Language Selection

புதிய ஜனநாயகம் 2011

ஜப்பானில் நிகழ்ந்துள்ள பேரழிவைக் கண்டு மனித இனம் பேரதிர்ச்சி யில் மூழ்கிப் போயுள்ளது. நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து உருவான ஆழிப்பேரலையும் ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் கோரத்தாண்டவமாடி அந்நாட்டையே நிலைகுலையச் செய்துள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு, இலட்சக் கணக்கானோர் தங்கள் உற்றார் உறவினர், வீடுவாசலை இழந்து அனாதைகளாகிப் பரிதவிக்கின்றனர். இயற்கையின் சீற்றம் தணிந்துவிட்டாலும், இப்போது அணுஉலைகளின் சீற்றத்தால் அந்நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கடற்கரையோரமாக அமைந்துள்ள புகுஷிமா அணு மின் நிலையத்தில் ஒன்றன்பின் ஒன்றாக அணு உலைகள் வெடித்துச் சிதறியதால், அணுஆயுதப் போரின் பேரழிவைச் சந்தித்த ஜப்பான் இன்று, அதைவிடக் கொடூரமான தாக்குதலால் அவலத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறது.

 

ஜப்பானின் மின்சாரத் தேவையில் மூன்றில் ஒரு பங்கை நிறைவு செய்வதால், அந்நாட்டில் 50க்கும் மேற்பட்ட அணு மின் நிலையங்கள் உள்ளன. ஜப்பானில் ஆழிப்பேரலையால் மின்சாரம் நின்றுவிட்டதால், அணு உலைகளைக் குளிர்ச்சியடையச் செய்யும் குழாய்களும் செயலிழந்து அணு உலைகள் வெடித்துச் சிதறியுள்ளன. பற்றி எரியும் புகுஷிமா அணுமின் நிலையத்தில்  முதலாவது அணு உலையின் வெப்பத்தைத் தணிக்க கடல் நீரைப் பாய்ச்சி, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும் கடல் நீரில் அயோடின் 131 எனும் அணுக்கதிர் வீச்சு பரவியுள்ளது. இரண்டாவது அணு உலையிலிருந்து ஒரு லட்சம் மில்லி சீவர்ட் அளவுக்குக் கதிர்வீச்சு காற்றில் பரவியுள்ளது. இது, மனிதனின் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்து மரணத்தை விளைவிக்கும். தற்போது மூன்றாவது அணு உலைவெடித்து உருகி புளூட்டோனியம் கதிர்வீச்சு நிலப்பகுதியில் பரவி வருகிறது. புளூட்டோனியம் கதிர் வீச்சு ஹைடிரஜன் அணுகுண்டை விட பலமடங்கு பேரழிவை விளைவிக்கக் கூடியது. அணுக்கதிர் வீச்சால், நிலமும் நீரும் காற்றும் கடலும் நஞ்சாகிப் போயுள்ளதால், தொழில்நுட்பத்தில் முன்னேறிய வல்லரசு நாடான ஜப்பான் மட்டுமின்றி, அதைச் சுற்றியுள்ள உலக நாடுகளும் அச்சத்தில் உறைந்துள்ளன.

 

இத்தனைக்கும் பிறகும், இது இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட விபத்து என்றும், மற்றபடி அணு உலைகள் தொழில்நுட்ப ரீதியில் பாதுகாப்பானவைதான் என்றும் ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களின் எடுபிடிகளும் வாதிடுகின்றனர். மிகப் பெரிய வல்லரசு நாடான ரஷ்யாவின் செர்னோபில்லில் நடந்த அணு உலை வெடிப்பும் பேரழிவும் பின்தங்கிய தொழில் நுட்பத்தாலும் கம்யூனிச அதிகார வர்க்க அலட்சியத்தாலும் ஏற்பட்ட பேரழிவு என்றும், முதலாளித்துவ ஜனநாயக நாடுகளில் மேம்பட்டதொழில்நுட்பம் கொண்டு கண்காணிக்கப்படுவதாகவும் அவர்கள் பிதற்றினர். இது கடைந்தெடுத்த பித்தலாட்டம் என்பதை, உயர் தொழில் நுட்பம் கொண்ட வளர்ந்த ஏகாதிபத்தி வல்லரசு நாடான ஜப்பானில் நடந்துள்ள அணு உலை வெடிப்பும் கோரமான பேரழிவும் மெய்ப்பித்துக்காட்டிவிட்டது.

 

ஜப்பானில் நடந்த பேரழிவுக்குப் பிறகு, மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் அணு உலை பாதுகாப்புக்கான அவசர நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், ஏழை நாடான இந்தியாவில் அணு உலைகள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கிறது, மன்மோகன் அரசு. ரயில் விபத்து, தீ விபத்து, ஏன், பாதாளக் குழியில் விழுந்துவிட்ட சிறுவனை மீட்கக் கூடத் தடுமாறி நிற்கும் இந்திய அரசு,  அணு உலைகள் வெடித்தால் மக்களைப் பாதுகாப்பாக மீட்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்தியாவில் உள்ள அணு உலைகளின் பாதுகாப்பு பற்றி சுயேட்சையான ஆய்வு எதுவும் இதுவரை செய்யப்படவுமில்லை. பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட அணு உலைகள் பாதுகாப்பற்றவை என்று ஏகாதிபத்திய நாடுகளே அவற்றை மூடிவிடும் நிலையில், தாராப்பூர் அணு மின் திட்டம் நிறுவப்பட்டு 40 ஆண்டுகளான பின்னரும் இன்னமும் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய அரசு புளுகி வருகிறது. 1993இல் நரோரா அணு உலை தீ விபத்து, கைகா அணு உலையில் கோபுரம் வீழ்ந்த விபத்து, கல்பாக்கம் உள்ளிட்டு பல அணு உலைகளில் அடிக்கடி கதிரியக்கம் பரவி வருவது, ஜாடுகுடா யுரேனியச் சுரங்கத்தில் கதிரியக்கம் பரவி பல தொழிலாளர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பது  முதலியன இந்திய நாட்டு மக்கள் அணுசக்திக்காக பலிகிடாவாக்கப்பட்டுள்ளதை நிரூபித்துக் காட்டுகின்றன. இந்தியாவிலுள்ள 21 அணு உலைகள் அபாயகரமான நிலையில் உள்ளதாக பல சுற்றுச்சூழல் அறிவியலாளர்கள் எச்சரித்துள்ள போதிலும், அவை பற்றிய உண்மைகளை வெளியிடாமல் நாட்டின் பாதுகாப்பு ரகசியம் என்ற பெயரில் ஆட்சியாளர்கள் மூடிமறைத்து வருகின்றனர்.

 

அணுசக்தி எவ்வளவு அபாயகரமானது என்பதற்கு ஜப்பானே மனித இனத்திற்கு உதாரணமாகியுள்ள நிலையில், நாட்டு மக்களின் உயிருக்கும் உடமைக்கும் உத்திரவாதம் செய்யும் நடவடிக்கைகளுக்குப் பதிலாக, இலாப வெறியோடு அலையும் அமெரிக்க அணுசக்தி கம்பெனிகளுக்கு ஊழியம் செய்யும் வகையில், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றி நாட்டு மக்களைப் @பராபத்தில் சிக்க  வைத்துள்ளது, இந்திய அரசு. அனல் மின்நிலையம், புனல் மின்நிலையம் முதலான மரபுசார் சக்தியைக்கொண்டு மின்சாரம் தயாரித்துக்கொள்வதற்கான வளம் இந்தியாவில் நிறைந்துள்ள போதிலும், காலாவதியாகிப்போன தொழில் நுட்பத்துடன்  கார்ப்பரேட் கொள்ளைக்காகவே அணுமின் திட்டங்கள் இங்கு திணிக்கப்படுகின்றன.

 

இதுவரை உலகில் நடந்த அணுஉலை விபத்துகளில் 71 சதவீதத்துக்கும் மேலாக அமெரிக்காவில் நடந்துள்ள நிலையில், அமெரிக்கா அணுசக்தி அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேறியது என்று கூறி, முதற்கட்டமாக 60,000 கோடி ரூபாய்க்கு அணு உலைகளை அமெரிக்க ஏகபோக நிறுவனங்களிடமிருந்து வாங்கவும் கைக்கூலி மன்மோகன் அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு முன்னதாக, அணுஉலை விபத்துக்கான இழப்பீடு குறித்த துரோகத்தனமான சட்டம் ஒன்றையும் நிறைவேற்றியுள்ளது. விபத்து ஏற்பட்டால்,  அமெரிக்க ஏகபோக நிறுவனங்களிடமிருந்து அணு உலைகளை வாங்கி இயக்கும் இந்திய அரசும் தனியார் தரகு முதலாளித்துவ நிறுவனங்களும்தான் பொறுப்பேற்க வேண்டும்; வாங்கப்படும் அணு உலைகளின் தரம், பாதுகாப்பு, உத்திரவாதத்துக்கு அதை விற்பவர்கள் பொறுப்பல்ல என்பதுதான் அமெரிக்க நிறுவனங்களின் கொள்ளைக்காக நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்டத்தின் முக்கிய அம்சம்.

 

போபால் நச்சுவாயுவால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி அவர்களது சந்ததியினரும் இன்னமும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தலைமுறை தலைமுறையாகப் பாதிப்பை ஏற்படுத்தும் அணுக்கதிர் வீச்சுக்கு இலக்காகும் வகையில் நாட்டு மக்களை மரணவாயிலில் நிறுத்தியுள்ளது,  துரோகி மன்மோகன் கும்பல். மனித குலத்துக்குப் பேரழிவை விளைவிக்கும் அணுமின் திட்டங்களை ரத்துசெய்யவும், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிழித்தெறியவும், மக்கள் விரோத மன்மோகன் கும்பலையும் அதன் ஏகாதிபத்திய எஜமானர்களையும் வீழ்த்துவதற்கான போராட்டத்தை  முன்னெடுத்துச் செல்வதுதான் நாட்டு மக்களின் முதன்மைக் கடமை  என்பதையே   ஜப்பானில் நடந்துள்ள பேரழிவு பாடமாக உணர்த்துகிறது.