Language Selection

புதிய ஜனநாயகம் 2011

இந்தியாவின் புகழ்பெற்ற மனித உரிமைப் போராளியும் சட்டிஸ்கர் மக்களின் அன்புக்குரிய மருத்துவருமான டாக்டர் பிநாயக்சென்னுக்கு அம்மாநில கூடுதல் அமர்வு நீதிமன்றம் விதித்துள்ள ஆயுள் தண்டனையையும் பாசிச அடக்கு முறையையும் எதிர்த்துத் தமிழகமெங்கும் பிரச்சாரம், போராட்டங்களை மனிதஉரிமை பாதுகாப்பு மையம் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.

 

 

 

"பழங்குடி மக்களுக்கு மருத்துவம் பார்த்த பிநாயக் சென்தேசத் துரோகியாம், அவருக்கு ஆயுள்தண்டனையாம்; போபாலில் 25,000 பேரைப் படுகொலை செய்த யூனியன்கார்பைடு முதலாளிக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையாம், உடனே பிணை அளிப்பாம்; என்னடா ஜனநாயம் இது?' என்று இந்திய அரசின் பாசிச அடக்குமுறையை அம்பலப்படுத்தி கடந்த 6.01.2011 அன்று  சென்னை பிராட்வே சந்திப்பில் ம.உ.பா. மையத்தினர் ஆர்ப்பாட்ட ஊர்வலமும் சாலை மறியல் @பாராட்டமும் நடத்தினர்.

 

தமிழகம் முழுவதிலுமிருந்து 100க்கும் மேற்பட்டவழக்குரைஞர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்ட இந்த மறியல் போராட்டத்தில், ம.உ.பா. மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு, மதுரை மாவட்டச் செயலர் லயனல் அந்தோணிராஜ், துணைச் செயலர் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஏறத்தாழ ஒரு மணி நேர மறியல் போராட்டத்துக்குப் பின்னர் வழக்குரைஞர்கள் உள்ளிட்டு 90 பேரை போலீசு கைது செய்தது.

 

கடலூரில் மருத்துவர் பிநாயக் சென்னை விடுதலை செய்யக் கோரி 27.1.2011 அன்று மாவட்ட

ஆட்சியர் அலுவலகம் முன்பாக ம.உ.பா.மையத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ம.உ,பா.மையத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.உ.பா.மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு சிறப்புரையாற்றினார். வழக்குரைஞர்களும் தோழமை அமைப்பினரும் உழைக்கும் மக்களும் திரளாகப் பங்கேற்று போராட்டக் குரலை எதிரொலித்தனர்.

 

கோவையில், டாக்டர் பிநாயக் சென்னை விடுதலை செய்ய மறுத்துவரும் மன்மோகன்சிங் அரசை எதிர்த்து மாவட்ட ம.உ.பா. மையத்தின் தலைவர் தோழர் ராஜன் தலைமையில், செஞ்சிலுவைச் சங்கம் அருகே 10.2.2011 அன்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்குரைஞர்களும் தோழமை அமைப்பினரும் திரளாகப் பங்கேற்றனர்.

 

ம.உ.பா. மையத்தின் கோவை மாவட்டச் செயலர் தோழர் வெங்கடேசன், பு.ஜ.தொ.மு. மாவட்டச் செயலர் தோழர் விளவை இராமசாமி ஆகியோர் கார்ப்பரேட் கொள்ளைக்கும் பிநாயக்சென் மீதான கொடிய தண்டனை உள்ளிட்ட பாசிச அடக்குமுறைக்கும் உள்ள தொடர்பை விளக்கி சிறப்புரையாற்றி, உழைக்கும் மக்களைப் போராட அறைகூவினர்.

 

மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.