Language Selection

புதிய ஜனநாயகம் 2011

திருவாரூர் அருகிலுள்ள அம்மையப்பன் அரசினர் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தினர், அரசு பள்ளிக் கல்வித்துறையின் விதிமுறைகளுக்கு மாறாக, மாணவர்களிடம் கூடுதல் கட்டணமும் கட்டாய நன்கொடையும் வசூலித்ததற்கு எதிராக அப்பள்ளி மாணவர்கள் 11.2.2011 அன்று ஆர்ப்பாட்டத்துடன் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர்.

 

புரட்சிகர மாணவர்  இளைஞர் முன்னணியின் அம்மையப்பன் மேல்நிலைப்பள்ளிக் கிளையின் சார்பில் நடைபெற்றஇந்தப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியரும் பெற்றோரும் கலந்து கொண்டனர். காலை 11 மணியளவில் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடந்து கொண்டிருந்தபோது, தி.மு.க. பிரமுகர்களின் கூட்டாளியான தலைமையாசிரியர் தகவல் தெரிவித்ததும், தி.மு.க. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரனும் காரில் வந்திறங்கி போலீசை ஏவிமாணவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டனர். போலீசு நடத்திய தடியடித் தாக்குதலில் மாணவர்கள் படுகாயமடைந்து சிதறியோட,இப்போராட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த பு.மா.இ.மு. தோழர்கள் ஆசாத், முரளி, குமார், சட்டக் கல்லூரிமாணவர் மாதவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பொய்வழக்கு சோடிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

இத்தாக்குதலையும் பள்ளி நிர்வாகத்தின் சட்டவிரோதக் கட்டணக் கொள்ளையையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பு.மா.இ.மு.வினருக்கும், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த முயன்ற தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணிக்கும் போலீசு அனுமதி தர மறுத்து, தனது ஆணவத்தைக் காட்டியது. வன்முறைத் தாக்குதலை ஏவியும் முன்னணியாளர்களைக் கைது செய்தும் போராட்டத்தை ஒடுக்கிவிட லாம் என்று ஆளும் கட்சியும் அதிகார வர்க்கமும் மனப்பால் குடிக்கின்றன. இந்த ஆணவத்தை ஒடுக்க, இவ்வட்டார மக்களைத் திரட்டிப் புரட்சிகரஅமைப்புகளும் ஜனநாயக சக்திகளும் அடுத்தகட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றன.

 

தகவல்: பு.மா.இ.மு.,

திருவாரூர்.