உலகம் முழுவதும் உள்ள அரசுகளின் திரைமறைவுச் சதிகளையும், இரகசியங்களையும் அம்பலப்படுத்தி வரும் விக்கிலீக்ஸ் என்னும் இணையதளம், ஈராக் மற்றும் ஆப்கான் போர்களில் அமெரிக்கா இழைத்த போர்க்குற்றங்களை அமெரிக்கச் சிப்பாய்கள், தமது இராணுவத் தலைமைக்கு அனுப்பிய குறிப்புகளிலிருந்தே அம்பலப்படுத்தியது. அது மட்டுமன்றி, அமெரிக்காவுக்கும் பல்வேறு நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கும் இடையிலான கள்ள உறவுகள் மற்றும் சதிகளையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது.
பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் இணையத்தின் மூலம் அமெரிக்க அரசுக்கு அனுப்பும் இரகசியக் கடிதங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தத் தொடங்கியவுடன், அமெரிக்காவின் முகவிலாசம் கிழிந்துவிடும் என்று அஞ்சிய அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், அனைத்து நாடுகளின் அரசுகளையும் முன்கூட்டியே அழைத்துப் பேசி, இது குறித்து எச்சரிக்கை செய்தார்.
விக்கிலீக்ஸின் வசம் இருக்கும் ஆவணங்களில், இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள், அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பிய இரகசியச் செய்திக் குறிப்புகளும் அடக்கம். இந்த ஆவணங்களைத் தற்போது "தி இந்து' ஆங்கில நாளேடு விக்கிலீக்ஸிடமிருந்து வாங்கி வெளியிட்டு வருகிறது.
விசா வழங்குவதற்கு மட்டும்தான் வெளிநாட்டுத் தூதரகங்கள் இருக்கின்றன என்று மக்கள் வெகுளித்தனமாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். தங்களுக்குச் சாதகமான அதிகாரிகள், அமைச்சர்களைப் பதவியில் அமர்த்துவது தொடங்கி, அரசின் கொள்கைகளையே மாற்றுவது வரை எல்லா விசயங்களிலும் அமெரிக்கத் தூதர்கள் தலையிடுகின்றனர் என்பதை இந்து நாளேட்டில் இதுவரை வெளியான விக்கிலீக்ஸ் செய்திகள் காட்டுகின்றன. காங்கிரசு, பாஜக அரசுகள் அமெரிக்க எடுபிடிகளே என்பதையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள கடிதங்கள் நிரூபிக்கின்றன.
ஓட்டுக்கு நோட்டு
"ஆட்சியே கவிழ்ந்தாலும், இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவேன்' என்று மன்மோகன் சிங் சாமியாடியதும், இடதுசாரிகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற்றதையொட்டி, நாடாளுமன்றத்தில் காங்கிரசு அரசு பெரும்பான்மை இழந்ததும் நாம் அறிந்ததுதான். அன்று முலாயம் சிங்கட்சியின் ஆதரவைப் பெற்ற பின்னரும் பெரும்பான்மை கிடைக்காததால், உதிரிக்கட்சிகளை விலை பேசுவது, பாரதிய ஜனதா எம்.பி.க்களை விலை பேசி, காங்கிரசுக்கு
ஆதரவாக வாக்களிக்க வைப்பது அல்லது ஓட்டெடுப்பில் கலந்துகொள்ளாமலிருக்கச் செய்வது போன்ற களவாணித்தனங்களில் காங்கிரசு ஈடுபட்டது. அவ்வாறு பேரம் பேசும் நடவடிக்கைகளை சி.என்.என். ஐ.பி.என். தொலைக்காட்சி இரகசியமாகப் படமெடுத்து ஒளிபரப்பியது. நாடாளுமன்றத்தில் கட்டுக்கட்டாக நோட்டுகள் கொட்டப்பட்டு, அந்தக் காட்சி நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்டு காங்கிரசின் களவாணித்தனம் நாறியது.
உத்தமர் மன்மோகன் சிங்கின் அரசு நடத்திய இந்த குதிரை பேரம், விக்கிலீக்ஸின் மூலமும் தற்போது அம்பலமாகியுள்ளது. ராஜீவ் குடும்பத்தின் நண்பரும், முன்னாள் அமைச்சருமான கேப்டன் சதீஷ் சர்மாவின் உதவியாளர் நசிகேத் கபூர் என்ற நபர் எம்.பி.க்களை விலை கொடுத்து வாங்குவதற்காகப் பெட்டிபெட்டியாக வைத்திருந்த பணத்தைத் தன்னிடம் காட்டியதாகவும், இன்னும் 60 கோடி ரூபாசூ வீட்டில் இருப்பதாகத் தன்னிடம் அவர் கூறியதாகவும் அமெரிக்கத் தூதரக அதிகாரி அமெரிக்க வெளியுறவுத் துறைக்குச் செய்திக் குறிப்பொன்றை அனுப்பியுள்ளார். அஜீத் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி எம்.பி.க்களுக்குத் தலைக்கு 10 கோடி ரூபாசூ கொடுக்கப்பட்டதாகவும், அகாலி தள எம்.பி.க்களை வளைக்கும் பொறுப்பை மன்மோகன் சிங்கே ஏற்றிருப்பதாகவுமென பல தகவல்களை இந்தச் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. ஓட்டெடுப்பு நடப்பதற்குச் சரியாக 5 நாட்கள் முன்னதாக அனுப்பப்பட்ட இந்தச் செய்தி, அரசை ஆதரித்து எத்தனை ஓட்டு விழும், எதிர்த்து எவ்வளவு விழும், எத்தனை பேர் ஓட்டுப்போடமாட்டார்கள் என்பதைக் கிட்டத்தட்ட துல்லியமாகக் கூறியிருக்கிறது.
இப்பிரச்சினை தற்போது நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டவுடன், "அது போன மாசம்' என்று வடிவேலு பாணியில் பதிலளித்த பிரணாப் முகர்ஜி, "அது 2009இல் 14ஆவது மக்களவையில் நடந்த பிரச்சினை. இது 15ஆவது மக்களவை' என்று வெட்கங்கெட்ட முறையில் வாதாடினார். மன்மோகன் சிங் வழக்கம்போல, "எனக்குத் தெரியவே தெரியாது' என்று சாதித்தார். ""நசிகேத் கபூர் என்ற நபர் யாரென்றே எனக்குத் தெரியாது' என்றார் சதீஷ் சர்மா. நசிகேத் கபூர் முன்னாள் இளைஞர் காங்கிரசு பொதுச் செயலாளர், அதிகாரத் தாழ்வாரங்களில் அலையும் தரகர் என்பதை ஊடகங்கள் அம்பலப்படுத்தின.
குதிரை பேரம் நடத்தித்தான் 2009இல் அணுசக்தி ஒப்பந்தத்தை காங்கிரசு நிறைவேற்றியது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், குதிரை பேர நடவடிக்கை உள்ளிட்ட இந்த முயற்சிகளை அமெரிக்கத் தூதரக அதிகாரியும், காங்கிரசு கட்சியினரும் எவ்வளவு நெருக்கமாக இருந்து திட்டமிட்டுச் செய்திருக்கிறார்கள் என்பதையே இவர்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் காட்டுகின்றன.
இது பிரச்சினையின் ஒரு பகுதிதான். அணுசக்தி பிரச்சினையில் காங்கிரசுக்கு ஆதரவாக பாரதிய ஜனதாவைத் திருப்பும் பொருட்டு, அத்வானியிடம் சென்று பேசுமாறு முன்னாள் அரசுத்தலைவர் அப்துல்கலாமைக் கேட்டுக் கொண்டதாகவும், கலாம் சென்று பேசியதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் அன்றைய அமெரிக்கத் தூதர் முல்போர்டு. "அப்துல் கலாம் கொடுத்த அரைமணி நேர விளக்கத்தில் மனம் மாறித்தான் ஒப்பந்தத்தை ஆதரித்தேன்' என அன்று முலாயம் கூறியதையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். இதுதான் இந்தியாவின் முன்னாள் அரசு;தலைவருடைய யோக்கியதை.
விசுவாசிக்குப் பாதுகாப்பு
இதுவரை இந்து நாளேட்டில் வெளிவந்திருக்கின்ற அமெரிக்கத் தூதரகக் கடிதப் பரிவர்த்தனைகள் பலவற்றிலும் ஊடாடி நிற்கும் ஒரு விசயம், மன்மோகன் சிங் குறித்து அமெரிக்கா காட்டும் விசேட அக்கறை. அவருக்கெதிராக எதிர்க்கட்சிகளிலோ, அதிகார வர்க்கத்திலோ, காங்கிரசு கட்சிக்குள்ளேயோ ஒரு சிறிய குரல் எழும்பினாலும்கூட அமெரிக்கா துடிதுடித்துப் போகிறது. அரச தந்திர உறவின் வரம்புகளையெல்லாம் மீறி மன்மோகன் சிங்கை ஆதரித்துக் களத்தில் இறங்குகிறது. பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அமெரிக்காவின் கையாள்தான் மன்மோகன் சிங் என்ற உண்மையை, இதுவரை புரிந்து கொள்ளாதவர்கள்கூட விக்கிலீக்ஸ் கடிதங்களைப் படித்த பிறகு புரிந்து கொள்ள முடியும்.
"பாகிஸ்தான், இந்தியாவுக்குள் பயங்கரவாதச் செயல்களைச் செய்யும் குழுக்களுக்குப் பயிற்சியளித்து, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வளர்க்கிறது' என்பதுதான் 2004ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் வரை பாகிஸ்தான் குறித்த இந்திய அரசின் நிலைப்பாடாக இருந்தது. பா.ஜ.க.வின் ஆட்சிக்காலத்தில் மட்டுமல்ல, அதற்கு முந்தைய காங்கிரசு ஆட்சியிலும் இந்திய அரசின் நிலைப்பாடு இதுதான். பாகிஸ்தான் அரசோ, தானும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுதான் என்றும், இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் மறுத்து வருகிறது. மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான புலனாய்வுகளை இந்தியா மற்றும் பாக் அரசுகள் இணைந்து மேற்கொள்ளலாம் என்று வலிறுத்தியும், இந்திய அரசு இதனைத் தொடர்ந்து மறுத்து வந்தது.
ஆனால், மன்மோகன் சிங் பிரதமரான பின், அமெரிக்காவின் ஆணையை ஏற்று, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் பற்றிய தகவல்களை இரு அரசுகளும் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்பதற்கு ஒப்புக் கொண்டார். தெற்காசியப் பகுதியில் தனது போர்த்தந்திரத்துக்குப் பொருத்தமாக அமெரிக்கா மேற்கொள்ளச் சொன்ன இந்த மாற்றம் இந்திய ஆளும் வர்க்கம் இதுகாறும் கடைப்பிடித்து வந்த பாக். எதிர்ப்புக் கொள்கைக்கு முரணாக இருந்ததால், அன்றைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணன் மன்மோகன் சிங்குடன் கருத்து வேறுபட்டிருக்கிறார். உடனே, எம்.கே. நாராயணனை நேரில் சந்தித்துப் பேசியதுடன், பாகிஸ்தான் குறித்த கொள்கை தொடர்பான விசயத்தில் மன்மோகன் சிங் தனது அமைச்சரவைக்குள்ளேயே தனிமைப்படுத்தப்படுவதாக அமெரிக்காவுக்கு செய்தி அனுப்புகிறார், அமெரிக்கத் தூதரக அதிகாரி. அதிகாரவர்க்கத்தினுள் மட்டுமல்ல, அமைச்சரவைக்குள்ளும் மன்மோகனுக்கு யார், எந்த விசயத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்பதை ஆங்காங்கே உள்ள தனது உளவாளிகள் மூலம் கண்காணிக்கிறது அமெரிக்கத் தூதரகம்.
இரண்டாவது முறையாக மன்மோகன் அரசு பதவியேற்றபோது பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக்கப்பட்டார். அப்போது இந்த நியமனம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த ஹிலாரி கிளிண்டன் அமெரிக்கத் தூதரகத்திடம் "அலுவாலியாவோ சிதம்பரமோ அமைச்சராக்கப்படாமல், முகர்ஜி அமைச்சராக்கப்பட்டது ஏன்? முகர்ஜியின் பொருளாதாரத் திட்டம் என்ன? மன்மோகன் சிங்கின் பொருளாதாரச் சீரமைப்புக் கொள்கை பற்றி முகர்ஜியின் கருத்து என்ன?' என்று கண்டறியும்படிக் கேட்டிருக்கிறார். மன்மோகன் சிங்கின் பொருளாதாரத் திட்டங்களுக்கு பிரணாப் முகர்ஜியால் ஒருவேளை தடங்கல் ஏற்பட்டு விடுமோ என்று அமெரிக்கா துடித்திருக்கிறது. அது மட்டுமன்றி, தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நாராயணன் மாற்றப்பட்ட போது, 'அவரை ஏன் மாற்றினீர்கள்? அவருக்கும் மன்மோகனுக்கும் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா?' என்று கவலையோடு ப.சிதம்பரத்திடம் விசாரித்திருக்கிறார் அமெரிக்கத் தூதர். சர்வதேச அணுசக்தி முகமையில் அமெரிக்காவின் ஆணைப்படி இரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததைத் தொடர்ந்து மன்மோகனுக்கு எதிர்ப்புகள் எழுந்தவுடன், அது குறித்து அமெரிக்கா பெரிதும் கவலைப்பட்டிருக்கிறது என்பதும் அமெரிக்க தூதர் அனுப்பியசெய்திகளிலிருந்து தெரியவருகிறது.
பாரதிய ஜனதாவின் இரட்டை வேடம்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அயலுறவுக் கொள்கை அமெரிக்க அடிமைத்தனமானது எனக் காட்டமாக விமர்சித்து, பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு 2005இல் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், அதற்கடுத்த நாளே அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சேஷாத்ரிசாரி அமெரிக்கத் தூதர்ப்ளேக்கிடம், "அத்தீர்மானத்தை நீங்கள் பெரிதாக
எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை' என்று சொல்லி இருக்கிறார். "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அணுசக்தி ஒப்பந்ததை மீளாய்வுக்கு உட்படுத்துவோம்' என்று கூறிய அத்வானி, "அதெல்லாம் சும்மா காங்கிரசை எதிர்த்து அரசியல் பண்ணுவதற்காக பேசியது. சர்வதேச ஒப்பந்தங்களையெல்லாம் தாங்கள் மீறப்போவதில்லை' என்று அமெரிக்கத் தூதரிடம் தன்னிலை விளக்கம் தந்துள்ளார். பா.ஜ.க.வின் அருண் ஜேட்லியோ, "இந்துத்வா என்பது இந்து ஓட்டு வங்கியைக் கவர்வதற்காக வைத்துள்ள ஒரு சந்தர்ப்பவாதமான கொள்கை. அவ்வளவுதான். அதனைத்தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வோம்' என்று அமெரிக்கத் தூதரிடம் பேசியிருக்கிறார். விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் இந்தச் செய்திகளெல்லாம், பார்ப்பன பாசிஸ்டுகளின் முகமூடியையும் கிழித் தெறிந்திருப்பதுடன், அவர்களுடைய அமெரிக்க அடிவருடித்தனத்தையும் அடையாளம் காட்டியிருக்கின்றன.
அமைச்சரவை தீர்மானிக்கப்படுவதுடெல்லியிலா, அமெரிக்காவிலா?
இரான் சீனா பாகிஸ்தான் இந்தியாவை இணைக்கும் எரிவாயுக் குழாய் ஒப்பந்தம் ஏறத்தாழ கையெழுத்திடப்படவிருந்த நிலையில், அமெரிக்காவின் அன்றைய வெளியுறவுச் செயலர் கண்ட
லிசாரைஸ், நேரடியாக இந்தியாவுக்கு வந்து அதனைத் தடுத்து நிறுத்தியது, அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு இந்தியாவை நிர்ப்பந்தித்தது, இதனை ஒட்டி இரான் எரிவாயுக் குழாய்த் திட்டத்தை முன்னெடுத்த மணிசங்கர் அய்யரிடமிருந்து பெட்ரோலியத் துறை பிடுங்கப்பட்டு, முரளி தியோரா அந்தத் துறையின் அமைச்சராக்கப்பட்டது, அமெரிக்காவின் ஆணைப்படி சர்வதேச அணுசக்திமுகமையில் இரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது ஆகியவை குறித்து புதிய ஜனநாயகம் இதழில் முன்னரே அம்பலப்படுத்தி எழுதியிருக்கிறோம்.
"மணிசங்கர் அய்யர் வெளியேற்றப்பட்டுவிட்டார். நம்முடைய (அமெரிக்க) ஆதரவாளரான முரளி தியோராவிடம் பெட்ரோலியத் துறை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது' என்று வெளிப்படையாக மகிழ்ச்சி தெரிவித்து கண்டலிசாவுக்குச் செய்தி அனுப்பியுள்ளார் அமெரிக்கத் தூதர். அது மட்டுமல்ல, மன்மோகன் சிங் செய்துள்ள அமைச்சரவை மாற்றம், தாங்கள் எதிர்பார்த்தபடி வந்திருப்பதாகவும், அமெரிக்காவின் நோக்கங்களை இந்தியாவில் நிறைவேற்றிக் கொள்வதற்குப்
பொருத்தமான இப்படிப்பட்ட ஒரு அமைச்சரவை இதுவரை வாய்த்ததில்லை என்றும் அமெரிக்கத்தூதரின் கடிதம் கூறுகிறது. அமெரிக்கத் தூதர் தனது அரசுக்கு அனுப்பும் இரகசியக் கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடுகிறார் என்றால், இதனை அமெரிக்க கைக்கூலி அரசு என்று நிறுவுவதற்கு வேறுசான்றுகள் தேவையே இல்லை.
அரசியல்வாதிகள் அதிகாரிகளுடன் நெருக்கம்
அமைச்சரவை மாற்றங்களைப் பின்னிருந்து இயக்குவது மட்டுமல்ல, டெல்லி அமைச்சர்கள், உயரதிகாரிகள் முதல் மதுரையில் உள்ள அழகிரியின் ஆட்கள் வரை அனைவருடனும் அமெரிக்கத் தூதரகம் உறவைப் பேணுவதும், அவர்களைக் கண்காணிப்பதும் அம்பலமாகியிருக்கிறது.
இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலராக சிவசங்கர் மேனன் நியமிக்கப்பட்டவுடன், "அவர் நமக்கு ஆதரவானவர்தான். இருப்பினும், இயல்பான அமெரிக்க விசுவாசி என்று கூறிவிட இயலாது' என்று செய்தி அனுப்புகிறார் அமெரிக்கத் தூதர். "தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா சில்லறை வணிகத்தைத் திறந்துவிட ஏன் தயங்குகிறார்? சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் குறித்து அவரது பார்வை என்ன? பிரணாப் முகர்ஜிக்கும் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவுக்கும் இடையிலான உறவு எப்படி?' என அனைத்தையும் விசாரிக்கும்படி டெல்லியில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்துக்கு கட்டளை இட்டிருக்கிறார் ஹிலாரி கிளின்டன். எம்.கே.நாராயணன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து தூக்கப்பட்டு, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டவுடன், "உங்களை ஏன் மாற்றினார்கள்? உங்களுக்கும் ப.சிதம்பரத்துக்கும் பிரச்சினையா?' என்று நாராயணனிடமே அமெரிக்க தூதர் விசாரிக்க, அதற்குநாராயணன் பதிலும் சொல்லியிருக்கிறார்.
திருமங்கலம் இடைத்தேர்தலின்போது செய்தித்தாள்களின் உள்ளே 5,000 ருபாய் பணம் வைத்து வாக்காளர்களுக்கு விநியோகித்ததை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதரிடம் பெருமை பொங்க விளக்கியிருக்கிறார், அழகிரியின் கையாள் பட்டு ராஜன். சிவகங்கைத் தொகுதியில் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம், எப்படித் திறம்பட பணம் விநியோகித்தார் என்பதைத் துணைத் தூதரிடம் விளக்கியிருக்கிறார், மாநில இளைஞர் காங்கிரசு தலைவர்.
ஒரு வெளிநாட்டுத் தூதரக அதிகாரியிடம் பேசுகிறோம் என்ற தயக்கம் இல்லாமல், எம்.பி.க்களை விலைபேசியது முதல் வாக்காளர்களை விலை பேசுவது வரையிலான விசயங்களை சகஜமாகப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு மேலிருந்து கீழ் வரை அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகிய அனைவருக்கும் அமெரிக்க அதிகாரிகளுடன் நிலவும் நெருக்கம் நம் கவனத்துக்கு உரியது. இவையெல்லாம் ஓரிரு நாளில் உருவாவது அல்ல. மேலிருந்து கீழ் வரை வௌ;வேறு மட்டங்களில் எங்கெங்கெல்லாம் தனக்குக் கையாட்களையும் உளவாளிகளையும் நண்பர்களையும் அமெரிக்கா உருவாக்கி வைத்திருக்கிறது என்பது குறித்த ஒரு சித்திரத்தை விக்கிலீக்ஸ் செய்திகள் வழங்குகின்றன.
அதிர்ச்சியூட்டும் இத்தகைய ஆவணங்கள் இந்துநாளேட்டில் அன்றாடம் வெளியான போதிலும், தமிழ்ப் பத்திரிக்கைகள் எதுவும் இதனைக் கண்டுகொள்ளவே இல்லை. ராடியா டேப் வந்தவுடனே, "காபினெட்டை முடிவு செய்வது பிரதமரா, ராடியாவா?' என்று துள்ளிக் குதித்த சோ, சு.சாமி வகையறாக்கள், "காபினெட்டை அமெரிக்கா தீர்மானிப்பது' குறித்து அதிர்ச்சி எதுவும் தெரிவிக்கவில்லை. அழகிரியின் அல்லக்கை வரையில் தொடர்பைப் பேணி வரும் அமெரிக்கத் தூதரகம், தமிழ் ஊடக முதலாளிகளைத் தனது சட்டைப்பையில் வைத்திருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை.
1947 அதிகார மாற்றத்துக்கு முன் 526 சமஸ்தானங்களிலும் ராஜாக்கள் பேருக்குத்தான் இருந்தனர். அவர்கள் என்ன செய்கின்றனர் என்று கண்காணிக்கவும், எவ்வாறு ஆட்சி நடத்துவது என்று சொல்லித்தரவும் ஒவ்வொரு சமஸ்தானத்திலும் வைஸ்ராயின் பிரதிநிதியாக "ரெசிடன்ட்' துரை நியமிக்கப்பட்டிருந்தார். இன்று சென்னை, கொல்கத்தா, மும்பை, தில்லி ஆகிய நகரங்களில் இருக்கும் அமெரிக்கத் தூதர்களுக்கும் அக்கால ரெசிடென்ட் துரைகளுக்கும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. அன்று சரிகைக் குல்லா மகாராஜாக்கள்; பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். இன்று மாண்புமிகு அமைச்சர்கள்; பிரிட்டிஷ் மகாராணிக்குப் பதிலாக மாட்சிமை தங்கிய அமெரிக்காவின் ஒற்றைத் துருவ சாம்ராஜ்யம். இச்சாம்ராஜ்யத்துக்கு விசுவாச சேவை செய்யும் பாதுஷாவாக பிரதமர் பதவியில் ஒரு பங்களாநாய்!
மருது