09302022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

மழையில் சில துளிகள்..

12_2005PK.jpg

மாமழை போற்றுதும் என்பதற்குப் பதிலாக, மாமழை போதும் எனுமளவுக்கு மழை கொட்டித் தீர்க்கிறது. சென்னையில் மட்டும் இரண்டே நாளில் 410 மி.மீட்டர் மழை. நடுங்குகின்றன குடிசைகள். ஏழைகளின் எலும்பைத் துளைக்கிறது மழையின் குளிர். நகராட்சிக் கட்டிடங்களிலும், பள்ளிக் கூடங்களிலும் அணைந்து கொண்டு பட்டைச் சோற்றுக்காகப் பரிதவிக்கிறார்கள் அன்றாடங்காய்ச்சிகள். முதியவர்களுக்கும், குழந்தைகளுக்குமாய் முண்டியடிக்கிறார்கள் பெண்கள். சூழ்நிலை இப்படியிருக்க சூரியன் எஃப்.எம்.மிலிருந்து ஒரு குரல் வருகிறது, ""ஹலோ மகளிர் மட்டும்... ம் சொல்லுங்க இந்த மழைக்கு என்ன செஞ்சு சாப்பிட்டா மேட்ச்சா இருக்கும்?'' தொலைபேசியின் மறுமுனையில் ""மேடம் இந்த மழைக்கு பிரெட்ட எக்கோட டோஸ்ட் பண்ணி சாப்பிட்டா சூப்பரா இருக்கும் மேடம்''... ரசனையாக விவரணை நீள்கிறது. ""ம் அப்புறம் மறக்காம ரிசல்ட் என்னன்னு நாளைக்கு சொல்லணும் புரியுதா? என்ன ரிசல்ட்டுன்னு சொல்றீங்களா? ஓ.கே.'' கொஞ்சிக் குழைகிறது நிகழ்ச்சியை நடத்தும் குரல். எதைச் சாப்பிட்டாலும் அடுத்தநாள் என்ன ரிசல்ட்டாகும் என்பது பாவம் அந்த அம்மணிக்குத் தெரியாது போலும். நமது பட்டைச் சோறின் அடுத்த நாள் ரிசல்ட்டை வேண்டுமானால் சூரியன் எஃப்.எம்.க்கும் அனுப்பி வைத்து உதவி செய்யலாம்.

மூடிய கடைகளின் ஓரமாகவும், படிகளின் இடுக்கிலும் வாய் பேசமுடியாமல் வெடவெடத்து நிற்கிறார்கள் மக்கள். ""அப்புறம். ஜில்லுன்னு இந்த கிளைமேட்டுக்கு ஏத்த மாதிரி என்ன பாட்டுப் போடலாம் சொல்லுங்க'' என்கிறது எஃப்.எம். ""புல்லாய், விலங்காய், புழுவாய், நரவடிவாய்'' என்ற பத்திரகிரியாரின் பாடல் என் நினைவுக்கு வருகிறது. உதவியோ, உதவிகரமான அறிவிப்புகளோ செய்யாவிட்டாலும் வாடியிருக்கும் மக்களை வதைக்காமலாவது விடலாம். விடுவதாயில்லை. ""சிற்றுணர்வார் என்றும் சிலுசிலுப்பார் என்று'' நீதிவெண்பா சொல்லுவது போல "சின்னத்தம்பியும் பெரியதம்பியும்' ""ஏண்டா சின்னத்தம்பி மழைக்கு உணவுப் பொட்டலம் தர்றாங்களாமே... சூடா இருக்குமா? கூவத்துல சுறா வந்துச்சாமே.. வாங்கிக் கடை போடலாண்டா'' இப்படிப் பேச்சு நீள்கிறது. கூவக்கரை குடிசையெல்லாம் எடைக்குப் போட்ட குப்பை போல, குடிசைப் பகுதி மக்களெல்லாம் மழையில் மிதக்கும் செத்தை போல திக்கு தெரியாமல் அலையும்போது சூரியன் எஃப்.எம்.இன் "கடை'க்கோடி புத்தியை எந்த கழிவுநீர்த் தொட்டியில் கொண்டு தொலைப்பது?

 

துரத்தும் மழை. ஓடும் மக்கள். ரேடியோ முதலாளிகளுக்கோ கொண்டாட்டம். ஹாட் மச்சி ரேடியோ மிர்ச்சியோ வேறு மாதிரி விசாரிக்கிறது. ""ஹலோ உங்க ஏரியாவுல மழை எப்படி?'' மறுமுனையில் நேயர் ""சூப்பர் மழை சார். தெருவெல்லாம் தண்ணி கீழ்வீடெல்லாம் தண்ணி வந்தாச்சு. நான் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இருக்கேன். ஸ்ரீலங்காஇண்டியா மேட்ச் பார்த்திட்டிருக்கேன். அதனால டைம் பாசாயிட்டிருக்கு'' குரலில் பேரானந்தம். ""வெரிகுட். பலபேர் வெள்ளத்தால மழைய நொந்துக்கிட்டிருப்பாங்க. தண்ணியில்லாம மெட்ராஸ்ல எவ்வளவு கஷ்டப்பட்டோம். அதனால மழைய பொறுத்துக்கலாம். பாதிப்ப பத்தியே நெனைச்சிட்டிருக்காம எப்படி இந்த மழைய என்டெர்டெய்ன்மெண்ட் பண்றதுன்னு எல்லாரும் யோசிக்கலாம். ஃபார் எக்சாம்பிள் சின்னச் சின்ன கப்பல் செஞ்சு விடலாம், அப்படியே ஏதாவது சூடா செஞ்சு சாப்பிட்டுக்கிட்டே டி.வி. பார்க்கலாம்... மெனி மோர் ஐடியாஸ்...'' மாடியிலிருந்து கொண்டு மழையில் நனையாத இரண்டு கும்பல் மழையை அனுபவிப்பது பற்றிய யோசனைக்கு அழைக்கிறது. முடிவில் ""அப்புறம் உங்களுக்கு என்ன பாட்டு வேணும்?'' என்று மாடிவீட்டுக்காரனுக்குக் குடை விரிக்கிறது.

 

பெய்யும் மழையில் தெருவில் குடிநீர்த் தொட்டியில் ஏறி நடுங்கிக் கொண்டிருக்கும் நாய் அச்சத்தில் ஊளையிடுகிறது. அடித்த மழையில் பிச்சைக்காரர்களாக ஆகிவிட்டார்கள் பெரும்பகுதி மக்கள். அவர்கள் படும் பாட்டை ஒலிபரப்ப அலைவரிசை ஏதுமில்லை. மக் களின் துயரங்களுக்கிடையே மழைக் கூத்தடிக்கும் இந்த ரேடியோக்களுக்குப் பெயர் "பண்பலை'களாம். பாடறிந்து ஒழுகுவதே பண்பு என்று பழைய இலக்கியங்கள் நமக்குச் சொல்லித் தந்திருக்கின்றன. மேட்டுக்குடிகள் முன்பெல்லாம் ஒப்புக்காவது ஏழைகளின் துயரங்களைப் பார்த்து ஒரு "இச்சு'க் கொட்டி "ஐயோ பாவம்' என்று "ஈரத்தைக்' காட்டி வைப்பார்கள். நவீனக் கல்வி படித்த புதியமேட்டுக்குடி வர்க்கத்திற்கோ இப்போது அதுவும் இல்லை, முழுக்க நனைந்த பின்பு முக்காடு எதற்கு? மழையால் விளையும் வைரஸ் கிருமிகளுடன் இந்த வர்க்கக் கிருமிகளையும் சேர்த்து ஏழைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அருவருப்பான அலைவரிசைகளால் காற்றை மாசுபடுத்தும் இவர்களின் காலித்தனத்தைப் பார்க்கும்போது வள்ளலார் கூறியதுபோல் ""சுத்தக் ககனம் மழையால் கழுவிக் காற்றைக் கனலால் தகனம் செயல்போல்...'' என்று வானத்தை மழையால் கழுவி இவர்களின் அலைவரிசைக் காற்றை நாம் கனலால் தகனம் செய்துதான் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

 

எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி மழையின் காட்சி வெளிப்பாட்டைப் பார்த்து முகம் சுளிப்பவரா நீங்கள்? மழையால் பலபேருடைய மனதில் தேங்கியிருக்கும் கருத்து வெளிப்பாட்டைப் பார்த்தால் கலங்கிப் போவீர்கள். அவசர அவசரமாகக் குடையை மடக்கிக் கொண்டு பால் கடைப் பக்கம் வந்தார் எங்கள் தெருவிலிருக்கும் அந்த கனவான். ""என்னங்க ஆபீஸ் போகலையா?'' என்றேன் நான். ""அட நீங்க வேற மழை ஒரு பக்கம்னா இந்த ஜனங்க ஒருபக்கம். நேத்து நார்த் மெட்ராஸ் பக்கம் எல்லா இடத்திலயும் மறியல், கார எந்தப் பக்கம் திருப்புனாலும் ஆபீஸ் போக முடியல. ஒன் அவர் ஆச்சு ஓட்டேரியத் தாண்டவே, அவனும் எவ்ளோ தான் சார் கண்ட்ரோல் பண்ண முடியும். ஜனங்களும் ஓவரா அலையிது. நோ டிசிப்ளின், அதான் பணம் தர்றேன்னிருக்கான்ல, ரெக்காடெல்லாம் தயார் பண்ணிதான் தர முடியும். இதுங்க கெடந்து பறந்தா? உடனே மறியல், ரொம்ப பேஜாரு சார்!''

 

""வேலைக்கே போகாதவன்லாம் இதே வேலையா படை தெரண்டு அலையறானுவ, நீங்க வேற? ஓசியில ரெண்டாயிரம் ரூபா கிடைக்குதுன்னு அததும் வேலைக்கும் கூடப் போகாம மறியலுக்கு நிக்குது.''

 

மழை சிறிது விட்டாலும் அவர் தனது வாதத்தை விடாமல் நிலைநிறுத்திவிட்டு நகர்ந்தார். ஒரு ஐந்து நாள் கழித்து திரும்பவும் அவரை தெருவில் பார்த்தேன். ""என்னங்க நீங்க வாங்கிட்டீங்களா?'' என்றார் அவசரமாக. என்ன என்று புரியாமல் நான் விழித்தேன். ""அட என்னங்க சேதி தெரியாதா? அம்மா வெள்ளை கார்டுக்கும் ரெண்டாயிரம் ரூவா கொடுக்கச் சொல்லிடுச்சு. நான் போயி நேத்து டோக்கன வாங்கிட்டு இன்னக்கி பணத்தயும் வாங்கிட்டு வந்துட்டனே! கவர்மெண்ட்டு கொடுக்கற காச எதுக்கு உடுவானே. ஹா... ஹா... போங்க சார் எதுக்கு உட்டுட்டு?'' அந்தக் கனவான் வசிப்பது ஒரு அபார்ட்மெண்ட்டின் முதல் தளத்தில். அவர் வேலை செய்வதோ எம்.ஆர்.எல். என்ற அதிக வருவாய் ஈட்டும் நிறுவனத்தில். வேலைக்குச் செல்வதோ மாருதி காரில். கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக நிவாரணப் பொருட்களை அவர் வாங்கி வந்த "திறமையை'ச் சொல்லிச் சென்றார். நான் நடுங்கிப் போனேன், மழையால் இல்லை.

 

தண்ணீரின் பௌதீக விதி பள்ளத்தை நோக்கிப் பாய்வது. வெள்ளத்தின் நிவாரண அலைகளோ இயல்பு விதிக்கு மாறாக மேட்டை நோக்கி வேகமாகப் பாய்ந்து விட்டது. ஏழைகளின் வயிற்றுப் பள்ளங்களோ இன்னும் நிறையாமல் நிவாரணத்தை நோக்கி மிதிபட்டுக் கொண்டிருக்கிறது. மழை குப்பைகளையும், நாற்றத்தையும் மட்டும் மேலே கொண்டு வரவில்லை. நாற்றம்பிடித்த இந்தச் சமூக அமைப்பின் தராதரத்தையும் மேலெழுப்பிக் காட்டியுள்ளது. பெரும்பான்மை மக்களைப் பலிகொடுத்து சிறுபான்மைக் கும்பல் சொகுசாய் வாழும் இந்தப் பேரழிவு சிந்தனைக்குமுன் இயற்கையின் பேரழிவு எம்மாத்திரம்!

 

ஓட்டேரி, புளியந்தோப்பு, வியாசர்பாடி என்ற வழக்கமான சேரிகளுடன் இந்த முறை வேளச்சேரி, மடிப்பாக்கம், ஸ்ரீரங்கம் என்று பார்ப்பனச் சேரிகளுக்குள்ளும் மழை வெள்ள அபாயம் சூழ்ந்ததால் தினமலருக்கும், தினமணிக்கும் அதிகம் ஓதம் காத்தது. ஆயிரக்கணக்கான குடிசைவாழ் மக்கள் ஒண்ட இடம் கிடைக்காமல் பரிதவிப்பதையும் காட்டிவிட்டு மடிப்பாக்கம், ஸ்ரீரங்கம் என்று ஓயாமல் கத்தித் தீர்த்தன பார்ப்பனப் பத்திரிக்கைகள். அதிகார வர்க்கத்திலும், ஆளும் வர்க்கத்திலும் தொடுப்பு வைத்திருக்கும் ஸ்ரீரங்கத்துக் கும்பல் ரங்கா, ரங்கா என்று கத்துவதற்குப் பதிலாக அம்மா, அம்மா என்று அரசை உலுக்கி எடுத்தார்கள். முழங்கால்வரை மடிசார் கட்டும் மாமிகள் முழங்கால் தண்ணியில் இறங்கி நடக்க மாட்டார்களாம்! ரப்பர் படகு ஸ்ரீரங்கத்திற்கு போனது. குடிசைப்பகுதி மக்களோ கழுத்தளவு தண்ணியில் கயிறுகட்டி நகர்ந்தனர். வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் வர்க்கத்தனயை உயர்வு! காலில் மழைநீர் பட்டுவிடாமல் மணல் மூட்டைகளை அடுக்கி வெள்ளத்தைப் பார்வையிட்டது முதலமைச்சர் என்ற பொதிமூட்டை. மத்தியக்குழு அதிகாரிகளோ சுற்றுலா மையத்தைப் பார்வையிட வந்தது÷பால சூட்டும் கோட்டுமாய் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளை தள்ளிநின்று கண்டு களித்தனர். மக்களிடம் அவர்களை நெருங்க விடாதது மழையோ, வெள்ளமோ அல்ல. அவர்களது வர்க்கம். எத்தனை டெலஸ்கோப் வைத்து வெள்ளப்பகுதிகளைப் பார்வையிட்டாலும் ஏழைகள் எப்போதும் பாதிக்கப்படுவது மழை வெள்ளத்தால் மட்டுமல்ல. மாறாமலிருக்கும் அவர்களின் வாழ்நிலைதான் என்ற சமூக பாதிப்பை அதிகார வர்க்கத்தால் காண இயலுமா?

 

சில நடுத்தர வர்க்கப் பேர்வழிகள் ""பத்து பேர் வாழணும்னா அஞ்சு பேர் செத்துதான் சார் ஆகணும், அதான் நேச்சர்'' என்று ஏழைகளின் சாவுக்கு தீர்ப்பு எழுதுகிறார்கள். ""சாகுற அஞ்சு பேர்ல நீ ஒருத்தனா இருக்க சம்மதமா?'' என்று கேட்டால் இந்தத் தத்துவவாதிகள் சீரியஸாகி கொலைவெறியோடு பார்க்கிறார்கள். இது ஏதோ தற்செயலானதல்ல. இல்லாதவன் எதற்கு வாழ வேண்டும் என்ற வர்க்கக் காழ்ப்பு இது. மனித உறவுகளை வெறும் பண்டமாக ஆக்கிவிட்ட முதலாளித்துவக் கேவலத்திற்கு அடிபணியும் நடுத்தர வர்க்கப் புத்தி இது. ""மனிதனுக்கும் மனிதனுக்கும் அப்பட்டமான தன்னலத்தைத் தவிர வேறு ஒட்டுமில்லை; உறவுமில்லை என்றாக்கிவிட்டது முதலாளித்துவ வர்க்கம்'' என்று கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் மார்க்சும், ஏங்கெல்சும் முதலாளித்துவம் உருவாக்கும் கேவலமான உணர்ச்சிகளைக் கோடிட்டுக் காட்டினார்கள். இன்றைய நடுத்தர வர்க்கம் மனித உறவை மட்டுமல்ல, மனித உணர்ச்சிகளையும் இழந்து விட்டது. அதனால்தான் கண்ணுக்கு முன்னாலேயே தன்னுடைய குடிசை வெள்ளத்தில் மிதந்தாலும், நம்முடைய கழிவுநீர்த் தொட்டியில் வந்து அடைப்பை எடுத்து தண்ணீரை வடியச் செய்யும் அந்த மனிதர்களுக்காகக் குரல் கொடுக்க நான் தயாரில்லை என்கிறது.

 

துயரத்தின் உச்சகட்டமாக மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்க முடியாத அடித்தள மக்கள் மழை வெள்ள நிவாரணத்திற்காகக் கல்லூரி வாசலில் நெரிசலில் சிக்கி ஆறு பேருக்கு மேல் படுகொலையாகியுள்ளனர். ""யாராவது நடுராத்தியில் நிவாரணம் தருவாங்களா? ஜனங்களுக்கு அறிவு வேணாம்?'' என்று வக்கணை பேசுகிறார்கள் சில அறிவாளிகள். அந்தக் கல்லூரிக்குள் என்ன தங்க பிஸ்கட்டுகளா கிடக்கின்றன? மக்களுக்காக கல்லூரியைத் திறந்துவிட்டால் தான் என்ன? கேட்டை இழுத்துப்பூட்டி கேட்பாரற்ற மக்களை புழுப் போல அந்த வர்க்கத்தின் கால்களாலேயே அந்த மக்களை மிதித்துக் கொன்ற அரசின் குரூரத்தை அம்பலப்படுத்துவதற்குப் பதில் மக்கள் மேலேயே பழியைப் போடுவதற்கு என்ன அருகதை இருக்கிறது? தனது இறப்பின் மூலமாக அரசு மற்றும் சமுதாயத்தின் இருப்பை செத்தும் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள் உழைக்கும் மக்கள். நாம்?

 

அப்படி ஏன் முண்டியடித்துக் கொண்டு ஓட வேண்டும் என்கிறார்கள் சிலர். பேருந்து நிலையம், இரயில் நிலையம், மருத்துவமனைகளில் பலபேர் வரிசையில் காத்துக் கிடக்க குறுக்கே புகுந்து காரியம் சாதிக்கும் நடுத்தரவர்க்கம்தான் எளிய மக்களிடம் இப்படி உபதேசம் செய்கிறது.

 

ஏற்கெனவே பல சம்பவங்களில் அதிகாரவர்க்கம் பொருளைக் கொடுப்பது திடீரென இல்லை, நாளைக்கு வா என்று நிறுத்திவிடுவது என்பதை மக்கள் தங்கள் அனுபவத்தில் உணர்ந்திருப்பதாலேயே இந்த அவசரம். ஓட்டுக் கணக்கெடுக்க மட்டும் வீட்டுக்கு வீடு ஆள் அனுப்பும் அரசு, நிவாரணம் வழங்க போதிய ஆட்களை நியமிக்க முடியாதா? நாடே கண்டிக்க வேண்டிய இந்தப் படுகொலை கடைசியில் "அறிவில்லை' என்று செத்தவர்கள் மேலேயே பழியைப் போட்டது. இது இறந்தவர்களின் அறிவின்மையா, இல்லை, இருப்பவர்களின் அறிவின்மையா?

 

""மக்கள் உனக்கு இடைஞ்சலாகத் தோன்றினால் உன் வாழ்விற்கே குறிக்கோள் இல்லாமல் போகும். மக்களிடம் பிரிந்து தனிமையில் இருப்பது தற்கொலை'' என்றார் லியோ டால்ஸ்டாய். வாழ்வதாய்ச் சொல்பவர்கள், உணர்ச்சி இருந்தால் பதில் சொல்லுங்கள்.

 

சென்னையில் ஒரு தெருவில் மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டு 10 பேர் பலியாகி விட்டனர். இதைப் பார்த்தும் துடித்துப் போவதற்குப் பதில் ஒரு அறிவாளி ""எங்க கரண்டு கசியுதோ அங்க மட்டும் ஆஃப் பண்ணிட்டு மிச்ச வீட்டுக்குக் கரண்டு கொடுக்கலாம்ல. டி.வி. கி.வி. போடலாம்'' என்று துடித்துப் போனார். எவன் செத்தால் என்ன, எந்த ஊர் அழிந்தால் என்ன, தனக்குச் சுகம் கிடைத்தால் போதும் என்று நினைக்கும் இந்த இழி பிறவிகள்தான் இயற்கையின் பேரழிவுச் சக்திகள். கோலங்கள் அபி கண்ணைக் கசக்கினாலே வாரா வாரம் வருத்தப்பட்டு யார் குற்றம் என்று விவாதிக்கும் பேர் வழிகளுக்கு, தனது கண்ணுக்கு எதிரே அலங்கோலமான மக்களின் வாழ்க்கையைப் பற்றி மட்டும் விவாதிக்க வாய் வராதது ஏன்? வர்க்கப் பாசந்தான்.

 

பாத்ரூமில் வழுக்கி விழுந்ததையே ஒரு முழுநீளக் கதையாக நீட்டி முழக்குகிறது நடுத்தர வர்க்கம். பாவம், பலநாள் மரங்களிலும் கட்டிடங்களிலும் குடிக்க நீரின்றித் தவித்த உழைக்கும் மக்களுக்குத் தனது சோகத்தைக் கூடப் பிறரை "உருக்கும்' விதமாகச் சொல்லத் தெரியவில்லை.

 

வசதி உள்ளவராயிருந்தால் வீட்டுக்குள் தண்ணி வந்தால் மாடியில் போய் நிற்கலாம். பொருள்களை லாஃப்டில் வைத்துவிட்டுக் கட்டிலில் ஏறிக் கொள்ளலாம். இல்லை இன்னொரு வசதியுள்ள சொந்தக்காரர் வீட்டுக்குப் போய்விடலாம். குடிசையே மிதக்கும்போது தட்டுமுட்டுச் சாமான்களை எங்கே வைப்பது? சொந்தக்காரனும் இந்த மாதிரிக் குடிசையில் இருக்கும்போது எங்கே போய் அடைக்கலம் தேடுவது? வயதுக்கு வந்த பெண்களையும் முதியவர்களையும் வைத்துக் கொண்டு எத்தனை நாள் ரோட்டோரம் கிடப்பது? பல பகுதிகளில் மழைவிட்டாலும் இடுப்பளவிற்கு மேல் தண்ணீர் வடியாமல் நிற்கிறது. காலைக்கடன் கழிக்க, கட்டிய துணியை மாற்றிக் கொள்ள ஏழைகள் படும்பாட்டை எத்தனைப் பேரால் உணர முடியும்?

 

மழை என்பது வெறும் தண்ணீர்ப் பிரச்சினை மட்டுமல்ல. பலநூறு விவசாயிகளின் பயிர்கள் பாழாய்ப் போய்விட்டது. வட்டிக்கு வாங்கி நட்டவர்கள் மீளா நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள். அன்றாடக் கூலிகள் உழைக்க வழியின்றி தவித்துச் சாகிறார்கள். தமிழகத்தின் பல இடங்களில் சுவர் இடிந்து பலர் இறந்துள்ளனர். கேவலம் ஒரு கிரிக்கெட் கிரவுண்டுக்கு பாய் போர்த்தி, புல் தரையை பஞ்சால் துடைத்து, ஹீட்டர் போட்டு கட்டாந்தரைக்குக் காட்டும் கரிசனத்தை இரத்த ஓட்டமுள்ள மனிதர்களுக்குக் காட்ட முடியாத இந்தச் சமூகத்தின் அசிங்கங்களை மழை மேலே கொண்டு வந்துள்ளது. ஊரை நாசமாக்கியது முக்கியமாக மழை அல்ல் சக மனிதனுக்காக ஏதும் செய்யத் துணியாதவர்களின் நிலை.

 

மழையின் பாதிப்பை லட்சக்கணக்கான மக்களின் பாதிப்பாக உணர்ந்து அவர்களின் வாழ்க்கை நிவாரணத்திற்காக இணைந்து போராட வராதவனை இயற்கையும் பழிக்கும். வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுநிலையைவிட ஆபத்தானது தன் வர்க்கக் கடலைத் தாண்டி பிற உழைக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தோடு தம்மை இணைத்துக் கொள்ளாதவர்களின் வாழ்நிலை.

 

துரை. சண்முகம்