோய்க் கொட்ட முடியாது என்பதை பிரான்சும், இத்தாலியும், ஜெர்மனியும் உணர்ந்தே இருந்தன.

பஹ்ரைனில் அந்நிய முதலீட்டிற்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் கிடையாது என்பது மட்டுமல்ல, கச்சா எண்ணெய் தொழில் தவிர, பிற துறைகளில் முதலீடு செய்துள்ள அந்நிய ஏகபோக நிறுவனங்கள் வருமான வரிகூடச் செலுத்த வேண்டியதில்லை. தமது இலாபத்தை பஹ்ரைனில்தான் மீண்டும் முதலீடு செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் அந்நிய நிறுவனங்களுக்குக் கிடையாது. அந்நாட்டில் செயல்படும் அந்நிய நிறுவனங்களுக்குத் தமது விருப்பப்படி குறைந்தபட்சக் கூலியை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையும் உண்டு. பஹ்ரைனின் தேசிய எண்ணெய்க் கழகத்தின் 40 சதவீதப் பங்குகள் அமெரிக்காவின் கால்டெக்ஸ் நிறுவனத்தின் வசம் இருப்பதோடு, அமெரிக்காவின் கடற்படைத் தளமும் பஹ்ரைனில் இயங்கி வருகிறது. லிபியாவில் கடாஃபியின் சர்வாதிகார ஆட்சியைத் தூக்கியெறிய முயன்றுவரும் அமெரிக்கா, பஹ்ரைனின் மன்னராட்சியைத் தாங்கிப் பிடித்து வருவதற்கான காரணங்கள் இவைதான்.

எகிப்திலும், துனிசியாவிலும், மற்ற பிற அரபு நாடுகளிலும் நடந்த போராட்டங்கள், இச்சர்வாதிகார ஃ மன்னராட்சியைத் தாங்கிப் பிடித்துவரும் தனியார்மயம் தாராளமயம் என்ற பொருளாதார அடிக்கட்டுமானத்தைக் குறிவைத்துத் தாக்கவில்லை. முபாரக்,பென் அலியின் இடங்களில் அமெரிக்காவின் வேறு விசுவாசிகள் அமர்ந்து கொள்வதற்கு போராட்டத்தின் இந்த பலவீனமே இடம் கொடுத்துவிட்டது. அரபு நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் பரவலாகக் காணப்படினும், தங்களைத் தாக்கும் ஆயுதங்கள் அமெரிக்காவால் வழங்கப்பட்டவை என்பது அம்மக்களுக்குத் தெரிந்திருப்பினும், இப்போராட்டங்கள் சர்வாதிகார எதிர்ப்பு என்ற வரம்பைத் தாண்டாமல் முடிந்துபோனது வரலாற்று முரண்தான்.

செல்வம்